AirForce Museum

நார்த் ஈஸ்ட்-11 வியப்பூட்டும் விமானப்படை அருங்காட்சியகம்

வடகிழக்கு மாநிலங்களின் அற்புத பயணத்தைப் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த பதிவில் ஷில்லாங்கிலுள்ள விமானப்படை அருங்காட்சியகம் பற்றி பார்க்கப் போகிறோம்.

மேகாலாயத் தலைநகர் ஷில்லாங்கிலிருந்து அடுத்த மாநிலத்திற்கு நாங்கள் கிளம்பும் நேரம் வந்தது. அதற்கான பேருந்து மதியம் மூன்று மணிக்குத்தான் என்றார்கள். அதற்குள் இரண்டு இடங்களை பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.

ஒன்று ஷில்லாங்கில் உள்ள ஏர்போர்ஸ் மியூசியம் மற்றொன்று டான் பாஸ்கோ மையம்.

ஏர்போர்ஸ் மியூசியம்

முதலில் ஏர்போர்ஸ் மியூசியம் சென்றோம். ராணுவம் மீதும் யுத்த வரலாற்றின் மீதும் ஆர்வம் கொண்டவர்களுக்கு இதுவொரு அற்புதமான இடம்.

அதிலும் இந்திய சுதந்திரத்திற்குப் பின் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் நடைபெற்ற இரண்டு யுத்தங்களின் காட்சிகளை நம் முன் கொண்டுவருகிறது இந்த அருங்காட்சியகம்.

1962-ல் நடைபெற்ற இந்திய சீன யுத்தம், 1971-ல் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போர் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள், ஏவுகணைகள், ராக்கெட்கள், விமானம் மூலம் வீசப்படும் குண்டுகள் போன்ற பலவற்றையும் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.

போர் விமானங்களை அருகில் தொட்டுப் பார்க்கும் பரவச வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது.

இது போக இந்திய விமானப்படையின் வரலாறு. விமானம் ஓட்டும் பைலட்டுகளின் சீருடைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எப்படி மாற்றம் பெற்றன?

மினியேச்சர்

இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அதற்கான விளக்கமும் வரலாறும், பெரிய போர் விமானங்களின் ‘மினியேச்சர்’ வடிவம் அவற்றின் திறன், அவை செல்லும் வேகம், எதிரிகளின் இலக்கை தாக்கிவிட்டு திரும்பும் நேரம் போன்ற பல விவரங்கள் மிக துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளன.

யுத்தங்களில் விமானப்படை நிகழ்த்திய பல்வேறு சாகஸ சாதனைகளை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக இந்த அருங்காட்சியகத்தில் அறிந்து கொள்ளலாம். பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிடலாம்.

விமானப்படை அருங்காட்சியகம் ஷில்லாங்
விமானப்படை அருங்காட்சியகம் ஷில்லாங்

இதற்கடுத்து நாங்கள் சென்ற இடம் ‘டான் பாஸ்கோ மையம்’. இதனை டான் பாஸ்கோ மியூசியம் என்று உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். புனித இருதய தேவாலய வளாகத்திற்குள் இந்த மியூசியம் இருக்கிறது. இது ஆசியாவிலேயே பெரியது என்கிறார்கள்.

ஸ்கைவாக்

இதில் 17 காட்சியகங்கள் உள்ளன. இங்கு வாழும் 17 பழங்குடியின மக்களின் 17 விதமான கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், அவர்கள் உடைகள், கைவினைப் பொருட்கள், ஆபரணங்கள், கூடைகள், மொழிகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக மிக விளக்கமாக இங்கு அறிந்து கொள்ளலாம்.

இந்த மியூசியத்தின் கூரைமீது ‘ஸ்கைவாக்’ செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன்மீது நடப்பதன் மூலம் வானில் நடப்பதுபோல் உணர்வைப் பெறலாம். ஏழு தளங்களைக் கொண்ட இந்த கட்டடத்தைப் பார்க்கும் அனைவரும் கேட்கும் கேள்வி யார் இதை வடிவமைத்தவர் என்பதுதான்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல கட்டடங்களின் வடிவமைப்புக்கு சொந்தக்காரரான கட்டடக்கலை நிபுணர் விவேக் வர்மாதான் இதன் வடிவமைப்பாளரும். வித்தியாசமாக வடிவமைதந்திருக்கிறார்.

ஸ்கைவாக்
ஸ்கைவாக்

இந்த மியூசியம் கோடைகாலத்தில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். மற்ற காலங்களில் மாலை 4.30 மணிக்கே மூடப்படும். ஞாயிறு விடுமுறை.

இம்பாலை நோக்கி

மனம் கவர்ந்த இரண்டு இடங்களை பார்த்தப் பின் எங்களின் பயணம் மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலை நோக்கி இருந்தது. ஷில்லாங்கில் இருந்து மணிப்பூர் 463 கி.மீ. தான். ஆனால், பயண நேரம்தான் கிட்டத்தட்ட 20 மணி நேரமாகிறது.

பஸ் பயணம் அத்தனை வசதியாக இல்லாவிட்டாலும் இயற்கையின் பேரழகு அதனை நிவர்த்தி செய்தது. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து வருபவர்கள் கவ்காத்தி, ஷில்லாங்குடன் தங்கள் சுற்றுலாவை முடித்துக் கொள்வார்கள். அதற்கு மேல் மற்ற இடங்களுக்கு அழைத்துப் போகமாட்டார்கள்.

அப்படி அழைத்துப் போகிறவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. எங்களை அழைத்துச் சென்ற விஜயன் இந்த இடங்கள் மட்டுமல்லாது, வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிக்கும் அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரால்தான் நாங்கள் பாஸ்போர்ட் இல்லாமல் பர்மாவுக்குள் சென்று வந்தோம்.

மதியம் 3 மணிக்கு ஷில்லாங்கில் ஏறிய எங்களை மறுநாள் காலை 11 மணிக்கு மணிப்பூரில் பஸ் இறக்கி விட்டது. நமது சென்னையிலிருந்து மதுரை செல்லும் தூரத்தை 20 மணி நேரமாக கடந்திருக்கிறோம்.

பாதை முழுவதும் மலைப் பிரதேசம் மற்றும் வனப்பகுதி என்பதால் மட்டும் இந்த தாமதமில்லை. அதற்கு வேறு காரணங்களும் இருந்தன.

சோதனை மேல் சோதனை

அஸாம், நாகாலாந்து என்ற இரண்டு மாநிலங்களைக் கடந்து பஸ் வந்ததால், மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள், மாவோயிஸ்ட் பிரச்சனை இருப்பதால் நாகாலாந்தின் சாலை முழுவதும் மாநில காவல் துறை, ராணுவம், எல்லைப்பாதுகாப்பு படை என்று மாற்றி மாற்றி ஆளாளுக்கு பஸ்சுக்குள் சோதனை செய்து, நமது அடையாள அட்டையை சரி பார்த்து அனுப்புவதால் பயண நேரம் இவ்வளவு நீள்கிறது.

எப்படியோ ஒரு வழியாக இம்பால் வந்து சேர்ந்தோம். வெப்பமும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இரண்டும் கெட்ட தட்பவெப்பமாக இம்பாலின் வானிலை இருந்தது. இங்கு நான்கு இரவுகள் தங்கினோம்.

பழமையான ஹோட்டல்தான். ஆனால், அறைகள் விசாலமாக இருந்தன. மதிய உணவுக்குப் பின் இம்பாலை சுற்றிப்பார்க்கலாம் என்பது எங்கள் திட்டம்.

மணிப்பூர் என்றதும் எனக்கு இரண்டு பெண்கள்தான் நினைவுக்கு வந்தார்கள். ஒருவர் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எதிர்த்து 16 வருடங்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் ஐரோம் ஷர்மிளா.

மற்றவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச் சண்டைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய பெண்ணான மேரி கோம். இவர்கள் மட்டுமல்ல இங்கு சாமானிய சாதனைப் பெண்கள் நிறைய உண்டு.

-இன்னும் பயணிப்போம்…

தொடர்புடைய பதிவுகள்..

Leave a Reply

Your email address will not be published.