குழந்தையின்மை ஏற்பட இதுதான் முதல் காரணம்

தம்பதியினருக்கு குழந்தையின்மை ஏற்பட இதுதான் காரணம்

“இன்றைய இளம் தம்பதியினர் குழந்தையின்மை ஏற்பட இதுதான் முதல் காரணம். இதற்கு முன் இந்தப் பிரசச்னைகள் அதிகமில்லை. இப்போது அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் 20 வயதுகளில் திருமணம் நடந்தது. இப்போது 30-களில் நடைபெறுகிறது. அதுவும் குழந்தையின்மை தோன்ற ஒரு காரணம்.


அதற்கடுத்து உடற்பருமன். உடலில் கொழுப்புச் சத்து கூடக்கூட ஆண்மைக்கான ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் குறைய தொடங்குகிறது. இந்த ஹார்மோன் குறையும்போது விந்து உற்பத்தியும் குறையத்தொடங்குகிறது. இதனுடன் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் சேரும் போது நிலைமை விபரீதமாகிறது. முன்னெப்போதும் இருந்ததைவிட இப்போது மிக அதிகமாக ஆண்களிடம் இந்தப் பழக்கங்கள் உருவாகியுள்ளது. இந்தப் பழக்கங்களும் சேரும்போது விந்தணுக்களின் உற்பத்தி மேலும் பாதிப்படைகிறது.” என்கிறார் மகளிரியல், மகப்பேறு, கருவுறாமை சிறப்பு மருத்துவர் ஆகிய துறைகளில் 23 வருட அனுபவம் வாய்ந்த டாக்டர் சத்யா பாலசுப்ரமணியன்.

இன்றைய தம்பதிகள் சந்திக்கும் குழந்தையின்மை பிரச்சனைகள் பற்றி மிக விரிவாக நம்மிடம் பேசினார்.

குழந்தையின்மை தம்பதி

ஒரு தம்பதி தங்களுக்கு குழந்தையின்மை குறையிருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

“திருமணம் முடிந்து ஒரு வருடம் எந்தவித கருத்தடை சாதனங்களும் பயன்படுத்தாமல் தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொண்ட தம்பதி. ஒரு வருடத்தில் கரு உருவாகாமல் இருந்தால், அவர்களை குழந்தையின்மை தம்பதி என்று உலக சுகாதார மையம் வரையறை செய்கிறது.

பொதுவாக ஒரே நேரத்தில் திருமணம் ஆன 100 தம்பதிகளை எடுத்துக்கொண்டால் அதில் 80 தம்பதிகள் முதல் வருடத்தில் கர்ப்பம் தரித்துவிடுவார்கள். இரண்டாம் வருடத்தில் 90 தம்பதிகள் கர்ப்பம் அடைந்து விடுவார்கள். இரண்டு வருடங்கள் முடிந்தும் குழந்தை உருவாகவில்லை என்றால் தம்பதிகள் தங்களிடம் குழந்தையின்மை குறையிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.”

இன்றைய அவசர உலகத்தில் இரண்டு வருடங்கள் காத்திருந்துதான் குழந்தையின்மை குறையை தெரிந்துகொள்ள வேண்டுமா?

“இந்த இரண்டு வருடங்கள் காத்திருக்கும் முறை எல்லா தம்பதிகளுக்கும் ஒத்துவராது. மிக தாமதமாக திருமணம் செய்துகொள்பவர்கள் இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. பெண்ணுக்கு 38 வயது, ஆணுக்கு 45 வயது கடந்த பின் திருமணம் செய்து கொள்பவர்கள், உடலுறவு கொள்வதில் பிரச்சனை உள்ளவர்கள். அதாவது ஆணுக்கு விறைப்பு தன்மை இல்லாமை, பெண்ணுக்கு குறி இறுக்கம். உடலுறவை விரும்பாத பெண் போன்றவற்றில் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உடனே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.”

விந்தணுக்கள் மட்டுமே போதாது

என்னென்ன சிகிச்சைகள் இருக்கிறது?

“முதலில் ஆணின் விந்து பரிசோதனை செய்யப் பட வேண்டும். முதலில் விந்தணுக்களின் எண்ணிக்கை பார்க்கவேண்டும். ஒரு மி.லி. அளவுகொண்ட விந்தில் குறைந்தபட்சம் 1.5 கோடி விந்தணுக்கள் இருக்கவேண்டும். இதை விட கூடுதலாக 6 கோடி விந்தணுக்கள் இருந்தால் கரு உருவாகும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். இப்படி கூடுதலாக விந்தணுக்கள் இருப்பது மட்டுமே குழந்தை உருவாக்க போதுமானதல்ல. மற்ற அம்சங்களும் சாதகமாக இருக்க வேண்டும்.

அடுத்து வருவது தாமதமாக திருமணம் செய்வது. முன்பெல்லாம் 20 வயதுகளில் திருமணம் நடந்தது. இப்போது 30-களில் நடைபெறுகிறது. அதுவும் குழந்தையின்மை தோன்ற ஒரு காரணம்.

ஆண்மைக்கான ஹார்மோன்

அதற்கடுத்து உடற்பருமன். உடலில் கொழுப்புச் சத்து கூடக்கூட ஆண்மைக்கான ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் குறைய தொடங்குகிறது. இந்த ஹார்மோன் குறையும்போது விந்து உற்பத்தியும் குறையத்தொடங்குகிறது. இதனுடன் புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் சேரும்போது விந்தணுக்களின் உற்பத்தி மேலும் பாதிப்படைகிறது.

சுற்றுச்சூழல் மாசும் கூட ஒரு காரணம். சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிபவர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் ஆணின் விதைப்பை மற்றும் விரைகள் வெப்பமடையும் காரணத்தாலும் விந்து உற்பத்தி குறைகிறது. வெப்பமும் தூசியும் நிறைந்த இடத்தில் வேலை செய்பவர்கள். வாகனப் புகையை தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது. போக்குவரத்து காவலர்கள் பலர் விந்தணு குறைபாடோடு வருகிறார்கள்.”

மரபணுக்கள் சேதமடைய தொடங்குகின்றன

“மேலும், ஆண் 40 வயதுக்கு மேல் குழந்தைப் பெற்றுக்கொள்வதும் குழந்தையைப் பாதிக்கும். அப்போது ஆணின் உயிரணுவில் உள்ள மரபணுக்கள் சேதமடைய தொடங்குகின்றன. இதனால் ஆரோக்கியமான குழந்தைப் பிறக்கக்கூடிய வாய்ப்பு மிக மிகக் குறைவாகிறது. பெண்களின் நிலை இதைவிட மோசம். ஆணின் விந்தணுவாவது மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கிறது.

பெண்களுக்கு அப்படியல்ல. பெண் குழந்தைகள் பிறக்கும்போதே கருமுட்டைகளோடுதான் பிறக்கிறார்கள். அவர்களுக்கு வயதாக ஆக கருமுட்டைகளின் வயதும் கூடிக்கொண்டே போகின்றது. 40 வயது பெண்ணின் கருமுட்டையும் அதே வயதுதான் இருக்கும். அதன் தரம் குறைவாகவே இருக்கும். அதனால்தான் பெண்கள் 30 வயதுக்குள் அனைத்து குழந்தைப் பேற்றையும் முடித்துக்கொள்வது நல்லது என்று சொல்கிறோம்.”

கரு உருவாக்கம்

“பெண்களின் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருப்பவைகளில் உடற்பருமன் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் எடை கூடும்போது கருமுட்டை வளர்ச்சி சரியாக இருக்காது. கருமுட்டை வளர்ச்சி இல்லையென்றால் அந்த மாதத்திற்கான மாதவிலக்கு வெளிவராது. கருமுட்டை வளர்ச்சி இருந்தால்தான் கரு உருவாக்கம் ஏற்படும்.

அதனால் பெண்களுக்கு உடல் எடையை குறைப்பதுதான் முதல் ட்ரீட்மெண்டாக கொடுக்கிறோம். இதில் கருமுட்டை நல்ல வளர்ச்சி பெறத் தொடங்கும். அதில் பலன் இல்லையென்றால் மருந்து ஊசி போன்றவற்றைப் பயன்படுத்த சொல்லுவோம்.”

குறைந்து வரும் கருமுட்டைகள்

ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து வருவதுபோலவே இப்போது பெண்களுக்கும் கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வயதாகும் பொழுது குறைவது இயற்கை. ஆனால், தற்போது மிக இளவயது பெண்களுக்கு கூட கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை பார்க்கிறோம். ஒவ்வொரு நான்கு நோயாளிகளில் ஒருவர் இந்த குறைபாட்டோடு வருகிறார்.

15 வருடங்களுக்கு முன்பு இந்த பாதிப்பு கொண்ட பெண்களை பார்க்க முடியாது. இப்போது நிறைய இளம் பெண்கள் இந்த பாதிப்போடு வருகிறார்கள். இதற்கான காரணம் தெரியவில்லை. சுற்றுச்சூழல் மாசு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் குறைபாடு உள்ள பெண்கள் குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடக்கூடாது.”

பெண்ணின் பிறப்புறுப்பு

“பெண்களுக்கு முதலில் போதிய கருமுட்டை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதற்கு ரத்தப் பரிசோதனை ஒரு முறை. மற்றொன்று மாதவிலக்கின் இரண்டாவது நாள் ஸ்கேன் செய்துப் பார்த்தால் கர்ப்பப்பையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள ஃபெலோப்பியன் டியூப்பில் சின்னச்சின்ன ஃபாலிக்கல்ஸ் இருக்கும்.

கருமுட்டையை எண்ணிப்பார்க்கலாம். வலதுபக்கம், இடதுபக்கம் இரண்டையும் சேர்த்து 7-க்கு குறைவாக இருந்தால் அதுவும் கருமுட்டை எண்ணிக்கை குறைவு என்று சொல்லலாம். இதுவும் கருவுருவாகாமல் போவதற்கு காரணம்.

இதுபோக வழக்கமான கர்ப்பப்பை, ஃபெலோப்பியன் டியூப்ஸ் இயல்பாக இருக்கிறதா? என்பதை சோதனை மூலம் தெரிந்துகொண்டால்தான் பெண்ணின் பிறப்புறுப்பு அமைப்புகள் நன்றாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். பொதுவாக இவைகள்தான் இன்றைய தம்பதிகளிடம் குழந்தை இன்மைக்கான குறைபாடாக தெரிகிறது.” என்று விரிவான மருத்துவ விளக்கம் தந்தார் டாக்டர் சத்யா பாலசுப்ரமணியன்.

Leave a Reply

Your email address will not be published.