Laziness

சோம்பல் நிறைந்த வாழ்க்கையே புற்றுநோய் உருவாக காரணம்

சோம்பல் இப்போது நாகரிகமாக மாறிவிட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்ய மாட்டேன்.!’ என்று சொல்வது சகஜமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், சோம்பல் அத்தனை சுகமானதல்ல. இந்த சோம்பல் நம் வாழ்க்கை முன்னேற்றத்தை தடுப்பதோடு மட்டுமல்லாமல், பலவகையான நோய்களையும் கொண்டுவந்து சேர்ந்துவிடுகிறது. அவற்றில் முக்கியமானது கேன்சர் என்ற புற்றுநோய்.

ஒரு இருபது வருடத்திற்கு முந்தைய சினிமாவில் கதையின் நாயகி மீதோ அல்லது நாயகன் மீதோ இரக்கம் வரவேண்டுமென்றால், அவர்களுக்கு கேன்சர் இருக்கிறது என்று காண்பிப்பார்கள். உச்சக்கட்ட காட்சியில் வாயில் ரத்தம் வர அந்தக் கதாபாத்திரம் இறந்து போகும். இப்போது எந்தப் படத்திலாவது இப்படி சித்தரிக்கப்பட்டால் சிரிப்புதான் வரும். அந்தளவிற்கு புற்றுநோய் நம் மனதோடு நெருங்கிவிட்ட ஒரு நோயாகிவிட்டது.

புற்றுநோய்க்கு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆரம்பநிலை நோயாளிகளை முற்றிலுமாக குணப்படுத்திவிடும் மருந்துகளும் வந்துவிட்டன. ஆனாலும் இந்த புற்றுநோய் எப்படி ஒரு மனிதனுக்கு உருவாகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்தது. அதற்கான விடையை மருத்துவ உலகம் தற்போது கண்டுபிடித்திருக்கிறது.

சோம்பல்

புற்றுநோயை கைப்பிடித்து கூட்டிவந்து நம் உடலில் சேர்ப்பது மது, சிகரெட், புகையிலை என்ற மூன்று வஸ்துகள்தான். இது ஓரளவு மருத்துவம் அறிவு உள்ள அனைவருக்குமே தெரியும். இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக சேர்ந்திருப்பது சோம்பல். கொஞ்சமும் அலுங்காமல் குலுங்காமல் சொகுசு வாழ்க்கை வாழும் செல்வ வளமை கொண்ட மேற்கத்திய நாடுகள் இந்த வகை புற்றுநோயால்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

Lazy-sleep

மார்பக புற்றுநோய், ப்ராஸ்டேட், குடல் புற்றுநோய் வருவதற்கு இந்த சொகுசுத்தான் காரணம் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது. அதனாலதான் வளர்ந்த நாடுகளில் இந்த புற்றுநோய் அதிகமா காணப்படுகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதால், அந்த நாடுகளிலும் இந்த நோய்கள் படுபயங்கரமாக பரவி வருகிறது. உடல் பருமனும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையும் தான் இதன் ஆணிவேர். அது மட்டுமல்லாமல் பாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவு, சிகரெட் போன்றவையும் சேத்துக்கொண்டால் இந்த புற்றுநோய் மிகவும் குதூகலமாகி நம்மை விட்டு விலகாமல் எப்பொழுதும் நம்முடனே இருக்கும்.

புற்றுநோய் கூட வசதி வாய்ப்பைப் பார்த்துதான் வருகிறது என்பது எவ்வளவு விநோதமா உள்ளது பாருங்கள். வசதியானவர்களுக்கு இந்த வகை புற்றுநோய்கள் வருகிறது என்றால், வசதியில்லாமல் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு கழுத்துப் புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் வருமாம்.

இந்தியாவில் புற்றுநோய்

இந்தியாவில் முதலில் இந்த மாதிரியான புற்றுநோய்தான் அதிகமா இருந்திருக்கிறது. இப்போது இந்தியர்களின் வாழக்கைத்தரம் கொஞ்சம் கொஞ்சமா உயர்ந்து கொண்டே வருவதாலும், சோம்பல் வாழ்க்கை அதிகமாகிக் கொண்டே போவதாலும், புற்றுநோயும் மாறிக்கொண்டே வருகிறது. கழுத்துப் புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் குறைந்து, வசதியானவங்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவை அதிகமாக வர தொடங்கியிருக்கிறது.

சோம்பல் வாழ்க்கை

சிகரெட் பிடிப்பதாலும் உடல் பருமனாலும் மோசமான உணவுப் பழக்கத்தாலும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை பலமடங்காக பெருகியிருக்கிறது. இதற்கு காரணம் நாம் வசதியா வாழ்கிறோம் என்பதும். சோமபல் நிறைந்த சொகுசு வாழ்க்கை என்பதும்தான்.

உலகம் முழுவதும் இருக்கும் புற்றுநோய்களில் 40 சதவீதம் வளர்ந்த நாடுகளில் மட்டுமே இருக்கிறது. அதிலும் என்னவொரு விநோதம் என்றால் இந்த நாடுகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில வெறும் 15 சதவீதம் மட்டுமே. இதை வைத்துதான் சொகுசான சோம்பல் வாழ்க்கை புற்றுநோயை கொண்டுவரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

புற்றுநோய்களில் நிறைய வகைகள் இருந்தாலும் மார்பகப் புற்றுநோய், நுரையீரல், பெருங்குடல், ப்ராஸ்டேட் புற்றுநோய்கள் மிக அதிகமா பரவிவருகிறது. இவையெல்லாம் வளர்ந்த நாடுகளில் வரக்கூடிய புற்றுநோய் வகைகள். கழுத்து, இரைப்பை, கல்லீரல் புற்றுநோய்கள் வளர்ச்சியடையாத நாடுகளில் வரக்கூடிய நோய்கள். இந்த ஏழு வகையான புற்றுநோய்கள்தான் மொத்த புற்றுநோய்கள்ல 62 சதவீதத்தைப் பிடித்திருக்கிறது.

உணவுப் பழக்கத்தில் மாற்றமும் நல்ல உடற்பயிற்சியும் இருந்தால் கேன்சரை அண்டவிடாமல் விரட்டியடிக்கலாம் என்று மருத்துவ உலகம் தொடர்ந்து சொல்லகிக்கொண்டே இருக்கிறது. எனவே சோம்பல் இல்லாமல் உடலைக் கொஞ்சம் ஆட்டிப்படைப்போம்.

ஆசிரியர் பற்றி..

இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.