Amma Mechchu Devadanapatti

தமிழகத்தின் மிக உயரமான அருவியும் மர்மமான காட்டுக் கோயிலும்

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் மிக உயரமான இந்த அருவியை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். மழைக்காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டும். என்னதான் வெள்ளமாக கொட்டினாலும் தூரத்திலிருந்து இந்த அருவியைப் பார்க்கும்போது வெள்ளை எலியின் வால் போன்றே இருக்கும். அதனால் இந்த அருவிக்கு எலிவால் அருவி என்று காரணப் பெயர் வைத்துவிட்டார்கள் நம்மவர்கள்.

வருடத்தில் சில மாதங்கள் தண்ணீர் இல்லாமல் இது வறண்டு இருப்பதால், பலரும் இதை காணாமலும் கடந்து போயிருப்பார்கள். அப்படி கண்டவர்களுக்கும் காணாமல் கடந்தவர்களுக்கும் தெரியாது, இது தமிழகத்திலேயே மிக உயரமான அருவி என்று, சொல்லப்போனால், இது இந்தியாவிலேயே 10-வது உயரமான அருவி. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இந்த அருவி ஆசியாவிலேயே உயரமான அருவி என்ற சாதனையும் கொண்டுள்ளது. என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா..?! இந்தியாவில் 10-வது இடத்தில் இருக்கும் ஓர் அருவி எப்படி ஆசிய அளவில் முதலிடத்தில் இருக்கும்? அதற்கு காரணம் இருக்கிறது.

அருவிகளை பல வகையாக பிரிக்கிறார்கள் புவியியல் வல்லுநர்கள். அதில் ஒரு வகைதான் குதிரை வால் அருவிகள். இந்த அருவிகளில் நீர் ஒரு கோடுபோல் கீழே விழும். தொலைவில் இருந்து பார்க்கும்போது குதிரையின் வால் போல் இருக்கும். அதனாலே அப்படியொரு பெயர். இந்த குதிரை வால் அருவிகள் வகையில்தான் ஆசிய கண்டத்திலேயே உயரமான அருவியாக இது இருக்கிறது.

மிக உயரமான அருவி

வத்தலகுண்டு, பெரியகுளம் பகுதிகளில் இருந்து காட்ரோடு வழியாக கொடைக்கானல் செல்பவர்கள் டம்டம் பாறையிலிருந்து இந்த அருவியை பார்க்கலாம். இதைப் பார்ப்பற்கென்றே ஒரு காட்சி கோபுரத்தையும் அரசு அமைத்துள்ளது. இப்போது அந்த காட்சிக்கோபுரம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அதனருகில் யாரையும் அனுமதிப்பதில்லை. இங்கிருந்து அந்த அருவியை பார்ப்பது கண்கொள்ளா காட்சி.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டிக்கு அருகே இந்த அருவியுள்ளது. எலிவால் அருவி என்று பேச்சு வழக்கில் பெயர் இருந்தாலும், இதன் உண்மையான பெயர் தலையார் அருவி. இந்த அருவிதான் தமிழ்நாட்டிலேயே மிக உயரமான அருவி. இதன் உயரம் 297 மீட்டர். அடிக்கணக்கில் சொல்ல வேண்டுமென்றால் 975 அடி.

அருவியின் தலைப்பகுதிக்கும் கீழே விழும் பகுதிக்கும் செல்லமுடியும். அதற்கு நீங்கள் காடுகளில் நீண்ட தூரம் நடந்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சாதாரண சுற்றுலாவாசிகள் இங்கெல்லாம் செல்லமுடியாது. சாகஸ பயணிகள் கூட மழைக்காலங்களில் சென்றால் பாறைகள் வழுக்கிவிடும் ஆபத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அட்டைகள் நம் ரத்தத்தை உறிஞ்சி ஒருவழி செய்துவிடும். அதனால் கோடை காலத்தில் இங்கு செல்வது மட்டுமே ஓரளவு பாதுகாப்பைத் தரும்.

Way to Tallest Waterfall Tamilnadu
தமிழகத்தின் மிக உயரமான அருவிக்குப் போகும் வனப்பாதை

 

அருவியின் மேல் பகுதிக்கு சென்ற இரண்டு வெளிநாட்டு சாகஸ பயணிகள் பாறை வழுக்கிவிட்டு கீழே விழுந்து இறந்துள்ளார்கள். இது 2006-ம் ஆண்டில் நடந்த சோகம். அதனால் இங்கு செல்பவர்கள் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. இது மிகவும் ஆபத்தான உயிருக்கு துணிந்த பயணம்தான்.

வனப்பகுதி

அருவியின் மேல் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் பெருமாள் மலை கிராமத்திலிருந்து 9 கி.மீ. நடந்து அருவியை அடையலாம். வனத்துறையின் அனுமதி பெற்றே இங்கு செல்ல முடியும். கிட்டத்தட்ட ஒருநாள் இதற்கு தேவைப்படும். அதேபோல் அருவி கீழே விழும் பகுதிக்கு செல்வதும் சாகசம்தான். ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்ல முடியும். அதற்கப்பால் பாதை கிடையாது என்பதால் பாதை கண்டுபிடித்து செல்வது மிக மிகக் கடினம்.

தேவதானப்பட்டியிலிருந்து அருவிக்கு போக பாதையிருக்கிறது. வனப்பகுதி என்பதால் வனத்துறையின் அனுமதியில்லாமல் உள்ளே நுழைய முடியாது. ஞாயிற்றுக் கிழமைத் தவிர மற்ற நாட்களில் வனத்துக்குள் செல்ல வனத்துறை அனுமதியளிக்கிறது. மஞ்சளாறு அணை வழியாக 8 கி.மீ. தொலைவு நடந்து சென்றால் இந்த அருவியை அருகில் சென்று பார்க்கலாம். அப்படியிருந்தும் அருவி நீர் விழும் இடத்தை பார்க்க முடியாது. அதற்கு முன்பே பாதை மிக கடுமையாகிவிடும். போதாக்குறைக்கு அருவிக்கு 3 கி.மீ. தொலைவில் செல்லும்போதே அருவியின் சாரல் தொப்பலாக நம்மை நனைத்துவிடும். அதனால்தான் அருவியின் அடிப்பகுதியை அடைவது சாதனையாக இருக்கிறது.

இந்தப் பதிவை காணொலியாக காணலாம்..

இந்த அருவி தலையாறு, மூளையாறு (இருட்டாறு), வறட்டாறு என்ற மூன்று நதிகளின் நீரால் உருவாகிறது. இந்த மூன்று நதியும் இணைந்து மஞ்சளாறு என்ற பெயரில் அருவியாக விழுகிறது. இந்த ஆற்றைத் தடுத்துதான் மஞ்சளாறு அணை கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பாதையில் இருந்து மஞ்சளாறு அணையைப் பார்ப்பது ஆனந்த அனுபவம்.

காட்டுக் கோயில்

தலையார் அருவிக்கும் மஞ்சளாறு உருவானதற்கும் ஒரு சுவாரசியமான கதை இங்கிருக்கிறது. மஞ்சளாறு அணைப்பகுதியில் இருக்கும் அம்மா மெச்சு என்ற இடத்தில் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. இதுதான் மூங்கிலணை காமாட்சியம்மன் தோன்றிய இடம். இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக மக்கள் வழிபடுகிறார்கள். இந்த கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் தலையார் பாவா என்கிற இஸ்லாமிய ஆன்மிகப் பெரியவரின் கல்லறையும் இருக்கிறது. இவற்றை உள்ளூர் மக்களின் வழிகாட்டுதலுடன் பார்த்து வரலாம்.

காட்டுக்குள் மறைந்திருக்கும் இந்தக் கோயிலிலும் திருவிழா கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18-ம் தேதியும் அதற்கு முந்தைய நாளும் விழாக்கோலம் பூண்டுகிறது. அப்போது மட்டும் காட்டுக்குள் குடும்பம் குடும்பமாக மக்கள் திரள்கிறார்கள். தற்காலிக கடைகள் காட்டை ஆக்ரமித்துக்கொள்ளும். காட்டுக்குள் மின் விளக்குகளும் ஒலிபெருக்கிகளும் நுழைந்து கொள்ளும். வருடம் முழுவதும் இந்தப் பகுதிகளில் உலவும் காட்டு விலங்குகள் இந்த இரண்டு நாட்கள் மட்டும் வேறு இடம் பார்த்துக்கொள்ளும்.

இந்தக் கோயில் உருவானதற்கு சுவாரசியமான கதை இருக்கிறது. ஆறுகளின் பெயரில் தலை, மூளை, மஞ்சள் என்று வருவது ஒர் அமானுஷத்தை உணர்த்துகிறதா..? அதைப்பற்றி அடுத்துப் பார்ப்போம்.

10 Replies to “தமிழகத்தின் மிக உயரமான அருவியும் மர்மமான காட்டுக் கோயிலும்”

  1. நன்றி இங்கு இருக்கும் பெருமை சிறப்பு தெரியாமல் வெளியே சென்று தேடும் நபர்களுக்கு இது ஒரு புதிய சிந்தனை உருவாக காரணமாக அமைந்தது எனலாம்

  2. நன்றி எங்கள் ஊர் அருவியைப் பற்றி எழுதியதற்கு. இதுதான் தமிழகத்தின் மிக உயரமான அருவி என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.

  3. நன்றி. சொற்சித்திரம். நாமும் கூடவே பயணிப்பது போன்ற உணர்வு. அரிய தகவல்.

    1. இதனைத் தொடர்ந்து வரும் அடுத்தப் பதிவு மேலும் ஆச்சரியத்தை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *