விதி என்பது என்ன? படம்

நான் நல்லவன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும்? விதி

விதி விளையாடி விட்டது. அது அவன் விதி. விதிப்படி நடந்தது என்றெல்லாம் சொல்கிறோமே.. இந்த விதி என்பது என்ன? யார் இதை நிர்ணயிகிறார்கள்? ஒருவனுக்கு விதி எவ்வாறு நிர்ணயிக்க படுகிறது? விதி தான் ஒருவனது வாழ்கையை நிர்ணயிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் ஒரு காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் எனக்கு ஏன் ஆசைகள் வர வேண்டும்? நான் அதை அடைய உழைக்க வேண்டும்? எல்லாம் விதி தான் என்றால் வாழ்வில் எனது பங்கு என்ன? இன்னும் இந்த விதியை புரிந்து கொள்ள நிறைய கேட்டு கொண்டே போகலாம்.

விதி முடிந்து விட்டது


விதி என்பது பெரும்பாலும் நமது மன சமதானதிற்காகவே பயன்படுவதை நம்மால் பார்க்க முடியும். அவன் விதி முடிந்து விட்டது. அதனால் அவன் போய் விட்டான். தோற்க வேண்டும் என்று அவன் விதி. அதனால் தான் அவன் தோற்றான். எனக்கு விதிக்க பட வில்லை. அதனால் தான் கிடைக்க வில்லை. அவன் விதி நல்லாயிருக்கு. அதான் நல்லா இருக்கான் என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வதற்காக நாம் விதியை பயன்படுத்துகிறோம்.

உண்மையில் இப்படி நமது செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு விதி என்ற ஒன்றின் மீது பழி போடாவிட்டால் நம்மில் பலர் மிகப்பெரும் மனநோயாளிகளாக சட்டையை கிழித்து கொண்டு அலைந்து இருப்போம் என்பதே உண்மை. இத்தகைய சமாதானத்திற்கு விதி பயன்படுகிறது. விதி மூன்று வகைகளில் மனித வாழ்வில் விளையாடுகிறது.


சுய நிர்ணய விதி


எனது வெற்றிக்கும் தோல்விக்கும் நானே விதியை நிர்ணயம் செய்து கொள்கிறேனா? எப்படி எனது வாழ்கைக்கான விதியை என்னால் நிர்ணயம செய்து கொள்ள முடியும்?? இந்த கேள்விக்கெல்லாம் ஒரே பதில் முடியும் என்பதுதான். உங்கள் விதி உங்களாலே நிர்ணயிக்க பட்டு இருக்கிறது. ஆனால், உங்கள் கட்டுபாட்டில் இல்லாமல்… புரிந்ததா..?! புரிந்து இருக்காது.


பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனரை பார்த்து சொல்கிறார், “அர்ஜுனா…! நீயும் நானும் இந்த மண்ணில் பலமுறை பல வடிவங்களில் பிறந்து இருக்கிறோம்! அது எனக்கு தெரியும். உனக்கு தெரியாது…!” என்று சொல்லி அர்ஜுனனின் முற்பிறவி பற்றி எடுத்து உரைக்கிறார்.

உணர்வு இறப்பது இல்லை


மேலும் மனிதனின் உடல் தான் இறக்கிறது ஆத்மா என்ற நமது உணர்வு இறப்பது இல்லை. அத்தைகைய ஆத்மா உடலை விட்டு பிரியும் போது தான் வாழ்ந்த பூமியில் தனக்கு சொந்தமானவற்றின் மீது பற்றுதல் கொண்டு மறைந்தாலோ, பிடிக்காத விஷயத்தின் மீது அதீத கோபத்துடன் மறைந்தாலோ தனது அடுத்த பிறவியில் தான் விட்டு போன உணர்வுகளுக்கு பதில்
கிடைக்குமாறு வாழ முயற்சிக்கும்.

விதி என்பது என்ன?
உணர்வு இறப்பது இல்லை - படம்

முற்பிறவியின் ஞாபகங்கள் இருக்காததால் தான் எதற்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று சில நேரங்களில் வாழ்பவர்களுக்கு தெரியாது..! ஒருவன் முற்பிறவியில் என்ன குணத்தில் இருந்தானோ அதே குணத்தின் மிச்சம் இப்பிறவியில் அவனது அடிப்படை குணத்தை நிர்ணயிக்கும்.


இப்பிறவியில் எந்த வகையான குடும்பத்தில் பிறக்கிறானோ அக்குடும்ப வளர்ப்பு ஒருவனது குழந்தை பருவத்தை பாதிக்கிறது. அந்த பாதிப்பே அவன் இளமை பருவத்தின் நடவடிக்கைகளுக்கு விதியாக அமைகிறது..! அந்த விதிப்படி அவன் இளமை பருவத்தில் செய்யும் காரியம் முழுவதும் அவனது வாழ்கை முழுவதுமான விதியாக அமைகிறது. இவ்வாறு ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளுக்கான அடிப்படை விதி நிர்ணயிக்கப்படுகிறது.

சமூக விதி


நான் நல்லவனாகத்தானே இருக்கிறேன். எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும் என்று சில நேரங்களில் குழம்பி கொள்வோம். குடும்பம் என்பது மிக சிறய சமூகம். சமூகம் என்பது மிக பெரிய குடும்பம். எனவே ஒரு சமூகத்தில் நடக்கும் எல்லா காரியங்களும் நம் குடும்பத்தில் பாதிப்பை விளைவிக்கும்.

இந்த சங்கிலித் தொடர் இருக்கிறதே, இது சமூகத்தால் உண்டாக்கும் விதி. இது சமூகத்தின் நடவடிக்கையால் உண்டான விதி. அது நமக்கு சம்மந்தம் இல்லாமல் நம்மை பாதிக்கும் போது அது சமூகத்தால் உண்டான விதி ஆகும். அதே போல் இரு வேறு இனங்களுக்கு இடையே நடக்கும் அடிமைபோர்கள், அதனால் ஏற்படும் மரணம் இதற்கு உதாரணமாக சொல்லலாம். இவைகள் கடந்த காலத்தின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட விதிகளாகிறது.


பிரபஞ்ச விதி


கொரோனா – இதை விட இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல முடியாது..! ஆம், வைரசின் அபரிமிதமான சீற்றத்தால் குவியல் குவியலாக இறந்து போகும் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் காரண காரியம் சொல்ல முடியாது. ஆனால், இயற்கையின் மாற்றம் ஒரு சங்கிலித்தொடர் போல காலகாலமாக நடந்து வரும். அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி.


இப்படி ஒருவருக்கு நடக்கும் எந்த ஒரு செயலும் இம்மூன்று விதிகளுக்கு உட்பட்டே நடக்கும். இந்த அடிப்படை விதிகளை கொண்டு வாழ்க்கையில் ஒருவருக்கு நடக்கும் சம்பவங்களை மேக்ரோ முதல் மைக்ரோ வரை கணக்கு பண்ணி பாருங்கள். இந்த மூன்று விதிகளையும் மீறி ஒருவரால் வாழ்த்து இருக்க முடியாது.


இப்படி பல நேரங்களில் நமது கட்டுப்பாட்டில் இல்லாமலேயே நம்மை பாதிக்கும் பல சம்பவங்கள் நமக்கு விதிக்கப் படுவாதலேயே நம் விதியை நம்புவது நம் விதியாகிறது.


ஆக, கடந்த கால இயற்கையின் நிகழ்வு, சமூக நிகழ்வு, மனித வாழ்கை இவற்றின் விளைவுகள் யாவும் நிகழ்காலத்தின் விதியை நிர்ணயிகின்றன. நிகழ் காலத்தில் நாம் வாழும் வாழ்வும் அதன் விளைவும் எதிர்கால விதியை நிர்ணயிக்கிறது. எனவே இதை நன்றாக உணர்ந்து நிகழ்காலத்தில் முடிந்த வரை தர்மங்களில் இருந்து மீறாமல் வாழ்வது எதிர்காலத்தில் நமக்கு நாமே நல்ல விதியை எழுதி கொள்வது போல் ஆகும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *