prisoner chains

பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளியின் கதியைப் பாருங்கள்

உளவு பார்த்தல் சாதாரண வேலையில்லை. அதிலும் பாகிஸ்தான் போன்று எப்போதும் சீற்றத்துடன் இருக்கும் ஒரு நாட்டில் உளவு பார்ப்பது கத்தி மேல் நடப்பது போல் அசாதாரண சாதனைதான். இந்தியாவுக்காக பாகிஸ்தான் சென்று உளவு பார்த்த ஒருவரைப் பற்றிய புத்தகம்தான் ‘மிஷன் டூ பாகிஸ்தான்‘ என்பது. இந்த புத்தகத்தை முலாய் கிருஷ்ணா தர் என்பவர் எழுதியிருக்கிறார். இவர் இந்திய உளவுத்துறையின் துணை இயக்குனராக இருந்தவர். இந்த புத்தகத்தில் இவர் குறிப்பிட்டிருக்கும் உளவாளி யாரென்று கடைசி வரை சொல்லவில்லை. அது மர்மமாகவே முடிகிறது. ஆனால், அது இந்தியாவின் மிகச் சிறந்த உளவாளியான ரவீந்திர கவுசிக் பற்றியதுதான் என்பதை இதன் சரித்திரம் லேசாக தெரிந்தவர்கள் கூட சொல்லிவிடுவார்கள்.

prison
Image: Amy Z

பாகிஸ்தான்

ரவீந்திர கவுசிக், ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையோர கிராமமான ஸ்ரீ கங்கா நகரில் 1952-ம் ஆண்டு ஏப்ரல் 11-ல் ஒரு பஞ்சாப் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை பிரான்சு ராஜ் கவுசிக், தாய் அமலா தேவி. கவுசிக் வசீகரமும் புத்திசாதுர்யமும் உள்ள ஒரு மாணவனாக பள்ளியில் படித்து வந்தான்.

அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்கள் அவனது மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. மனமெங்கும் தேசப்பற்று நிறைந்திருந்தது. இயல்பாக நடிக்கும் திறமை பெற்றிருந்த கவுசிக் தனது கல்லூரி காலங்களில் மோனோ ஆக்டிங் முறையில் நடித்து நாட்டின் மீதான பற்றை வெளிக்காட்டினார். இவரின் மோனோ ஆக்டிங் நாடகம் கல்லூரி முழுவதும் பிரபலம்.

லக்னோ நகரில் தேசிய அளவில் கலோரிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன. அதில் கவுசிக்கும் பங்கு பெற்றார். அங்கு சிறப்பு விருந்தினர்களாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு கவுசிக்கின் நாடகம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதோடு கவுசிக்கையும் பிடித்து விட்டது. உயிரே போனாலும் தன் தேசத்தை காட்டிக்கொடுக்காத உளவாளியாக கவுசிக் அதில் பிரமாதமாக நடித்திருந்ததுதான், அதற்கு காரணம். நாடக பாத்திரத்தை உண்மையாக்கினால் என்ன என்று ராணுவ அதிகாரிகள் யோசித்தார்கள். உண்மையாகவே இந்தியாவுக்காக உளவாளி வேலை செய்யவேண்டும் என்று கவுசிக்கிடம் சொன்ன போது அதை அவர் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

உளவாளியின் வாழ்க்கை

ஒரு உளவாளியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு கவுசிக்கின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம். 1975-ம் ஆண்டு இந்திய உளவுத் துறையான ‘ரா’வில் சேர்ந்தார். இந்தியாவின் ரகசிய உளவாளி வேலைக்கு கவுசிக் சேரும்போது அவரின் வயது 23. டெல்லியில் அவருக்கான பயிற்சி தரப்பட்டது. அங்கு அவரின் எல்லா அடையாளங்களும், அவரின் கல்விச் சான்றிதழ்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. ரவீந்திர் கவுசிக் என்ற அவரது பெயர் நபி அகமத் ஷாகிர் என்று மாற்றப்பட்டது. உருது மொழி கற்றுத்தரப்பட்டது. இதுபோக பாகிஸ்தானில் பரவலாக பேசப்படும் பஞ்சாபி மொழி ஏற்கனவே கவுசிக்குக்கு நன்றாக தெரியும். மேலும் இஸ்லாமிய மத நூல்கள் படிக்கத் தரப்படுட்டன. தொழுகை முறைகள் சொல்லித் தரப்பட்டன. ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமாக அவர் மாற்றப்பட்டார். இஸ்லாமியர்களின் அடையாளமான சுன்னத்தும் செய்யப்பட்டது.

முதலில் அபுதாபி, துபாய் என்று உளவறிந்து விட்டு கடைசியாக பாகிஸ்தான் வந்தார். நபி அகமத் ஷாகிர் என்ற பெயரில் பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயின்றார். பட்டப்படிப்பை முடித்தார். ‘பக்கா’ பாகிஸ்தானியாக மாறிய கவுசிக் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். அதன்பின் அமணட் என்ற பாகிஸ்தான் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரீஃப் அஹமத் கான் என்ற ஒரு மகனும் பிறந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தில் கமிஷன்ட் ஆபிஸராக சேர்ந்த கவுசிக் மிக்க குறுகிய காலத்திலேயே பதவி உயர்வு பெற்று ராணுவத்தின் மேஜராக பதவியேற்றார். இந்திய உளவாளி ஒருவர் அந்நிய மண்ணில் இவ்வளவு பெரிய பதவி வரை போனவர் கவுசிக் மட்டுமே. 1979 முதல் 1983-ம் ஆண்டு வரை டாப் சீக்ரட் என்று சொல்லப்படும் பல ரகசிய தகவல்களை பாகிஸ்தானில் இருந்து இந்திய ராணுவத்துக்கு அனுப்பி வைத்தார். அவையெல்லாம் மதிப்பு மிக்கவை. அதனால்தான் இந்திய ராணுவ வட்டாரத்தில் அவருக்கு ‘பிளாக் டைகர்’ என்ற பெயர் கிடைத்தது. அன்றைய இந்திய பிரதமரான இந்திரா காந்தி வரை கவுசிக்கின் புகழ் பரவியிருந்தது.

இந்தக் கட்டுரையை காணொளியாக காண..

இந்தக் காலக்கட்டத்தில்தான் கவுசிக்குக்கு உதவியாக இன்னொரு உளவாளியை அனுப்ப இந்தியா முடிவெடுத்தது. அதுதான் வினையாகவும் முடிந்தது. 1983-ல் பாகிஸ்தானுக்கு இணயத் மாசிக என்ற உளவாளியை அனுப்பியது. அவர் எல்லையைக் கடக்கும்போதே பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார். அவர்களின் சித்திரவதை தாங்க முடியாமல் கவுசிக் பற்றிய உணமையைப் போட்டுடைத்தார் இணயத்.

மரண தண்டனை

அவ்வளவுதான் பாகிஸ்தான் ராணுவ மேஜராக உயர்ந்த பதவியில் இருந்த கவுசிகிக்கை அள்ளிக்கொண்டு போய்விட்டது பாகிஸ்தானிய ராணுவம். உலகத்திலேயே மிகப் பெரிய சித்திரவதை என்பது ராணுவத்திடம் பிடிபட்டு சிறை செல்வதுதான். அதிலும் கவுசிக் ஏராளாமான ராணுவத் தகவல்களை இந்தியாவுக்கு அளித்திருந்தார். அப்படியென்றால் அவர்களின் கோபம் எவ்வளவு உச்சத்தில் இருந்திருக்கும்.

அத்தனை கடுங்கோவத்தையும் காட்டி விசாரணை என்ற பெயரில் இரண்டு வருடங்கள் சிறையில் வைத்து சொல்லமுடியாத சித்திரவதை செய்தனர். அதன்பின் 1985-ல் பாகிஸ்தான் நீதிமன்றம் கவுசிக்கிற்கு மரண தண்டனை வழங்கியது. பின்னர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அந்த தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக தீர்ப்பு வழங்கியது.

அதன்பின் பாகிஸ்தானின் பல சிறைச்சாலைகளுக்கு கவுசிக் மாட்டப்பட்டார். ஒவ்வொரு சிறையிலும் வித்தியாசமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார். 16 வருட தொடர் சித்திரவதையை அவரது உடல் ஒத்துக்கொள்ளவில்லை. ஆஸ்த்துமா, டிபி நோய்கள் வேறு அவரை கடுமையாக தாக்கியிருந்தன. 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது கடைசி மூச்சும் நின்றது. எந்த நாட்டுக்காக அவர் இத்தனை துயரையும் தாங்கினாரோ அந்த நாடான இந்தியா அவரை கொஞ்சமும் கண்டுகொள்ள வில்லை. அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான எந்த ஏற்பாடையும் செய்யவில்லை.

பாகிஸ்தானில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு பின்புறத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ராணுவ மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு உடல் அனாதைப் பிணம் போல் எரிக்கப்பட்டது.

இந்தியா மரணத்தை நோக்கியே தள்ளுகிறது

கடைசியாக அவர் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில், ‘நான் இதே வேலையை அமெரிக்காவுக்கு செய்திருந்தால் கைது செய்த மூன்றாம் நாளே வெளியே வந்திருப்பேன். ஆனால் இந்தியா என்னை மரணத்தை நோக்கியே தள்ளுகிறது.’ என்று மனம் நொந்து அழுது எழுதியிருக்கிறார். இருக்கிறார். அதற்கடுத்த மூன்றாம் நாளிலேயே அவர் இறந்து விட்டார்.

அவர் இறந்தப் பின் அவரது தாய் அமலா தேவிக்கு இந்திய அரசு 500 ரூபாய் பென்ஷனாக கொடுத்தது. பின்னர் 2,000 மாக உயர்த்தியது. 2006-ம் ஆண்டு அமலா தேவி மரணடையும் வரை அந்த பென்சன் வழங்கப்பட்டது. கவுசிக்கின் மனைவியும் மகனும் என்னார்கள் என்றே தெரியவில்லை. அவரது மகன் 2013-ம் ஆண்டு மரணமடைந்தார். அதற்கான காரணம் தெரியவில்லை. அவரின் மனைவி பாகிஸ்தானின் எந்த சிறைச்சாலையில் என்ன சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறாரே தெரியவில்லை.

இப்படி மறக்கப்பட்ட தியாகிகள் நிறையப் பேர் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களையும் நினைவு கூறுவோம்.

ஆசிரியர் பற்றி..

இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது