மன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..?

கேரளாவில் வரலாறு காணாத பெரு வெள்ளம். 30 பேர் பலி என்ற செய்தி வந்து கொண்டிருந்த போதுதான், எங்கள் பயணம் கேரளாவை நோக்கி இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட பயணம் அது. ரயிலில் முன் பதிவு செய்து, தங்குவதற்கு காட்டேஜும் புக் செய்திருந்தோம். மதுரை ரயில் நிலையத்திலிருந்து எங்களின் பயணம் மயக்கும் மன்றோ தீவு நோக்கி ஆரம்பமானது. இரவு 11.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் ‘புனலூர் பாசஞ்சர்’ ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். என்னதான் பயணத்தை தைரியமாக ஆரமிப்பித்தாலும் உள்ளுக்குள் கேரளா வெள்ளம் பயமுறுத்திக்கொண்டேதான் இருந்தது.

திருவனந்தபுரம் வரை மழையின் அறிகுறி பெரிதாக எதுவும் தெரியவில்லை. திருவனந்தபுரத்தைக் கடந்ததும் மழைப் பொழியத் தொடங்கியது. அந்த மழையுடனே எங்களை கொல்லம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவந்து சேர்த்தது ரயில். சரியாக காலை மணி 9.20. மழை ஆக்ரோஷமாக பொழிவதும், பின் அடங்குவதுமாக போக்குக் காட்டிக்கொண்டே இருந்தது.

மன்றோ தீவு

கொல்லத்திலிருந்து 23 கிமீ தொலைவில் மன்றோ தீவு இருக்கிறது. இந்த தீவு அஷ்டமுடி ஏரியில் அமைந்துள்ளது. மூன்று பக்கம் ஏரியின் நீரும் ஒரு பக்கம் கல்லடா நதியின் நீரும் சூழ்ந்துள்ள அதி அற்புதமான தீவு அது. கொல்லம் ரயில் நிலையத்தில் ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து மன்றோ தீவு நோக்கிப் பயணித்தோம். காருக்கான கட்டணமாக ரூ.500 முதல் 800 வரை கேட்கிறார்கள். சீஸனும் பேரம் பேசும் திறமையும் நமக்கான கட்டணத்தை நிர்ணயிக்கிறது. எங்களுக்கு ஸ்விப்ட் டிசையர் கார் ரூ.600 வாடகைக்கு வந்தது.

மன்றோ தீவுக்கு சாலை வழியாகவும் போகலாம். ரயில் மற்றும் படகுகள் மூலமும் போகலாம். மன்றோ தீவில் ‘மன்றோதுருத்து’ என்றொரு ரயில் நிலையம் உள்ளது. சென்னையிலிருந்து நேரடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தை கடந்து போனாலும் இங்கு நிற்பதில்லை. அதனால் இங்கு வருபவர்கள் நேராக கொல்லம் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து தீவுக்கு செல்வதே நல்லது.

அஷ்டமுடி ஏரி

கொல்லத்திலிருந்து மன்றோ தீவு 23 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. அதுவே, சாலை வழியாக போவதென்றால் 40 கி.மீ.க்கு மேல் பயணிக்க வேண்டும். ஆனால், கார் மற்றும் ஆட்டோவில் பயணித்தால் 25 கி.மீ. தொலைவிலே சென்று விடலாம். 15 கிமீ தொலைவு நமக்கு மிச்சமாகும்.

அதுவொரு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும். ஆரம்பத்தில் நாம் பயணம் செய்யும் வாகனம் அஷ்டமுடி ஏரியை வந்தடையும். அங்கு படகு தயாராக இருக்கும். அந்தப் படகில் மனிதர்கள் மட்டுமல்லாது கார், ஆட்டோ, டூவீலர் என அனைத்தும் ஏறிக்கொள்ளும். கிட்டத்தட்ட ஒரு கிமீ அகலம் கொண்ட தண்ணீரைக் கடக்க படகு மற்றும் ரயில் உதவுகிறது. படகில் பயணித்துக்கொண்டே ரயில் பாலத்தில் செல்லும் ரயிலைப் பார்ப்பது இதமான அனுபவம். அஷ்டமுடி ஏரியில் எங்களது படகு மோட்டார் அதிர்வுடன் மன்றோ தீவு நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.

சற்று தொலைவில் ஏராளமான தென்னை மரங்களுடன் பசுமை போர்த்திய மன்றோ தீவு தெரிந்தது.

பெரும் நீர்ப்பரப்பின் மத்தியில் கொள்ளை அழகுடன் அந்தத் தீவு இருந்தது. படகு தீவின் அருகே செல்ல செல்ல எங்களின் ஆவலும் அதிகரித்தது. இனம் புரியா பரவசம் தொற்றிக்கொண்டது. பத்து நிமிடத்தில் படகு தீவை அடைந்தது. உள்ளூர் மக்கள் இறங்கி வேகமாக சென்றார்கள். வாகனங்களும் வரிசையாக இறங்கின. ஒருவழியாக இந்த அழகான தீவில் கால் வைத்துவிட்டோம்.

இந்தப் பதிவை காணொளியாக காணலாம்..

விலை அதிகம்

எங்களது படகு ஏரியைக் கடந்து தீவை அடைந்ததும் மீண்டும் சாலை வழியாக கார் பயணம் தொடங்கியது. தீவினுள்ளே மூன்று கிமீ பயணித்ததும் நாங்கள் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்த இடம் வந்துவிடுகிறது. சாலையிலிருந்து சற்று உள்ளடங்கிதான் அந்த விடுதி இருந்தது. மிக எளிமையாகவும் அழகுடனும் உருவாக்கப்பட்டிருந்தது. மொத்தம் இரண்டு அறைகள் மட்டுமே இருந்தன. ஓர் அறையின் கட்டணம் ரூ.900. இந்தத் தீவில் ஏராளமான ரிச்சர்ட்ஸ் இருக்கின்றன. நமது பட்ஜெட்டைப் பொறுத்து அங்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இங்கு பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளின் அருகே இப்படி அறைகளை அமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தங்குபவர்களுக்கான உணவுகளை அவர்களே சமைத்து கொடுத்துவிடுகிறார்கள். நல்ல உணவுதான். ஆனால் அதன் விலை மட்டும் நகரத்து உணவு விடுதிகளை விட மிக அதிகமாக இருக்கிறது.

மதிய உணவுக்கான மெனுவை காட்டேஜ் உரிமையாளர் மினுவிடம் கொடுத்துவிட்டு, பயணக் களைப்பு நீங்க குளித்து தயாராகவும் உணவு ரெடியாகவும் சரியாக இருந்தது. கேரளத்து வீட்டுச் சாப்பாடு என்பதுதான் அன்றைய ஸ்பெஷலாக இருந்தது. சாம்பார், ரசம், மோர்க்குழம்பு இரண்டு பொரியல்கள் கேரளத்து பாரம்பரிய மோட்டா அரிசியில் சாதம் என வித்தியாசமாக இருந்தது.

வல்லம்

நாங்கள் தங்கியிருந்த அறைக்கு முன்னே ஒரு சிறிய கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. அதில் வல்லம் என்று அழைக்கப்படும் நீண்ட பாரம்பரிய படகில் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது சென்று கொண்டிருந்தார்கள். இந்தத் தீவின் சிறப்பே இந்தப் படக்குப் பயணம்தான். நாங்களும் அதற்கு சொல்லியிருந்தோம்.

இந்தப் பதிவை காணொளியாக காணலாம்..

எங்களுக்கான வல்லம் மதியம் 2 மணிக்கு வரும் என்று கூறினார் மினு. அதற்காக அறையின் வெளியே காத்திருந்தோம். அப்போது எதிரே இருந்த மரங்களில் விதவிதமான பறவைகள் வந்து அமர்ந்த வண்ணம் இருந்தன. வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகம். பறவைகளை பார்ப்பதற்காகவே இங்கு சுற்றுலா வருபவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான தீனிபோடும் இடம் இது.

எங்களுக்கான வல்லம் வந்துவிட்டது. சரியாக 2 மணிக்கு படகு மூலம் தீவைச் சுற்றும் பயணம் ஆரம்பமானது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் நீடிக்கும் இந்தப் பயணம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இனிமையை எங்களுக்கு தந்தது. படக்குப் பயணம் இனிமையாக அமைய முன்பே பேரம் பேசிக்கொள்ள வேண்டும். முடித்தபின் பணம் கொடுக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அவர்கள் கேட்கும் வாடகையை கொடுக்க வேண்டும். அது வீணான மனஉளைச்சலை ஏற்படுத்திவிடும்.

இதில் படகோட்டியைவிட விடுதி நடத்துபவர்கள் அதிகமான பணத்தை நம்மிடம் வசூல் செய்து விடுவார்கள். அதனால் ஆயிரம் ரூபாயை அதிகபட்ச கட்டணமாக வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு மேல் கொடுக்க வேண்டாம். அவர்கள் நம்மிடம் இரண்டாயிரம் மூவாயிரம் என்று நோக்கம் போல் கட்டணம் கேட்பார்கள். அதனால் முதலில் கட்டணத்தை நிர்ணயித்துவிட்டு படக்குப் பயணம் மேற்கொள்வது நல்லது. பெரும்பாலும் ஒருவர்தான் இந்தப் படகை இயக்குவார். கடினமான வேலைதான். ஆனால் அதற்கான ஊதியம் இவர்களைவிட விடுதி நடத்துபவர்களுக்கே அதிகமாக போகிறது.

சிறிய கால்வாய்கள்

சரி, நாம் நமது வேலைக்கு வருவோம். இந்த தீவு முழுவதும் சிறிய கால்வாய்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. இந்தக் கால்வாய்கள்தான் இந்தத் தீவை இந்தியாவின் வெனீஸ் என்று சொல்லவைக்கின்றன. இதில் பாரம்பரிய முறையில் நீண்ட மூங்கில் கம்புகளைக் கொண்டு படகுகளை செலுத்துகிறார்கள். இந்தக் கால்வாய் வழியாகவே தீவைச் சுற்றிக்காண்பிக்கிறார்கள். மோட்டார் படகுகள் இயக்கப்படுவதில்லை.  இது வேறெங்கும் கிடைக்காத வித்தியாசமான அனுபவம்.

மன்றோ தீவு இயற்கை வளங்களைக் கொண்ட அற்புதமான எட்டு குட்டித் தீவுகளைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 9 அடி உயரத்தில் இருக்கிறது. இது கடவுளின் சொந்த பூமி என்று அழைக்கப்படுகிற கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகருக்கு அருகில் 23 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ‘கொல்லம் போயால் பின்னே இல்லம் வேண்டா’ என்பது மலையாளத்தில் பிரச்சித்திப் பெற்ற பழமொழி. கொல்லம் அத்தனை அழகையும், ருசியான உணவையும் வைத்திருப்பதால் இப்படியொரு வழக்கு உருவாகியிருக்கிறது. அதன் இயற்கை அழகை பார்க்கும்போது அனுபவித்து சொல்லிய சொல்லாகத்தான் அது இருக்கிறது. அதிகமான சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் இடமாக மன்றோ தீவு மாறியுள்ளது.

கொல்லம்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து கொல்லம் நகரத்திற்கு ரயில் வசதி உள்ளது. சிறந்த சாலைப்போக்குவரத்தும் உண்டு. விமானத்தில் வருபவர்கள் திருவனந்தபுரம் (51 கிமீ தொலைவு) வந்து அங்கிருந்து சாலை வழியாகவோ, ரயில் மூலமாகவோ கொல்லம் வந்தடையலாம். இப்படி போக்குவரத்து வசதிகள் தாராளமாக இருப்பதால்  மன்றோ தீவு வருவது சுலபமான ஒன்றுதான்.

வணிகம் சாராமல் வர்த்தகம் பாதிக்காத இயற்கை அழகு நிறைந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லும் ஆர்வம் சமீபகாலங்களில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த விருப்பம் கொண்டவர்களுக்கு இந்த மன்றோ தீவு நல்ல சாய்ஸ்! இப்படியொரு இயற்கை அழகு நமக்கு அருகிலேயே (கேரளா) இருப்பது நாம் செய்த பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுவாக அடர்த்தியான பசுமையையும் இதமான குளுமையையும் அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் மலைவாசஸ்தலங்களுக்குதான் போகவேண்டும். உயரமான இடங்களில் ஒரு சிக்கல் இருக்கிறது. அங்கு ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அதனால் இதய நோய் உள்ளவர்களுக்கும் வயதானவர்களுக்கும் அது பெரும் சங்கடத்தைக் கொடுக்கும். அப்படி எந்த தொந்தரவும் இல்லாமல் அவர்களும் இயற்கையை அனுபவிக்க வேண்டுமென்றால் மன்றோ தீவு மிகச் சிறந்த இடம்.

கர்னல் ஜான் மன்றோ

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக உயர் பதவியில் இருந்தவர் கர்னல் ஜான் மன்றோ என்ற ஆங்கிலேயர். இவர் பிரிட்டிஷ் அரசால் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பில் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டவர். அவரின் நினைவாக இந்த தீவுக்கு மன்றோ என்ற பெயர் வந்தது. ஆரம்பத்தில் இது டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. அப்படி ஆதிக்கத்தில் இருந்தபோது அதாவது 1878-ம் ஆண்டு இங்கு ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. கேரளக் கட்டடக்கலையும், டச்சு கட்டடங்களையும் இணைந்து செந்நிற கற்களால் கட்டப்பட்ட தேவாலயம் அது. கேரளாவில் இருக்கும் பழமையான தேவாலயங்களில் இதுவும் ஒன்று. அதன்பின் கிழக்கிந்திய கம்பெனி இந்த தீவை கைப்பற்றியது.

13 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்தத் தீவில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், தீவில் ஆள்நடமாட்டமே இல்லை. வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தென்படுகின்றன. அதனால் மக்கள் தொகை குறைவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இங்கு ஏராளமான தென்னந்தோப்புகள் இருக்கின்றன. அதனால் தேங்காய் சார்ந்த தொழில்கள் அதிகமாக நடைபெறுகின்றன. கயிறு திரித்தல், மீன் வளர்ப்பு, சுற்றுலா போன்றவை முக்கிய தொழிலாக உள்ளன.

இந்தப் படக்குப் பயணத்தில் செல்லும்போது நம் காதினுள் ‘அமைதியான நதியினிலே ஓடம்’ என்ற பழைய பாடல்தான் ஒலிக்கிறது. அவ்வளவுக்கு அமைதியாக இருக்கிறது இந்த பயணம். வல்லம் என்று அழைக்கப்படும் இந்தப் படகு பலா மரக்கட்டைகள் கொண்டு செய்யப்பட்டதாகும். தென்னை நாரினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். அதன்பிறகு வேகவைக்கப்பட்ட முந்திரிக் கொட்டைகளில் இருந்து தயாரிக்கும் ஒருவித கருப்பு பசைபோன்ற திரவத்தால் பூசப்படுகிறது. அதனால்தான் இந்த படகுகள் எல்லாம் கருப்பு நிறத்தில் இருக்கின்றன. ஒரு வல்லம் 30 ஆண்டுகள் வரை உழைக்கும்.

இந்தப் படகில் நீரில் பயணம் செய்வது ஒரு அசாத்திய அனுபவம். ஒரு வெள்ளத்தில் 6 முதல் 10 பேர் வரை பயணிக்கலாம். இந்தப் பயணம் கிட்டத்தட்ட 6 கிமீ வரை செல்கிறது. செல்லும் வழியெங்கும் தென்னை மரங்கள் நம்முடனே வருகின்றன. திரும்பும் பக்கமெல்லாம் பசுமை கண்களுக்கு விருந்தளிக்கின்றன. கரையின் இரண்டு பக்கமும் வளர்ந்து நிற்கும் மரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து தோரணம் அமைத்தபடி நம்மை வரவேற்கின்றன. இடையிடையே சிறிய பாலங்கள் குறுக்கிடுகின்றன. அந்தப் பாலங்கள் சிலவற்றிலும் அழகு மிளிர்கிறது.

அழகிய கோயில்கள்

கேரளத்தின் கிராம வாழ்க்கையை படகிலிருந்து பயணித்தபடி பார்க்கலாம். மூலசந்தாரா கோயில், கல்லுவிலா கோயில் இந்தத் தீவின் அழகிய கோயில்களுக்கு எடுத்துக்காட்டு. இப்படியே இயற்கை ரசித்தபடி தீவை விட்டு வெளியே அஷ்டமுடி ஏரிக்கு வந்துவிடுகிறோம். ஏரி பிரமாண்டமாக ஒரு சிறிய கடல் போல் காட்சியளிக்கிறது. மேகமூட்டமில்லாத மாலை நேரத்தில் சூரியன் மறையும் அழகை இங்கிருந்தது பார்க்கலாம்.

இந்த எரிக்கருகே ஒரு ரிசார்ட் உள்ளது. அங்கு எங்களின் படகு நின்றது. சிறிய இளைப்பாறலாக வடை, தேநீர் சாப்பிட்டு மீண்டும் பயணம் மேற்கொண்டோம். நமக்கு ஆர்வம் இருந்தால் நாமும் துடுப்பு போடலாம். சுற்றுலாப் பயணிகள் துடுப்பு போடுவது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.

மூழ்கும் அபாயம்

புவி வெப்பமயமாதாலால் ஏற்படும் அச்சுறுத்தல் இந்த தீவுவையும் விட்டுவைக்கவில்லை. மாலத்தீவு போலவே இந்த மன்றோ தீவும் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி வருகிறது. இப்படியொரு இடத்தில் வாழமுடியாத என்று இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏங்கிக்கொண்டிருக்க, இங்கிருக்கும் மக்களோ வீடுகளை காலி செய்து வேறிடங்களுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். 2500 குடும்பங்கள் வாழ்ந்த இந்த தீவில் தற்போது 2,000 குடும்பங்களே இருக்கின்றன. இந்த மூழ்கும் அபாயம் சுனாமிக்குப் பின்தான் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இந்த தீவில் வசிக்கும் ஆண்களுக்கு வெளியிலிருந்து பெண் கொடுக்கவே தயங்குகிறார்கள் என்பதுதான் இதன் பெரும் சோகம். எல்லா இயற்கையும் அழிவது போலவே இந்த தீவும் மெதுவாக மூழ்கி வருகிறது. இந்த மூழ்கும் சொர்க்கத்தை காப்பாற்ற அரசும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்குள் நீங்களும் ஒருமுறை பார்த்துவிட்டு வந்துவிடுங்களேன்.

ஆசிரியர் பற்றி..

இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது