Cellular_Jail

செல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்

அது 1967-ம் வருடம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 19 ஆண்டுகள் முடிந்திருந்தன. பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தையும், விடுதலைப் போராட்டத் தியாகங்களையும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்த காலம், இதற்கு ஆட்சியாளர்களும் விதிவிலக்கல்ல. அப்படி மறக்கப்பட்ட ஓரிடம்தான் செல்லுலார் ஜெயில்!

அன்றைய பிரதமர் இந்திராகாந்தி சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய அம்சங்களுள் ஒன்றான செல்லுலார் ஜெயிலை இடித்து விட தீர்மானித்திருந்தார். ‘அது வெறும் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் சாதாரண சிறைக்கூடம் அல்ல. அது இந்திய விடுதலை போராட்டத்தின் ஒரு அங்கம். சுதந்திரப் போராட்ட வீரர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் கொலைக்கூடம். நமது தியாகிகளின் கதறலும், மரண ஓலமும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் ரத்தம் படிந்த களம்’ என்று தியாகிகள் தங்களின் கொதிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

Cellular_Jail,_Andaman_and_Nicobar
Image: Aliven Sarkar

செல்லுலார் ஜெயில்

‘ஒரு கைதி இந்தியாவில் இருப்பது ஆபத்து என்று நினைத்தால் யாரை வேண்டுமானாலும் அந்தமானுக்கு நாடு கடத்தலாம். அதற்கு அவர்கள் ஆயுள் கைதிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை’ – 1909-ல் பிரிட்டீஷ் அரசு இப்படியொரு உத்தரவை அவர்களுக்கு சாதகமாக உருவாக்கிக் கொண்டது.

அந்தமானுக்கு ஒரு கைதி அனுப்பப்பட்டால் அவன் உயிரோடு திரும்புவதற்கான சாத்தியம் குறைவு. எப்படிப்பட்ட வலிமையான போராளியையும் முடக்கிப்போட்டு விடும் அசாத்திய பலம் அந்த சிறைச்சாலைக்கு இருந்தது.

அந்தமான் முழுக்க தென்னை மரங்கள் இருந்தன. அதனால் கைதிகளுக்கான வேலையும் தேங்காய் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. தேங்காயில் நார் உரிப்பது, கயிறு திரிப்பது, எண்ணெய் எடுப்பதுதான் கைதிகளுக்கு வேலையாக கொடுக்கப்பட்டன.

இந்தப் பதிவை காணொலியாகவும் காணலாம்..

நார் உரிப்பதற்கு ஒரு கைதிக்கு 20 முற்றிய தேங்காய்கள் கொடுக்கப்படும். மேலோட்டமாகப் பார்த்தால் இது சுலபமான வேலை போல தோன்றும். ஆனால் நார் எடுப்பது சுலபமில்லை. மரசுத்தியல் கொண்டு அரைமணி நேரம் தொடர்ந்து வேகவேகமாக அடித்துக் கொண்டே இருந்தால்தான் தேங்காயில் இருந்து நார் பிரியத் தொடங்கும். நார் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை. விரல்கள் எல்லாம் வீங்கி ரணமாகி ரத்தம் வழியும். அப்போதும் விடமாட்டார்கள். குறிப்பிட்ட இலக்கை எட்டும் வரை ஓய்வெடுக்க முடியாது.

நார் எடுப்பதை விட கயிறு திரிப்பது சற்று சுலபமான வேலை. அதனால் அந்த வேலையை எழுந்திருக்க முடியாத அளவுக்கு உடல் நலமில்லாத, பலவீனமான, வயோதிகம் அடைந்த கைதிகளுக்கு கொடுப்பார்கள்.

இருப்பதிலேயே கொடூரமானது தேங்காயிலிருந்து எண்ணெய் எடுப்பதுதான். மாடுகள் செக்கிழுக்கும் போது கூட ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 பவுண்ட் எண்ணெய்தான் எடுக்க முடியும். ஆனால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாடுகள் அளவுக்கு மதிப்பு மிக்கவர்களா என்ன…?

செக்கிழுக்கும் ஒவ்வொரு கைதியும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 பவுண்ட் எண்ணெய் எடுக்க வேண்டும். அப்போதுதான் தூங்கப் போக முடியும். மற்ற கைதிகள் இரவில் தூங்கியப் பின்னும் செக்கிழுக்கும் கைதிகள் இலக்கை அடைய முடியாமல் செக்கை சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள். அது கொடுமையிலும் கொடுமை.

இலக்கை முடித்து விடியற்காலை தூங்கப்போவார்கள். ஒரு மணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டார்கள். அதற்குள் அடுத்த நாள் வேலை ஆரம்பித்து விடும். சரியான உணவு போதுமான தூக்கம் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த கைதிகள் ஏராளம்.

கூனிக் குறுகச் செய்து விடும் வல்லமை

எப்படிப்பட்ட வைராக்கியம் நிறைந்த பலசாலி கைதிகளையும் இரண்டு நாட்களுக்குள் முடக்கிப் போட்டு கூனிக் குறுகச் செய்து விடும் வல்லமை இந்த செக்கிழுக்கும் வேலைக்கு உண்டு. தொடக்கத்தில் முரண்டு பிடித்து ஆவேசம் காட்டிய, போராட்ட வெறி கொண்ட கைதிகள் எல்லாம் இரண்டு நாள் செக்கிழுத்தலில் அத்தனையையும் விட்டு விட்டு சொன்னதை கேட்கும் அடிமைகள் போல் மாறி விடுவார்கள்.

ஆங்கிலேயர்கள் எதிர்பார்த்தது இதைத்தான். சில கைதிகள் இந்தக் கொடுமைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள். பலர் மனநிலை பாதிக்கப்பட்டார்கள். இப்படி சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைந்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்படிப்பட்ட தேசத்தலைவர்களின் சோகம் அப்பிய கண்ணீர்க் கதைகளையும், உயிர்த் தியாகத்தையும் தன்னுள் புதைத்து வைத்திருந்த செல்லுலார் ஜெயில் சுதந்திரம் அடைந்ததும் மூடப்பட்டது. அப்படியே மூடிய ஜெயிலை இடித்துவிட வேண்டும் என்ற போதுதான் முன்னாள் கைதிகள் கொதித்தெழுந்தார்கள்.

”செல்லுலார் ஜெயில் நம்முடைய தியாகங்களின் அடையாளம். ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய புனிதச் சின்னம். அங்கே கணக்கில்லாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களுடைய உயிரை, உடல் நலத்தை, வாழ்க்கையைப் பறி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய தியாகம் இந்த தலைமுறைக்குப் புரிய வேண்டும். சுதந்திரம் என்பது சும்மா வந்துவிட வில்லை என்று தெரிய வைக்க வேண்டும். அதற்கு ஜெயில் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும். அதை இடித்து தள்ளுவது நமது பெருமைக்குரிய விடுதலைப் போராட்ட சரித்திரத்தை நாமே குழி தோண்டி புதைப்பதற்கு சமம்!” என்று தீர்மானம் போட்டார்கள்.

அதேவேளையில் அந்தமான் சிறைச்சாலை இடிக்கப்படுவதாக செய்தி வெளியானது. கொல்கத்தாவில் இருந்த அந்தமான் முன்னாள் கைதிகள் 26 பேர் குழுவாக சேர்ந்து ஒரு இயக்கத்தை தொடங்கினார்கள். இந்த முன்னாள் கைதிகள் எல்லோரும் அப்போது பழுத்தக் கிழவர்களாக மாறியிருந்தார்கள். நோயோடும் வறுமையோடும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் சிறைச்சாலை இடிக்கப்படுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

போராடிய நெஞ்சுரம்

நாட்டின் விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நெஞ்சுரம் அவர்களிடம் மிச்சம் இருந்தது. சுதந்திர இந்தியாவில் தங்களின் தியாகம் மறந்துவிடக் கூடாது என்பதற்காக இந்திய அரசை எதிர்த்து அசராமல் போராடினார்கள்.

1969 மார்ச் 20-ல் இந்த முன்னாள் கைதிகள் குழு அந்தமான் சென்றது. அப்போதுதான் செல்லுலார் ஜெயில் இடிக்கப்படவில்லை என்று தொடர்ந்து கூறிவந்த இந்திய அரசின் பொய்முகம் அவர்களுக்குப் புரிந்தது. சிறைச்சாலையின் பெரும்பகுதி இடிக்கப்பட்டிருந்தது. பதறிப்போனார்கள். இந்தியா திரும்பியவர்கள் பெரிய போராட்டத்தில் இறங்கினார்கள். இதற்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகியது. வேறு வழியில்லாமல் அரசு பணிந்தது.

ஏழு பிரிவுகள் கொண்ட செல்லுலார் ஜெயிலின் நான்கு பிரிவுகள் ஏற்கனவே இடிக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமிருக்கும் மூன்று பிரிவுகளையும் மையக்கோபுரத்தையும் பழுது பார்த்து பராமரிப்பதாகவும், அதை தேசியச் சின்னமாக மாற்றுவதற்கும் அரசு ஒப்புக் கொண்டது. ஆனாலும் சிறு துரும்பைக் கூட அரசு கிள்ளிப் போடவில்லை. நினைவுச்சின்னமாக மாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

காலங்கள் ஓடின. அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமரானார். மீண்டும் விடுதலைப் போராட்டக் கைதிகள் பிரதமரை சந்தித்தனர். கோரிக்கையை வைத்தனர். உடனே பரிசீலனை செய்வதாக பிரதமர் உறுதியளித்தார்.

அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை

1979, பிப்ரவரி 11-ல் அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 12 வருட போராட்டம் வெற்றி அடைந்தது. தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒரு நினைவுத்தூண் ஒன்றை சிறைச்சாலை வளாகத்தில் நிறுவினார்கள்.

இப்போது அந்தமான் வரும் எந்த சுற்றுலா பயணியும் செல்லுலார் ஜெயிலை பார்க்காமல் போவதில்லை. சிறை அறைகள், அவற்றில் அடைபட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய தகவல்கள், முழு உருவச் சிலைகள், கைதிகள், காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அணிந்த உடைகள், கைதிகளுக்குப் பூட்டப்பட்ட சங்கிலிகள், விலங்குகள், அவர்கள் செய்த வேலைகள், தண்டனைகளை விளக்கும் அருங்காட்சியகம், தூக்குமேடை, சுதந்திரப் போராட்டத்தை சொல்லும் போட்டோக்கள், பிரமாண்ட நூலகம், அந்தமான் வரலாற்றை விளக்கும் ‘ஒலியும் ஒளியும்’ போன்ற பல அம்சங்கள் செல்லுலார் ஜெயிலில் இருக்கின்றன. தியாகிகளின் உணர்வுகள் இன்றைக்கும் செல்லுலார் ஜெயிலைப் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை கசிய வைத்து விடுகிறது.

ரவீந்திரநாத் தாகூர் அந்தமான் கைதிகளுக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தார். அதில் ‘உங்களுடைய தாய்நாடு எப்போதும் தன்னுடைய மலர்களை மறந்து விடாது!’ என்று…உண்மைதான் நாம் எப்படி மறக்க முடியும்? விலை மதிக்க முடியாத அந்த உன்னத தியாகத்தை…!

ஆசிரியர் பற்றி..

இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

One Reply to “செல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது