Tirunayinarkurichi

ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை 2: திருவள்ளுவர் பெரியார் வைத்த வில்லங்க தலைப்பு

அகத்தியர், தொல்காப்பியர், அதங்கோட்டு ஆசான், திருவள்ளுவர், அவ்வையார், நம்மாழ்வார் உட்பட பல புலவர்கள் குமரி மண்ணைச் சார்ந்தவர்கள் என்று ஆதாரங்களோடு விளக்கிப் பேச 1981-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. புண்ணிய பாரதம் என்ற தலைப்பில் பாரதநாட்டின் ஆன்மிகச் சிறப்புகளை வெளியிட, 1983ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற அனைத்துலக கலாசார மாநாட்டில் எனக்கு வாய்ப்புத் தந்தனர். 


திருவள்ளுவர் ஓர் உலக மகாகவிஞர்

திருவள்ளுவர் பிறந்தது குமரி மாவட்டத்திலுள்ள திருநாயினார் குறிச்சி என்ற கருத்தை வெளியிட 1989ஆம் ஆண்டு மொரீஷியஸ் தீவில் நடைபெற்ற ஏழாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில் எடுத்துரைக்க அரிய வாய்ப்புக் கிடைத்தது. 1990ஆம் ஆண்டு தென்கொரியாவில் சியோலில் நடைபெற்ற அனைத்துலக கவிஞர்கள் மாநாட்டில் ‘திருவள்ளுவர் ஓர் உலக மகாகவிஞர்’ என்ற தலைப்பில் உரையாற்ற எனக்கு அரியதொரு வாய்ப்பைத் தந்தனர்.

குமரி மாவட்டத்திலுள்ள அடிமுறை என்ற ‘தெக்கன் களரி’தான் ஜப்பான் நாடு சென்று ‘கராத்தே’யாக மாறியது என்ற உண்மையை வெளியிட 1995-ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் வாய்ப்புக் கிடைத்தது. படக்காட்சியுடன் இந்தக் கண்டுபிடிப்பை அந்த உலக அரங்கிலே நான் உறுதி செய்தேன்.

பெரியார் வைத்த வில்லங்க தலைப்பு
திருநாயினார் குறிச்சி கோயில் படம்
திருநாயினார் குறிச்சி கோயில் படம் : எஸ்.பி.செந்தில்குமார்

நான் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவன் வரலாற்று ஆய்வாளனாக மாறியது எவ்வாறு என்பதை இங்கே நான் கூறியே ஆக வேண்டும். அது எனது சுயபுராணமாக இருக்கலாம். அது உங்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பது திண்ணம்.

ஆய்வுத்துறையில் நான் ஈடுபட்டபோது, எனக்கு வயது 15. ‘நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதும் நன்றே’ என்பது ஒளவையார் திருவாக்கு. அந்த திருவாக்கு எனது வாழ்க்கையில் பலித்துவிட்டது. சிறு வயதிலிருந்தே பெரியவர்களைச் சந்தித்து, உரையாடி அவர்களது கையெழுத்தைப் பெற்று அவற்றை பத்திரமாக பாதுகாப்பது எனது பொழுதுபோக்காக இருந்தது. 

மலையாள மொழி

அந்த நிலையில் கவிமணியவர்கள் புத்தேரியில் இருந்ததால் அவரை அடிக்கடிப் பார்த்து உரையாடுவது எனது வழக்கம். அவ்வாறு சந்திக்கும் நேரத்தில் 1949-ஆம் ஆண்டு எனது 15-வது வயதில் தமிழும் மலையாளமும் என்ற தலைப்பில் நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை பாராட்டியதுடன் ஒரு பத்திரிகைக்கு அனுப்பினால் அதை பிரசுரிப்பார்கள் என்று என்னிடம் ஆலோசனை கூறினார். 

அக்கட்டுரையில் தமிழில் வழக்கொழிந்து போன படிஞாயிறு (மேற்கு), அங்காடி (சந்தை), வெள்ளம் (தண்ணீர்), மடி (சோம்பல்), அகம், புறம், இருக்கை கிடக்கை, விளி போன்ற எத்தனையோ அருஞ்சொற்கள் பெட்டிக்குள் வைக்கப்பட்ட மாணிக்கம் போல மலையாள மொழியில் இன்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன என்பதையும், மலையாள மொழியிலிருந்து வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டால் அது செந்தமிழாக இருக்கும்.

கல்குளம் வட்டம் மணலிக்கரை ஆழ்வார்கோயில் தூண் ஒன்றில் வட்டெழுத்துக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள பற்று வாங்ஙி, வைச்சு, பிடிப்பிச்சு, பிரிஞ்ஞா, ஒழிஞ்ஞா போன்ற சொற்களைவைத்து மலையாள மொழி குமரி மண்ணில் 13-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், அப்போது அம்மொழி தமிழை ஒட்டியே இருந்தது என்றும், அந்நேரத்தில் மலையாளத்தில் எழுத்துக்கள் தோன்றவில்லை என்றும் பல அரிய கண்டுபிடிப்புகள் அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்தன.

ஆரியன் தமிழுக்கு செய்த கொடுமை

கவிமணியின் அறிவுரைப்படி நான் எழுதிய கட்டுரையை மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘தமிழ்நாடு’ நாளிதழுக்கு அனுப்பினேன். அனுப்பிய ஒரு வாரத்தில் அக்கட்டுரை ‘தமிழ்நாடு’ ஞாயிறு மலரில் வெளிவந்தது. பின்னர் அது சிங்கப்பூரிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘தமிழ் முரசில்’ வெளிவந்தது.

பின்னர் அதனை ஈ.வெ.ரா. பெரியார் தமது ‘விடுதலை’ நாளிதழில் வெளியிட்டார். ஆனால், பெரியார் எனது கட்டுரைக்குக் கொடுத்த தலைப்பு ‘ஆரியன் தமிழுக்கு செய்த கொடுமை’ என்பதாகும். இவ்வாறு எனது முதல் கட்டுரை மூன்று பத்திரிகைகளில் வெளிவந்தது எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. இவற்றிற்கெல்லாம் மூலக்காரணம் கவிமணி அவர்களின் ஆசியும் இறைவனின் அருளும்தான். கவிமணி எனக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தார். 

-தொடரும்  

One Reply to “ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை 2: திருவள்ளுவர் பெரியார் வைத்த வில்லங்க தலைப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *