Caves of Meghalaya

நார்த் ஈஸ்ட்-8 இதயம் படபடக்க ஒரு குகைப் பயணம்

வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்த அனுபவத்தைப் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த அத்தியாயத்தில் சிரபுஞ்சி அருகிலுள்ள குகைக்கு சென்று வந்த குகைப் பயணம் பற்றி பார்க்கப்போகிறோம்.

சிரபுஞ்சி அருவிகள் எல்லாமே நாம் மேலிருந்து கீழே விழும் நீரை பார்ப்பது போல்தான் அமைந்திருக்கிறது. அதாவது நாம் அருவிக்கு மேல் இருப்போம். இயற்கை அப்படித்தான் அமைத்திருக்கிறது.

இந்த நோகலிகைக்கு மட்டும் கீழே இறங்கி அருவியை ரசிக்கும் வண்ணம் அருகே படிகட்டுகள் கொண்ட பாதையை அமைத்திருக்கிறார்கள். இதில் இறங்கி அருவியின் முழு அழகையும் பார்க்கலாம். இதயநோய், கழுத்து வலி, ஆஸ்துமா போன்ற வியாதிகள் இருப்பவர்கள் கீழே இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.

இது அந்தளவிற்கு ஆபத்தான படிக்கட்டுகள். ஆனால், இறங்கிப் பார்ப்பவர்களுக்கு இயற்கையின் மற்றொரு பிரமாண்ட கோணம் புலப்படும். அது உங்களை இன்னொரு உலகத்திற்கு கூட்டிச்செல்லும்.

இந்த அருவியின் அருகே ஏராளமான உணவு விடுதிகள் இருக்கின்றன. பசியாற மதிய உணவை இங்கு முடித்துக் கொள்ளலாம்.

மௌஸ்மாய் குகை

சீனர்களின் பாரம்பரிய உணவான நூடுல்ஸ் கூட இங்கு கிடைக்கிறது. நமக்கு நம்மூரில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த நூடுல்சை விட இது உடல்நலத்துக்கு மிக நல்லது. இதுபோக குழந்தைகளும் இளைஞர்களும் விளையாடி மகிழ ‘ஸால்-மிகா பூங்கா’ இருக்கிறது.

இதற்கடுத்து ஒரு த்ரிலிங்கான இடம் இருக்கிறது. அதன் பெயர் ‘மௌஸ்மாய் குகை’. சுண்ணாம்புப் பாறைகளை இயற்கை நீரூற்றுகள் கோடிக்கணக்கான வருடங்களாக அங்குலம் அங்குலமாக செதுக்கி எடுத்த அற்புதமான குகை ஓவியம்.

150 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் குகையின் நுழைவாயில் மிகப் பெரியதாக தொடங்குகிறது. போகப் போக அது குறுகி கடைசியில் ஒரு ஆள் மட்டும் குனிந்து வெளியே வரக்கூடிய அளவுக்கு சிறுத்து விடுகிறது.

இந்தக் குகையின் சிறப்பு என்னவென்றால் இதற்குள் நுழைய வழிகாட்டி யாரும் தேவையில்லை. குகைக்குள் மின்விளக்குகள் இருப்பதால் வெளிச்சம் கிடைக்கிறது.

மௌஸ்மாய் குகை
மௌஸ்மாய் குகை

தலையை துளைத்துவிடும்

பக்கவாட்டில் பாதைகள் எதுவும் பிரியாமல் நேராக செல்வதால் வழி தவறிவிடுவோமோ என்ற பயம் தேவையில்லை. ஆனாலும், ஜாக்கிரதையாக மெதுவாக காலடி எடுத்து வைக்கவேண்டும். தவறினால் எப்போதும் நீர் வடிந்து வழுக்கும் தன்மையிலுள்ள பாறைகள் நம் பாதங்களை பதம் பார்த்து விடும்.

சில இடங்களில் உட்கார்ந்து வர வேண்டி இருக்கும் அங்கு லேசாக தலையைத் தூக்கினால் கூட மேலே கத்திப் போல் கூர்மையாக நீட்டிக்கொண்டிருக்கும் பாறை தலையை துளைத்துவிடும் ஆபத்திருக்கிறது.

ஏராளமான திருப்பங்களும் எதிரே என்ன இருக்கிறது? அடுத்து குகை எப்படிப் போகும் என்று தெரியாமல் ஒருவித சஸ்பென்சோடு, இதயம் படபடக்க இந்த குகையைக் கடப்பது இனிமையான அனுபவம். வாழ்நாளில் தவற விடக்கூடாதது.

கும்பலாக உள்ளே நுழைந்தால் மூச்சுமுட்டக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதனால் நான்கைந்து பேருக்கு மேல் ஒன்றாக ஒரே இடத்தில் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

இதற்கடுத்து நாங்கள் சென்றது ‘கோ ரம்ஹா’ என்ற தூண் பாறைக்கு. இதுவொரு பிரமாண்டமான தூண் பாறை.

மோட்ரோப்

இந்திய-பங்களாதேஷ் எல்லை. இந்தியாவின் எல்லையிலிருந்து பங்களாதேசை ஊடுருவிப் பார்ப்பது ஒரு தனி சுகம். கீழிருந்து மேலாக எழும் இந்த ராட்சத பாறை பெரிய தூண் போல் நிற்கிறது. இந்தப் பாறையை உள்ளூர் வாசிகள் ‘மோட்ரோப்’ என்று அழைக்கிறார்கள்.

நூதனமான பாறை வடிவங்களைக் கொண்ட ரம்மியமான இடம் இது. ஒரு சிற்றோடை பாறையின் ஊடாக நீர்வீழ்ச்சிப் போல் விழுந்து எழுந்து ஓடுகிறது. பாறைக்கு அப்பால் தெரியும் பரந்து விரிந்து இருக்கும் பசுமை பள்ளத்தாக்குதான் ‘பங்களாதேஷ்’ நாட்டின் சமவெளியாகும். அந்நாட்டு மக்கள் தென்படுகிறார்களா என்று பார்த்தோம்.

பசுமையான மரங்களுக்கு நடுவே மனிதர்கள் இருந்தாலும் தெரியாது. அந்த பசுமை சமவெளிக்கு நடுவே ஒரு சாலை செல்வதை மட்டும் காணமுடிந்தது. அயல்நாடு என்பது காடாக இருந்தாலும் மனசுக்குள் ஒரு பரவசம் ஏற்படத்தான் செய்கிறது. வெளிநாட்டு மண்ணைப் பார்த்த திருப்தியில் மீண்டும் ஷில்லாங் திரும்பினோம்.

எங்களுக்காக சுவையான உணவோடு ராஜரத்தினம் காத்திருப்பார்.

-இன்னும் பயணிப்போம்…

2 Replies to “நார்த் ஈஸ்ட்-8 இதயம் படபடக்க ஒரு குகைப் பயணம்”

Leave a Reply

Your email address will not be published.