மனம் படுத்தும் பாடு

மனம் படுத்தும் பாடு – திருமூலரின் ரகசியம்

உடம்பு எனும் தேரில் மனம் என்னும் தேரோட்டி கூட்டுவிக்கிறான். அதன் காரணமாக உலக இன்பங்கள் என்னும் மாயத்தேரில் ஏறி, அதிலிருந்து இறங்கும் எண்ணமே இல்லாமல் இருக்கின்றன ஆன்மாக்கள்.


அதை விடுத்து அவ்வான்மாக்கள் அன்புத் தேரில் ஏறி, சிவனருளைப் பெற்றால் சிவனடியார்களுடன் சேர்ந்து தெய்வ நிலையை அடையலாம். உடம்பைத் தேராகவும், மனதைத் தேர்ப் பாகனாகவும் கூறும் அற்புதப் பாடல் இது. முதல் இரண்டு வரிகள் ஓர் அற்புதமான கூட்டணியைச் சொல்கின்றன.

அடுத்த இரு வரிகள், நமக்குத் தேவையான இரு தகவல்களைத் தருகின்றன.


முதலாவதாக உடம்பைத் தேராக உருவகப்படுத்துகிறது பாடல். தேர் எப்படி ஒவ்வோர் இடமாக, மாறி மாறிப் போகின்றதோ அது போல, உடம்பும் பால பருவம், இளைய பருவம், நடுத்தரப் பருவம், வயோதிகப் பருவம் என ஒவ்வொன்றாக மாறி மாறிப் போகும்.


தேரில் சக்கரங்கள், அவற்றை இணைக்கும் கீழ்ப்பகுதி, பீடம், அதற்கு மேல் கூரை எனப் பல பகுதிகள் உண்டு. அதே போலத்தான் உடம்பும். எலும்பு, ரத்தம், சதை, நரம்பு எனப் பலவும் இணைந்ததே உடம்பு.


தேரோட்டி, தேரைப் பொறுப்பாகச் செலுத்தாவிட்டால், அது சுக்கு நூறாகச் சிதைந்து போய் விடும். உடம்புக்கும் அதே நிலைதான்! மனம் எனும் தேரோட்டி, உடம்பு எனும் தேரை ஒழுங்காகச் செலுத்தாவிட்டால், உடம்பு சிதைந்து போய் விடும்.
தேர் – உடம்பு, மனது – தேரோட்டி.

மனதைத் தேரோட்டியாக நாம் கொண்டாலும், திருமூலர் மனதைப் ‘பாகன்’ என்றே கூறுகிறார். தேரோட்டி காரோட்டி எனப் பல ‘ஓட்டி’களைச் சொன்னாலும், யாரும் ‘யானை ஓட்டி’ எனக் கூறுவதில்லை, யானைப் பாகன் என்றுதான் கூறுவோம்.


மற்ற வாகனங்களை ஓட்டக் கூடியவர்களுக்கு, அதைச் செலுத்தத் தெரிந்திருந்தால் போதும். ஆனால், யானையைச் செலுத்தக்கூடிய பாகனுக்கு, யானையின் நடவடிக்கைகள் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.


எந்த நேரத்தில் யானைக்கு ‘மதம்’ பிடிக்கும், அதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும், என்பவற்றையெல்லாம் பாகன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், பல ஆட்கள் பல நாட்கள் சேர்ந்து செய்தாலும், உருவாக்க முடியாத அளவிற்குச் சேதங்கள் உண்டாகி விடும்.


அதே பாகன், யானையின் போக்கைத் தெரிந்துகொண்டு, மெள்ள மெள்ள அதைத் தன் வசப்படுத்தி வைத்தால், கடினமான வேலைகள் பற்பலவற்றையும் அந்த யானை செய்து விடும். இதை மனதில் பதிய வைத்துக் கொண்டு திருமூலரிடம் போகலாம்!


காயத் தேர் ஏறி மனப்பாகன் கை கூட்ட
மாயத் தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத் தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத் தேர் ஏறி அவன் இவன் ஆமே

(திருமந்திரம் – 1651)


திருமூலர் மனதைப் ‘பாகன்’ எனக் கூறுகிறார். பாகன் சொன்னபடிதான் யானை கேட்க வேண்டுமே தவிர, யானை சொன்னபடிப் பாகன் கேட்கக்கூடாது. கேட்டால் யானை மட்டுமல்ல, அத்துடன் சேர்ந்து பாகனும் போய் விடுவார். அதுபோல, மனம் காட்டும் நல்வழியில்தான் உடம்பு செயல்பட வேண்டுமே தவிர, உடம்பு கேட்கும் வழியில் மனம் செயல்பட ஆரம்பித்தால் கதை முடிந்து விடும்.


‘மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்’ என்று ஒளவை சொன்னது இதைத்தான். ஆனால், பிரச்னை எங்கு முளைக்கிறது என்றால், சரியில்லாத கூட்டணியில்தான் ஆரம்பிக்கின்றது. உடம்பும் மனமும் சேர்ந்து கூட்டணியாகச் செயல்படுகின்றன என்று பார்த்தோமல்லவா? அக்கூட்டணியில் இரண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட்டாலும், அந்த இரண்டில் மிகவும் பலம் வாய்ந்தது உடம்புதான்.


மனம் ஒவ்வொன்றிலும் இருக்கக்கூடிய இன்ப துன்பங்களை அறிவித்தாலும், கூட்டணி தர்மத்தை அனுசரித்து, உடம்பு என்ன சொல்கிறதோ, அதையே மனம் கேட்கும். இன்பங்களை அனுபவிப்பதற்காகப் பல வழிவகைகளை மனம் சொல்லும். அதன்படியே செயல்பட்டு உடம்பும் எல்லாவிதமான இன்பங்களையும் அனுபவிக்கும். ஆனால், அதன் பலனாகத் துன்பம் விளையும் போதோ, கூட்டணி தர்மத்தையும் மீறி, மனம் கற்புக்கரசனாக மாறி, நமக்கு, அதாவது உடம்பிற்கு அறிவுரையும், அறவுரையும் கூறும்.

‘நான் அப்போதே சொன்னேன். நீதான் கேட்காமல் அலைந்தாய். இப்போது கஷ்டப்படுகிறாய்’ என ஒதுங்கி நின்று பேசும்.
நோயால் வலி கண்டு உடம்பு துடிக்கும்போது மனம் என்பது சாட்சி மாத்திரமாகவே இருக்குமே தவிர, எந்த விதத்திலும் உடம்பின் வலியை அது ஏற்காது. இதிலிருந்து விடுபட, விடுபட்டு ஆனந்தம் அடைய என்ன வழி? பாடலின் பிற்பகுதி விளக்கம் சொல்கிறது.


‘‘அன்பைக் கைக்கொள்! தெய்வ அருள் கிடைக்கும். ஈசன் அடியார்கள் உறவு கிடைக்கும். தெய்வீக நிலை கிட்டும்’’ எனக் கூறி பாடல் நிறைவு பெறுகிறது.


ஆம், அன்பும் அடியார்கள் உறவுமே அமைதியைத் தரும்; ஆனந்தத்தை அருளும். திருமூலர் இவ்வாறு பாடம் நடத்திய இதே தகவலை அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மைப் பதிகமும் கூறுகிறது. ‘கலையாத கல்வியும்’ எனும் பாடலில் பதினாறு பேறுகளையும் விவரித்த அபிராமி பட்டர், பாடலை நிறைவு செய்யும்போது ‘‘துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி ‘பெரிய தொண்டரொடு’ கூட்டு கண்டாய்’’ என நிறைவு செய்கிறார்.

அதாவது ‘நல்லவர்கள் தொடர்பே – நலன்கள் அனைத்தும் அருளும்’ என்பதே அப்பதிகத்தின் பொருள். திருமூலர் போன வழியிலே தான் அபிராமி பட்டரும் போயிருக்கிறார்.நல்லவர்கள் தொடர்பை விரும்புவோம், நல்லவை நம் பக்கம் திரும்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *