Women Ima Market

நார்த் ஈஸ்ட்-12 விதவைக் கோலத்தில் 8 ஆயிரம் பெண்கள்

இம்பால் மணிப்பூர் மாநிலத்தின் தலைநகராக இருந்தாலும் அதுவொரு சிறிய நகரம்தான். இங்கும் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

இம்பாலில் உலகில் வேறெங்கும் காணமுடியாத பெண்களாலே நடத்தப்படும் ‘இமா கெய்த்தல்’ என்ற பெரிய மார்க்கெட்டை இங்கு மட்டுமே பார்க்கமுடியும். சுற்றுலாப் பயணிகளை இது பெரும் வசியம் செய்கிறது.

அம்மா மார்க்கெட்

மணிப்புரி மொழியில் ‘இமா‘ என்பது அம்மாவையும். ‘கெய்த்தல்’ என்றால் மார்க்கெட்டையும் குறிக்கும். அம்மா மார்க்கெட் என்பதுதான் இதன் பொருள். இங்கு 4,000 பெண்கள் ஒரே வளாகத்தில் 4,000 கடைகளை வைத்திருக்கிறார்கள்.

கடைகளின் உரிமையாளர்களும் நடத்துபவர்களும் பெண்களே. ஆண்கள் பொருட்களை வாங்க மட்டும் இங்கு வரலாம். மற்றபடி எந்தக் கடையையும் அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது.

16-ம் நூற்றாண்டில் இந்த மார்க்கெட் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இது பெண்கள் வணிகம் செய்யும் இடம் மட்டுமல்ல. இங்கு அரசியல் விவாதங்களும் நாட்டு நடப்புகளும் பேசப்படுகின்றன.

1936 மற்றும் 1942-ல் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மணிப்பூரில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றதற்கு இங்கு நடந்த பெண்களின் எழுச்சியே காரணம்.

இந்த மார்க்கெட் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்கள், மீன், மாமிசம் போன்றவை ஒரு பிரிவிலும், ரெடிமேட் ஆடைகள் ஒரு பிரிவிலும் விற்கப்படுகிறது.

பேரம் பேசும் திறமை உங்களுக்கு இருந்தால் மலிவு விலையில் துணிகளை அள்ளலாம். இமா மார்க்கெட் ஒரு வித்தியாசமான அனுபவத்தை நமக்குத் தருகிறது.

'இமா கெய்த்தல்'
‘இமா கெய்த்தல்’

கங்க்லா கோட்டை

அடுத்ததாக நாங்கள் சென்றது கங்க்லா கோட்டை. இது மணிப்பூரின் பழமையான தலைநகரமாகும். மணிப்பூர் மன்னர்கள் வாழ்ந்த இடம். இதில் அரண்மனையும் இருந்துள்ளது.

ஒரு காலத்தில் இங்கு பாய்கின்ற இம்பால் நதியின் இரு கரைகளிலும் கோட்டை இருந்தது. இப்போது அவைகள் அழிந்து, நதியின் மேற்கு கரையில் மட்டும் சிதிலமடைந்த கோட்டையின் சில பகுதிகள் இருக்கின்றன.

அரசர்களுக்கு மட்டும் இந்த இடம் சொந்தமானதாக இல்லை. பழங்குடி இன மக்களுக்கும் இது புனித இடமாக இருக்கிறது. அவர்கள் வழிபடக்கூடிய புனித வழிபாட்டுத்தலங்கள் இங்கு இருக்கின்றன.

16- நூற்றாண்டில் ராஜா காகெம்பா ஆட்சி காலத்தில்தான் கங்க்லா கோட்டைக் கட்டப்பட்டது. மணிப்பூர் மீது படையெடுத்த சீனர்களை வெற்றி கொண்டு அவர்களின் கட்டடக்கலை திறமையால் இந்தக் கோட்டை கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஏழு ஆண்டு பேரழிவு

18-ம் நூற்றாண்டில் பர்மா மன்னர்கள் அடிக்கடி இங்கு வந்து போரிட்டு கோட்டையை சேதப்படுத்தி இருக்கிறார்கள். ஒருமுறை போரிட்ட பர்மிய மன்னர்கள் வெற்றிக் கண்டு ஏழு ஆண்டுகள் மணிப்பூரை ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்த ஆட்சியை ‘ஏழு ஆண்டு பேரழிவு’ என்று வரலாறு சொல்கிறது.

கங்க்லா என்ற சொல்லுக்கு ‘வறண்ட நிலம்’ என்று அர்த்தம். இப்போதும் கூட கோட்டையின் பல பகுதிகள் வறண்டு போய்தான் இருக்கிறது. 237 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தக் கோட்டையின் பெரும் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

சில பகுதிகள் மட்டுமே பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். எல்லா வரலாற்று சின்னங்களையும் ஆக்கிரமிக்கும் காதலர்கள் கூட்டம் இந்தக் கோட்டையையும் விட்டுவைக்கவில்லை. பல இடங்களில் காதல் ஜோடிகளின் தரிசனம்தான் கண்ணில் படுகிறது.

கோட்டைக்கு அடுத்து எங்கள் பயணம் ‘ஷாஹீத் மினார்’ என்ற தியாகிகள் ஸ்தூபியை நோக்கி இருந்தது. நம்மூர் கட்டபொம்மன் போல் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர் மணிப்பூர் மன்னரான யுவராஜ் பீர் திகேந்திரஜீத் சிங் என்பவர்.

கங்க்லா கோட்டை
கங்க்லா கோட்டை

8 ஆயிரம் பெண்கள்

ஆங்கிலேயர்களை மிக துணிச்சலாக எதிர்த்து போரிட்டதில் இவருக்கும் இவரது தளபதி தங்கல் என்பவருக்கும் மிகப் பெரிய பங்கிருக்கிறது. 1891-ல் நடைபெற்ற கடுமையான போரில் பெரும் சேதத்திற்குப் பின்னே ஆங்கிலேயர்களுக்கு மணிப்பூர் வசமானது.

வெற்றி பெற்றதும் ஆங்கிலேயர்கள் மன்னர் யுவ்ராஜையும் தளபதி தங்கலையும் தூக்கிலிட முடிவு செய்தார்கள். அதற்கு முன் அவர்களையும் அவர்களின் மக்களையும் அவமானப்படுத்தும் விதமாக 8,000 பெண்களை வெள்ளை உடையில் விதவைக் கோலத்தில் நிற்கவைத்து அவர்கள் முன்னிலையில் இருவரையும் தூக்கிலிட்டிருக்கிறார்கள்.

கம்பீரமாக பலமான குரலில் ஆங்கிலேயர்களைப் பார்த்து ஏளன சிரிப்பு சிரித்தபடி தளபதி தங்கல் உயிரை விட்டிருக்கிறார். அதனால் இந்த இடத்தை போரில் உயிரிழந்த தியாகிகளுக்கும் சேர்த்து நினைவு சின்னமாக எழுப்பியிருக்கிறார்கள்.

மூன்று தூண்கள் கீழிருந்து மேல்நோக்கி சென்று மேலே இணைகிறது. அதற்கும் மேல் மணிப்பூர் நகரின் சின்னமான மூன்று ட்ராகன்களை அமைத்திருக்கிறார்கள். யுவராஜ் பீர் திகேந்திரஜீத் சிங் பெயரில் இந்த இடத்தில் அழகான பூங்கா அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

-இன்னும் பயணிப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *