Tamil King

ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் எழுத ஆணையிட்ட மன்னன்

ஒருசமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றியது. உடனே தன் அரண்மனைப் புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என்று ஆணையிட்டார்.

நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்கு கோடிப் பாடல்கள் எழுதுவது? புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றார்கள்.

ஒளவையார்

அந்த சமயம் அங்கே வந்த ஒளவையார் புலவர்களைப் பார்த்து “என்ன வருத்தம்?” என்று கேட்டார். புலவர்களும் அரசனின் உத்தரவை சொல்லி நான்கு கோடிப்பாடல்களுக்கு எங்கு செல்வோம் என்று இழுத்தார்கள்.

அவ்வையார் புன்முறுவலுடன் “இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் நான்கு கோடி பாடல்கள். கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்” என்றுகூறி நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுத்தார்.

புலவர்கள் தயங்கி நிற்க, ஒளவையார் “ஒவ்வொரு பாடலும் ஒருகோடி பொன் மதிப்புடையது சென்று உங்கள் மன்னனிடம் கொடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் எழுத ஆணையிட்ட மன்னன்
ஒளவையார்

வியந்த மன்னன்

புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசித்தார்கள் , மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் ஒளவையார்தான் இயற்றியிருக்க முடியும் என்பதனை உணர்ந்தார்.

புலவர்களிடம் இந்தப்பாடலை இயற்றியது ஒளவையார் தானே என வினவ அனைவரும், ‘ஆமாம்.. ஒளவையார் இயற்றியதுதான்’ எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து ஒளவையாரை அழைத்தார். ஒளவையாருக்குப் பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினான் .

அந்த நான்குகோடி பாடல்கள்: எது என்பது தெரியுமா?


மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும்
.

முதல் கோடி

ஒளவையாரின் நான்கு கோடியில் முதல் கோடி

  1. ‘மதியாதார்’ முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்.
    ‘நல்ல பண்புகளைக் கைக்கொள்ளாதவர்’ வீட்டிற்கு செல்லாதிருப்பது, கோடி பொன்னுக்கு சமம். ‘மதிக்காதவர்’ வீட்டுக்கு செல்லாமல் இருப்பது நலம் .

இரண்டாவது கோடி

  1. உண்ணீர் உண்ணீர் என்று ‘உபசரியார்’ தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்.
    உணவை அருந்த ‘அன்புடன் அழைக்காமல்’, வெறும் வாய்ச்சொல்லில் அழைப்போர் வீடுகளில், சாப்பிடாமல் இருப்பது கோடி பொன்னுக்கு சமம்.

மூன்றாவது கோடி

  1. கோடி கொடுத்தும் ‘குடிப்பிறந்தார்’ தம்மோடு கூடுதல் கோடி பெறும்.
    கோடி பொன்னைக் கொடுத்தாவது, ‘நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம்’ சேர்ந்து வாழ்வது, கோடிப் பொன்னுக்கு ஒப்பாகும்.

நான்காவது கோடி

  1. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய ‘நாக் கோடாமை’ கோடி பெறும்.
    கோடி பொன் கொடுப்பதாகச் சொன்னாலும், ‘சொன்ன சொல் மாறாமல்’ வாழ்பவன் கோடி பொன்னுக்கு சமம்.

இந்த நான்கு கோடிகளைக் கடைப்பிடித்தால் நாமும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாம். நல்ல பண்புகளே நல்ல மனிதர்களை உருவாக்க முடியும் அவ்வையார் நீதிக்கதைகள் எக்காலத்துக்கும் எல்லோருக்கும் பொருந்தும்…..என்பதில் சந்தேகமே வேண்டாம் ஒளவையின் தமிழ் அமுதத் தமிழ்.

One Reply to “ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் எழுத ஆணையிட்ட மன்னன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *