செயின்ட் ஜார்ஜ் கோட்டை சென்னை

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய பலவீனமான முதல் கோட்டை

தமிழக அரசியலைப் பொறுத்தவரை இதுவொரு வலுவான கோட்டை. ஆட்சி அதிகாரமெல்லாம் குவிந்து கிடப்பது இங்குதான். தமிழகத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுவதும் இங்கேதான். சட்டசபை, தலைமைச் செயலகம் என எல்லா செல்வாக்குகளும் இங்கு குழுமியிருப்பதால், அரசியல்வாதிகள் அனைவரின் உச்சபட்ச இலக்கு இங்கு வந்து அமர்வதுதான். அரசியலில் அசுர பலத்துடன் இருக்கும் இந்தக் கோட்டை உண்மையில் மிகவும் பலவீனமானது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மற்ற கோட்டைகளோடு ஒப்பிடும்போது இந்தக் கோட்டையின் மதில் சுவர்கள் உயரம் குறைந்தவை. இயற்கை அரண்களும் கிடையாது.

இதன் பெயர் புனித ஜார்ஜ் கோட்டை. அரசுக்கும் அரசியலுக்குமான புனித பூமி. இங்கு கால் பதிக்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு காரிய அனுகூலம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு என்ன வேலை என்கிறீர்களா? பாரம்பரியமிக்க இந்தக் கோட்டையின் பல பகுதிகளை அரசு அலுவலகங்கள் ஆக்கிரமித்துக் கொண்டாலும், இரண்டு இடங்களை மட்டும் சுற்றுலாப்பயணிகளுக்காக விட்டுவைத்திருக்கிறார்கள். ஒன்று கோட்டை அருங்காட்சியகம், மற்றொன்று புனித மேரி தேவாலயம். இரண்டுமே இரண்டு பொக்கிஷங்கள்.

இந்தப் பதிவை காணொலியாகவும் காணலாம்..

கோட்டை

தலைமைச் செயலகத்திற்குள் அதாவது இந்தக் கோட்டைக்குள் நுழைவதற்கு காவல்துறையினரின் சோதனையை கடந்தாக வேண்டும். அந்தக் காவலர்களிடமே நீங்கள் அருங்காட்சியகம் செல்வதாக சொல்லிப்பாருங்கள். சட்டென்று கெடுபிடிகள் தளர்ந்து, ‘போய்ட்டு வாங்க சார்!’ என்று இன்முகத்தோடு அனுப்பி வைப்பார்கள். இது சுற்றுலாவுக்கான மரியாதை என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையின் வரலாறு சுவாரஸ்யமானது. கி.பி.1600-ல் முதலாம் எலிஸபெத் மகாராணி கையெழுத்திட்ட பிரகடணத்தின்படி கீழ்த்திசை நாடுகளில் வணிகம் செய்ய கிழக்கிந்திய கம்பெனி உரிமை பெற்றது. அதன்படி 1612-ல் சூரத் நகரில் தங்களது வர்த்தகத்தை தொடங்கினர். அப்போது தமிழகத்தின் வட பகுதியிலும் ஆந்திராவிலும் தயாரான துணிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. மேலும் வாசனைப் பொருட்களும் கொள்ளை லாபத்தை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கொடுத்தது.

ஏராளமான ஆடைகளும், வாசனை திரவியங்களையும் சேமித்து வைத்துக்கொள்ள இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒரு சேமிப்புக்கு கிடங்கு அமைப்பது அவசியம் என்றுணர்ந்த ஆங்கிலேயர்கள் அதற்கான இடத்தை தேடினர். ‘எனது நிழலில் அமர்ந்து பாதுகாப்பாக வணிகம் செய்யுங்கள்..!’ என்று கோல்கொண்டா சுல்தான் அழைக்க, அங்கு சென்று மசூலிப்பட்டிணத்தில் வணிகத்தை தொடர்ந்தனர். சுல்தான் அளவுக்கு அவரது அதிகாரிகள் ஆங்கிலேயரிடம் இணக்கம் காட்டவில்லை. நிறைய இடையூறுகள் செய்தனர். அதனால் விரைவிலேயே அந்த இடத்தை காலி செய்தனர்.

ஜார்ஜ் கோட்டை

அப்போது கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வசதியான ஒரு இடம் கடற்கரையை ஒட்டி தேவைப்பட்டது. ஆங்கிலேய வணிகரான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரு கோகன் என்ற இருவரும் சென்னை வந்தனர். இன்றைய ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடம் அன்று பொட்டல் காடு. அந்த இடத்தை வணிகம் நடத்த தேர்ந்தெடுத்தனர். அந்த இடம் விஜயநகர பேரரசின் கீழ் சந்திரகிரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர் தமார்ல வேங்கட நாயக்கருக்கு சொந்தமானதாக இருந்தது. சிலர் இவரை சென்னப்ப நாயக்கர் என்றும் கூறுகிறார்கள். 1639-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி பிரான்சிஸ் டே மன்னரை சந்தித்து, ஒரு கோட்டைக் கட்டவும், வாணிபம் செய்யவும் ஓர் உடன்படிக்கையைப் பெற்றார்.

ஒரு வணிக நிறுவனம் இந்தியாவை தன் வசப்படுத்தி அடிமைக் கொள்ளும் என்று அன்றைய அரசரோ பிரான்சிஸ் டேவோ கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்தக் கோட்டை இந்திய சரித்திரத்தையே மாற்றியது. அந்த உடன்படிக்கை படி மதராஸப்பட்டிணத்தில் ஆங்கிலேயர்கள் கோட்டை கட்டுவதற்கு முழு அதிகாரத்தையும் தந்தது.  இக்கோட்டையின் மூலம் கிடைக்கும் சுங்க வருவாயில் பாதியை எடுத்துக்கொள்ளவும் சலுகை அளித்தது. மேலும், எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் ஆங்கிலேயர்கள் நாணயங்களை வார்த்துப் புழக்கத்த்தில் விடவும், முன் பணம் பெற்று ஏமாற்றியவர்கள், பொருளை பெற்று பணம் தராதவர்களை பிடித்துக் கொடுப்பதற்கும், ஆங்கிலேயர்கள் கொள்முதல் செய்யும் உணவு மற்றும் இதர அடிப்படை தேவைப் பொருட்களுக்கான சுங்கவரியினை தவிர்க்கவும் அதில் ஆணையிடப்பட்டிருந்தது. இதனால் ஆங்கிலேயர்கள் பெரும் நன்மை அடைந்தார்கள்.

பிரான்சிஸ் டே

ஆங்கிலேயர்களுக்கு அதுவொரு சரியான காலக்கட்டம் என்றுதான் சொல்லவேண்டும். பிரான்சிஸ் டே சில தினங்கள் தாமதித்திருந்தாலும் கூட அவரின் மதராஸ் பயணம் நடந்திருக்காது. கோட்டையும் கட்டப்பட்டிருக்காது. ஆனால், காலம் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருந்தது. கடுமையான நிதி நெருக்கடி, கம்பெனி பணத்தை தேவையில்லாமல் கோட்டை கட்ட செலவளிக்கிறார்கள். இதுவொரு வீண்செலவு என்ற மேலதிகாரிகளின் ஏச்சுகளை காதில் வாங்காமல் ஆங்கிலேய மதராஸ் வணிகர்கள் 13 ஆண்டுகள் மிகுந்த சிரமத்துடன் இந்தக் கோட்டையைக் கட்டி முடித்தார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை என்ற பெருமையை இது பெற்றது. 1644 ஏப்ரல் 23-ம் தேதி புனித ஜார்ஜ் நாளன்று கோட்டை துவக்கம் கண்டதால் அவரின் பெயரையே கோட்டைக்கு வைத்துவிட்டார்கள்.

பிளாக் டவுண் – ஒயிட் டவுண்

கோட்டையின் மையப்பகுதியில் ஐரோப்பியர் வசித்தனர். இதனை ‘ஒயிட் டவுண்’ என்று அழைத்தனர். கோட்டை உள்ளே வடக்கு பகுதி தனியாருக்கும், தென் பகுதி கிழக்கிந்தியக் கம்பெனிக்கு சொந்தமானதாகவும் இருந்தது. கோட்டையின் வெளிப்புறத்தில் இந்தியர்களின் மிகப் பெரிய குடியிருப்பு தோன்றியது. அதனை ‘பிளாக் டவுண்’ என்றனர்.

வணிகம் நடத்த வந்த இடத்தில் யுத்தம் கூடாது என்பதில் ஆங்கிலேயர்கள் உறுதியாக இருந்தனர். இந்த உறுதி 100 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்தது. வலுக்கட்டாயமாக எதிரிகள் போருக்கு இழுத்தால் கூட எந்தவிலைக் கொடுத்தும் போரை தவிர்த்து அமைதி காத்தனர். இந்த 100 ஆண்டுகளில் ஜார்ஜ் கோட்டைக்குள் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. லாங்ஹார்ன் என்பவர் அலுவலக நடைமுறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தார். கோப்புகளையும் குறிப்புகளையும் சேகரித்து அதை பாதுகாத்து ஒழுங்கு முறையில் சேமித்து வைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இந்த முறை இன்று வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறையில் இருக்கிறது.

1676-ம் ஆண்டு மதராஸப்பட்டிணம் அருகிலிருந்த திருவல்லிக்கேணி கிராமம் இணைக்கப்பட்டு சென்னை மாநகரம் உருவாக முதல் காரணமானது. நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆங்கிலேய திருச்சபை மரபையொட்டி இங்கிலாந்துக்கு வெளியே உலகில் முதன்முதலாக கட்டப்பட்ட தேவாலயம் இங்குள்ள புனித மேரி தேவாலயம்தான். சென்னை மாநகராட்சியின் முன்னோடி அமைப்பான மதராஸப்பட்டிணம் நகராட்சி இந்தக் காலக்கட்டத்தில்தான் உருவானது. இதுபோக மதராஸப்பட்டிணத்திற்கான காவல் படை, மருத்துவமனை, பண்டகசாலை போன்ற பல பொதுநல அமைப்புகள் தோன்றின.

இப்படி பல ஆக்கப்பூர்வ பணிகளை 100 ஆண்டுகளாக செய்துவந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு பிரெஞ்ச் படைகள் மூலம் இடையூறு வந்தது. 1746-ல் பிரெஞ்சுக்காரர்கள் இந்திய வீரர்கள் அடங்கிய படையுடன் ஆங்கிலேயர் மீது தாக்குதல் நடத்தி மதராஸப்பட்டிணத்தைக் கைப்பற்றி, அவர்களை கடலூருக்கு விரட்டியடித்தனர். 1749 வரை ஜார்ஜ் கோட்டை பிரெஞ்ச்க்காரர்கள் கையில்  இருந்தது. இனியும் யுத்தம் வணிகத்திற்கு ஒத்துவராது என்று இருந்தால் தன்னால் நிலைத்து நிற்க முடியாது என்பதை உணர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனி மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் என்பவரை இங்கிலாந்தில் இருந்து வரவழைத்து, இந்திய வீரர்கள் அடங்கிய  கம்பெனி படையை தனக்காக உருவாக்கியது. லாரன்ஸ் தலைமையில் அந்தப் படை மீண்டும் மதராஸப்பட்டிணத்தைக் கைப்பற்றியது. ஜார்ஜ் கோட்டை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தது. இந்தியர்களின் விசுவாசம் ஆங்கிலேயருக்கு பெரும் பக்கபலமாக இருந்தது. இந்தியாவையே தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சி இந்த ஜார்ஜ் கோட்டையில் இருந்தே தொடங்கியது என்றால் அது மிகையல்ல.

கோட்டை அருங்காட்சியகம்
கோட்டை அருங்காட்சியகம் படம்: Nigel Swales

கோட்டை அருங்காட்சியகம்

இப்படி பல தொடக்கங்களுக்கு வித்திட்ட ஜார்ஜ் கோட்டையில் உபயோகத்தில் இருந்த பல்வேறு காலக்கட்ட பொருட்களை கொண்ட ஓர் அருங்காட்சியகமாக கோட்டை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 1948, ஜனவரி 31-ல் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் இரண்டாவதாக தொடங்கப்பட்ட அருங்காட்சியகம் இதுதான். இதில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்கிகள்,  துப்பாக்கிகள், வாள்கள், கைத்துப்பாக்கிகள், கேடயங்கள், தலை மற்றும் மார்புக் கவசங்கள், அவர்கள் பயன்படுத்திய பீங்கான் பாத்திரங்கள், நாணயங்கள், பதக்கங்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் போன்ற 3661 வகையான தொல்பொருட்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அருங்காட்சியகம் இருக்கும் கட்டடம் 1795-ல் கட்டப்பட்டது. தொடக்கத்தில் இது ஆபீஸர்ஸ் மெஸ்ஸாக இருந்தது. பின்னர் வர்த்தக மையமாக செயல்பட்டது. லாட்டரி குலுக்கல்கள் கூட இங்கு நடந்திருக்கிறது. அதன்பின் மதராஸ் வங்கியாக கொஞ்ச நாட்கள் இருந்தது. இந்தியா விடுதலைப் பெற்ற பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

புனித ஜார்ஜ் கோட்டையின் உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் கோட்டை அருங்காட்சியகம் உள்ளது. மொத்தம் மூன்று தளங்கள் கொண்டது. தரைத்தளத்தில் ஆங்கிலேயர்கள் உபயோகித்த பொருட்கள், போர்க்கருவிகள், கவச உடைகள் போன்றவைகள் உள்ளன. முதல் தளத்தில் இங்கிலாந்து நாட்டின் அரசர்கள், அரசிகள், புனித ஜார்ஜ் கோட்டையில் பணியாற்றிய ஆளுநர்கள் ஆகியோரின் மிகப் பெரிய ஆயில் பெயிண்ட் ஓவியங்கள் கண்கவரும் வண்ணம் பிரம்மாண்டமாக உள்ளன. இதில் ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியமும், இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மஹாராணி முடிசூட்டிய போது வரைந்த ஓவியமும் மிக முக்கியமானதாக இருக்கிறது.

இரண்டாம் தளத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பூமிக்கடியில் இருந்து பெறப்பட்ட தொல்பொருட்கள் சிலைகளின் புகைப்படங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அதுவொரு அரிய தொகுப்பு. தரைத் தளத்தில் மாடிப்படி அருகே காரன்வாலிஸின் சலவைக்கல் சிலை ஒன்று 14.5 அடி உயரத்தில் உள்ளது. இதன் அடியில் திப்புசுல்தான்களின் இரண்டு மகன்களையும் பிணைக்கைதிகளாக பிடித்து ஒப்படைக்கும் காட்சி சிலையாக தத்துரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.

புனித மேரி தேவாலயம்

ஆங்கிலேய ஆட்சியர்கள் உபயோகித்த பொருட்களை பார்வையிட்டப்பின் நாம் அடுத்து செல்லவேண்டிய இடம் புனித மேரி தேவாலயம். இது கி.பி.1680-ல் கட்டப்பட்டது. ஆங்கிலேயத் திருச்சபையினர் இங்கிலாந்துக்கு வெளியே அவர்களின் மரபுப்படி கட்டிய முதல் தேவாலயம் இதுதான். அதனால் இதனை ‘ஆங்கிலக்கன் சர்ச்’ என்று சொல்கிறார்கள். இவ்வாலயத்தில் இறந்த பல ஆங்கிலேயர்களின் நினைவாக பாதிப்புக் கற்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் உட்புறத்தில் இங்கிலாந்து நாட்டின் சிற்பிகள் கைவண்ணத்தில் உருவான சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்களும் கலையின் உன்னதத்தைத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. ராபர்ட் கிளைவ் திருமணம் இந்த தேவாலயத்தில் நடந்ததாக குறிப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ஆலயம் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அருங்காட்சியகம் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணியில் இருந்த மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நுழைவுக்கட்டணம் இந்தியர்களுக்கு ரூ.15, வெளிநாட்டினருக்கு ரூ.250 வசூலிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களின் தொடக்ககால ஆட்சிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள அற்புதமான அருங்காட்சியகம் இது.

8 Replies to “இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய பலவீனமான முதல் கோட்டை”

  1. தங்களின் அருமையான தகவலுக்கு நன்றி.

  2. 1695 ஆம் ஆண்டு பிரான்சிஸ்டே கட்டிய போர்ட் ஹவுஸ் இடிக்கப்பட்டு மூன்றடுக்கு கட்டடம் எழுப்பப்பட்டது.. இதுவே தற்போதைய தலைமைச் செயலகம்.. என்று வாசித்த நினைவு.. ஜார்ஜ் கோட்டை பற்றிய தொகுப்பு செய்திகள் அருமை.

  3. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன்தான். ஆனால் புனித ஜார்ஜ் கோட்டை பற்றி இத்துணை தகவல்கள் எனக்கே தெரியா. இந்தக் கோட்டைதான் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை என்பதும், அதை விட இங்குள்ள தேவாலயம்தான் இங்கிலாந்துக்கு வெளியே ஆங்கிலேயர்கள் கட்டிய உலகின் முதல் தேவாலயம் என்பதும் விழி விரிய வைக்கிறது. ஆனால் இவ்வளவு சொன்ன நீங்கள் இடையிடையே ஆங்கிலேயர்களின் கொடுமைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்க வேண்டும். கட்டுரை படிக்கும்பொழுது ஆங்கிலேயர்கள் ஏதோ மிகப் பெரும் அறவாணர்கள், கலை உள்ளம் மிக்க மென்மையானவர்கள் என்பது போலுள்ளது.

    அரிய தகவல்களுக்காக நன்றி!

    1. உண்மைதான் நண்பரே, இதை படிக்கும் போது அப்படித்தான் தோன்றும். ஆங்கிலேயர்களின் கொடுமைகளை பற்றி சொல்ல ஒன்றிரண்டல்ல, ஆயிரம் சம்பவங்கள் உள்ளன. ஆனால் இங்கு ஆங்கிலேயர்களின் ஆரம்ப காலக்கட்ட நிகழ்வுகளை மட்டுமே சொல்லியுள்ளேன். அவர்களும் 100 வருடங்களுக்கு மேல், வாணிபம் செய்ய வந்த இடத்தில் யுத்தம் வேண்டாம் என்றே நிலைப்பாடு கொண்டிருந்தார்கள். பின்னாளில்தான் அவர்களின் குரூர புத்தி வெளிப்பட்டுள்ளது. இங்கு அது தேவையில்லாதது என்று விட்டு விட்டேன்.
      கருத்துக்கு மிக்க நன்றி.

  4. நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நரசய்யா என்னுடன் தொடர்பு கொள்ள [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *