சென்னப் பட்டணம்

சென்னப் பட்டணம்: மேட்ரி டையஸ் மதராஸ் ஆன கதை

சென்னப் பட்டணம், சென்னையைப்பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அரிதான ஒரு கட்டுரை. அதனை காலப்பெட்டகம் என்ற பகுதியில் தருகிறோம். இந்த வரிசையில் இது இரண்டாவது கட்டுரை. தொடர்ந்து வாசித்து ஒத்துழைப்பு தாருங்கள்.

வாருங்கள் நூற்றாண்டுக்கு முந்தைய சென்னைக்கு செல்வோம்..!

இந்த ராஜதானிக்குப் பிரதான பட்டணமான சென்னப் பட்டணம் கொரமண்டல் கடற்கரையோரமாய் இருபத்தேழு சதுர மைல் விஸ்தீரணமுள்ளதாய் இருக்கிறது. இது சந்திரகிரியிலுள்ள ஆந்த்ர சந்திரகுல ஸ்ரீரங்க ராயருடைய சமஸ்தானத்திற்கு உட்பட்ட மீன்பிடிக்கும் ஓர் கரை தீர ஸ்தலமாய் இருந்தது. 

சென்னப்ப பட்டணம்


1639 ஆம் வருஷம் அதை ஆங்கிலேய ஈஸ்ட் இந்திய கம்பெனியார் ஒரு வர்த்தக ஸ்தலம் கட்டுவதற்காக மிஸ்டர் பிரான்ஸிஸ் டே என்பவர் ஸ்ரீரங்க ராயவர்களைக் கேட்க, அவர் தமது ஏஜென்ட் ஆகிய தாமராத வெங்கடாத்திரி நாயுடுக்கு அளந்து கொடுக்க உத்தரவு செய்ய, அவரும் அந்த இடத்தில் தனது தகப்பனார் பெயராகிய சென்னப்ப பட்டணம் என்று வழங்கி வரும்படிக்  கொடுத்தார். 


ஆகவே, அந்த இடத்திற்குச் சென்னப் பட்டணம் என்று பெயரிடப்பட்டது. மேலும், அதற்கு ஆங்கிலேய பாஷையில் மதராஸ் என்று வழங்கி வருகிறது. அப்படி ஆனதற்கு காரணம், அப்போது கருப்பர் பேட்டையில்; இப்போதுள்ள ஜார்ஜ்டவுன் கட்டப்பட்ட ஆர்மீனியன் செயின்ட் மேரி கோவிலுக்கு மேட்ரி டையஸ் என்று பெயர் வழங்கி வந்தமையால் அப்பெயரை அனுசரித்து ‘மதராஸ்’ என்ற பெயரை பெற்றதாகத் தோன்றுகிறது. 


தென்னிந்தியாவில் புகழ் பெற்றிருக்கும் இந்த ராஜதானி தற்காலத்தில் சற்றேறக்குறைய 13 பேட்டைகளையும், நான்கு லட்சம் ஜனங்களையும் உடையதாய், உலகத்திலுள்ள பட்டணங்களுள் லண்டனை விட்டு, மற்றவைகளைப் பார்க்கும்போது மூன்றாவதென்று எண்ணத் தக்கதாயிருக்கிறது.

நான்கு பக்கங்களிலும் அநேக மெத்தைகளும், மேடைகளும் கண்ணைக் குளிர செய்வனவாய் அவைகளில் குடியிருப்போர்களுடைய ஸம்பத்தைத் தெரிவிக்கின்றன. 

மணல் வெளி


இந்தப் பட்டணம் 250 வருடங்களுக்கு முன் சில செம்படவர் குடிசைகள் உள்ள ஒரு மணல் வெளியாய் இருந்தது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த மணல் வெளி பெரிய பட்டணமானதை யோசித்தால் எவருக்கும் ஆச்சரியம் உண்டாகாமற்போகாது.


நல்லது, இவ்விடம் கப்பல் தங்கத் தக்க துறையா?  அல்லது விசேஷ வர்த்தகம் செய்துகொண்டிருந்த இடமா? இல்லாவிட்டால் ஏதாவது பிரபலமான கைத்தொழில் நடக்கும் ஸ்தாபனமா? யாதொரு யோக்யதையுமில்லையே. 

மேலும் இத்தேசத்தார் பழமையானவைகளைக் கொண்டாடும் தன்மையுடையவர்களே அன்றிப் புதிதாய் ஒன்றையும் செய்யும் எண்ணமில்லாதவர்கள் என்பது பிரத்தியக்ஷம். இப்படியிருந்தும் இவ்விடத்தில் நூதனமாய் ஒரு பட்டணமுண்டானதை யோசிக்கின்ற யாவருக்கும் ஆச்சரியமாயிருக்கின்றது.


இந்தப் பட்டணத்தில் பூர்வ ஸ்திதி இன்னதென்று சரியாய் ஒன்றும் வெளிப்படவில்லை. மைலாப்பூர், திருவல்லிக்கேணி இந்த இரண்டு ஸ்தலங்களும் அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னமே பிரசித்தமான இடங்கள்.  அவைகளைப் பற்றிய புராணங்களுள் ஒருவாறு தெரிய வருகிறதுமன்றி பிரெஞ்சு தேசத்தார் முதலிய ஐரோப்பியர் வைத்திருக்கும் சாஸனங்களும் விசிதமாகின்றது. 


எழுதியவர் : சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு 

பத்திரிகை : கலாநிதி 

ஆண்டு : 1885

Leave a Reply

Your email address will not be published.