சேரர் வழிவந்த வேணாட்டு மன்னர்களின் தலைநகர் பத்மநாபபுரம். அதனை அடுத்து காணப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்க உதயகிரிக் கோட்டை.
வேணாட்டு மன்னர்களின் போர்த்திறனுக்கும், அரன் வலிமைக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இக்கோட்டை 260 அடி உயரமான ஒரு சிறிய மலையை மையமாகக் கொண்டு 85 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
இக்கோட்டை மதில் 18 அடி உயரமும், சில இடங்களில் 15 அடி உயரமும் கொண்டது. மலையுச்சியில் நின்றால் ஆறு மைல் சுற்றளவில் உள்ள இடங்களை நாம் காணலாம்.
உதயகிரி ஒரு காலத்தில் சேர மன்னர்களின் முக்கிய படைத்தளமாக விளங்கியது. மட்டுமின்றி, மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த ஒரு பெருநகராகவும் திகழ்ந்தது என்பதற்கு இலக்கிய கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
சோழப் பேரரசன் இராஜராஜன் காலத்தில் சேர நாட்டை ஆண்டுவந்தவன் பாஸ்கர ரவிவர்மன்.
நெறி தவறிய சேரன்
‘இராஜராஜ சோழன் தமது தூதுவனை சேரநாட்டிற்கு அனுப்ப, சேரவேந்தன் பாஸ்கர ரவிவர்மன் அரசு நெறி தவறி தூது வந்த சோழநாட்டு வீரனை உதயகிரிக் கோட்டையில் சிறைப்படுத்தினான்.
இதைக் கேள்வியுற்ற இராஜராஜ சோழன் கொதித்து எழுந்து, தமது படையுடன் உதயகிரி வந்தடைந்து, கோட்டை கொத்தளங்களை அழித்து நகரை எரித்து தூதுவனை விடுவித்தான்,’ இச்செய்திகளை ஒட்டக் கூத்தரின் ‘மூவருலா’ நமக்குத் தெரிவிக்கின்றது.
“தூ தற்காப்
பண்டு பகலொன்றில் ஈர் ஒன்பது சுரமும்
கொண்டு மலை நாடு கொண்டோனும்
ஏறிப் பகல் ஒன்றில் எச்சுரமும் போய் உதகை
தூறித் தன் தூதனை நோக்கினோன்
மத கயத்தால் ஈர் ஒன்பது சுரமும் அட்டித்து
உதகையைத்தீ உயித்த உரவோன்”
சோழர் படையின் வேகம்
”பகல் ஒன்றில் ஈரொன்பது சுரமும் கொண்டு”- அதாவது பன்னிரண்டு மணிநேரத்தில் பதினெட்டுக் காடுகள் கடந்து என்ற பொருளைக்கொண்ட தொடர், சோழர் படை சென்ற வேகம், அவர்களது வெறி இவற்றை நமது கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.
போர் நெறிக்கு புறம்பாக தூது சென்ற ஒரு வீரனைச் சேர மன்னன் சிறையிலிட்டதால் அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழனும் அவனது படைகளும் ஆவேசங்கொண்டதில் வியப்பேதுமில்லை.
இராஜராஜ சோழன் குதிரையின் மீது ஏறி உதயகிரிக் கோட்டையின் உள்ளே நுழையும் காட்சியை உதயசூரியன் எழுவது போல் இருந்தது என ஜெயங்கொண்டார் தமது கலிங்கத்துப்பரணியில் அழகுபடக் கூறியுள்ளார்.
மேலும் சேர மன்னனின் வலிமைமிக்க யானைப்படைகளைக் கவர்ந்து, உதயகிரிக் கோட்டையை வெற்றிகொண்ட செய்தியுடன், இவ்வெற்றியின் நினைவாக இராஜராஜ சோழன் தமது பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நாளன்று சேர மண்டலத்தில் விழாவெடுத்த செய்தியையும், கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகின்றது.
“சதய நாள் விழா உதியர் மண்டலம்
தன்னில் வைத்தவன் தனியோர் மாவின் மேல்
உதயபானு வொத்து உதகை வென்ற கோன்
ஒருகை வாரணம் பல கவர்ந்து”
உதயகிரிக் கோட்டையின் அருகில் உள்ளது திருநந்திக் கரை குடைவரைக்கோயில். இதன் கிழக்குச் சுவரில் முதல் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு ஒன்று காணப்படுகின்றது.
சதயத்தில் விழா
மேற்குக் கடற்கரையிலுள்ள முட்டம் என்ற ஊரை அவன் கைப்பற்றி அதற்குத் தம் பெயரைச் சூட்டினான். குடைவரைக்கோயிலில் குடிகொண்ட மகா தேவர்க்கு தமது பிறந்த நாளான ஐப்பசிமாத சதயத்தில் விழா கொண்டாடினான்.
விழா முடிவில் கோயில் திருவுருவச்சிலை ஆராட்டப்பட்டு அதன் முன்னால் இராஜ ராஜ திருநந்தா விளக்கு ஒன்றும் ஏற்றப்பட்டது. இச் செய்திகளை குடைவரைக்கோயிலில் கிடைத்த கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இராஜராஜ சோழன் தமது பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நாளை சேர நாட்டிலே கொண்டாடினான் என்று கலிங்கத்துப்பரணி கூறும் செய்தியை திருநந்திக்கரை கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.
சுசீந்திரம் தாணுமாலயர் ஆலயத்தில் மார்கழித் திருவிழா சதய நாளனறு தொடங்குவதை வைத்து இராஜராஜ சோழன் தான் இத்திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தான் எனக்கொள்ளலாம்.
கடல் வழியே துரத்தினான்
உதயகிரிக் கோட்டையின் சிறப்பு, அது எரியூட்டி அழிக்கப்பட்ட நிகழ்ச்சி, சேர மன்னன் கடல் வழியே ஓடிய செய்தி இவற்றை திருக்கோயிலூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.
“சாரன் மலை எட்டும் சேரன் மலை நாட்டுத்
தாவடிக் குவட்டின் பாவடிச் சுவட்டுத்
தொடர் நெய்க் கனகம் துகள் எழ, நெடுநல்
கோபுரம் கோபுரம் கோவை குலைய மாபெரும்
புரசை வட்டம் பொடிபட, புரிசைச்
சுதை கவின் படைத்த குளிகை மாளிகை
உதகை முன் ஒள் எரி கொளுவி
உதகை வேந்தை கடல் புகவெகுண்டு”
சோழன் படை சென்ற வேகத்தில் குருதி படிந்த தூசி பறந்தது. உயர்ந்த கோபுர வாயிலும், கோட்டை கொத்தளங்களும், மாடமாளிகைகளும் இடித்து அழிக்கப் பட்டன.
சோழநாட்டு தூதுவனை சிறைப்படுத்திய சேர வேந்தனை கடல் வழியே துரத்தினான் சோழவேந்தன் . இச்செய்திகளை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இக் கல்வெட்டிலே வரும் ”கடல்புக வெகுண்டு” என்ற தொடரிலிருந்து இராஜராஜ சோழனுக்கும், பாஸ்கர ரவிவர்மனுக்கும் கடற்போர் நடந்தது எனக்கருத இடமிருக்கிறது.
புலியூர் குறிச்சி
கடற்போர் குளச்சலில் வைத்து நடந்திருக்கலாம். சோழமன்னன் பிடித்தடக்கிய உதயகிரி பின்னர் அந்த அரசின் சின்னமான புலியின் பெயரால் புலியூர் குறிச்சி என மாற்றப்பட்டது. இன்றும் உதயகிரிக் கோட்டையைச் சுற்றியுள்ள இடங்கள் புலியூர் குறிச்சி என்றே வழங்கப்படுகிறது.
மாற்றாருக்குரிய கோட்டை கொத்தளங்களைத் தகர்ப்பதற்கு யானைப்படைகள் பயன்படுத்தப்பட்டன என்று வரலாறு கூறுகின்றது. அப்படை வீரர் குஞ்சர மல்லர் என்று அழைக்கப்பட்டனர். சோழநாட்டின் வேழப்படை மிகவும் வலிமைமிக்கது.
“சோழநாட்டு அரசு அறுபதினாயிரம் போர் யானைகளைக் கொண்டது” என்ற சீன அறிஞனின் கூற்றை பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் தமது ” சோழர்கள் வரலாற்றிலே” குறிப்பிடுகிறார்.
பண்டையத்தமிழர்கள் போர் நெறியை ஐந்தாகப் பகுத்தனர். பகைவரை எச்சரிப்பது வெட்சி, படையெடுப்பது வஞ்சி, பகைவர் அரண் அழித்தல் உழிஞை, போர்க்களத்திலே நின்று போராடுவது தும்பை, போர் முடிவில் வெற்றிகாண்பது வாகை. இவற்றுள் உதயகிரிக் கோட்டையின் அழிவு உழிஞையின் பாற்படும்.
மார்த்தாண்டவர்மன்
எரித்து அழிக்கப்பட்ட உதயகிரிக் கோட்டை ஏழு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சேரர் வழிவந்த வேணாட்டு மன்னர் மார்த்தாண்டவர்மனால் சீரமைக்கப்பட்டது. கோட்டை மதில்கள் அம்மன்னனின் காலத்தில் பழுது பார்க்கப்பட்டன.
உதயகிரிக் கோட்டை வேணாட்டு வீர வரலாற்றிலே சிறந்ததொரு போர்ப் பாசறையாகத் திகழ்ந்தது என திருவிதாங்கூர் சரித்திரம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
கி. பி. 1741-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் நாள் குளச்சலில் வைத்து வேணாட்டுப் படைகளுக்கும், டச்சுப் படைகளுக்கும் போர் மூண்டது.
தாய் நாட்டின் மானங்காக்க வேணாட்டு வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வீரப் போர்புரிந்தனர். முடிவில் வேணாட்டு மன்னர் மார்த்தாண்டவர்மா வெற்றி பெற்றார்.
டச்சுப்படை தோற்று ஓடியது. இம்மாபெரும் வெற்றியை குளச்சலில் எழுப்பியுள்ள வெற்றிக் கம்பம் பறைசாற்றி நிற்கின்றது.
டிலனாய்
இப்போரிலே கைது செய்யப்பட்ட இருபத்திநான்கு கைதிகளில் ஒருவன் தான் திருவிதாங்கூர் வரலாற்றிலே முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றுள்ள டிலனாய்.
மார்த்தாண்டவர்மா மன்னர் டிலனாயை நண்பனாக்கி பின்னர் தமது படைகளுக்குத் தலைவனும் ஆக்கினார். உதயகிரிக் கோட்டை டிலனாய் மேற்பார்வையில் விடப்பட்டது. அந்த டச்சு நாட்டு. வீரன் கோட்டையிலுள்ள வேணாட்டு வீரர்களுக்கு மேனாட்டு முறைப்படி போர்ப் பயிற்சி அளித்தான்.
சிறிய நாடாக இருந்த வேணாடு பின்னர் திருவிதாங்கூர் என்ற பெரிய நாடாக மாறுவதற்கு டிலனாயின் உழைப்பும், போர்த் திறனும் மார்த்தாண்ட வர்மா மன்னருக்கு மிகவும் உதவியாக இருந்தது.
உதயகிரிக் கோட்டையில் பெரிய படைக்கலங்கள் தயாரிக்கப்பட்டன. மேஜர் வேல்ஷ் என்பவர் தமது “இராணுவ நினைவுகள்” என்ற நூலில் “உதயகிரியில் கிடைத்த ஒரு பெரிய பீரங்கியை 1200 வீரர்களும் பதினாறு யானைகளும் சேர்ந்து சிறிதும் அசைக்க முடியவில்லை’ என்று குறிப்பிடுகிறார்.
திருவிதாங்கூர்
உதயகிரி கோட்டையின் உள்ளே மேற்கூரையில்லாத ஒரு தேவாலயமும், ஆலயத்தினுள்ளே டிலனாயின் கல்லறையும் காணப்படுகின்றன.
அக்கல்லறையின் மேலே பொறிக்கப்பட்ட இலத்தீன் கல்வெட்டிலிருந்து டிலனாய் திருவிதாங்கூர் மாநிலத்தில் 37 ஆண்டுகள் தொண்டு செய்தார் என்றும், கி. பி. 1777-ஆம் ஆண்டு தமது 62-வது வயதில் உயிர் நீத்தார் என்று அறியலாம்.
பீரங்கி, வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கி, ஈட்டி, வாள் போன்ற போர்க்கருவிகள் கல்லறையின் மேல் செதுக்கப்பட்டுள்ளன. டிலனாயின் கல்லறையை அடுத்து, அவரது மனைவியின் கல்லறையைக் காணலாம்.
மகனும் திருவிதாங்கூர் படையிலே சேர்ந்து பல போர்களிலே கலந்து கொண்டதாக திருவிதாங்கூர் வரலாறு நமக்குத் தெரிவிக்கின்றது. டிலனாயின்
இவ்வாறு உதயகிரிக் கோட்டை சேர சோழ மன்னர்களின் வரலாற்றிலே சிறந்ததொரு இடத்தைப் பெற்று, குமரி மாவட்டத்தின் வரலாறு கண்ட கோட்டையாக இன்னும் நம்மிடையே திகழ்கிறது.
பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். குமரி மாவட்டத்தின் வரலாறு, பண்பாடு, கலைச்சிறப்பு இவற்றை வெளி உலகுக்கு எடுத்துக்கூறும் பணியினை கடந்த 60 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளார். குமரி மாவட்டத்தின் வரலாற்றிலிருந்து அரிய பல செய்திகளை இலக்கிய மற்றும் கல்வெட்டு ஆதாரங்களோடு வெளியே கொண்டு வந்த பெருமை இவரைச்சாரும். இவர் எழுதிய நூல்கள் பல.