பொதுவாக பூச்சியினங்களின் வாழ்க்கையே ஆச்சரியமும் திகைப்பும் கொண்டதாகத்தான் இருக்கும். அதற்கு சற்றும் குறைவில்லா பல விசித்திரங்களைக் கொண்டதுதான் தேனீக்களின் வாழ்க்கை. இதுவொரு அபூர்வ உயிரினம். தேனீக்கள் எப்போதும் கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை.
தேனீக்களில் இந்தியத் தேனீக்கள், இத்தாலியத் தேனீக்கள் என்று இரண்டு வகை உண்டு. இந்தியத் தேனீக்களின் குடும்பம் சிறியது. இத்தாலியத் தேனீக்கள் குடும்பம் மிகப் பெரியது. வர்த்தக நோக்கில் தேனீக்களை வளர்ப்பவர்கள் இத்தாலியத் தேனீக்களையே தேர்ந்தெடுப்பார்கள்.
அபூர்வ உயிரினம்
ஒரு தேன் கூட்டில் ஒரு ராணித் தேனீ, 250 ஆண் தேனீக்கள், 80 ஆயிரம் வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். ராணித் தேனீதான் அந்த கூட்டத்திற்கு தலைவி. முட்டையிடுவதும் வேலைக்காரத் தேனீக்களுக்கு கட்டளை இடுவதும் தான் இதன் வேலை. கூட்டில் இருக்கும் 250 ஆண் தேனீக்களுக்கும் எந்த வேலையும் கிடையாது. இவைகளின் ஒரே பிரதான வேலை இனச்சேர்க்கை மட்டும்தான். 80 ஆயிரம் வேலைக்காரத் தேனீக்களும் பெண்ணுறுப்பு முழுமையாக வளர்ச்சியடையாத பெண் தேனீக்கள்தான். இதனால் முட்டையிட முடியாது. எனவே இவை எப்போதும் வேலைக்காரத் தேனீக்களாகவே இருக்கும்.
ராணித் தேனீ தன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இனச்சேர்கையில் ஈடுபடும். மூன்று முதல் நான்கு நாள் தொடர்ந்தாற்போல் இந்த செயல் நிகழும். பருவம் அடைந்ததும் ராணித் தேனீயின் உடலில் இருந்து ஒருவித வாசனை வெளிப்படும். அது ஆண் தேனீக்களை கவர்ந்திழுக்கும். அந்த நேரத்தில் ராணித்தேனீ கூட்டை விட்டு வெளியே வந்து வானத்தை நோக்கிப் பறக்கும். உடனே ஆண் தேனீக்களும் காதல் உணர்வுடன் ராணித் தேனீயை பின்தொடரும். அது தொடர்ந்து மேல் நோக்கிப் பறந்துகொண்டே வரும், பாதி உயரத்திலேயே முக்கால்வாசி ஆண் தேனீக்கள் தொடர்ந்து பறக்க முடியாமல் திரும்பிவிடும். மீதியிருக்கும் தேனீக்களும் கொஞ்ச உயரத்திலேயே திரும்பிவிடும்.
கடைசியாக ராணித் தேனீக்கு சமமாக பறந்து வந்த ஆண் தேனீக்கு உறவுகொள்ள அனுமதி கிடைக்கும். இந்த உறவு மிக உயரத்தில் வானிலே நிகழும். உறவு முடிந்ததும் ஆணுறுப்பை வெளியே எடுக்க முடியாது. அதனை எடுக்கும் போராட்டத்தில் அந்த ஆண் தேனீ இறந்துவிடும். அதன் பிய்ந்த ஆணுறுப்பு ராணித் தேனீயொடு சென்று விடும். கூட்டுக்கு திரும்பியதும் வேலைக்காரத் தேனீக்கள்தான் ஆணுறுப்பை எடுத்து வெளியே எரிந்து சுத்தப்படுத்தும்.
இந்தக் கட்டுரையை காணொளியாக காண..
மறுநாளும் இதேபோல் இன்னொரு ஆண் தேனீயுடன் உறவு நிகழும். இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும். அதன்பின் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து முட்டையிட்டுக்கொண்டே இருக்கும்.
ஹவுஸ் கீப்பிங் பீஸ்
அந்த முட்டையிலிருந்து 13 நாட்களில் தேனீக்கள் பொறித்து வெளிவரும். பிறந்து ஒரு வாரம் ஆன தேனீக்களுக்கு கூட்டை சுத்தப்படுத்துவதுதான் வேலை. இந்த வகை தேனீக்களை ‘ஹவுஸ் கீப்பிங் பீஸ்’ என்கிறார்கள். இந்த பிஞ்சு தேனீக்கள் வெளியில் சென்று தேன் எடுத்துவரும் மற்ற பெரிய தேனீக்களிடம் இருந்து தேனை வாங்கி கூட்டில் இருக்கும் லார்வா என்ற புழுக்களுக்கும், மற்ற தேனீக்களுக்கும் தேவையான அளவு கொடுக்கும். மீதம் இருக்கும் தேனை எதிர்கால தேவைக்காக சேர்த்து வைக்கும்.
இதுபோக காவல்காரத் தேனீக்கள் இருக்கின்றன. இவைகள்தான் கூட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கின்றன. மனிதர்களைப் போலவே தேனீக்களிலும் திருடர்கள் உண்டு. ஒரு கூட்டில் இருக்கும் தேனீ மற்றொரு கூட்டுக்குள் நுழைந்து அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தேனை திருடி சென்று விடும். அத்தகைய தேனீக்களை அடையாளம் கண்டு அவைகளுடன் போரிட்டு விரட்டி அடிப்பதோ அல்லது கொன்று விடுவதோ காவல்காரத் தேனீக்களின் வேலை.
வெளியில் இருந்து கூட்டுக்கு வரும் தேனீயை தன்னுடைய தேனீயா என்று அதன் வாசனையை வைத்து தெரிந்துகொள்ளும். ராணித் தேனீயிடம் இருக்கும் பிரத்யேக வாசனை அந்த கூட்டத்தில் இருக்கும் அத்தனை தேனீயிடமும் இருக்கும். இந்த வாசனையை வைத்துதான் எதிரி தேனீக்களை அடையாளம் கண்டு கொள்கின்றன. தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்கும்போது நம்மைக் கொட்டுவதும் காவல்காரத் தேனீக்கள்தான்.
தேனீக்கள் இல்லையென்றால்
தேனீக்கள் 90 நாட்கள் வரை உயிர்வாழக் கூடியவை. இதில் முதல் 7 நாட்கள் ஆன தேனீக்கள் கூட்டைச் சுத்தம் செய்யும் வேலையை செய்கின்றன. ஏழு நாட்களுக்கு மேல் வயதான தேனீக்கள் மலர்களில் இருந்து தேனை சேகரித்து வரும் வேலையைப் பார்க்கின்றன. 55 நாட்களுக்கு மேல் உள்ள வயதான தேனீக்கள் அந்த பகுதியில் எங்கெங்கு தேன் கிடைக்கும் மலர்கள் நிறைந்த இடங்கள் எங்கிருக்கின்றன என்ற தகவலை வேலைக்காரத் தேனீக்களுக்கு தெரிவிக்கும். அனுபவம் நிறைந்த இந்த வயதான தேனீக்கள் கூறும் தகவலை வைத்தே தேனீக்கள் தேனை சேகரித்து வருகின்றன.
தேனீக்கள் மூலம் தேன் மட்டுமல்ல, தேன் மெழுகு, மகரந்தம், அரசகூழ், வீனம் என்ற விஷம் ஆகியவை கிடைக்கின்றன. தேனீக்களை தாய்சாட் புரூட் ஹைன் என்ற நோய் தாக்கும். இது கேன்சரைப் போன்றது. இந்த நோய் தாக்கினால் தேனீக்கள் கூண்டோடு அழிவதைத் தவிர வேறுவழியில்லை. இதற்கு மருந்தும் கிடையாது. இதுபோக தேனீக்களின் உடலில் பேன் தோன்றும். இது தேனீக்களின் சுறுசுறுப்பை குறைத்து விடும். மஞ்சப்பட்டு குழவி என்பதும் தேனீயின் எதிரிதான். இவற்றைத் தவிர பெரிதாக எந்த நோயும் தேனீக்களை தாக்குவதில்லை.
தேனீக்கள் இல்லையென்றால் அடுத்த நான்கு ஆண்டுகளில் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் மடிந்துபோகும். தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கையால்தான் நமக்கு தாவரங்கள் மூலமாக உணவு கிடைக்கிறது. தேனீக்கள் இல்லையென்றால் மகரந்த சேர்க்கையும் இல்லை, உணவும் இல்லை, உயிரினங்களும் இல்லை. இந்த உலகமும் இல்லை.
ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.