VOC-rare-Picture

சுதந்தரத் தேர் இழுத்த சுந்தரத் தமிழர் வ.உ.சிதம்பரனார்

சுதந்தரத் தேர் இழுத்த சுந்தரத் தமிழர்

தமிழகத்தின் முதன்மையான நாட்டுப்பற்றாளரான வ.உ.சிதம்பரனார், கவிராயர் குடும்பத்தில் பிறந்தவர். வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்பதே வ.உ.சி.யின் சுருக்கத்தின் விரிவாக்கம். ஒரு சிலர் வட்டானம் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை என்பார்கள். 

வட்டானம் என்பதுதான் வ.உ சியின் சொந்த ஊர். இது ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது. வள்ளியப்பன் தாத்தா, உலகநாதன் தந்தை. இருவரின் பெயர்களின் முதல் எழுத்துக்களையே சிதம்பரனார் தம் பெயரின் முன்னெழுத்துக்களாய்க் கொண்டுள்ளார். 

வழக்கறிஞராய் வாழ்க்கையைத் தொடக்கி, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். ஆங்கிலேயனை விரட்டி அடிக்க சுதேசிக்கப்பல் போக்குவரத்தைத் தொடக்கி நடத்தி, சுதேசிக் கொடியை உயர்த்திப் பிடித்த செம்மல் அவர்.

தேசியக் கவி பாரதியார், வ.வே. சுப்பிரமணிய ஐயர் (வ.வே.சு.ஐயர்) வீரத்துறவி சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் இணைந்து விடுதலை வேள்வியை நடத்திய தென்னாட்டுத் திலகர் வ. உ. சிதம்பரனார்.

இரட்டை ஆயுள் தண்டனை

இரணியன் போல் அரசாண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்கள் வ.உ. சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தனர். வெஞ்சிறையில் அவர் செக்கு இழுத்தார் கல் உடைத்தார். செக்கு இழுப்பதைக் கண்ட ஆங்கிலேயச் சிறைக்காவலாளி சிதம்பரனாரைப் பார்த்து “செக்கு இழுக்கிறாயே, எப்படி இருக்கிறது?” எனக் கேட்டான். அதற்குக் கப்பலோட்டிய தமிழர், “நான் என் நாட்டின் சுதந்திர தேரை அல்லவா இழுத்துக்கொண்டிருக்கிறேன்..!” என்றார் பெருமிதத்துடன்,

‘வேளாளன் சிறை புகுந்தான் தமிழகக்தார் 

மன்னனென மீண்டான் என்றே 

கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ 

வருந்தலை என் கேண்மை கோவே!’  

என்று கோவைச் சிறையில் வாடிய வ.உ.சிதம்பரானாருக்குக் கடிதம் அனுப்பினார் பாரதியார்.

‘கப்பலோட்டிய தமிழர்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் நாலரை ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை ஆனார்.

வ.உ.சிதம்பரனார்
வ.உ.சிதம்பரனார்

வறுமை

‘தமிழகத்தின் மன்னன்’ என்று பாரதியாரால் போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனார் கடைசிக் காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார். 

தமது சட்டப்புத்தகத்தை விலைக்கு விற்குமளவிற்கு வறுமையில் இருந்தார். “என்னிடம் நானூறு உரூபா மதிப்புள்ள சட்டப்புத்தகம் இருக்கிறது. அதை யாராவது வாங்க முன்வந்தால் முந்நூறு உரூபாய்க்குத் தருகிறேன்” என்று விளம்பரமே செய்தார்.

வாழ்ந்த காலத்தில் பாரதியாரை எப்படி தமிழகம் கவனிக்கவில்லையோ அதேபோல வ.உ.சிதம்பரனாரையும் தமிழகம் கவனிக்க மறந்துவிட்டது.

“வங்ககவி ஞர்க்கெல்லாம் மாரியான பல்பொருளும் 

தந்தசிதம் பரன் தாழ்ந்தின்று – சந்தமில் வெண் 

பாச்சொல்லி பிச்சைக்கு பாரெல்லாம் ஓடுகிறான்  

நாச்சொல்லும் தோலும் நலிந்து.” 

என வ.உ.சிதம்பரனார் தன் நிலையைப் பாடியதிலிருந்து அறியலாம்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து ஆறாம் ஆண்டு நவம்பர்ப் பதினெட்டாம் நாள் தமது அறுபத்து நான்காம் வயதில் மறைந்தார் வ.உ.சிதம்பரனார். 

விடுதலைக் காற்றை சுவாசிக்கும் முன்பே அவர் மறைந்தார். அப்போது அவர் ஐந்து மாத வீட்டு வாடகைப் பாக்கி வைத்திருந்தார். அந்த அளவுக்கு வறுமையில் வாடி உயிர்விட்டார்.

வ.உ.சிதம்பரனார் இறக்கும் தறுவாயில் தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடச்சொல்லிக் கேட்கவில்லை. பாரதியாரின் தேசபக்திப் பாடல்களைப்பாடச் சொல்லி கேட்ட தேசபக்தர் அவர். 

மேலும், “சுதந்தரத்தைக் காணக் கொடுத்து வைக்காமல் உயிர் விடுகிறேனே..!” என்று ஊனுருகக் கண்ணீர் விட்டு அடிமை இந்தியாவில் கண்மூடியவர்.

துக்கம் கடைப்பிடிக்கவில்லை

வ.உ.சிதம்பரனார் இறந்தபோது ‘திருமந்திரநகர்’ என்ற தூத்துக்குடி தவிர வேறெங்கும் மக்கள் துக்கம் கடைப்பிடிக்கவில்லை என்ற வரலாற்றை வாசிக்கும் போது நம் சுவாசமே நின்று விடும் போல் இருக்கிறது. 

ஆனாலும் இன்று தாய் நாடு அவரைப் பெருமையுடன் பார்க்கிறது. பெருமையுடன் பேசுகிறது. சென்னைத் துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இறந்தவர்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மைதானே. கப்பலோட்டிய தமிழர், தாம் நடத்திய கப்பல் நிறுவனம் நொடித்த போது,

“என் மனமும் என்னுடம்பும் 

என் சுகமும் என் நிலையும் 

என் மனையும் என் மகவும் 

என் பொருளும் என் மனமும்

குன்றி டினும் யான் குன்றேன்!” 

என்று எழுதினார் உறுதிகொண்ட நெஞ்சுக்குச் சொந்தக்காரர்.

வ.உ.சிதம்பரனாருக்கு ஆங்கில அரசாங்கம் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டு அவருடைய தம்பி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அதிர்ச்சிக்கு உள்ளானார். 

புத்தி தடுமாறிப் பித்தராய்த் திரிந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்றாம் ஆண்டு காலமானார்.

வாழ்க வ.உ.சிதம்பரானார் புகழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *