Elliot's Beach in Chennai

மக்களுக்காக தன் உயிரை இழந்த வெளிநாட்டு மாலுமி

உலகின் மிக நீண்ட வளைவுகளற்ற கடற்கரைகளில் மெரினா பீச்சும் ஒன்று. மெரினா பீச் என்பது மூன்று பகுதிகளை கொண்டதாக இருக்கிறது. கூவம் நதி கடலில் கலக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து அடையாறு கடலில் கலக்கும் இடத்திற்கு அடுத்து இருக்கும் எலியட்ஸ் பீச் என்ற இடத்தில் முடிகிறது. இந்த அடையாறு கழிமுகத்தில்தான் விநாயகர் சதுர்த்தி அன்று நகரில் வைக்கப்படும் அனைத்து சிலைகளையும் கடலில் கரைக்கிறார்கள்.

இந்தக் கடற்கரை கிட்டத்தட்ட 13 கி.மீ. நீளம் கொண்ட உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையான மெரீனாவின் பாதியளவு. அதாவது 6.45 கி.மீ. நீளம் கொண்டது. இதன் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட்ஸ் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கிறார்கள். வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் நகர்ப்புற கடற்கரைகளில் புகழ்பெற்றது இந்த மெரினா பீச்.

எலியட்ஸ் பீச்

மெரினா பீச் தெரிந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளுக்கு எலியட் பீச்சோ, சாந்தோம் பீச்சோ தெரியாது. ஏனென்றால் அவைகளில் பெரும்பகுதி மீனவ குடியிருப்புகளாகவே இருக்கிறது. அதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வதில்லை. ஆனால், சென்னைவாசிகளை கேட்டுப்பாருங்கள் எலியட்ஸ் பீச் சென்னையின் சுவர்க்கம் என்பார்கள். அங்கும் பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன. சுத்தமான கடற்கரை என்ற நல்ல பெயரும் எலியட்ஸ் பீச்சுக்கு உள்ளது.

Elliot's Beach, Chennai
Image: Alexey Komarov

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் மிண்டோவின் தம்பி ஹ்யூ எலியட்ஸ் மதராஸின் கவர்னராக இருந்தார். 1812-லிருந்து 1820-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 8 வருடங்கள் சென்னை கவர்னராக இருந்தார். இவரது மகன் எட்வர்ட் எலியட்ஸ் இந்த கடற்கரைப் பகுதியில் குடியிருந்தார். ஒரு கவர்னரின் மகனாக இருந்தபோதும் எந்தவித தலைக்கனமும் இல்லாமல் சாமானிய மக்களுடனும் இயல்பாக பழகினார். மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்தார். இதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு எலியட்ஸ் மீது கொள்ளைப் பிரியம். அப்படி மக்கள் மனதை கொள்ளைக்கொண்ட இந்த இளவரசர் தனது 28-வது வயதில் இறந்துபோனார். அந்த இறப்பை மக்களால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் நினைவாகவே அன்றைய மக்கள் இந்த கடற்கரை பகுதிக்கு எலியட்ஸ் கடற்கரை என்று பெயர் வைத்தனர்.

அதன்பின் இந்தப் பகுதியில் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் குடியேறினார். அவரின் பெயரால் பெசன்ட் நகர் உருவானது. அன்றிலிருந்து இந்தக் கடற்கரை பெசன்ட் நகர் பீச் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. எலியட் பீச், பெசன்ட் நகர் பீச் இரண்டுமே ஒன்றுதான். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தக் கடற்கரைக்கு ஆங்கிலேயர்கள் மட்டுமே வரமுடியும். இந்தியர்களுக்கு அனுமதியில்லை. இந்தக் கடற்கரையின் தொடக்கத்தில் அடையாறு கடலில் கலக்கும் இடத்தில் ஒரு உடைந்த பாலம் இருக்கிறது. இதுவொரு அருமையான அழகான இடம்.

இந்தக் கட்டுரையை காணொளியாக காண..

இந்தப் பாலம் நிறைய சினிமாக்களில் நடித்திருக்கிறது. இதை அடையாறு உடைந்த பாலம் என்கிறார்கள். ‘வாலி’, ‘ஆயுத எழுத்து’ போன்ற படங்களில் இந்தப் பாலம் ஒரு கேரக்ட்டராகவே வரும். 1967-ல் மீனவர்கள் மீன்களை கொண்டு வருவதற்கும் ட்ரை சைக்கிள் போவதற்கும் வசதியாக இந்தப் பாலத்தை அடையாறு நதியை கடந்து செல்லும் விதமாக கட்டினார்கள். 1977-ல் நதியில் வந்த பெரும் வெள்ளத்தில் பாதி பாலம் அடித்துக்கொண்டு போய்விட்டது. மீதி நிற்கும் பாலம் ஒரு நினைவு சின்னம் போல் நிற்கிறது.

இங்கிருந்து சென்னையின் வானுயர்ந்த கட்டடங்களை பார்ப்பது ஒரு தனியழகு. அதிலும் லீலா பேலஸ் ஹோட்டல் அழகிலும் அழகு. இந்த இடம் தியோஸோஃபிகல் சொசைட்டி வனத்திற்கு பின்னால் இருக்கிறது. எலியட்ஸ் பீச்சில் இருக்கும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி ஹோட்டலிலிருந்து ஒரு கி.மீ. பயணித்தால் இந்த இடம் வருகிறது. இங்கிருந்து காலை சூரியோதயத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி. அதனால் அதிகாலையிலேயே இங்கு காதலர்கள் ஆஜராகி விடுகிறார்கள். பொதுவாக மெரினா பீச்சில் எப்படி காதல் ஜோடிகள் அதிக அளவில் தென்படுகின்றனவோ அதேபோல் எலியட்ஸ் பீச்சிலும் இவர்கள்தான் அதிகமாக தென்படுகிறார்கள்.

அடையாறு உடைந்த பாலம் இருக்கும் பகுதி பெண்களுக்கு அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை என்று காவல் துறையினர் கூறுகின்றனர். அதிலும் மாலை நேரங்களில் இருள் கவ்வத்தொடங்கும் வேளையில் பெண்கள் இங்கிருப்பது நல்லதல்ல என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள். அதனால் சுற்றுலாப் பயணிகள் தங்களின் பயணத் திட்டத்தை அதற்கேற்ப அமைத்துக்கொள்வது நல்லது.

கார்ல் ஷ்மிட்

எலியட்ஸ் பீச்சின் அடையாளங்களுள் ஒன்று கார்ல் ஷ்மிட் நினைவுச் சின்னம். இதை இவ்வளவு நாட்களாக காதலர்களுக்கான நினைவுச் சின்னமாகத்தான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது காதலுக்கான நினைவுச் சின்னமல்ல. இது டேனிஷ் நாட்டு மாலுமி ஒருவருக்காக கட்டப்பட்டது. 1930-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி மிகப் பெரிய புயல் ஒன்று சென்னையைத் தாக்கியது. அப்போது துறைமுகத்தில் நுழைய இடம் இல்லாமல் ஒரு கப்பல் எலியட்ஸ் கடற்கரை அருகே நங்கூரம் இட்டு நின்றது.

அந்தக் கப்பலின் மாலுமியான கார்ல் ஷ்மிட் தனது குழுவினருடன் கரையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது புயலால் மக்கள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் படுவதைக் கண்டார். பலரை புயல் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைக் கவனித்த கார்ல் ஷ்மிட் தனது குழுவினருடன் சென்று நிறைய மக்களின் உயிரை காப்பாற்றினார். கடைசியில் இவரால் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. புயலின் கொடூரத்தால் கடலுக்கு இரையானார். அவரின் உயிர்த் தியாகத்தை நினைவுப் படுத்தும் விதமாக ஆங்கிலேய அரசும் மக்களும் இணைந்து இந்த நினைவுச் சின்னத்தை எழுப்பினார்கள். இன்றும் இதுவோர் அடையாளமாக திகழ்கிறது. இதுவும் பல தமிழ் படங்களில் இடம் பெற்றுள்ளது. மணிரத்தினம் இயக்கிய ‘மவுனராகம்’ படத்தில் ஒரு பாடல் இந்த நினைவு சின்னத்திலேயே படமாக்கப்பட்டுள்ளது.

எலியட்ஸ் கடற்கரையின் தொடக்கத்தில் அஷ்டலட்சுமி கோயில் இருக்கிறது. லட்சுமி எட்டுக்கைகளை கொண்ட கோலத்தில் இங்கு வீற்றிருப்பதால் இந்தப்பெயர் வந்தது. இதுபோக இங்கு வேளாங்கண்ணி தேவாலயமும் அறுபடை முருகன் கோயிலும் உள்ளன. அதனால் ஆன்மிக அன்பர்களுக்கு இந்த இடம் பிடித்துப்போகும். அதுபோக கலாஷேத்ரா, பெசன்ட் நகர், சாஸ்த்ரி நகர், ஆல்காட் பங்களா, தியோஸோஃபிகல் அமைப்பு ஆகியன அடையாறு கடல் ஓரம் அமைந்துள்ள எலியட்ஸ் கடற்கரையின் சிறப்புகள். 

ஏகப்பட்ட உணவகங்கள்

உணவுப் பிரியர்களுக்கென்றே இங்கு ஏகப்பட்ட உணவகங்கள் இருக்கின்றன. முருகன் இட்லி கடை, கே.எஃப்.சி., என்று எல்லாவகையான உணவகங்களும் இங்குண்டு. அதோடு வீசும் காற்றில் நெருப்புப் பொறிகள் பறக்க சோளக்கருதினை வாட்டி தருவது ரசனையான ஒன்று. 

இங்கிருந்து எலியட்ஸ் பீச்சின் வடக்கிலுள்ள அடையாறு நதியை கடந்து வடக்கு நோக்கிப் போனால் வருவது சாந்தோம் பீச். இது மெரினா பீச்சுக்கும் எலியட்ஸ் பீச்சுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கிறது. சற்று மேடான பகுதி என்பதால் இங்கிருப்பது மீனவக் குடியிருப்புகளே. மீனவர்களின் வாழ்க்கையை கண்முன்னே பார்க்கலாம். சென்னையின் பிரபலமான ‘கானா பாடல்கள்’ பிறந்த இடம் இதுதான் என்கிறார்கள் சென்னைவாசிகள்.

மீனவர்களின் வாழ்க்கை எப்போதும் அபாயம் நிறைந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. கடலுக்கு போன கணவர்கள் திரும்பி வரும் வரை மனைவிகள் கானா பாடல்களை பாடுவார்கள் என்கிறார்கள். அப்படித்தான் கானா பாடல்கள் தோன்றியது. வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் கானா பாடல்கள் இங்கிருக்கின்றன. பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் பாடல்கள் இருக்கின்றன. இந்த பீச்சை கடந்து அப்படியே வடக்கு திசை நோக்கி நடந்தால் வருகிறது கலங்கரை விளக்கம். இது சாந்தோம் பீச்சுக்கும் மெரினா பீச்சுக்கும் எல்லைபோல் அமைந்திருக்கிறது. 

ஆசிரியர் பற்றி..

இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது