வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலும் பெண்கள் ராஜ்ஜியம்தான். பழங்குடி இனத்திற்குக்கே உரித்தான தாய்வழி சமூகம் இங்கு மேன்மையாக பின்பற்றப்படுகிறது.
அதோடு இங்கிருக்கும் கிராமங்களின் சுத்தம். இதை வேறு எங்குமே பார்க்க முடியாது.
‘அண்டை வீட்டாரின் பொறாமை; சொந்தக்காரரின் பெருமை’ இப்படி ஒரு டிவி விளம்பரம் 25 வருடங்களுக்கு முன்பு வந்தது. இப்போது அதே மனநிலையில்தான் இருக்கிறார்கள்,
மாவுலின்னாங் கிராமத்து மக்களும் அதன் அருகே இருக்கும் மற்ற கிராமத்து மக்களும். மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காஷி மலைத்தொடரில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் சுத்தத்திற்கு பேர்போனவை.
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம்
அப்படியிருக்கும் போது ‘ஆசியாவிலேயே தூய்மையான கிராமம்’ என்ற பெருமையை இந்தக் கிராமம் தட்டிக்கொண்டு போய்விட்டது. அதனால் அந்தக் கிராம மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். அண்டைக் கிராமங்கள் பொறாமை கொள்கின்றன.
இயற்கை அற்புதங்களுக்கு பஞ்சமில்லாத மேகாலய மாநிலத்தில் இன்னோர் அற்புதமும் நாங்கள் கண்டோம். அது வேர் பாலம். அதுவும் அந்தக் கிரம்மத்தில் இருக்கிறது.
மாவுலின்னாங்
இந்திய – பங்களாதேஷ் எல்லைக்கு மிக அருகில் இருக்கும் கிராமம்தான்; மாவுலின்னாங். ஷில்லாங்கில் இருந்து 90 கி.மீ. தொலைவில் இந்தக் கிராமம் உள்ளது. சுத்தம் என்றால் அப்படியொரு சுத்தம்.
குப்பைக்கூளங்களை இங்கு பார்க்க முடியாது. எங்கும் தூய்மைதான். தெருக்கள் தவறமால் மூங்கில் கூடைகள் அழகாக 100 அடி தொலைவுக்கு ஒன்று என்றிருக்கிறது. சிறிய துண்டு பேப்பர் என்றாலும் அந்தக் கிராம மக்கள் அவற்றை அந்த மூங்கில் கூடையில்தான் போடுகிறார்கள்.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து போடுகிறார்கள். அப்படி கூடையில் சேரும் மக்கும் குப்பைகளை ஒரு குழிக்குள் போட்டு அதனை மக்கவைத்து விவசாயத்துக்கு உரமாக பயன்படுத்துகிறார்கள்.
மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதனால் கிராமம் எப்போதும் ‘பளிச்’சென்று இருக்கிறது. சுத்தத்திற்காகவே சுற்றுலா அந்தஸ்து பெற்றது இந்தக் கிராமம்தான்.
கிராமம் முழுவதும் செடி கொடிகளும் மரங்களும் புல்வெளிகளும் இயற்கை வரைந்த ஓவியமாக பசுமையாக அழகுற காட்சி தருகிறது. கண்களுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
பெண்ணியம்
இது பழங்குடிகள் கிராமம் என்றாலும் இங்கிருக்கும் மக்கள் அனைவரும் கல்வி கற்றவர்கள். 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்கள். கிராமத்தில் இருக்கும் அனைவரும் சர்வ சாதரணமாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.
பெண்ணியம் பேசும் பெண்களுக்கு இந்த கிராமமும் காஷி பழங்குடி மக்களையும் மிகவும் பிடித்துப் போகும். உலகம் முழுவதும் ஆணாதிக்கம் தழைத்தோங்க..
இங்கு எல்லாமே பெண்ணாதிக்கம் தான்.
கிட்டத்தட்ட வடகிழக்கு மாநிலங்கள் எல்லாமே பெண்கள் ராஜ்யம்தான். பெண் குழந்தைகளை இங்கு கொண்டாடுகிறார்கள். ஆண் குழந்தைகளைக் கண்டுகொள்வதில்லை.
அம்மாவின் பெயரே குழந்தைகளுக்கு இன்ஷியலாக வைக்கிறார்கள். குடும்பத்தின் வாரிசு மகள்தான். அதிலும் கடைசி பெண் குழந்தைதான் எல்லாவித சொத்துக்கும் வாரிசுதாரர். அசையும் சொத்து அசையா சொத்து அனைத்துமே பெண்களுக்குத்தான்.
முன்னுரிமை
பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும் குடும்பத்துக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடுதல். ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்த பெற்றோர்கள் அதிர்ஷ்டம் கெட்டவர்கள்.
கவனிப்பு, செல்லம், அன்பு, முன்னுரிமை, ஸ்பெஷல் உணவு ஆகிய அனைத்தும் பெண் குழந்தைக்குதான். கல்வியிலும் வேலையிலும் பெண்களே முந்துகிறார்கள்.
திருமணமும் பெண் விருப்பப்படிதான். காதலுக்கு இங்கு எதிர்ப்பில்லை, பச்சைக் கொடிதான். அதனால் பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்கள்தான்.
திருமணம் முடிந்த கையோடு மணமகன் மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு சென்றுவிட வேண்டும். மனைவி வீட்டு சொந்த பந்தங்களுடன் மாமியார் வீட்டில் இருப்பதுதான் கணவனுக்கு மரியாதை.
பிடிக்காத கணவனை பிரியவும், வேறு ஆணை திருமணம் செய்து கொள்ளவும் பெண்ணுக்கு பூரண உரிமை உண்டு. சில பெண்களுக்கு இரண்டு மூன்று கணவர்கள் இருப்பதும் சாதாரணம். அரிதாக பூமியில் இருக்கும் பெண்வழிச் சமூகம் இங்கு மேன்மையாக கடைப்பிடிக்கப்படுகிறது.
-இன்னும் பயணிப்போம்…
ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.