திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

‘கிருபானந்த லாரி வருகிறது’ கிண்டலடித்த திகவினர் – மனம் மாறிய பெரியார்

சிந்தையெல்லாம் சிவமே நிறைந்திருக்க, சிவப் பணி செய்த அடியார்களின் பெருமையைப் போற்றும் பெரிய புராணத்தில், 63 நாயன்மார்களின் புனித வரலாற்றை நாம் படித்திருப்போம். ஆனால், பெரிய புராணத்தில் இடம் பெறவில்லை என்றாலும், 64-வது நாயன்மாராகப் போற்றப்பெறும் பெருமை பெற்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

தமிழகம் மட்டுமல்லாமல், தமிழர் வாழும் உலக நாடுகள் அனைத்திலும் அருள் மணம் கமழும் ஆன்மிகத் தென்றலைத் தவழவிட்டவர்.        

கடவுள் மறுப்புக் கொள்கை நாடெங்கும் பரவிய காலகட்டத்தில், ஓய்வறியா பயணம் மேற்கொண்டு, தமிழின் இனிமையும் பக்திச் சுவையும் சேர்ந்த தம் சொற்பொழிவுகளால் ஆன்மிக நெறிகளை போதித்தவர் வாரியார் சுவாமிகள். எத்தனை ஆயிரம் பக்திச் சொற்பொழிவுகள்… எத்தனை எத்தனை ஆலய புனரமைப்புப் பணிகள்..! 

கிருபானந்த வாரியார் சுவாமிகள்

“கிருபை” என்றால் கருணை என்றும், “ஆனந்தம்” என்றால் இன்பம் என்றும், “வாரி” என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான்.

இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார்.

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே..!” என்று வருத்தப்பட்டனர்.

வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா?! என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள்.

பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும்.

கந்தசஷ்டிக் கவசப் புத்தகம்

பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும்.

இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். மதுரையில் நடந்த பங்குனி உத்திரத் திருவிழாவில் முன் வரிசையில் இடம் பிடித்து வாரியார் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து ஒரே ஒரு முறை சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை வாரியாரிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறேன்.

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

சொல்லின் செல்வர்

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ”ராமாயணத்தில் அனுமனை ‘சொல்லின் செல்வர்’ என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.”என்றார்.

போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்து, ”நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன்.” என்றார்.

இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்.

முருகப்பெருமான் தோற்றம்

வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. 

உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். “ஆண்பிள்ளை” அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

“செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்”

என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

சிவ ஜெயந்தி

இராமச்சந்திரமூர்த்தி அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணபிரான் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜெயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜெயந்தி, மத்வ ஜெயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜெயந்தி, பரசுராம ஜெயந்தி, வாமன ஜெயந்தி. 

எந்தக் கோவிலிலாவது சிவ ஜெயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜெயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

“ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்

ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி

வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை

நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்”

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். “நீ தர” – அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். “நின்னையே நிகர்க்க” என்றார்.

சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கும் வாரியார் சுவாமிகள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 150-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். திரைத்துறையில் முருகப் பெருமானின் புகழைக் கூறும் சில படங்களிலும் நடித்தார்.

சிவபெருமான்

ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று சொல்கிறார்களே..! என்று கேட்டார், 

இதனைக் கேட்ட வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை அவ்வளவுதான். இதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். 

யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.

அவரைக் கேலி செய்வதா?

வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் “கிருபானந்த ‘லாரி’ வருகிறது” என்று கிண்டல் அடித்துத் தட்டி வைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார், அவர் தங்கியிருந்த வீட்டுச் சன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது.

“வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!” என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்.

உலகில் எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் “வயலூர் எம்பெருமான்…” என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். இது போல் இவரிடம் நினைவுக் குறிப்புக் (ஆட்டோகிராப்) கையெழுத்து வேண்டுவோரிடம், “இரை தேடுவதோடு இறையையும் தேடு” என்ற வாக்கியத்தையே பெரும்பான்மையாக எழுதிக் கையெழுத்து இடுவார்.

அஜீரணம்

ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய “நாம் என்ன செய்யவேண்டும்?” என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம். அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள், உலகம் என்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார்

“எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்”  என்பதனைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.

தேவைக்கு மேலே ஆசைப்படுவதுதான் இன்றைக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. வாரியார் சுவாமிகள் கடைசி வரை தனது தேவைக்கு மேல் எதையும் வைத்துக்கொண்டவர் இல்லை. எளிமையான, சிக்கன வாழ்வைத்தான் அவர் மேற்கொண்டார். ஒரு பென்சிலைக்கூட கடைசி வரை அவர் பயன்படுத்துவார். தன்னிடம் வந்த எல்லாச் சொத்துகளையும் பிறருக்கு வாரி வழங்கிய வள்ளல் அவர்.

‘தானம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் உடனே கொடுத்து விட வேண்டும். அதுதான் தர்மம். யோசித்தால், நாள்களை தள்ளிப்போட்டால் அது மனதில் சஞ்சலங்களை உருவாக்கி விடும்’ என்பார் வாரியார் சுவாமிகள்.. தானம் அளிப்பதில் அத்தனை இன்பம் அவருக்கு! 

சந்நியாசி

கோயில்களுக்கு மட்டுமல்ல, தமிழகமெங்கும் உள்ள பல அநாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கும் மாதாமாதம் பணம் அனுப்புவார். அதையும் யாரையோ விட்டு எல்லாம் செய்ய மாட்டார். அவரே மணி ஆர்டர் படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்புவார்.

அள்ளிக்கொடுப்பதில் அவருக்கு அலாதிப் பிரியம். கடைசி வரை ஒரு சந்நியாசியாகவே வாழ்ந்தார். அடுத்த வேளை உணவை எடுத்து வைத்துக்கொள்வதுகூட ஆன்மிக அடியாருக்கு இழுக்கான செயல் என்று நம்பினார்.

1993-ம் ஆண்டு வாரியார் சுவாமிகள் லண்டன் செல்ல இருந்தபோது அவரின் வழிச்செலவுக்கு பிரிட்டன் பவுண்ட்ஸ் வேண்டும் என்பதால், எவ்வளவு பவுண்ட்ஸ் வேண்டும் என்று கேட்ட பொழுது ‘என்னிடம் இப்போது இருக்கும் ஐம்பது காசுகளே எனக்குச் சுமைதான் என்றாராம்.  என்னை இங்கிருந்து அனுப்பி வைக்கும் முருகப் பெருமான், என்னை லண்டனில் கைவிட்டு விடுவானா? எல்லாப் பயணத்தையும் அவன் பார்த்துக்கொள்வான்’ என்று சொன்னவர் வாரியார் சுவாமிகள்.

தமிழ்ப் பெருங்கடல்

“ஆன்மீக தமிழ்ப்பழம் அனைத்து நாட்டு தமிழர்களையும் கவலைக்குள்ளாக்கி இதோ தருவில் இருந்து உதிர்ந்து விட்டது. அந்த சிவந்த மேனியில் சினம் அரும்பி பார்த்ததில்லை. எதனையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் இனிய இயல்புக்குச் சொந்தக்காரரான வாரியார், ஆன்மீகத் தமிழ்ப் பழமாக விளங்கி, என்றும் அழியாத புகழை நிலைநாட்டி விட்டு, இயற்கை தாயின் மடியில் விழுந்துவிட்டார்” என்றார் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் கருணாநிதி. வாரியார் இறந்த போது, அவரைக் குறித்துச் சொல்லும் போது தமிழ்ப் பெருங்கடல் என்று கலைஞர் கருணாநிதி போற்றினார்.

நாயன்மார்கள், தினம் மூன்று வேளை கோயிலுக்குப் போவார்கள். ஆனால், சிவபெருமானைப் பார்த்துப் பொன்னைக் கொடு; பொருளைக் கொடு, எனக்கு செல்வத்தைக் கொடு, மக்களைக் கொடு, வழக்கில் வெற்றியடைய வேண்டும், பதவி உயர்வு வேண்டும் என்று ஒருநாளும் கேட்க மாட்டார்கள். நாயன்மார்கள் ஆண்டவனிடத்திலே இதுவரை ஒன்றையும் கேட்டதில்லை.

மயில் வாகனன்

தன் இறுதிக் காலம் நெருங்குவதற்கு பல காலம் முன்பே இப்படி சொல்லி இருந்தார் வாரியார் : “என் வாழ்வின் முடிவு எப்படி இருக்கும் என்பதை  என் அப்பன் முருகப் பெருமான்  என்றோ எனக்கு சொல்லி விட்டான். தன் வாகனமான மயிலை அனுப்பி, எந்த ஒரு கஷ்டமும் எனக்கு இல்லாமல் அந்த வானத்துக்கு என்னை எடுத்துக் கொள்வான் என் அப்பன் முருகன்…”

“வாரியார் சொன்ன அந்த வார்த்தைகளின்படியேதானே நடந்தது.”

உண்மை ! வாரியார் வாக்கு பலித்தது !

வானத்தில் பறக்கும் போதே அவர் உயிர் பிரிந்தது !

இறைவனோடு இரண்டற கலந்தது ! வாழும் போது முருகன் அடியாராகவே வாழ்ந்த வாரியார் அவர்கள் இன்றும் நம்முடன் அடியாராகவே வாழ்கிறார் தன் பேச்சாலும் எழுத்தாலும்…

இன்று (7 நவம்பர் 1993) வாரியார் நினைவு நாள்.

2 Replies to “‘கிருபானந்த லாரி வருகிறது’ கிண்டலடித்த திகவினர் – மனம் மாறிய பெரியார்”

 1. அருமையான பதிவு ஐயா
  ஆனால் ஆன்மிக செய்தி படிக்கும் நோக்கில் பதிவை திறந்து பார்த்தேன்
  அசிங்கமான விளம்பரங்கள்????
  தவிர்க்க முடியாதா???

  1. மொபைலில் பார்க்கும்போது இப்படி விளம்பரங்கள் வருவதாக சிலர் தெரிவிக்கிறார்கள். பொதுவாக நாம் எதை இணையத்தில் தேடுகிறோமோ அது தொடர்பான விளம்பரங்களே காட்டப்படுகின்றன. அப்படித்தான் கூகுள் மென்பொருட்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சமீபத்தில் அப்படி எதுவும் தேடாத நபர்களுக்கும் இப்படியான விளம்பரங்கள் காட்டப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கூகிளிடம் புகார் அளித்துள்ளோம். இங்கு காட்டப்படும் விளம்பரங்களுக்கும் இணையதள நிர்வாகத்தினருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களால் விளம்பரங்களை ‘செட்’ செய்ய முடியாது. கூகுள் நிறுவனம்தான் அதை செய்யமுடியும். அதனால்தான் புகார் அளித்துள்ளோம். விரைவில் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கிறோம்.
   தங்கள் கருத்துக்கு நன்றி.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *