Boy-with-playing-balls

அம்மா அறிந்திராத குழந்தையின் உண்மையான பிஞ்சு மனசு

ஆயிரம் மின்னல் பூத்ததுபோல் பளிச்சிடும் ‘வினோ கண்ணா..!’ அப்பாவின் குரல் வாசலில் கேட்க வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த வினோத் ஆவலாய்த் திரும்பி பார்த்தான். அப்பாதான் ஸ்கூட்டரில் இருந்து இறங்கினார். அம்மா சமையலறையில் இருந்தாள்.

அப்பாவைப் பார்த்ததும் ‘டாடி..!’ என்று கத்தியவாறே வினோத் ஓடி வர… அவனை அப்படியே கட்டித் தழுவிக் கொஞ்சினார்.

“வினோ.. கண்ணா.. இந்தா.. சாக்லேட்..! ஆமா, உன் குட்டி தங்கச்சிப் பாப்பா.. என்ன செய்யுது..?” என்றபடி ஸ்கூட்டரை தள்ளிக் கொண்டே வந்த வரண்டாவில் நிறுத்தினார்.

“தொட்டிலிலே தூங்குது டாடி.. அப்பா போனதும் அழுத்துச்சு.. அப்புறம் தூங்கிருச்சு..!”

அம்மா

சாக்லெட்டை ஐந்து வயது வினோத் அவசர அவசரமாய் பிரித்து வாயில் போட்டுக்கொண்டு அப்பாவை பெருமிதமாகப் பார்த்தான். வீட்டினுள் கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்த அம்மா, சேலை தலைப்பால் கையைத் துடைத்தபடி, அப்பாவை பார்த்தாள்.

அப்பா முகத்தில் சந்தோஷம் பூத்துக் கிடந்தது.

“சித்ரா.. சம்திங் சர்ப்ரைஸ்..! ஐயா.. உனக்காக என்ன வாங்கிட்டு வந்து இருக்கேன் தெரியுமா..? அரியர்ஸ் பணம் வந்துருச்சு.. அதுல.. நீ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தியே.. வாஷிங் மிஷின், அத இப்பத்தான் ஆர்டர் பண்ணிட்டு வரேன். பின்னாடி டிரை சைக்கிள்ள  வருது சந்தோஷம்தானே..!”

அப்பா சொல்லி முடிக்கவில்லை அம்மாவுக்கு, முகத்தில் மின்னல் போல் பிரகாசம் தோன்றி அப்பாவை ஏறிடும்.. போது வாசலில் குரல் கேட்டது.

“சார்.. சார்..!” டிரை சைக்கிள் ஓட்டுபவரின் குரல்

அம்மா ஓடிவந்து பார்த்தாள். விளையாடிக்கொண்டிருந்த வினோத்தும் பார்த்தான்.

வாசலில் புத்தம் புதிய வாஷிங் மெஷின்.. ஆறடி உயரத்தில் காக்கி அட்டையில் பேக் செய்யப்பட்டு.. கம்பீரமாக ட்ரை சைக்கிளில் இருப்பதைப் பார்த்து அம்மாவுக்கு மகிழ்ச்சி பொங்கி ஊற்றெடுத்தது.

புதிதாய் ஒரு பொருளை வாங்கும்போது யாருக்குமே சந்தோஷம்தானே..! ட்ரை சைக்கிள்காரர் உதவியுடன் அப்பா உள் அறையில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

“சித்ரா.. இந்த புத்தகத்துல எப்படி ஆபரேட் பண்றதுன்னு போட்டுருக்கான்.. பார்த்துக்கோ..! அப்புறம் குழந்தைகள் பக்கத்துல வர்ற மாதிரி வச்சுக்காத..!”

“எனக்குத் தெரியாதா? நம்ம பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி வீட்ல கூட இதே மாடல்தாங்க.. ஆபரேட் பண்றது எல்லாம் எனக்கு தெரியும் நான் பாத்துக்குறேன்!”

அம்மாவும் அப்பாவும் அவசரமாய் பேசுவதைப் பார்த்து கூடவே வினோத் வாஷிங்மெஷினை தொட்டுத் தொட்டுப் பார்த்தான்

“சித்ரா, நான் ஆபீஸ்ல ஒன் அவர் பெர்மிஷன் போட்டு இதுக்காகத்தான் வந்தேன். போயிட்டு வந்துர்றேன்.. வினோ..ம்மா… அப்பா போயிட்டு வந்துர்றேன்.. டாட்டா..!”

வாஷிங் மெஷின்

அப்பா போய்விட்டார். அப்பாவுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு வந்த வினோத். இப்போது வாஷிங் மெஷினைப் பார்த்து அம்மாவிடம் கண்கள் விரிய கேட்டான்.

“அம்..மா.. இது.. என்னம்மா..?” வினோத் மழலைக் குரலில் கேட்க அம்மா.. புதிதாய் வாங்கிய வாஷிங்மெஷினைப் பற்றி, அவசரமாய்.. கிச்சனுக்கு போகும் வேகத்தில் சொல்லிக்கொண்டே போனாள்.

“வினோ.. இதுக்கு பேரு வாஷிங் மெஷின்..மா.. இதில் அழுக்கா.. கருப்பா இருக்கிறதப் போட்டா.. நல்லா பளிச்சின்னு வெள்ளையாயிரும்.. புரிஞ்சுதா..!”

வினோத்துக்கு.. புரிந்ததா.. புரியவில்லையா.. தெரியவில்லை. ஆனால், புரிந்த மாதிரி தலையாட்டினான்.

அம்மா குழந்தைகளிடம் இதை எப்படி விளக்க வேண்டும். குழந்தைகள் அதைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டதா..! எனத் தெரியாமல் மேம்போக்காக வாஷிங் மிஷின் பற்றி வினோத்திடம் விளங்கியதால்.. வரப்போகும் விபரீதம் பற்றி தெரியாமலே கிச்சனுக்கு போய் கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் ஓடி போனது.

அப்பா காலையிலேயே ஆபீஸ் கிளம்பி போய்விட்டார். குட்டி பாப்பா.. தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். வினோத் கார் பொம்மைகளை ஒட்டியபடி தானாகவே சிரித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

அம்மா கையில் பையுடன் வந்தவள். வராண்டாவில் விளையாடிக்கொண்டிருந்த வினோத்திடம் சொன்னாள்.

“வினோம்மா.. அம்மா பக்கத்துல கடைக்கு போயிட்டு உடனே வந்துடறேன். சமத்தா விளையாடிகிட்டு இருக்கணும். தங்கச்சி பாப்பா.. தூங்குது.. பத்திரமா பாத்துக்குவியாம்.. பக்கத்து வீட்டு ஆன்ட்டி கிட்ட சொல்லிட்டு போறேன். பத்திரமா விளையாடனும் தெரிஞ்சுதா. அம்மா மார்க்கெட்டுக்கு அம்மா மார்க்கெட்டில் உனக்கு ஆப்பிள் ஆரஞ்சு வாங்கி வருவேனாம்..” அம்மா வினோத்தின் கன்னத்தை லேசாக விரலால் வருடி விட்டு மார்க்கெட் போனாள்.

தங்கச்சிப் பாப்பா

சிறிது நேரம் தான் சென்றிருக்கும்..! வினோத்தின் கண்களில் நிறைய பொம்மைகளுடன் சேர்த்து கிடந்த அந்த பொம்மை.. கருப்பு கருங்குரங்கு பொம்மை.. தெரிய.. அதை முகம் சுளித்தபடி.. எடுத்தான். முகத்தின் அருகில் கொண்டு வந்து.. வெறித்துப் பார்த்தான். மனசுக்குள் ஏதோ வெறுப்புத் தீ போன்ற.. கூடவே, தொட்டிலில் இருந்த தங்கச்சிப் பாப்பா ஞாபகம் வந்து தொலைத்தது.

அந்த கருப்பு நிற பொம்மையை பார்க்கும் போதெல்லாம்.. கூடவே தங்கச்சி பாப்பாவின் ஞாபகம் வினோத்தின் மனசுக்குள் குத்தலாய் தலைகாட்டும். ஏனென்றால், அந்த பொம்மை போலவே, தங்கச்சி பாப்பாவும்.. சற்று கருப்பு என்பதாலா? அவனுக்குத் தெரியவில்லை.

வினோத் நல்ல சிவப்பு. அம்மாவைப் போலவே, நல்ல சிவந்த நிறத்துடன்..! ஆனால், தங்கச்சி பாப்பா..?! அப்படி இல்லை. அப்பாவைப் போல சற்று கருப்பு.. தங்கச்சிப் பாப்பா பிறந்ததிலிருந்தே.. ஏன் பிறந்த அன்றே.. வினோத்.. தன்னுடைய நிறத்துடன் ஒப்பிட்டு அம்மாவிடம் கேட்டான்.

“ம்மா.. பாப்பா.. கருப்பா.. இருக்குல்ல..!”

“அதுவா..! நீ அம்மா மாதிரி சிவப்பாம். தங்கச்சி பாப்பா.. அப்பா போல கருப்பாம்.  அப்பா.. கருப்புல்ல.. அதான் தங்கச்சிப் பாப்பாவும், ஆமா.. உனக்கு அப்பா புடிக்கும்ல்ல.. அதப் போலத்தான் தங்கச்சி பாப்பாவும்.. தெரிஞ்சுதா..?”

வினோத் தங்கை மேல் மிகப் பிரியமாக இருந்தான். ஆனால் அந்தக் கருப்பு? ஏனோ.. வினோத்தின் மனசுக்குள் உறுத்தலாய் கிடந்தது. தங்கச்சிப் பாப்பா.. நம்மைப் போலவே சிவப்பா இருந்தால் எவ்வளவு அழகாக இருப்பாள்.! அம்மா போல சிவப்பாய் ரோசாப்பூ போல.. சிவப்பாய்.. வினோத்திற்கு நினைக்கவே நெஞ்சுக்குள் சந்தோஷம் தவழ்ந்தது. கூடவே அம்மா அன்று புதிதாய் வாஷிங் மெஷின் வாங்கி வந்த போது சொன்னது அவன் காதுக்குள் எதிரொலித்தது.

‘இதுல கருப்பா இருக்குறத போட்டா.. வெள்ளையா பளிச்சுன்னு ஆயிடும்..’ இந்த ஒரு வாரமாய் வினோத் கவனித்துக் கொண்டுதான் வருகிறான். அம்மா புதிதாய் வாங்கிய அந்த வாஷிங் மெஷினில் அழுக்கான துணியைப் போடுவதும், சுவிட்ச் போடுவதும்.. அப்புறமாய் வெள்ளையாய் அந்தத் துணிகளை அம்மா எடுப்பதும்..!

‘அம்மா.. ஏன் தங்கச்சியை இப்படிப்போட்டு சிவப்பாக்காமல் இருக்கிறாள்? அம்மா செய்யவில்லை என்றால் என்ன? நாம் அதை செய்தால், சிறிது நேரத்தில் தங்கை நம்மைப் போலவே சிவப்பாய்.. மனசுக்குள் மகிழ்ச்சிப் பொங்க, வினோத் தொட்டிலை நோக்கி நடந்தான். தொட்டிலில் தங்கை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவளை.. மெல்லத் தூக்கி.. சிணுங்கியவளின் கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டவாறே.. வாஷிங் மெஷினை நோக்கி நடந்தான்.

“என் கண்ணுப்பாப்பா.. என் செல்லப்பாப்பா.. இன்னும் கொஞ்ச நேரத்துல.. அண்ணணனை மாதிரியே நீயும் சிவப்பாயிடுவியாம்..!” இப்போது தங்கை அழத்தொடங்க.. அதை சட்டை செய்யாமல்.. வினோத் அந்த சின்னஞ்சிறு மழலையை அப்படியே சிரமப்பட்டு தூக்கி .. வாஷிங் மெஷின் அருகில் வந்து.. அதன் மூடியை மெல்லத் திறந்து.. வட்ட வடிவ.. அதன் அறையினுள் போட்டு.. சுவிட்சை நோக்கி நகர்ந்து..!

சுவிட்சை சிரித்தபடி.. போட.. திடீரென்று அம்மா கத்துவது கேட்க.. வெளியே வந்தவன்.. அம்மாவிடம் துள்ளலாய் குதித்தபடி சொன்னான்.

“அம்மா.. தங்கச்சிப் பாப்பா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னை மாதிரியே.. சிவப்பாயிடும் பாரு..!” என அவன் வாஷிங் மெஷினை காட்டியபடி சொல்ல அம்மா.. அவன் சொல்வது புரியாமல்.. ஆனால், உடனே சுதாரித்துக்கொண்டு.. ஓவெனக் கத்தியபடி அவனைத் தாண்டி ஓடியவள்… வாஷிங் மெஷினை பார்த்து உறைந்து நின்றவள்.. சற்று நிதானித்து .. ‘ஷ்..! தெய்வமே..!’ என்றாள்.

அவள் கூறிய தெய்வம்தான் அதைச் செய்ததா? தெரியவில்லை. ஆனால், அப்படி சொன்னதுக்கு அர்த்தம் இருந்தது. வினோத் வாஷிங் மெஷின் சுவிச்சைப் போட்டபோது, எதேச்சையாக மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

‘அய்யோ..! என்று கத்திய படி வாஷிங் மெஷின் கதவை மூடாமல்.. அதற்குள் தூக்கிப் போட்ட தனது குழந்தையை.. மனம் பாதை பதைக்க.. உடம்பெல்லாம் வியர்க்க.. கைகள் நடுங்கியபடி.. எடுத்து.. ஆத்திரமாய் இன்னும் விவரம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்த வினோத்தைப் பார்த்தவள்.. மனத்துக்குள்…!

‘அவன் குழந்தை, அவனுக்கு என்ன தெரியும்..? நீரின் குளிர்ச்சியும்.. நெருப்பின் சூடும்.. பெற்றோராகிய நாம் சொல்லித்தந்தால் தானே தெரியும்..’ எதையும் குழந்தைகளிடம் முழுமையாக விளக்காமல் அரைகுறையாய் ஏனோதானோ என்று சொல்லிவிட்டு.. நாம் சொன்ன அந்த விவரத்திற்கு என்ன அர்த்தம் எடுத்துக்கொள்ளும் என ஆராயாமல் விட்டுவிட்டால்.. இது போல நிகழ்வுகள் நிகழத்தானே செய்யும்..! அது பெற்றோரின் கவனக்குறைவு தானே தவிர குழந்தைகளின் தவறில்லை.

அம்மா மனசுக்குள் தன்னைத்தானே தன் தவறை நொந்து கொண்டவள்.. இனி இதுபோல நடக்காது.. என நெஞ்சுக்குள் தீமானித்துக் கொண்டு.. தன் அன்பு மகனை.. ஆதரவாய் தழுவிக்கொண்டாள்.

கதை சொல்லும் விழிப்புணர்வு

நீர் எது? நெருப்பு எது? எது குளிரும்? எது சுடும்? அரும்பு வயதில் அரைகுறையாய் விளக்காதீர்கள். குழந்தைகளை கேள்வி கேட்க விடுங்கள். அது தான் அறிவின் வளர்ச்சி. பதிலாக எதையும் முழுமையாக விளக்குங்கள். உங்கள் செல்லக் குழந்தை வெற்றியெனும் விண்ணைத் தொடுவதை அது எளிதாக்கும்.

ஆசிரியர் பற்றி…

எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்பட இயக்குனர் என்று பல தளங்களில் இயங்குபவர். குழந்தைகள் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ‘இனிய மாணவனே இனி நீதான் நம்பர் 1’ என்ற புத்தகம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது