இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வேக்களில் ஒன்று. ஆண்டுக்கு 500 கோடி பயணிகளையும், ஒரு நாளைக்கு 14,444 பயணிகள் ரயிலையும் இயக்கும் பிரமாண்ட சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டவர் ரோலண்ட் மெக்டொனால்ட் ஸ்டீவன்சன் என்ற பிரிட்டிஷ் பொறியாளர். 1808-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி லண்டனில் பிறந்தவர். 1843-ல் குடும்பத்தோடு இந்தியா வந்தார்.
ஸ்டீவன்சன்
இந்தியாவில் ரயிலை இயங்க வைக்கவேண்டும் என்பது அவரின் தீவீர கனவு. ஆனால், இந்திய மக்களுக்கு ரயில் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. அதோடு அன்றைக்கு ரயில்வே துறை தனியார் வசமே இருந்தது. இந்தியா போன்ற கரடுமுரடான நில அமைப்பு கொண்ட ஒரு நாட்டில் ரயிலுக்காக முதலீடு செய்ய யார் முன்வருவார்கள்? இப்படி சிக்கல்கள் பல இருந்தாலும் தனது கனவில் தீவிரமாக இருந்தார் ஸ்டீவன்சன்.
அதற்கு ஏற்றாற் போல் ‘தி இங்கிலீஸ்மேன்’ என்ற ஆங்கில நாளிதழில் அவருக்கு ஆசிரியராக பொறுப்பு கிடைத்தது. இதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். ரயில்களைப் பற்றிய விதவிதமான கட்டுரைகளை தினமும் எழுதினார். இந்திய ரயில்வேயில் முதலீடு செய்வதால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பது போன்ற கட்டுரைகள் முதலீட்டாளர்களை இந்தியா பக்கம் இழுத்தது. இந்தக் கட்டுரைகளை இங்கிலாந்து நாளிதழ்களிலும் வரும்படி செய்தார்.
இதன் விளைவாக 1845-ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேய அரசு கிழக்கிந்திய ரயில்வே கம்பெனியை ஆரம்பித்தது. அதனுடைய நிர்வாக இயக்குனராக ஸ்டீவன்சனை நியமித்தது. அதன்பின் இவர் எடுத்த முயற்சிகளை பற்றி எழுத பெரிய புத்தகமே போடவேண்டும். அத்தனை சிரமப்பட்டிருக்கிறார் அந்த மனிதர்.
ஸ்டீவன்சன் உடல் பலவீனமானவர். ஆனாலும் ஐந்து ஆட்கள் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மனவலிமை மிக்கவர். இந்திய மொழிகள் எதுவும் தெரியாதவர். எப்போதும் அலுவலகமே கதியென்று கிடப்பவர். இருப்புப் பாதை அமைக்கும் பணியில் அரசுடனும் நில உரிமையாளர்களுடனும், ஒப்பந்தகாரர்களுடனும் இவர் சந்தித்த பிரச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வேறு யாரவது இது போன்ற சிக்கல்களை சந்தித்திருந்தால் எப்போதோ வேலையை விட்டு ஓடிப்போயிருப்பார்கள். ஆனால், ஸ்டீவன்சனோ கோபங்களுக்கும் மனசோர்வுக்கும் அப்பாற்பட்டவர். அளவுகடந்த பொறுமை கொண்டவர். முடியாது என்ற வார்த்தையே அவரது அகராதியில் கிடையாது. இப்படி பல இன்னல்களுக்கு இடையே சாதித்துக்காட்டியவர் ஸ்டீவன்சன். இவர் இல்லாமல் இந்திய ரயில்வே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
சரி, இப்போது முதல் ரயில் ஒடியபோது என்னென்ன நடந்தது என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
அது 1853-ம் வருடம் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி.
மும்பையில் உள்ள போரி பந்தர் என்ற ரயில் நிலையம் விழா கோலம் பூண்டிருந்தது. இந்த ரயில் நிலையத்தின் தற்போதைய பெயர் சத்ரபதி சிவாஜி மஹராஜ் டெர்மினஸ் என்பது. இன்றைக்கு மும்பை மாநகரின் மாபெரும் அடையாளமாக திகழும் இந்த ரயில் நிலையம் அன்று சாதாரணமாக மிகச் சிறியதாக இருந்தது.
நூறு அடி நீளத்திற்குத்தான் நடைமேடை கட்டப்பட்டிருந்தது. முழுமையாக முடிவடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் நிலை இருந்தது. நடைமேடையில் மையப்பகுதியில் வண்ணமயமான தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. வெயில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்தது. நடைமேடை முழுவதும் துணித்தோரணங்களும், கொடித்தோரணங்களும் மிளிர்ந்தன. நடைமேடைக்கு எதிரே 18 கொடிக்கம்பங்கள் இருந்தன. அவற்றில் வண்ண வண்ண கொடிகள் பறந்தன. ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடிதான் மிக உயரத்தில் பறந்தது.
கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே
‘கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே‘ என்ற நிறுவனம்தான் இந்தப் பகுதியில் ரயில்பாதை அமைக்கவும், இயக்கவும் அனுமதி வாங்கியிருந்தது. போரி பந்தர் ரயில் நிலையத்தின் டிராபிக் மேலாளர் ரோச் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பல்லாண்டுகால உழைப்பு அங்கீகாரம் பெறும் வரலாற்று சிறப்புமிக்க நாளல்லவா..! அதனால் அவர் மிகுந்த பதற்றத்தோடு இருந்தார்.
மதியம் 1 மணி.
நடைமேடையில் 14 பயணிகள் ரயில் பெட்டிகளும் அதனை இழுத்துச் செல்ல மூன்று நீராவி என்ஜின்களும் வெள்ளோட்டத்துக்கு தயாராக நின்றன. முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பு கலந்த கலவையாக ரயில் பெட்டிகள் இருந்தன. நீராவி என்ஜின்களுக்கு சிந்து, சாஹிப், சுல்தான் என்று பெயரிடப்பட்டிருந்தது.
மும்பை மாநகரில் இருந்த முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவராக ரயில் நிலைய நடைமேடைக்கு வந்துகொண்டிருந்தனர். அவர்களை வரவேற்று இருக்கைகளில் அமரவைத்துக்கொண்டிருந்தார் ரோச்.
முப்படை தளபதிகள், நீதிபதிகள், ஆங்கிலேய கனவான்களும் சீமாட்டிகளும், முதலீட்டாளர்களும் வந்திருந்தனர். பெண்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் ஆங்கிலேய சீமாட்டிகளை ரோச் மற்றும் கேப்டன் பார் இருவரும் சேர்ந்து அவரவர்களின் தகுதிக்கேற்ப ரயில் பெட்டி இருக்கையில் அமர வைத்தனர். ஆண்களை அவர்களுக்கு பொருத்தமான இருக்கையில் அமர்ந்துகொள்ளுமாறு ரோச் கேட்டுக்கொண்டார்.
ரயில் பெட்டி இருக்கைகள் நிரம்பின. நடைமேடை காலியானது. இந்த ரயில் பெட்டிகளில் ஒன்று மட்டும் மிகவும் விஷேசமானது. அந்தப் பெட்டியில் ‘கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில் கம்பெனி’யின் இயக்குனர்களும் தலைமை நீதிபதியும் அமர்ந்திருந்தனர். மொத்தமாக 400 பேர் அந்த முதல் ரயிலில் பயணம் செய்ய தயாராக இருந்தனர்.
மிகச்சரியாக மதியம் 3.30 மணிக்கு மும்பையின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த பீரங்கிகள் முழங்கின. வரலாற்று சிறப்பு மிக்க இந்தியாவின் முதல் ரயில் பயணத்துக்கு ஆங்கிலேய அரசு கொடுத்த மரியாதை அது. பார்வையாளர்கள் ஆரவாரக் கூச்சலிட்டனர். பார்வையாளர்களில் உள்ளூர் மக்களும், சிந்து, காபூல், மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா, அரேபியா, ஆப்பிரிக்கா, கிழக்கு கடற்கரை நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினரும் இருந்ததனர்.
ரயிலை தெளிவாக பார்க்க வேண்டும் என்பதற்காக சுவர்கள் மீதும், மரக்கிளைகள், கோயில்கள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றின் உச்சியில் எல்லாம் மக்கள் ஏறி நின்று பயத்தோடும் பதட்டத்தோடும் முதல் ரயில் வெள்ளோட்டத்தை பார்க்கத் தயாராய் இருந்தார்கள்.
புறப்பட்டது முதல் ரயில்
சரியாக 3.35 மணிக்கு நீராவி எஞ்சின் பெரிதாக விசிலை எழுப்பி, வெண்மைநிற புகையை கக்கியபடி புறப்பட்டது. பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களின் உணர்வுகள் பலவிதமாக இருந்தன. சிலர் பயத்தில் திக்குமுக்காடி வாயடைத்து நின்றார்கள். சிலர் வியப்பின் உச்சிக்கு சென்று கூச்சலிட்டார்கள். பெரும்பாலோனோர் கைத்தட்டி ஆர்பரித்தார்கள். ரயிலுக்குள் இருப்பவர்களால் இந்த உணர்வு வெளிப்பாடுகளை காண முடியவில்லை. ஆனால், அவர்களும் இனம் புரியாத பரவச நிலையில் இருந்தனர்.
முதல் ரயில் பயணம் முழுவதும் திட்டமிட்டபடியே நடந்தது. நீராவி எஞ்சின் என்பதால் சிறிது தூரத்திற்கு ஒருமுறை நீரை நிரப்ப வேண்டியிருந்தது. அதற்காக சையன் என்ற ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. நீராவி என்ஜின்களுக்கு நீர் நிரப்பப்பட்டது. புத்தம் புதிய எஞ்சின்கள் என்பதால் சக்கரங்கள் மிகுந்த இறுக்கத்துடன் இருந்தன. அந்த இறுக்கத்தை குறைப்பதற்காக கிரீஸ் பூசப்பட்டது. பின் ரயில் புறப்பட்டது.
ரயில் அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் சென்றது. போரி பந்தருக்கும் ‘தானே’க்கும் இடையே 34 கிமீ தொலைவு இருந்தது. இந்த தொலைவை கடக்க 55 நிமிடங்களை எடுத்துக்கொண்டது.
தானே ரயில் நிலையத்தை அடைவதற்கு ஒரு மைல் தொலைவு இருக்கும்போதே ரயில் பாதையின் இரண்டு பக்கமும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்தக் கூட்டத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். தானே ரயில் நிலையத்தை ரயில் வந்தடைந்தது.
நடைமேடையில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. ரயிலில் பயணித்து வந்தவர்களை பந்தலின் கீழ் போடப்பட்டிருந்த இருக்கையில் அமரவைத்தனர். அவர்களுக்கு மாலை சிற்றுண்டியோடு தேநீரும் தரப்பட்டது.
அதன்பின் ரயில் தொடக்க விழா கூட்டம் தொடங்கியது. பெனின்சுலார் ரயில்வே கம்பெனியின் மூத்த இயக்குனர் ஸ்டீவன்சன் தலைமை தாங்கினார். மேடையில் தலைமை நீதிபதி சர் வில்லியம் யார்ட்லி, இந்திய கடற்படைத் தலைவர் சர் ஹென்றி லாக்கே ஆகியோர் இருந்தனர்.
ஆணவ வெற்றியல்ல
அந்த மேடையில் கம்பீரமான குரலில் தலைமை நீதிபதி சர் வில்லியம் யார்ட்லி இப்படி பேசினார்.
“ஒரு நாடு மற்றோர் நாட்டின் மீதோ, ஓரினம் மற்றோர் இனத்தின் மீதோ, ஒரு மனிதன் தனது சக மனிதன் மீதோ கொள்ளும் ஆணவ வெற்றியல்ல பயணிகள் ரயில் திட்ட வெற்றி. மாறாக பொறுமை, மனந்தளராமை போன்றவற்றுக்கு கிடைத்த வெற்றி.
தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்து செலவுகளுக்கும் திட்டநிதி ஒதுக்கப்பட்டது. நில அளவை, ரயில் பாதை அமைத்தல், பாலங்கள் அமைத்தல், ரயில் பெட்டிகள், நீராவி எஞ்சின்கள், இயந்திர உபகரணங்கள் போன்ற அனைத்தும் இதில் அடங்கும். அப்படி திட்டமிட்ட செலவில் 20 சதவீதம் மீதப்பட்டுள்ளது. பணியும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்தது.
இந்த சாதனைகள் உலகின் வேறெந்த நாட்டில் அடையப் பெற்றிருந்தாலும், அவர்கள் தங்களைத் தாங்களே சிலாகித்து வெகுவாய் பாராட்டிக்கொள்வார்கள். தாமதமும், தள்ளிப்போடுதலும் இந்தியர்களின் குணநலன்கள். அப்படி இருக்கையில் முன்னனுபமில்லாத ரயில்வே திட்டத்தில் அளப்பரிய இந்த சாதனைகள் சாத்தியப்பட்டுள்ளன. எனவே இந்த திட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தலைநிமிர்த்தி பீடுநடை போடலாம்!
எல்லாவற்றுக்கும் மேலாக, 10 ஆயிரம் கணக்கில் இந்தியர்கள் இந்த திட்டத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் பணிவு, அறிவாற்றல், தொடர் மற்றும் கடின உழைப்பு, விடாமுயற்சி போன்ற குணாதிசியங்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பருவ வயதைத் தாண்டாதவர்கள். வேறு வேலைகளில் ஊதியம் பெறுவதைப் போல் நான்கைந்து மடங்கு கூடுதலாய் இங்கு ஊதியம் பெறுகின்றனர். இத்தகு உயர் ஊதியம் ஆள்பற்றாக்குறையின் விளைவல்ல. மாறாக நேர்மையான கடின உழைப்பால், வேலையை விரைவில் கற்றுக்கொள்ளும் திறனால், உற்பத்தித் திறனைக் கூட்டுவதால் கிடைத்த ஊதிய உயர்வே!” என்றார்.
‘ஊக்கமூட்டிடும் மிகப்பெரிய புத்தொளி’
ரயில் திட்டத்தின் தலைமை பொறியாளர் பெர்க்லி, “நாங்கள் பயணம் செய்து வந்தபோது ரயில் பாதை எங்கும் கூடியிருந்த மக்கள் எங்களுக்கு ஓர் அரிய உண்மையை உணர்த்தினார். அது 400-க்கும் மேற்பட்ட பயணிகளை ஒரே நேரத்தில் போரி பந்தரில் இருந்து தானேக்கு மிகக்குறைந்த பயண நேரத்தில் அழைத்துச் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது ரயில் என்பதுதான் அந்த உண்மை.
இந்த உண்மை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவ வேண்டும். இதன் மூலம் இது போன்ற ரயில்வே சேவைத் திட்டம் செயல்படுத்தும் முனைப்பு மக்களிடையே கூடும். இதற்காக பாம்பே – தானே ரயில் திட்டத்தில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கடமை எனக்குள்ளது.
இத் திட்டத்தை செயல்படுத்த தேவைக்கும் அதிகமாய் உள்ளூர் தொழிலாளர்கள் கிடைத்தார்கள். இந்த தொழிலாளர்களை தொடர்ந்து முழு விழிப்புடன் கண்காணித்து, கற்றுக் கொடுப்பதற்கு தேவையான ஐரோப்பிய மேற்பார்வையாளர்களையும் எங்களால் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. அவர்களுக்கு இந்திய தட்பவெப்பநிலை பாதகமாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் களத்தில் பணிபுரிந்தார்கள்.
‘ஊக்கமூட்டிடும் மிகப்பெரிய புத்தொளி’ என்று இந்திய சமூகத்தின் தாழ்நிலை மக்களைச் சொல்லலாம். இவர்களிடம் மூடநம்பிக்கைகள் நிறைந்திருக்கலாம். ஆனால், இவர்கள் திறமையான தொழில் திறன்மிக்க கலைஞர்கள்.” என்று ஏற்புரை வழங்கினார் பெர்க்லி.
இன்ப இரவு
தொடக்கவிழா கூட்டம் மாலை 6 மணிக்கு முடிந்தது. விருந்தினர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் ரயில் போரி பந்தர் நோக்கி புறப்பட்டது. 40 நிமிட நேரத்தில் வந்து சேர்ந்தது. ரயில் நிலையத்தில் கூடியிருந்த பார்வையாளர்கள் கூட்டம் ரயிலிலிருந்து இறங்கிய விருந்தினர்களை கைத்தட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றது.
பொதுவாக இந்திய மக்களுடன் ஐரோப்பியர்களும், அதிகார வர்க்கத்தினரும் பழகுவது அந்தக்காலத்தில் தவிக்கப்பட வேண்டிய வழக்கமாகவே இருந்தது. ஆனால், அன்று அந்தநிலை மாறியிருந்தது. ரயிலில் பயணித்த அனைத்து பயணிகளும் உள்ளூர் மக்களிடம் மகிழ்ச்சியுடன் பழகினர். தங்களின் உயர்நிலையிலிருந்து சற்றே கீழிறங்கி சாமானியர்களுடன் நட்பை பரிமாறிக்கொள்ள ரயிலில் பயணித்த கிளர்ச்சியே காரணமாக இருந்தது என்றால் அது மிகையில்லை.
சுருக்கமாகச் சொன்னால், அந்த ஏப்ரல் மாதம் 16-ம் நாள் சனிக்கிழமை இரவு இன்ப இரவாகவே மும்பை நகருக்கு அமைந்தது.
ஆனால், இந்த ரயில் தொடக்கம் அடுத்த பல ஆண்டுகள் இந்தியாவின் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து இங்கிலாந்தில் குவித்திட வழிவகுக்கும் என்பது அந்த சாமானிய மக்களுக்கு தெரியவில்லை. அதனால், ஆங்கிலேய ஏகாதியபத்தியத்திற்கு அந்த ரயில் வெள்ளோட்டம் என்பது தங்கள் படைபலத்தை பன்மடங்கு பெருகியதற்கு ஒப்பான மகிழ்ச்சியை தந்தது. இப்படித்தான் இந்தியாவின் முதல் ரயிலோட்டம் பல உணர்வுகளையும் வியப்பையும் பிரமிப்பையும் உள்ளடக்கிய ஒன்றாக இருந்தது.
ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.