Ramanathapuram Palace

ராமநாதபுர அரண்மனைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியங்கள்

நாம இங்க பாக்கப்போறது ராமநாதபுர அரண்மனை பத்தி. அரண்மனைன்னதும் ஏதோ ராஜஸ்தான் அரண்மனைகள் மாதிரி பிரமாண்டமா இருக்கும்ன்னு நினைக்க வேண்டாம். சேதுபதி மன்னர்கள் பேரசர்கள் கிடையாது. அவர்கள் சிற்றரசர்கள். அதற்கேற்ப அவர்கள் எளிமையான அரண்மனைய கட்டியிருந்தாங்க.

ராமநாதபுர அரண்மனை

மூர்த்தி சிருசுன்னாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்வாங்களே. அப்படி சேதுபதி மன்னர்கள் சிற்றரசர்களா இருந்தாலும் அவங்க செய்திருக்கிற சாதனைகள் அபாரம். பாண்டியர்கள், சோழர்கள் காலத்துக்குப் பிறகு ராமேஸ்வரத்தையும் சேதுக்கரையையும் காப்பாத்துனது இவங்கதான். அதனாலதான் இவங்கள சேதுக்காவலர்கள், சேதுபதிகள்ன்னு அழைக்கிறாங்க. இவங்களுக்கு எல்லாமே ராமநாத சுவாமிதான். ராமேஸ்வரத்துல இருக்குற ராமநாத சுவாமி கோயில்ல பெரும் பகுதிய கட்டுனது இவங்கதான்.

Ramanathapuram Palace Gateway
ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயில்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் போகிற பயணிகளுக்கு பாதுகாப்பு தந்து வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்து பக்தர்கள பாதுகாக்குறதுதான் இவங்களோட பிரதான வேலையா இருந்தது. பயணிகள் வைகை ஆத்த கடக்குறதுக்கும் பாம்பன் கடலை கடக்குறதுக்கும் உதவுனாங்க. அதுக்காக படகு போக்குவரத்தை நடத்தினாங்க. இதுபோக பயணிகள் தங்கிக்கொள்ள இடமும் பசிப்போக உணவும் கொடுத்திருக்காங்க. இப்படி பல பெருமைகள் கொண்டவர்களா சேதுபதி மன்னர்கள் இருந்தாங்க.

அப்படிப்பட்ட மன்னர்கள் வாழ்ந்த ராமநாதபுர அரண்மனை சுற்றுலாவில் முக்கியமான ஓர் இடம். ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் அருந்தொண்டாற்றிய சேதுபதி மன்னர்களின் அரண்மனையை பார்த்து விட்டு திரும்பும்போது ஏதோ ஓவியக்கூடத்தில் நுழைந்து திரும்பும் உணர்வு ஏற்படுது. அந்தளவிற்கு சுவர்கள் முழுவதும் சற்றும் இடைவெளியில்லாமல் ஓவியங்கள் ராஜாங்கம் செய்கின்றன.

சேதுபதி

பாண்டியர்கள் காலத்திற்குப்பின் ஆட்சிக்கு வந்த மதுரை நாயக்கர்கள் ராமநாதபுரம், ராமேஸ்வரம் கடற்பகுதியைப் பாதுகாக்கவும், ராமேஸ்வரம் சென்று வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பளிக்கவும் ஒரு ஏற்பாடு செஞ்சாங்க. அதன்படி கி.பி.1601-ல் உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன் சேதுபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவர்தான் சேதுபதி அரசை நிறுவிய பெருமைக்கு சொந்தக்காரர். ஆட்சியாளர். கி.பி.1795 வரை தன்னாட்சி பெற்ற அரசை இவரது வழிவந்த மன்னர்கள் நடத்தி வந்தார்கள்.

அதன்பின் நாடு ஆங்கிலேயர் வசம் வந்தது. கி.பி.1803-க்குப்பின் ராமநாதபுரம் ஜமீன்தார் என்ற அந்தஸ்துடன் சேதுபதிகள் ஆட்சியைத் தொடர்ந்தனர். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று ஜமீன் ஒழிப்பு அமலுக்கு வரும் காலம் வரை இவர்கள் ஆட்சி நீடித்தது. அதற்கு இவர்கள் ஆங்கிலேயர்களை அனுசரித்துப் போனதுதான் காரணம்.

மண் கோட்டை

சேதுபதிகளின் முதலாவது தலைநகர் ராமநாதபுரத்திற்கு மேற்கேயுள்ள சத்திரக்குடி அருகிலுள்ள புகலூர் என்ற போகளூரே இருந்திருக்கிறது. ரெகுநாத கிழவன் சேதுபதியே இன்றைய ராமநாதபுரத்தை சேதுபதிகள் தலைநகராக மாற்றியவர். அப்போது இந்த நகரம் மண்ணால் ஆன சிறிய கோட்டைக்குள் இருந்தது. போகளூரை தலைநகராக கொண்டு ஆண்ட சேதுபதி மன்னர்கள் இந்தக் கோட்டையை பயன்படுத்தியுள்ளார்கள்.

இந்த மண் கோட்டைக்குள் கூரிச்சாத்தனார் கோயில், சொக்கநாதர் கோயில், ராஜராஜேஸ்வரி கோயில் ஆகிய மூன்று கோயில்கள் இருந்தன. அதுபோக மன்னர் தங்கும் இடமும் இந்தக் கோட்டைக்குள் இருந்தது. கி.பி.1676-க்குப் பின் தலைநகராக ராமநாதபுரம் மாற்றப்பட்டதும் இந்த மண்கோட்டையை செவ்வக வடிவம் கொண்ட கற்கோட்டையாக மாற்றினார் கிழவன் சேதுபதி.

Ramanathapuram Fort
ராமநாதபுரம் கோட்டை

கோட்டைக்குள் நுழைய கிழக்குப்பகுதியில் மட்டும் ஒரேயொரு தலைவாசல் அமைக்கப்பட்டிருந்தது. கோட்டையின் சுவர் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்டதாக இரண்டு மைல் சுற்றளவுக்கு உருவாக்கினார். கோட்டைச் சுவரைச் சுற்றி ஆழமான அகழி அமைக்கப்பட்டிருந்தது. புதிதாகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டையைப் பகைவர்களிடமிருந்து பாதுகாக்க 42 கொத்தளங்கள் கோட்டைச் சுவரைச் சுற்றி அமைக்கப்பட்டன. கி.பி.1770-ல் இந்தக் கோட்டையில் 44 பீரங்கிகள் இருந்தன என்று ஆங்கிலேய தளபதி ஜோசப் ஸ்மித் மற்றும் ஜெனரல் பேட்டர்சன் எழுதிய குறிப்புகள் கூறுகின்றன.

இப்படி சிறப்பு பெற்றிருந்த கோட்டையை கி.பி.1803-ல் ஆங்கிலேய அரசின் ஆணைப்படி இடித்தார்கள். ஒரு சிறுபகுதி மட்டும் விட்டுவைதார்கள். ராமநாதபுரம் கோட்டை எப்படி இருந்தது என்பதற்கு அடையாளமாக இது இன்றும் இருக்கிறது. ராமநாதபுரம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மூலைக் கொத்தளம் என்ற இடத்தில் இந்தக் கோட்டையை பார்க்கலாம். தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் இந்த கோட்டைப்பகுதியில் 9 பீரங்கிகள் வைத்திருந்ததற்கான அமைப்புகள் இருக்கின்றன.

இந்தக் கோட்டைக்குள் இருக்கும் இராமலிங்க விலாசம் அரண்மனையிலிருந்துதான் சேதுபதி மன்னர்கள் ஆட்சிப் புரிந்தார்கள். ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. அரண்மனையின் பல பகுதிகள் அரசு அலுவலகங்களாக மாறிவிட்டன. எஞ்சிய பகுதி மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கிறார்கள். இதனை தர்பார் மண்டபம் என்கிறார்கள். இதை தொல்லியல் துறை நிர்வாகித்து வருகிறது.

இராமலிங்க விலாசம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த சேதுபதி மன்னர்கள் அந்த பக்தியின் வெளிப்பாடாக தங்களின் அரண்மனைக்கு இராமலிங்க விலாசம் என்று பெயரிட்டனர். முதலில் நம்மை வரவேற்பது நுழைவு வாயில்தான். சமீபத்திய வண்ணப் பூச்சு நுழைவு வாயிலில் பூசப்பட்டுள்ளதால் பழமையின் சாயல் கொஞ்சமும் இல்லாமல் பொருட்காட்சியில் போடப்பட்ட செட் போல் காட்சி தருகிறது. இந்த நுழைவு வாயிலை கடந்து சென்றால் உள்ளே சற்று தொலைவில் இராமலிங்க விலாசம் இருக்கிறது.

இதனை அரண்மனை என்று சொல்வதற்குப் பதில் கோயில் என்று சொல்லலாம். அந்த அமைப்பில்தான் இந்தக் கட்டடடம் கட்டப்பட்டிருக்கிறது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்று கோயிலை நினைவுப்படுத்தும் கலையம்சங்கள் இந்த அரண்மனையில் அதிகம். மேற்கிலிருந்து கிழக்காக மூன்று மண்டபங்கள் அடுத்தடுத்த அடுக்காக காட்சியளிக்கிறது. கிழக்கு மேற்காக 153 அடி நீளமும், வடக்கு தெற்காக 65 அடி அகலமும் கொண்டதாக செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது 14 அடி உயரம் கொண்ட மேடை மீது அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1690-க்கும் 1710-க்கும் இடைப்பட்ட காலத்தில் கிழவன் சேதுபதி இந்த அரண்மனையை கட்டினார். இதனை கட்டுவதற்கு சுண்ணாம்பு, செங்கல், கருங்கல் போன்றவை பயன்படுதிட்டியுள்ளார்.

இந்த ராமலிங்க விலாசத்தின் உள்ளே செல்வதற்கு 16 நீண்ட படிகளை கடந்து செல்ல வேண்டும். படிகளைக் கடந்து உள்ளே சென்றால் இருபுறமும் கல்லாலான யாளிகள் தாங்கிய தூண்கள் இருக்கின்றன. மதுரையில் திருமலை நாயக்கர் மஹால் நினைவுப்படுத்தும் விதமாக இங்கு வட்டமான உயரமான 50 தூண்கள் இருக்கின்றன. மகாமண்டபத்தின் தென்மேற்கு மூலையில் சேதுபதிகள் அபிஷேக மேடை இருக்கிறது.

மகாமண்டபத்தைக் கடந்து சென்றால் அர்த்த மண்டபம் வருகிறது. அதை 20 கற்தூண்கள் தாங்கி நிற்கின்றன. அத்னையும் கடந்து சென்றால் கருவறைப் போன்ற சிறிய வாயிலுடன் கூடிய ஓர் அறை காணப்படுகிறது. இதனை 12 கற்தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதை ராமர் பீடம் என்று அழைக்கின்றனர். இங்கு ராமர், சீதை மற்றும் லட்சுமணன் சிலைகள் உள்ளன. இந்த ராமர் பீடத்திற்கு மேலே மற்றொரு அறை இருக்கிறது. இந்த அறையில் அரச குடும்பத்தினர் ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.

இராமலிங்க விலாசத்து  சுவர்களையும் மேல் விதானத்தையும் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. தமிழகத்தில் வேறெங்கும் இவ்வளவு ஓவியங்கள் கொண்ட கலைப்படைப்பை பார்ப்பது அரிது. இந்த ஓவியங்கள் சேதுபதிகளின் அக மற்றும் புறவாழ்க்கையை சித்தரிப்பதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் அனைத்தும் முத்துவிஜய ரெகுநாத சேதுபதி காலத்தில் தீட்டப்பட்டவை. அதனால் அவர் பல ஓவியங்களில் இடம்பெற்றுள்ளார்.

மகாமண்டபத்தின் தென்பகுதி சுவர்களில் சேதுபதி தஞ்சை மன்னரோடு போர்புரிந்த காட்சி, முத்துவிஜய ரெகுநாத சேதுபதியின் பவனி, வெளிநாட்டினரை சந்தித்தல் போன்ற ஓவியங்கள் இருக்கின்றன. மற்ற பகுதிகளில் தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்கள் இடம்பெற்றிருக்கின்றன. அர்த்தமண்டபத்தில் கிருஷ்ணரின் பிறப்பை விளக்கும் காட்சிகள், கண்ணபிரான் பட்டாபிஷேகம் சூட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ராமர் பீடத்தில் ராமரின் பிறப்பு தொடங்கி, சீதையை மனம் முடிக்கும் ராமாயணக் காட்சிகள் சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியத்திலும் அதனைப் பற்றிய விளக்கங்கள் பெரும்பாலும் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. சில ஓவியங்களில் தெலுங்கில் விளக்கம் தரப்பட்டுள்ளன. அந்த காலத்திய பேச்சு தமிழ் வழக்கில் இந்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுரையை காணொளியாக காண..

வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்த அரண்மனையில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் என்ற ஆங்கிலேய தளபதியை சந்தித்து வரி கொடுக்க முடியாது என்று கூறிய வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் கி.பி.1798 நடந்தது. இதுபோக சேதுபதி மன்னர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், நாணயங்கள் போன்ற பலவும் அங்கு இருக்கின்றன. கல்வெட்டுகள், ஒலைச்சுவடிகள், செப்பேடுகள்,  சிற்பங்கள் பிறப்பொருட்கள் போன்றவை இங்குள்ள அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறை வைத்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பி சென்ற பாதாள குகையும் இங்கிருக்கிறது.

இந்த அரண்மனை தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும். அரசு விடுமுறை நாட்களில் தவிர மற்ற நாட்களில் திறந்திருக்கும். இந்த அரண்மனையை காண்பதன் மூலம் நமது தமிழக மன்னர்களின் பிற்கால சரித்திரத்தை அறிய முடியும் என்பது உண்மை. மனதை வருந்தவைக்கும் செயல் என்னவென்றால் இங்கிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஓவியங்களை புதுப்பிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் சுண்ணாம்பு அடித்த போது சிதறிய வண்ணங்களால் ஓவியங்களை சிதைத்திருக்கிறார்கள். இது நம்மவர்களுக்கு வரலாற்றின் மீது இருக்கும் அக்கறையின்மையை காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *