கலங்கரை விளக்கங்களின் அருமை கடலில் பயணிப்பவர்களுக்குத்தான் தெரியும். நமது பார்வைக்கு அதன் பிரமாண்டம் மட்டுமே தென்படும். அப்படிப்பட்ட கலங்கரை விளக்கங்களில் பல சுற்றுலா பயணிகளுக்கு நல்ல தீனிப்போடுகிறது என்றால் அது மிகையில்லை. அவற்றில் ஒன்றுதான் சென்னை மெரினாவில் கம்பீரமாக நின்றிருக்கும் இந்த நான்காவது கலங்கரை விளக்கம்.
இந்தியாவில் மொத்தம் 189 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. அவற்றில் உயரமானவை அனைத்தும் குஜராத் மாநிலத்திலேயே அமைந்துள்ளன. அதனால் சென்னை கலங்கரை விளக்கத்திற்கு உயரத்தில் பெருமை கிடைக்கவில்லை. ஆனாலும் இந்தக் கலங்கரை விளக்கம் பெருமை பட்டுக்கொள்ள சில சங்கதிகள் உள்ளன. உலக அளவிலேயே சில கலங்கரை விளக்கங்களில் மட்டுமே லிப்ட் வசதி உள்ளது. அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டது சென்னை கலங்கரை விளக்கம். அதிலும் இந்தியாவில் மாநகர எல்லைக்குள் லிப்ட் வசதி கொண்ட ஒரே கலங்கரை விளக்கம் இது மட்டும்தான். மற்ற இடங்களில் நகரை விட்டு சற்று தொலைவில்தான் கலங்கரை விளக்கம் அமைந்திருக்கும்.
கலங்கரை விளக்கம்
பொதுவாக கலங்கரை விளக்கங்களை உருளை வடிவிலோ அல்லது சதுர வடிவிலோதான் கட்டுவார்கள். ஆனால், சென்னை கலங்கரை விளக்கம் அந்தவகையில் சேரவில்லை. அதன் அடிப்பாகம் உருளை வடிவிலும் அதற்கு மேலேயுள்ள கோபுரம் முக்கோண வடிவிலும் அமைத்திருக்கிறார்கள். இதுவொரு வித்தியாசமான வடிவமைப்பு. இந்த முக்கோண கோபுரத்தின் வங்காள விரிகுடாவை நோக்கியிருக்கும் பகுதியில் லைட் ஹவுஸ் என்பதை அடையாளப் படுத்தும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பட்டைகள் குறுக்குவசத்தில் அடிக்கப்பட்டுள்ளன. இது பகல் நேரத்தில் கடல் வழியாக வருபவர்களுக்கு கலங்கரை விளக்கம் என்பதற்கான அடையாளம். சென்னையில் நான்காவதாக அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் இது. இதற்கு முன்பு மூன்று முறை கலங்கரை விளக்கங்களை அமைத்து பின்னர் மாற்றியிருக்கிறார்கள்.
முதல் கலங்கரை விளக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1796-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் இருக்கும் கோட்டை அருங்காட்சியக கட்டத்தின் மீது அதை அமைத்தார்கள். கடல் மட்டத்திலிருந்து 99 அடி உயரத்தில் கலங்கரை விளக்கத்தின் விளக்கு இருந்தது. தேங்காய் எண்ணெய்யில் எரியும் 12 விளக்குகள் மூலம் பிரகாசமான வெளிச்சம் கிடைத்தது. இந்த வெளிச்சம் கடலில் 40 கி.மீ. தொலைவு வரை கப்பல்களுக்கு வழிகாட்டியது.
இரண்டாவது கலங்கரை விளக்கம் 1844-ம் ஆண்டு பூக்கடை என்று அழைக்கப்படும் பூ மார்க்கெட் பகுதியில் 161 அடி உயரத்தில் அமைத்தார்கள். இது முழுவதும் கிரானைட் கற்களால் ஆனது. கிரேக்க கட்டடக்கலை வடிவமைப்பில் இதனை உருவாக்கினார்கள். இதற்கு தேவையான கற்களை பல்லாவரம் பகுதியிலிருந்து கொண்டு வந்தார்கள். இந்த கலங்கரை விளக்கம் சுமார் 50 ஆண்டுகள் செயல்பட்டது.
அதன்பின் இதன் உயரம் போதவில்லை என்ற காரணத்தாலும் பாதுகாப்பு காரணத்திற்காகவும் மூன்றாவதாக ஒரு கலங்கரை விளக்கத்தை உருவாக்கினார்கள் ஆங்கிலேயர்கள். தற்போதைய உயர் நீதிமன்ற வளாகத்தில் மூன்றாவது கலங்கரை விளக்கத்தை 175 அடி உயரத்தில் அமைத்தார்கள். இந்த கலங்கரை விளக்கம் 1894-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதில் மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. இது 18 ஆயிரம் மெழுகுவர்த்திகளின் ஒளிக்கு இணையாக இருந்தது. அந்த பிரகாசமான ஒளிதான் 1914-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் முதலாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியின் எம்டன் கப்பல் இதன் மீது குண்டு வீசுவதற்கும் காரணமாக அமைந்தது. ஆனால், அதில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்பது பிரிட்டிஷுக்கு ஆறுதலான செய்தியாக இருந்தது.
நான்காவது கலங்கரை விளக்கம்
நான்காவதாக இப்போது நாம் பார்க்கும் இந்த கலங்கரை விளக்கத்தை மெரினாவில் அமைத்தவர்கள் நம்மவர்கள்தான். 1970-ம் ஆண்டு புதிதாக ஒரு கலங்கரை விளக்கம் அமைக்கவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு எதிரே உருவாக்க நினைத்தார்கள். அங்கு கட்டுவதற்கு மாநில அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டதால் தற்போது இருக்கும் இடத்தில் நான்காவது கலங்கரை விளக்கத்தை அமைத்தார்கள்.
1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் நாள் இது திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் தடை விதித்தார்கள். அதன் பின்னர் 19 வருடங்கள் கழித்து மீண்டும் 2013-ம் ஆண்டு முதல் கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப் பட்டது.
தற்போது பெரியவர்களுக்கு 20 ரூபாய், சிறியவர்களுக்கு 10 ரூபாய், கேமராவுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். காலை 10 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திங்கட் கிழமை விடுமுறை. அன்று அனுமதியில்லை. அதனால் லைட் ஹவுஸ் பார்க்க வருபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
மெரினா கடற்கரை
மெரினா கடற்கரையில் இருக்கும் இந்த லைட் ஹவுஸ் மொத்தம் 150 அடி உயரம் கொண்ட 10 மாடி கட்டடம். முன்பெல்லாம் இதில் ஏற வேண்டும் என்றால் மூச்சிறைக்க 247 படிக்கட்டுகளை கடந்தாக வேண்டும். இப்போது அப்படியில்லை வெறும் 23 வினாடிகளில் 9-வது மாடியில் கொண்டுபோய் நம்மை இறக்கி விட்டுவிடுகிறது, அதிவேக நவீன லிப்ட். 9-வது மாடியில் இறங்கியபின் 25 படிக்கட்டுகள் ஏறி 10-வது மாடியை அடையலாம். ஏதோ உலகின் உச்சிக்கு வந்ததுபோல் ஒரு பரவச உணர்வு. பலமான காற்று வேறு நம்மை கொஞ்சம் அச்சப்பட வைக்கும்.
மேலேயிருந்து வங்காள விரிகுடாவை பார்த்தால் தலைச் சுற்றிப்போகிறது. தரையிலிருந்து பார்ப்பதைவிட இங்கிருந்து பார்க்கும்போது கடலின் பிரமாண்டம் நம்மை திகைக்க வைக்கிறது. அப்படியே கொஞ்சம் மெரினா பக்கம் பார்வையை கொண்டுபோனால் கடற்கரை நம்மை வசீகரம் செய்கிறது. மெரினா இத்தனை அழகா..? நமது வியப்பு கொஞ்சமும் விலகுவதேயில்லை. கீழே குப்பையும் கூளமுமாக காட்சியளிக்கும் கடற்கரை மேலே போகப்போக கழுவி விட்டதுபோல் படு சுத்தமாக தெரிகிறது. கடற்கரை நடைபாதை, புல்வெளி, காமராஜ் சாலை எல்லாமே அத்தனை அழகு. நமது சென்னைதானா என்று வியக்க வைக்கிறது.
10-வது மாடிக்கு செல்ல அனுமதியில்லை. அங்கு சக்தி வாய்ந்த ரேடார் ஒன்று வங்காள விரிகுடா கடல் பரப்பை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. 2008-ம் ஆண்டு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பை மாநகரை தாக்கியத்திலிருந்து இந்தியாவின் கடற்கரை பகுதிகள் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. அதுபோக கடலில் இருக்கும் கப்பல்கள் கொடுக்கும் சிக்கனல்களை பெற்று அதற்கான உதவிகளை செய்வதற்கும் இது தோதானதாக இருக்கிறது. இந்த கோபுரத்தின் அடிப்பாகத்தில் வட்ட வடிவில் இரண்டு தளங்கள் கொண்ட கட்டத்தில் சென்னை துறைமுக கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. கடலோர காவல்படையுடன் இணைந்து ரேடார் மூலம் கடலை கண்காணிக்கிறது.
கலங்கரை விளக்கின் உச்சியில் அதிசக்தி வாய்ந்த வெண்சுடர் விளக்கு ஒன்று சுழன்று கொண்டே இருக்கிறது. இது 440 வோல்ட் 3000 வாட்ஸ் பவர் கொண்டது. இரவு நேரத்தில் இந்த ஒளியில் வெண்மை, சிவப்பு மற்றும் பச்சை நிறம் மாறி மாறி ஒளிரும். 10 வினாடிகளுக்கு ஒருமுறை இரண்டு தடவை ஃபிளிக்கரிங் ஆவதுபோல் சுழல்கிறது. தூரத்திற்கு ஏற்ப நிறம் வித்தியாசமாக தெரியும். இது கடலில் 52 கி.மீ. தொலைவு வரை கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது.
ஒரு 150 அடி உயரத்திலிருந்து பறவை பார்வையில் சென்னையை பார்ப்பதே வித்தியாசமாக தெரிகிறது. உயரத்திலிருந்து பார்க்கும்போது பேருந்துகளும் கார்களும் பொம்மையாக மாறுகின்றன. மனிதர்கள் சிறு புள்ளிகளாக நகர்கிறார்கள். இதுவொரு வித்தியாசமான அனுபவம். குழந்தைகள் மிகவும் ரசிக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பக்காவாக இருப்பதால் தவறி கீழே விழுந்து விடுவோமோ என்ற பயமில்லாமல் ரசித்துப் பார்க்கலாம்.
மெரினா பீச் என்பது கீழே மணற்பரப்பில் மட்டும் முடிந்து விடுவதில்லை. அதன் அழகை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால் இந்த உயரத்திற்கு சென்று காண வேண்டும். சாலையில் பயணிக்கும் வாகனங்கள், தூரத்தில் பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும் ரயில் என்று எல்லாமே ஒவ்வொருவிதமான அழகு. கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி மெரீனாவை பார்த்தால்தான் மெரினா சுற்றுலா முழுமை பெறும்.
ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.