கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்

கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்

இலக்கியங்களை வெகு திறமையாக திரைப் பாடலில் கையாண்டிருக்கிறார் கண்ணதாசன். பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

சங்க இலக்கியத்துக்கு முந்தியதாகத் தமிழில் கிடைத்த இலக்கண நூல் தொல்காப்பியம் மட்டுமே.
சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் பழந்தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பண்டைத்தமிழ் அறிஞர்கள் இலக்கியங்களை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்தனர்.

அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் பிறவற்றையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இலக்கியங்கள் பாகுபாடு செய்யப்பட்டன.

கார்காலம்


சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குபவை காதலும் வீரமுமே ஆகும். சங்க இலக்கியப் பாடல்கள் ஒரு ஒழுங்குமுறையாகத் தொகுக்கப்பட்டு எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என இரு பிரிவாக அமைந்துள்ளன.

சங்க இலக்கியங்களில் முல்லைப் பாடல்கள் கார்கால வரவையும், காதல் தலைவனது வரவையும் கார்காலத்து வருணனையினையும் எடுத்து இயம்புகின்றன.

தலைவி கார்காலத்து வருணனை படித்து படித்து இன்புற்றதாகவும்

ஒரு அற்புதமான பாடல் அதனுடைய விளக்கத்துடன் அதன் நயத்தைப் பார்க்க இருக்கின்றோம்.

ஐங்குறுநூறு

பாடியவர் – பேயனார்,

திணை – முல்லை
துறை – குறித்த பருவம் வரவும் தலை மகன் வந்திலனாக ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து பகுதியில் ஆறாவது பாடல்

உள்ளார்கொல்லோ தோழி! வெள் இதழ்ப்
பகல் மதி உருவின் பகன்றை மா மலர்
வெண் கொடி ஈங்கைப் பைம் புதல் அணியும்
அரும் பனி அளைஇய கூதிர்
ஒருங்கு இவண் உறைதல், தெளித்து அகன்றோரே?

– ஐங்குறு நூறு 456 ஆவது பாடல்

பாடலின் விளக்கம்


தோழி அவர் என்னை நினைக்கமாட்டாரோ பகலில் தோன்றும் நிலாவைப் போல பகன்றைப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. வெண்ணிற ஈங்கை மலரின் கொடி புதரில் படர்ந்து கிடக்கிறது. பனி பொழியும் குளிர் காலம் இது. இத்தகைய காலத்தில் உன்னோடு சேர்ந்திருப்பேன் என்று என்னை தெளிய வைத்துவிட்டுச் சென்றவர் நினைக்கமாட்டாரோ?

முல்லை நிலத்தின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமாம். பொருள் தேடி பிரிந்து சென்ற தலைவன் வரும் வரை காத்து இருத்தல். என்பது இலக்கணம். அந்த வகையில் சூரிய ஒளி வந்தவுடன் நிலவு தெரியாது. ஆனால் பகலில் தோன்றும் நிலவு என்கிற சொல்லை பகன்றைப் பூக்களுக்குச் சொல்லுதல் அழகு.

மயக்கம் எனது தாயகம்


தேன் மிகுதியாக உடைய, பனிக்காலத்தில் மலரும் பகன்றை மலர் வெண்மையான இதழ்களையும், பகலில் தோன்றும் திங்கள் போலும் உருவத்தினையும் கொண்டது. இதன் மணம் கள்ளின் மணம் போன்றிருத்தலால், இதனை இல்லத்தார் விரும்பிச் சூடுவதில்லை; முறுக்கிய ஆடையை ஒத்து விளங்கும். இந்த அழகான நிகழ்வை கவியரசு கண்ணதாசன் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த ‘குங்குமம்’ படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

அந்த பாடல் இதோ…

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்


பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலைந்த மலர் நான்

தலைவி தலைவனை நினைத்து பாடிய ஐங்குறுநூறு பாடலை திரைப்படத்தில் கொலைப்பலி சுமத்தப்பட்ட தலைவன் தன் நிலை குறித்துப் பாடுவதாக அமைத்து சங்க இலக்கியத்தை எடுத்தாண்டு இலக்கியப் பங்களிப்பு செய்திருக்கின்றார்.

கண்ணதாசன் பாடல்கள்


கண்ணதாசன் தனது பாடல்கள் பற்றி இப்படி கூறினார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும் அங்கே என் பாடலொன்று எதிரொலிக்கும் என்று இறுதியாக கண்ணதாசன் கூறினார். சங்க பாடல்களும் எக்காலத்திலும் பொருந்தக்கூடிய வகையில் இவ்வாறே ஒலிக்கின்றன.


20ம் நூற்றாண்டில் தமிழனுக்கெனத் தனி இடமும், தனிப்பெரும் பெருமையும் உண்டு என்பதை திரை இசைப்பாடல்களின் ஊடாக கவிஞர் கண்ணதாசன் மெய்ப்பட வைத்தார்.


அத்தோடு தன் பாடல்கள் மூலம் சங்க பாடல்களுக்கு இணையான உள்ளத்தை நெகிழ வைத்துப் புனிதப் படுத்தும் மாண்பு மிக்க எண்ணற்ற திரை இசைப் பாடல்களை இலக்கியங்களாக்கி தமிழ்மொழியில் இணைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.