Guru Peyarchi

குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன நன்மைகள்?

ஜோதிட உலகில் தேவர்களின் குரு பிரகஸ்பதி என்கின்ற வியாழ பகவான். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும் என்பதும்,  குரு பார்க்க கோடி நன்மை என்பதும், குரு பகவானை சிறப்பித்துக் கூறுகின்ற பழமொழிகள். அதனால் குரு பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தக் குருபகவனைப் பற்றி சொல்லவேண்டுமென்று சொன்னால், ஒன்பது நவகிரகங்களில் மிகவும் நன்மைகளைத் தருபவர் என்று சொல்லத்தக்கவர் இந்த குருபகவான்தான். 

இந்த பிரபஞ்சத்தை அமைப்பதற்கு ஏழு ரிஷிகள் இருந்தார்கள். அந்த ஏழு ரிஷிகளில் முக்கியமானவர் ஆங்கிரஸ மகரிஷி. அவருடைய மகனாக பிறத்தவர்தான் இந்த குருபகவான். தன்னை பல அறிவற்றல்களால் வளர்த்துக்கொண்டு, அவர் பிரகஸ்தி என்ற பட்டத்தை வாங்கக்கூடிய அளவிற்கு உயர்ந்து இன்றைக்கு ஒரு அற்புதமான கிரகமாக இருக்கிறார். 

‘குரு பார்க்க கோடி நன்மை’ 

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று சொல்வார்கள். இவருடைய சொந்த வீடு தனுசு ராசி மற்றும் மீன ராசிதான். கடக ராசியில் இவர் உச்சம் பெறுகிறார். மகர ராசியில் நீசமடைகிறார். இப்படிப்பட்ட இவர் எந்த இடத்தில் அமர்கிறாரோ அந்த இடத்தில் சிறப்பிருக்காது. அவர் பார்க்கக்கூடிய பார்வைக்குத்தான் அத்தனை மரியாதையும். அதனாலதான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று சொன்னார்கள்.

ஒருவருடைய ஜென்ம ராசியில் இவர் அமர்ந்தால் அது ஜென்ம வியாழன். ராமர் வனவாசம் போனது இந்த ஜென்ம வியாழனில்தான். அதேபோல் நான்கில் குரு வரும்போது வாலி பட்டமிழந்தார். பத்திலே குரு துரியோதனன் படை மாண்டது. சிவபெருமான் மண்டையோட்டில் பிச்சை எடுத்ததும் இந்த பத்தில் குரு வரும்போதுதான். 

குரு பார்வை

ஒருவரின் தொழில் சிறப்படைய வேண்டுமென்றால் குரு பார்வை இருக்க வேண்டும். அவர் நின்ற இடத்தைவிட்டு பார்க்கக்கூடிய பார்வைக்கு மரியாதை உண்டு. பொதுவாக இந்த உலகை சுற்றி எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கின்றது. 

இருந்தாலும் அதிலே 27 நட்சத்திரங்கள் என்று சொல்லக்கூடிய அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி உள்ளன. 

இந்த நட்சத்திரங்கள்தான் பூமியை சுற்றி அதிகமான தாக்கத்தை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆக, இந்த 27 நட்சத்திரங்கள்தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றன. ஒரு ராசிக்கு ஒன்பது பாதம். ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதம். ஒன்பது பாதங்களை கொண்டது ஒரு ராசி என்றால், 12 ராசிகளுக்கும் சேர்த்து 108 பாதங்கள் கொண்ட ஓர் அமைப்புதான் இந்த கிரக மண்டலம். இதன் அடிப்படையில்தான் குழந்தை பிறந்ததும் ஜாதகம் எழுதுகிறோம். 

ஜாதகம்

இந்த ஜாதகத்தை பொறுத்தவரை ஒரு ஆளைப் பார்க்காமலே அவர் கட்டையா, குட்டையா, கருப்பா, சிவப்பா, அவர் உடலைத் தொட்டால் சுடுமா சுடாதா? அவரின் குடும்ப வாழ்க்கை எப்படி? அவருடைய தைரியம் எப்படி? கூடப்பிறந்தவர்கள் எத்தனை பேர்? அவருடைய கல்வி நிலை எப்படி? அவர் வேறேதும் கலைகள் படிப்பாரா? எந்தவிதமான படிப்பை படிப்பார்? அவங்கம்மா எப்படி இருப்பார்கள்? வயக்காடு எப்படி இருக்கும்? வீடு, வாகனங்கள் போன்ற எல்லா அமைப்புகளையும் பார்க்கலாம். 

போன பிறவி, இந்தப் பிறவி, புத்திரர்கள், நோய், கடன், சத்துரு, எதிரி, திருமணம், அது சொந்த ஊரில் நடக்குமா? வெளியூரில் நடக்குமா? ஒரு கல்யாணமா? இரண்டு கல்யாணமா? இறப்பு எப்படியிருக்கும்? என்று எல்லாமே சொல்லப்படுகிறது. பூர்வீக சொத்துக்கள் சேருமா? சேராதா? சொந்த தொழிலா? அரசாங்க வேலையா? வெளிநாடு போவாரா? லாபமென்ன..? விரயமென்ன..? 

இத்தனையையும் கணிக்கக்கூடிய வல்லமையை ஞானிகள் இந்த ஜோதிடக் கலை மூலம் நமக்கு அளித்திருக்கிறார்கள். உலகத்துக்கு வழிகாட்டும் விதமாக ஆன்மிகம் மற்றும் அறிவியல் மூலம் பல விஷயங்கள் நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த ஒன்பது கிரகங்களில் குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு கிரகங்கள்தான் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் உட்காருவார்கள். 

சந்திரன் ஒரு கட்டத்தில் இரண்டே இரண்டு நாட்கள்தான் தங்குவார். அடுத்த இரண்டு நாளில் இன்னொரு ராசிக்கு மாறிவிடுவார். புதனும் சுக்கிரனும் 45 நாட்கள், 35 நாட்கள், 30 நாட்கள் இதற்குள் மாறிவிடுவார்கள். செவ்வாய் 45 நாட்களில் மாறிவிடும். ராகு, கேது ஒன்றரை வருடத்தில் மாறும். சனி இரண்டரை வருடத்திற்கு ஒருமுறைதான் மாறுவார். ஆனால், குரு மட்டும் வருடத்திற்கு ஒருமுறை மாறுவார். 

ராசி மண்டலம்

மொத்தம் 12 ராசி. இந்த 12 ராசிகள் கொண்ட ராசி மண்டலம் என்கிற பிரபஞ்சத்தை சுற்றி வர குரு எடுத்துக்கொள்ளும் காலம் 12 வருடங்கள். அதேபோல் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் தங்குகிறார்.

இரவு பகல் இருந்தால்தான் மனிதனுக்கு நன்றாக இருக்கும். எப்போதும் இரவோ அல்லது வெறும் பகலோ இருந்தால் நன்றாக இருக்காது. இனிப்பும் கசப்பும் இருந்தால்தான் வாழ்க்கை. அந்த அடிப்படையில் இந்த குரு பெயர்ச்சி 12 ராசிக்கும் எப்படி அமைந்திருக்கிறது. அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதிக்கின்ற இடம்தான் சிறப்பான பலனை பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படி பார்க்கிறபொழுது வருட கிரகங்கள் என்று சொல்லப்படுகிற குரு தனி சிறப்பு வாய்ந்த கிரகம். சாத்வீக கிரகம் என்று சொல்லப்படுகிறது. 


குரு பெயர்ச்சி முக்கியமாக நாம் பார்ப்பதற்கு என்ன காரணம் என்று சொன்னால் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயரக்கூடியது.  குரு பகவான் தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் நல்ல பலனை அளிக்கக் கூடியவர். 

சனிப் பெயர்ச்சி


ஜோதிடத்தை பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி வருகிறபொழுது, தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலனை தரப்போகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். 


அந்தவகையில் குரு பிரகஸ்பதி என்று  அழைக்கப்படுகின்ற குரு பகவானுடைய பெயர்ச்சி ஐப்பசி மாதம் 27ஆம் நாள், நவம்பர் மாதம் 13ஆம் தேதி, மாலை மணி 6.22-க்கு மகர ராசியில் இருந்து குறிப்பாக அவிட்டம் இரண்டாம் பாதத்தில் இருந்து, கும்ப ராசியில் இருக்கின்ற அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். 


இப்படி பெயர்ச்சியாகும் குரு பகவான் கும்ப ராசியில் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12 வரை மிகச்சிறப்பாக அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார். 


திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 20ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.  எனவே, இந்த அடிப்படையிலேயே குரு பகவானுடைய சிறப்பு 12 ராசிக்காரர்களுக்கு எப்படி நன்மைகளை தரப்போகிறது என்பதை இனி வரும் ஒவ்வொரு பதிவிலும் பார்ப்போம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *