தமிழ்நாடு

தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறு

தமிழ்நாடு: விருதுநகர் அருகே உள்ளது மண்மலை மேடு என்னும் சூலக்கரை (மேடு) கிராமம். அந்தச் சிற்றூரில் கருப்பசாமி – வள்ளியம்மை இணையருக்கு, ஆயிரத்து எண்ணுற்று தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு சனவரித் திங்கள் இருப்பத்தாறாம் நாள் சங்கலிங்கனார் பிறந்தார். பிற்காலத்தில் இவர் பிறந்த சனவரி இருபத்தாறாம் நாளில்தான் இந்தியா குடியரசு நாடாக ஆனது. அதனால் சங்கரலிங்கனார் பிறந்த நாள் தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத நாளாகும்.

சங்கரலிங்கனார்

சங்கரலிங்கனார் சிறுவயதில் இருந்தே தாய்மொழிப் பற்றும், தாய் நாட்டுப்பற்றும் மிக்கவராய் வளர்ந்தார். விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார். மூதறிஞர் இராஜாஜி நிறுவிய திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தங்கிப் பணியாற்றினார்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தேழாம் ஆண்டும், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டும் அண்ணல் காந்தியடிகள் விருதுநகருக்கு வருகைதந்தபோது அவருக்கு உதவியாக இருந்து செயல்பட்டார் சங்கரலிங்கனார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தேழாம் ஆண்டு கரூரில் சத்தியாகிரகப் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் கைதாகித் திருச்சிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

செந்தமிழ்நாடு

நம் தமிழ் நிலத்திற்குச் ‘செந்தமிழ்நாடு’ என்று பெயர் வைத்துப் பாடினார் நம் தேசியக் கவி பாரதியார். அதை வலியுறுத்திச் ‘சென்னை மாகாணம்’ (ஸ்டேட் ஆஃப் மெட்றாஸ்) என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்ற வேண்டும் என நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்தார் சங்கரலிங்கனார். மேலும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், தமிழை நீதிமன்ற நிர்வாக மொழியாகக் கொண்டு வரவேண்டும், குடியரசு தலைவர், ஆளுநர் பதவிகளை ஒழிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் அனைவரும் கதராடை அணிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தார்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறாம் ஆண்டு சூலை மாதம் இருபத்தேழாம் நாள் விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் சங்கரலிங்கனார். கோரிக்கை நிறைவேறாவிட்டால் தாம் சாகும் வரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

உண்ணாவிரதம்

“அறியாமை என்னும் விபத்தில் பிறந்து, துன்பமாகிய மரங்கள் தோன்றி வளர்ந்து. ஆசையாகி வேர் மண்ணில் இறங்கிப் பள்ளி கொள்ள, காதல் இன்பம் மகிழ்ச்சியாகிய கிளைகள் படர்ந்து, வருத்தம் என்னும் பூப்பூத்து, அவலம் என்னும் காய்காய்த்து, சாவாகிய பழம் பழுத்தது போன்று இவ்வுடல் நிற்கும். பொய்யாகிய இவ்வுடம்பை எண்ணிக் கவலைப்படுவதில் என்ன பயன்?” என்று ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘சீவக சிந்தாமணி’ கூறும். இந்தக் கருத்தை நன்கு உணர்ந்திருந்த சங்கரலிங்கனார், சாவை ஒரு பொருட்டாகக் கருதாமல் உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தனி மனிதனாக நடத்தி வந்தார். எழுபத்தைந்து நாள்கள் கடந்தான், பலன் இல்லை.

பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் தோழர் பி.இராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, எஸ்.இராமகிருட்டிணன் ஆகியோர் சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து, “உங்கள் கோரிக்கைகளுக்காக நாங்கள் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துகிறோம். தயவுசெய்து நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனாலும் தம்முடைய உறுதியிலிருந்து அவர் மாறவில்லை. உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து கடைபிடித்தார்.

எழுபத்தாறு நாள்கள் (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறாம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி வரை) உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய உடல் நிலை மிகவும் மோசமானது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ்மகன் சங்கரலிங்கனார் பதிமூன்றாம் தேதி தமிழ்த்தாயின் திருவடியைப் பற்றினார்.

முன்னதாக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, “நான் இறந்தபிறகு என் உடலைப் பொதுவுடமைக் கட்சியினரிடம் ஒப்படையுங்கள். அவர்கள்தாம் எனக்கு இறுதி நிகழ்ச்சிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார். அவருடைய விருப்பத்தின் பேரில் கே.டி.கே.தங்கமணி, கே.பி.ஜானகி அம்மாள் உள்பட பல தலைவர்கள் கலந்துகொள்ளப் பொதுவுடைமைக் கட்சி, தியாகி சங்கரலிங்கனாருக்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு

அவருடைய இறப்புக்குப் பிறகு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்றாம் ஆண்டு பிப்ரவரி இருபத்து நான்காம் நாள் அப்போது தமிழக நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் ‘சென்னை மாகாணம்’ என்பதைத் ‘தமிழ்நாடு‘ எனச் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து ஏழில்) அறிஞர் அண்ணா முதல்-அமைச்சர் ஆனதும் ‘தமிழ்நாடு’ என்று சட்டப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்து தியாகி சங்கரலிங்கனாருக்குப் பெருமை சேர்த்தார். இதன் பிறகுதான் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’ என்ற பாடலுக்குப் பொருள் புரிந்தது.

இந்தத் தியாகச் செம்மலுக்குத் தமிழக அரசு விருதுநகரில் அழகிய மணி மண்டபம் கட்டி சிறப்புச் சேர்த்துள்ளது. மதுரை மூதூரில் ஜெயஹிந்து புரத்தில் ஒரு பெரிய வீதிக்கு ‘தியாகி சங்கரலிங்கனார் தெரு’ என்று பெயர் சூட்டப்பட்டு தினமும் அவர் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது.

“சாவெனில் தமிழுக்காகச் சாக வேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்”.

 

2 Replies to “தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *