Kanyakumari

குமரி மாவட்டம்: ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை – 1

நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் அல்ல. வரலாற்று ஆசிரியரும் அல்ல. பள்ளியிலோ, கல்லூரியிலோ தமிழ்த்துறையில் அல்லது வரலாற்றுத் துறையில் நான் பணியாற்றியதில்லை. பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி எழுத்துப்பணிக்காக விருப்ப ஓய்வு பெற்றவன். சிறு வயதிலிருந்தே வரலாற்றில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. அந்த ஆர்வத்தின் அடிப்படையில் வரலாற்று ஆய்வாளனாக மாறினேன். மாறினேன் என்பதைவிட மாற்றப்பட்டேன் என்பதே பொருத்தமானது. எனது 14 வயதில் நான் பத்திரிகையில் எழுதத் தொடங்கினேன். குமரி மாவட்ட மக்களுக்கு வரலாற்று உணர்வு குறைவு என்பதை மிகவும் வருத்தத்தோடு இங்கே கூறுகிறேன். இவ்வாறு வரலாற்று உணர்வு குறைந்ததால் தான் குமரி மாவட்டம் பல வரலாற்றுப் பெருமைகளை இழந்து நிற்கிறது என்பது வரலாற்றில் நான் கண்டறிந்த உண்மை. 

குமரி மாவட்டம்

அதிகமான்கோடு தான் அதங்கோடு என்று மாறியது என்று கூறி, அதங்கோட்டு ஆசானைக் கொங்கு நாட்டிற்குக் கொண்டு சென்ற காலம் இருந்தது. தமிழ் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் ஆய்வு செய்து அதங்கோட்டு ஆசானை குமரி மண்ணிற்கு கொண்டு வந்தார். இன்று தமிழக அரசு குமரி மாவட்டத்திலுள்ள அதங்கோட்டு ஆசானுக்கு மண்டபம் எழுப்பி அந்த வரலாற்று உண்மையை உறுதி செய்துள்ளது.

நாம் குமரி மாவட்ட மக்கள் வரலாற்றைப் புறக்கணித்ததால் திருஞானசம்பந்தர் பாடிய நாஞ்சில் நாட்டுக் கோட்டாற்றை தஞ்சை மாவட்டத்திலுள்ள தீருக்கொட்டாரத்திற்கு கொண்டு சென்று விட்டனர். நாம் வரலாற்றில் அக்கரை காட்டாததால் தான் நம்மாழ்வார் பிறந்த திருப்பதிசாரத்தை மறைத்து, அந்தப் பெருமையை ஆழ்வார் திருநகரிக்கு கொண்டு சென்றனர். பண்டைய வரலாற்றை மறந்ததால் திருவள்ளுவர் பிறந்த தலம் திருநாயினார்குறிச்சியிலிருந்து மயிலாப்பூருக்கு மாறிவிட்டது.

Sunrise kanyakumari
Image: Infocaster

குமரி மாவட்டத்திலுள்ள வேளிமலை குமாரகோயில்தான் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருவேரகம். அந்த திருவேரகம் தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமி மலைக்குப் போய்விட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றுகூட சேர நாட்டிலே இல்லாமல் ஆகிவிட்டது. இன்று சேர நாட்டிலே ஒரு படை வீடுகூட இல்லாமல் ஆகிவிட்டது. மலை நாட்டுக் கடவுள் முருகனுக்கு மலைநாட்டிலே இடமில்லை. இதுபோன்று குமரி மண்ணின் வரலாற்றுப் பெருமைகள் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டன. இதைக் கண்டு மனம் நொந்து குமரி மண்ணின் புதைந்து போன பல வரலாற்று உண்மைகளை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வமும் வேகமும் சிறுவயதிலேயே எனக்குத் தோன்றின.

வரலாற்று ஆராய்ச்சி

‘மூக்கில்லா ராஜ்யத்து முறி மூக்கன் ராஜாவெ’ என்பது மலையாள மொழியில் வழங்கப்படும் ஒரு பழமொழி. அந்த பழமொழிக்கேற்ப வரலாற்று ஆர்வமில்லாத மக்களிடையே வரலாற்றில் சிறிது ஆர்வம் கொண்ட நான் சாதனை படைக்க முடிந்தது. தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தின் கீழ் செயல் பட்டு வரும் வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தில் 10 உறுப்பினர்களுள் ஒருவராக தமிழ்நாடு அரசு 6 ஆண்டு காலம் என்னை நியமனம் செய்தது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து கல்வித்துறையில் பணி செய்யாமல் வரலாற்றுத் துறையில் சாதனை படைத்த 5 வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவனாக என்னைத் தேர்ந்தெடுத்தது. தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் 1991-ம் ஆண்டு ஒரு விழா நடத்தி என்னைப் பாராட்டியது. பாராட்டப்பட்ட மற்ற நால்வர் ஐராவதம் மகாதேவன், டாக்டர் நாகசாமி, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, குடந்தை சேதுராமன் ஆகியோர். இவர்கள் கல்லூரி ஆசிரியர்கள் அல்ல.

கன்னியாகுமரி

‘புறக்கணிக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் ஒரே வரலாற்று ஆய்வாளர் இவர்’ என்று என்னை அறிமுகப்படுத்தியது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ். கன்னியாகுமரி மாவட்ட விவரச் சுவடி தயாரிப்பதற்குப் பேருதவியாக இருந்தார் என்று குமரி மாவட்டத்தின் புதைந்துபோன வரலாற்றை வெளியே கொண்டு வரும் பணியில் சிறப்புற்று விளங்குபவர் என்றும் என்னைப் பற்றி எழுதியது தமிழ்நாடு அரசு வெளியிட்ட கன்னியாகுமரி மாவட்ட விவரச் சுவடி.

வங்கி அதிகாரியாக பணியாற்றிய என்னை வரலாற்றுத் துறை பற்றி கலந்துரையாட குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அழைத்தது வரலாற்றுத் துறையில் நான் பெற்ற ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன். இவையாவும் எனது சுயபுராணமாக இருந்தாலும், ஒரு வங்கி அதிகாரி வரலாற்றுத் துறையில் சாதனைப் படைத்த வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்  என்ற காரணத்தினால் தான் இவற்றை உங்களுக்குப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளேன். இறையருளும் பெரியோர் ஆசியும் எடுத்துக்கொண்ட துறையில் ஆர்வமும், ஈடுபாடும், உழைப்பும் இருந்தால் ஒருவன் எந்தத் துறையிலும் முன்னேற முடியும். இந்த அறிவுரை நமது இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்ற நல்ல எண்ணத்திலே தான் இவற்றை இங்கே வெளிப்படுத்தி உள்ளேன்.

நான் கண்டறிந்த உண்மைகளை நமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்ற இலக்கியம், வரலாறு மற்றும் கலாசார ஆய்வரங்குகளில் வெளியிட எனக்கு அரிய வாய்ப்புகள் கிடைத்தன. இது இறைவன் எனக்கு அளித்த அருள் என்று நான் கருதுகிறேன்.

– தொடரும்

பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். குமரி மாவட்டத்தின் வரலாறு, பண்பாடு, கலைச்சிறப்பு இவற்றை வெளி உலகுக்கு எடுத்துக்கூறும் பணியினை கடந்த 60 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளார். குமரி மாவட்டத்தின் வரலாற்றிலிருந்து அரிய பல செய்திகளை இலக்கிய மற்றும் கல்வெட்டு ஆதாரங்களோடு வெளியே கொண்டு வந்த பெருமை இவரைச்சாரும். இவர் எழுதிய நூல்கள் பல.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது