இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயணித்த அற்புத அனுபவங்களை ஒரு பயணத் தொடராக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது முதல் அத்தியாயம்!
நார்த் ஈஸ்ட், நார்த் ஈஸ்டர்ன் ஸ்டேடஸ், வடகிழக்கு மாநிலங்கள் – இந்த வார்த்தைகள் எல்லாமே இந்தியர்களை ஒரு மர்மமான பிரதேசத்துக்குள் பலவந்தமாக தள்ளிவிடும் அச்சம் கலந்த வார்த்தைகள்.
தீவிரவாதிகள் பிடியில் சிக்குண்டு கிடக்கும் காஷ்மீருக்குக் கூட நம் மக்கள் மனதார சாவகாசமாக சுற்றுலா போய் வந்து விடுகிறார்கள். ஆனால், இந்த பாவப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் யாரும் ஒரு எட்டு கூட எடுத்து வைப்பதில்லை.
அதற்கு காரணம் இந்த மாநிலங்கள் பற்றி நிலவும் அச்சம்தான். உண்மையில் வடகிழக்கு மாநிலங்கள் அச்சம் மிகுந்த பயங்கரமான இடமா..! வாங்க..! போய் பார்த்துவிட்டு வந்துடலாம்..!!
வடகிழக்கு
வடகிழக்கு மாநிலங்கள் அச்சத்தால் மட்டும் தனித்து நிற்கவில்லை. அங்கு நிலவும் தட்பவெப்பம், கடினமான நில அமைப்பு, வேறுபட்ட மனிதர்கள், வித்தியாசமான கலாசாரங்கள் என எல்லாமே அவர்களை ஓரங்கட்டி வைத்திருக்கிறது.
உருவத்திலும் அவர்கள் இந்தியர்களிடம் இருந்து வேறுபடுகிறார்கள். மங்கோலியர்கள் போல் இருப்பது ஒரு காரணம். அதனால் அவர்கள் சீனர்களுடன் நெருக்கம் காட்டுகிறார்கள். நாமும் அவர்களை அந்நியர்களாகவே பார்க்கிறோம்.
பல வருடங்களாக தனிநாடு கேட்டு போராடியவர்கள் கொஞ்ச காலமாகத்தான் தனி மாநிலம் வேண்டும் என்று இறங்கி வந்திருக்கிறார்கள். இந்தியாவுடனான அவர்களின் பிணைப்பு அவர்கள் நிலப்பகுதி போலவே மிக மெலிதாகவே நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.

ஏழு சகோதரிகள்
இந்தியாவில் இருந்து ‘செவன் சிஸ்டர்ஸ்’ என்று சொல்லப்படுகிற வடகிழக்கு மாநிலங்களைப் பார்க்கப் போகிறவர்கள் பங்களாதேஷை சுற்றிக் கொண்டுதான் போகவேண்டும். இந்த ஏழு மாநிலங்களையும் சிலிகுரி என்ற குறுவழி அல்லது கோழிக்கழுத்து என்று அழைக்கப்படும் 24 கிமீ அகலம் மட்டுமே கொண்ட நிலப்பகுதி இணைக்கிறது.
அருணாச்சலப்பிரதேசம், அஸாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிஜோரம், திரிபுரா, சிக்கிம் ஆகிய 8 மாநிலங்களைத்தான் வடகிழக்கு மாநிலங்கள் என்கிறார்கள். இதில் கடைசியாக சேர்ந்த சிக்கிமை விட்டுவிட்டு மற்ற மாநிலங்களை ஒன்று சேர்த்து ‘ஏழு சகோதரிகள்’ என்று அழைக்கிறார்கள்.
இப்படி இவர்கள் தங்களை அழைத்துக் கொண்டாலும் இவர்களுக்குள்ளும் குடுமிப்பிடி சண்டை சச்சரவுகள் இருக்கின்றன. போராட்டங்கள் நடக்கின்றன. அதனால் அபாயகரமான பட்டியலில் தொடர்ந்து நார்த் ஈஸ்ட் இருந்து வருகிறது. அங்கு பயணம் செய்வது ஆபத்தானது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.
எனக்கும் அந்தப் பயம் இருந்தது. ஆனாலும் உலகின் அதிபயங்கரமான இடங்களுக்கு பயணம் செய்து வந்த ராபர்ட் யங் பெல்டன், ஆபத்தான இடம்தான் சுற்றுலா செல்ல ஏற்றது என்கிறார். அதனால் அந்தப் பயமும் மறைந்து போனது.
ஹாலிடே நியூஸ்
வடகிழக்கு மாநிலங்கள் மீது எனக்கு காதல் ஏற்படக் காரணம் ‘ஹாலிடே நியூஸ்’ தான். அதில் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்கள் பற்றி வந்த கட்டுரைகள், அந்த வசீகரப் பகுதியை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி வீட்டுக் கொண்டே இருந்தது.
அந்த நிலையில்தான் திண்டுக்கல்லில் இருந்து எங்கள் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது. எஸ்.என்.ஆர்.விஜயன் என்பவர் அதை அனுப்பியிருந்தார். அதில் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா செல்வதற்கான ஒரு ‘டிவைடிங் சிஸ்டம் டூர்’ பற்றிய பேக்கேஜ் இருந்தது. நான் நினைத்ததுபோல் அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு டூராக அது இருந்தது.
அது மட்டுமல்ல, தமிழகத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்பவர்களும் இல்லை. அபூர்வ மனிதராக விஜயன் கிடைத்தார். அந்த சுற்றுலா போவதாக முடிவெடுத்து, எனது ஆசிரியரும் வெளியீட்டருமான எம்.ஜே.வாசுதேவனிடம் அனுமதி கேட்டேன். அவரும் மகிழ்வுடன் அதற்கு சம்மதித்தார்.
இப்படித்தான் எனது வடகிழக்குப் பயணம் தொடங்கியது. மொத்தம் 17 பேர் கொண்ட குழு அது. என்னைத் தவிர அனைவரும் சீனியர் சிட்டிசன்கள். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வேலை என்ற எல்லா கடமைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில் சுற்றுலா வந்திருந்தார்கள்.

வைகை எக்ஸ்பிரஸ்
மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதுதான் பயணத்தின் முதல் நிலை. வைகை எக்ஸ்பிரஸில் எனது இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்த நாகராஜன்தான் மொத்த சுற்றுலாவையும் கலகலப்பாக்கியவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவருடன்தான் எனது முழுப் பயணமும் இருந்தது.
உணவு விஷயத்தில் பெரிதாக அக்கறை கொள்ளாத எனக்கு அவர் மட்டும் இல்லையென்றால் பல நேரம் பட்டினி கிடந்திருப்பேன். நானும் அவரும் எங்களுடன் வந்த மற்றவர்களும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி முடியவும், சென்னைக்கு வைகை வந்து சேரவும் சரியாக இருந்தது.
நாங்கள் அடுத்து ஏற வேண்டியது திப்ரூகர் எக்ஸ்பிரஸ்தான். திப்ரூகர்தான் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம். இதில்தான் அஸாம் மாநிலம் கௌஹாத்தி வரை பயணிக்கப் போகிறோம்.
கௌஹாத்தி
இரவு 10.30-க்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் 55 மணி நேரம் பயணித்து கௌஹாத்தி போய் சேரும். நீண்ட தூரப் பயணம். மொத்தம் 2,790 கிமீ தொலைவு. அப்படியொரு நீண்ட பயணத்துக்கு எங்களை தயார் படுத்திக்கொண்டோம்.
ரயிலுக்காக 4-ம் நம்பர் பிளாட்பாரத்தில் காத்திருந்தோம். நேரம் நெருங்க நெருங்க பிளாட்பாரம் முழுக்க பெரும்பாலான முகங்கள் சீன தேசத்தின் சாயலில் தெரியத் தொடங்கின. ரயில் வந்ததும் கொஞ்சமும் கட்டுப்பாடு இல்லாமல் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள்.
எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஏஸி கோச் மிகப் பழமையானது. இதற்கு முன்பு இப்படியொரு மோசமான கோச்சில் பயணித்ததில்லை. புதிதாக தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் எல்லாம் வடஇந்தியாவில்தான் ஓடுகின்றன என்ற எண்ணம் எத்தனை அபத்தமானது என்று புரிந்து கொண்டேன். ரயிலைப் பொறுத்தவரை இந்தியா முழுவதும் ஒரே லட்சணம்தான்..!
-இன்னும் பயணிப்போம்…
இரண்டாவது அத்தியாயத்தில் பயணிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.