bhat singh rajaguru sukdev

பகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லை

மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கு மேடைக்கு வந்த வீர இளம் சிங்கம் பகத்சிங்கின் ஒளி மிகுந்த முகத்தை மறைக்க கறுப்புத் துணியைக் கொண்டுவந்த போது காவலாளியிடம், “என் தாய்த்திருநாட்டைப் பார்த்துக் கொண்டே உயிர்விட விரும்புகிறேன். என் முகத்தை மறைக்காதே” என்றார். தூக்குமேடை ஏறியதும் “சுகதேவ், ராசகுரு வருகிறேன். இன்குலாப் சிந்தாபாத்” என்று கூறிக் கொண்டே தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டார் அஞ்சா நெஞ்சன் பகத்சிங்.

அஞ்சா நெஞ்சன் பகத்சிங்

தாம் படித்த தேசிய கல்லூரியின் நிறுவனரும், தாய்நாட்டின் விடுதலைக்குப் போராடிய தலைவர்களில் ஒருவருமான லாலா லஜபதிராயின் மரணத்துக்குக் காரணமான காவல்துறை அதிகாரியைக் கொல்ல முயன்றதுடன், தில்லி நாடாளுமன்றத்தில் (அந்நாளில் மத்திய சட்டசபை) குண்டுவீச்சும் நடந்தது. இது தொடர்பான வழக்கில் வெள்ளைக்கார அரசு, வீரன் பகத்சிங் மீது ‘கிரிமினல்’ குற்றம்சாட்டி ஆயுள் தண்டனை விதித்தது. ஆங்கில அதிகாரி கொலையுண்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

உடனே பகத்சிங், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தாம் கிரிமினல் குற்றவாளி அல்ல; தேசத்துக்காகப் போராடியவர் என்பதை உறுதி செய்து கொண்டார். ஆனால், இருபத்து மூன்று ஆண்டுகளே வாழ்ந்த இளைஞர் பகத்சிங், தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தேதாஜி போன்ற தலைவர்கள் இலண்டன் ஆலோசனைக்குழு கூட்டத்தில், பகத்சிங்கிற்கு விதித்த தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி வாதாடினர். பகத்சிங் தந்தையும் கருணை மனு அனுப்பினார்.

இதையறிந்த பகத்சிங், ‘எனக்காக உயிர்ப்பிச்சை கேட்டு என்னை இழிவுப்படுத்தியதற்காக நான் வருந்துகிறேன். எனக்கு உயிர் முக்கியமல்ல; எனது புரட்சியே முக்கியம்’ என்று கடிதம் எழுதினார்.

மேலும், ‘நாங்கள் போர்க் கைதிகள் என்றால் எங்களைச் சுட்டுக் தள்ளுங்கள். புரட்சியாளர்கள் என்றால் தூக்கிலிடுங்கள்’ என்று பஞ்சாப் ஆளுநருக்கு பகத்சிங்கும் நண்பர்களும் மடல் எழுதினார்கள்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து ஒன்றாம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இரவு 07.30 மணிக்கு பகத்சிங் மரணதண்டனையை ஏற்றார்.

தம்மைத் தூக்கில் போடும்வரை பகத்சிங், ‘புரட்சியாளர் லெனின்’ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்டார் அருகில் இருந்த நண்பர் ராஜகுரு, “தூக்கில் தொங்கப் போகும் போதுகூட படிக்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அவர் “நான் சாகும் போதுகூட முட்டாளாக இருக்க விரும்பவில்லை” என்றார்.

உடல் எடை அதிகரிப்பு

பொதுவாகத் தூக்குத் தண்டனைக் கைதிக்கு உடல் எடை குறைந்து கொண்டே இருக்கும். ஆனால், பகத்சிங்குக்கு எடை கூடிக் கொண்டே இருந்தது. இது எதனால் என்று அவரிடமே கேட்டபோது “நாட்டுக்காகச் சாகப் போகிறேன் என்ற மகிழ்ச்சியே என் உடல் எடை அதிகரிப்புக்குக் காரணம்” என்று பதில் அளித்தார்.

தம்மைத் தூக்கில் தொங்கவிடும் போது அங்கிருந்த ஆங்கில அதிகாரியைப் பார்த்து “நீங்கள் கொடுத்து வைத்தவர். பொதுவாகத் தண்டனையை நிறைவேற்றும்போது குற்றவாளியின் கண்களைத் துணியால் கட்டி முகத்தை மூடிவிடுவார்கள். ஆனால் கண்களைக் கட்டாமல் தூக்கிலிடப்படும் ஒரு கைதியைப் பார்க்கும் வாய்ப்பு தங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது” என்றார்.  பகத்சிங்கிடம் உன் கடைசி விருப்பம் என்ன என்று கேட்டபோது, “நான் தாய்த்திருநாட்டு மண்ணைப் பார்த்துக் கொண்டே சாக விரும்புகிறேன்” என்று சொன்னதால் அவருடைய கண்கள் துணியால் கட்டப்படவில்லை.

மேலும் மரணதண்டனைக் கைதிகளை அதிகாலையில் தான் தூக்கிலிடுவது வழக்கம். ஆனால் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் வழக்கத்திற்கு மாறாக இரவு நேரத்தில் தூக்கில் போடப்பட்டார்கள். அப்போது மூன்று வீர இளைஞர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்டனர். இந்த இடத்தில் அவர்களிடம் மரணம் மண்டியிட்டது எனலாம்.

பகத்சிங்

‘இன்குலாப் சிந்தாபாத்’ (புரட்சி வெல்லட்டும்) என்ற முழக்கத்துக்குச் சொந்தக்காரரான பகத்சிங் இறுதிவரை நாத்திகராய் இருந்தவர். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் சிறை அதிகாரி, “நீதான் நாளை சாகப்போகிறாயே, சாகும் போதாவது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்து கொள்” என்று சொன்னார்.

அதற்கு பகத்சிங், “நான் தொடர்ந்து உயிர் வாழக்கூடியவனாக இருந்தால் ஆன்மிகவாதி ஆகலாம். ஆனால் நானோ வாழப்போவதில்லை. நாளையே சாகப் போகிறேன். இந்த நிலையில் கடவுளை ஏற்பவனாக மாறினால், பகத்சிங் சாகப் போகிற பயத்தினால் நாத்திகத்தை விட்டு விலகி ஆத்திகனாகி விட்டான் என்று உலகம் பழிச்சொல்லும், என் கொள்கையில் இருந்து மாற மாட்டேன்” என்றார் கொள்கைவீரர்.

முன்னதாக அவருடைய குடும்பத்தினரைச் சந்திக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பகத்சிங்கின் அம்மா வித்யாவதி அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு “ஒவ்வொருவரும் ஒருநாள் மடிய வேண்டியவர்களே! ஆனால் உலகம் நினைவில் வைத்துப் போற்றும் மரணம்தான் மிகச் சிறந்தது” என்று குறிப்பிட்டார். அந்த வீரத்தாய்க்கும் உயிர்க்கொடை தந்த வீரஇளைஞர் பகத்சிங்குக்கும் வணக்கம் செய்வோம்.

பகத்சிங்கை, ‘கடவுளின் யோகக்குழந்தை’ என்றே அவருடைய பாட்டி அழைத்து மகிழ்ந்தார்.

உருக்கமான கடிதம்

பகத் இறுதியாக தன் அன்புத்தம்பி குல்தார்சிங்குக்கு உருக்கமான கடிதம் எழுதினார். அதில், ‘என் அருமைக் குல்தார், உன் கண்ணீர்க் கடிதம் கிடைத்தது. கண்ணீர் ஏன்? முதலில் உன் கண்களில் இருந்து வடியும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொள். மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவதைப் போல் நானும் நாளை காலை ஒளியில் கலந்து மறைந்து விடுவேன்.

ஆனால், நம் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், மின்னல்போல் உலகையே ஒளிரச்செய்யும். ஒரு கைப்பிடிக்குள் அடங்கக்கூடிய தூசிக்குச் சமமான என் உடல் அழிக்கப்படுவதால் ஏற்படும் கெடுதி அல்லது நட்டம் என்ன? உன் மெலிந்த உடலை நன்கு பேணுவாயாக. உடலில் வலிமையையும் உள்ளத்தில் உறுதியும் கொண்ட எதிர்கால வீரனாக நீ உருவாக வேண்டும். அம்மா, அப்பாவுக்கு நீதான் ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டும். இன்று போய் எண்ணற்ற இந்த நாட்டு வீரர்களின் உருவில் நாளை நாங்கள் மீண்டும் பிறப்போம்’ என்று எழுதியிருந்தார்.

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ‘பகத்சிங், மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற நூலில் “தூக்கு மேடையில் பகத்சிங் உள்பட மூன்று பேரும் கொல்லப்படவில்லை. கழுத்து எலும்பு மட்டும் முறிந்து பாதி மயக்க நிலையில் சிறையில் இருந்து லாகூர் இராணுவ முகாம் பகுதிக்குக் கொண்டு போகப்பட்டனர். அங்கே பகத்சிங்கினால் கொல்லப்பட்ட காவல் அதிகாரி சாண்டர்சன் குடும்பத்தினரால் ஆத்திரம் தீரும்மட்டும் மூவரையும் துப்பாக்கியால் சுட்டுப் பழி தீர்த்தனர். கமுக்கமாக நடந்த இந்த பழிதீர்க்கும் படலத்திற்கு, ‘ஆபரேசன் டோர் ஜான் ஹார்ஸ்’ என்று பெயரிட்டு நிறைவேற்றி உள்ளனர். உடலை அடையாளம் தெரியாமல் எரித்துவிட்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

பாரதத் தாயின் தவப்புதல்வர்கள் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் புகழ் ஓங்குக!

“இளைய பார தத்தினாய் வாவாவா 

எதிரிலா வலத்தினாய் வாவாவா 

ஒளியிழந்த நாட்டிலே – நின்றேறும் 

உதய ஞாயி றொப்பவே வாவாவா 

களையிழந்த நாட்டிலே – முன் போல 

களைசிறக்க வந்தனை வாவாவா 

விளையுமாண்பு யாவையும் – பார்த்தன்போல் 

விழியினால் விளக்குவாய் வாவாவா”

                                                                         – பாரதியார்   

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் பிறந்த இவர். அங்குள்ள காந்திநிகேதன் ஆசிரமத்தில் கல்வி பயின்றவர். காந்திய நெறியில் ஈடுபாடு கொண்டவர். தினத்தந்தி நாளிதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இலக்கிய எழுத்திலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்ட இவர் எழுதிய ‘நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்’ என்ற கவிதை தொகுப்பு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாராட்டுப் பெற்றது. தொடர்ந்து பல இலக்கிய ஆக்கங்களை எழுதிவருகிறார்.

5 Replies to “பகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லை”

  1. பத்து ஆண்டுகளுக்கு நான் எழுதிய ‘தூக்கிடப்பட்டதாலேயே நாங்கள் கொல்லப்படவில்லை’ எனும் நாடகத்தில் இத் தகவலை முதல் முறையாகப் பயன்படுத்தியுள்ளேன். நாடகத் தலைப்பும் இத் தகவலை ஒட்டியே இடப்பட்டது.
    -அப்பணசாமி.
    சென்னை
    9840027712

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது