Warship

போர்க் கப்பலை பார்த்து வியந்த அந்த காலத்துப் பெண்ணின் அனுபவம்

காலப்பெட்டகம் என்ற இந்தப் பகுதியில் மிகப் பழமையான படைப்புகள் இடம் பெரும். முதல் படைப்பாக 1893-ம் ஆண்டு சென்னைக்கு வந்திருந்த போர்க்கப்பலை முதன் முதலாகப் பார்த்த பெண் ஒருவர், தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். ‘விவேக சிந்தாமணி’ என்ற பத்திரிகையில் பிரசுரமான படைப்பு. வாருங்கள் நூற்றாண்டு கடந்து பின்னோக்கி செல்வோம்.

ஹிந்து ஜனாஸார சீர்திருத்த சங்கத்தார் ஏற்பாடு செய்ததும், பெண்கள் புத்தி பிரயோஜனத்திற்கானதும் ஆகிய முதல் கூட்டத்திலே பிரசங்கத்தைக் கேட்ட பிறகு ஆங்கிலேயர் தேசத்துக்குப் பிரயாணம் போவதற்கு முதல் அவசியமான புகைக் கப்பல் பார்க்க வேண்டும் என்கிற ஆசை உண்டாவது வெகு சாதாரணம்.

சண்டைக் கப்பல்

அப்படியே போன மாதம் இரண்டாம் தேதி (ஜூலை, 1893) இங்கே சென்னை துறைமுகத்தில் ஒரு சண்டைக் கப்பல் வந்திருப்பதாக தெரிய வந்தது. எங்கள் வீட்டுப் புருஷாள் அது பார்க்கும் பொருட்டு இன்னும் பல சினேகித, சினேகிதிகளுடன் என்னையும் அழைத்துக் கொண்டு போனார்கள். இவைகளெல்லாம் புதிய அனுபவங்களே, நான் பார்த்த வினோதங்களையும், அடைந்த சந்தோசத்தையும், என் சினேகிதிகளுக்கு தெரிவிக்கறதினால் உபயோகமுண்டென்று நம்பி இது எழுதலானேன்.

கடற்கரையிலிருந்து கப்பலை பார்த்தால் ஏதோ சிறிய ஒரு மாதிரியான தெப்பம் போல தெரிந்தது. சிறு தோணிகளில் ஏறித்தான் கப்பலின் சமீபத்தில் போக வேண்டியது. தோணியில் போகிறது முதலில் புதிதாகையால், ஒரு திகிலையும், படபடப்பையும் உண்டாக்கினாலும் தொட்டிலில் ஆடுகிறது போல் வேடிக்கையாய் இருக்கிறதினால், சந்தோசமாக இருக்கிறது.

காலப்பெட்டகம் அந்தக்கால போர்க் கப்பல்
அந்தக்கால போர்க் கப்பல்

தோனியை, துடுப்புகளாம், கையில் பிடிக்கிற பக்கம் உருண்டையாகவும், மற்றொரு நுனி சப்பட்டையாகவும் இருக்கிற நீளமான மரத்துண்டுகளைக் கொண்டு தண்ணீரில் தாக்கித் தாக்கித் தள்ளுகிறார்கள். இதில் ஒரு வேடிக்கை. தோணி போக வேண்டுமென்றால் தண்ணீரைத் தள்ளுகிறதாம்! ஒரு குதிரை வண்டி வேகமாகப் போகும் போது குதிரையின் அடிகளைக் கவனித்துப் பார்த்தால் குதிரை தன் அடிகளால் பூமியை உதைத்து தள்ளி விடுகிறது போல்தான் தோன்றுகிறது.

அங்கே இருட்டு அதிகம்

புகை கப்பலின் சமீபம் சேர்ந்தோம். மேலேறி பார்க்கவும் கடல் ஞாபகமே போய்விட்டது. ஏதோ ஊரில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் இருக்கிறது போல் அப்படியே இருந்தது. ஜனங்கள் மொழு மொழுவென்றும் இங்கும் அங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். கப்பலின் அடித்தளம் வெகு ஆழத்தில் இருக்கிறது. அங்கே இருட்டு அதிகம். ஏதாவது சாமான்களும், எந்திரங்களும் அங்கே இருக்குமாம். கப்பலைப் போகச் செய்கிற முக்கிய எந்திரம் அங்கே தான் இருக்கிறதாம். அங்கே போய் பார்க்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு அங்கே போகிறது அபாயகரமென்று சொல்லிவிட்டார்கள். மேல் மூன்று தளங்கள் தான் புழங்குகின்ற இடங்கள்.

மூன்று மாடி வைத்துக் கட்டிய ஒரு வீடு போலிருந்தது. கப்பல் வெள்ளைக்காரர் மயமாக இருந்தது. ஏதோ சில வாத்திய சத்தங்கள் காதில் விழுந்தன. வெகு அன்புடன் அங்கிருந்த வெள்ளைக்காரர்கள் எங்களை அழைத்து காட்டினார்கள். நாலு பக்கமும் ஒரே சமுத்திரமும், குளிர்ந்த காற்றும், ஏதோ வித்தியாசம் இல்லாமல் நம் ஜனங்கள் இருக்கும் இடம் போல் அங்கே இருப்பவர்கள் நடுவும், கண்ணில் படுகிறதை எல்லாம் நேர்த்தியாகவும், நாகரீகமாகவும் இருந்ததும், நாங்களே ஒரு கூட்டமாக போயிருந்ததும் ரொம்ப ஆனந்தகரமாக இருந்தது. அங்கே பார்த்த சில உபயோகரமான விஷயங்களைச் சொல்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேல் உள்ள மூன்றாம் தட்டுப்படியில் சுக்கான் என்று சொல்லப்படுகிற ஒரு எந்திரம் இருந்தது. அது பித்தளையால் செய்து பார்க்க சக்கரமாக இருந்தது. அந்தச் சக்கரத்தின் நடுவில் ஒரு செங்குத்தான பெரிய நீள இரும்புக் கம்பி இருக்கிறதாம். அது எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள எந்திரத்துடன் சேர்க்கப்பட்டு இருக்கிறதாம். இந்த இரும்புக் கம்பியை திருப்ப இரண்டு பக்கங்களிலும் முனைப் போல் பித்தளைப் பிடிகள் வைத்து சலாகை ஒன்று அதில் பொருத்தி இருக்கிறது.

யந்திரத்தில் நெருப்பு போட்டு ஆவி உண்டு பண்ணின பிறகு இந்தச் சுக்கான் சக்கரத்தை இரண்டு பாதிகளாக நினைத்துக் கொள்ளலாம் அல்லவா; அதன் ஒரு பாதியில் இந்தச் சலாகையைத் திருப்பினால் முன் பக்கமாகவும், இன்னொரு பாதியில் இதை திருப்பினால் பின்பக்கமாகவும் ஓடுமாம். இது சண்டைக் கப்பலாகையால் பெரிய பீரங்கிகளும், அநேக சிறிய துப்பாக்கிகளும், கத்திகளும் இதில் இருந்தன.

சத்துருக்கள் கப்பல்

சத்துருக்கள் கப்பல் பகலில்தான் வெளிச்சத்தில் தெரிந்துவிடுகிறது. இரவில் இருட்டில் எவ்விதமாக இதைத் தெரியப்படுத்தலாம் என்று கேட்டால், இதற்கும் ஒரு ஏற்பாடு இருக்கிறது. இது வெகு அதிசயமானது. இந்நாளில் தந்தி பேசுகிறார்களே அதற்கு ஆதாரமாக உள்ள மின்சார வேகத்தைத் திராவகங்களால் உண்டாக்கி ஒரு பெரிய விளக்கு கூட்டினுள் கம்பிகள் வழியாக கொண்டு வந்துவிடுகிறார்கள். இதை கொளுத்தினால் 40, 50 மைல் தூரத்திற்கு வெளிச்சத்தை எரித்து அவ்வளவு தூரத்துக்கு அப்பால் இருக்கும் சிறு சாமான்களையும் தன் வெளிச்சத்தில் தெரிவிக்குமாம். இதன் வெளிச்சத்தை நாலு பக்கங்களும் விட்டுக்கொண்டே தூரத்துப் பார்வை கண்ணாடிக் குழாய் வழியாக அந்த வெளிச்சம் படும் இடங்களில் பார்த்துக் கொண்டு வந்தால் இராவேளையில் நம்மூர்களில் போலீஸ் ஜவான் தன் கையில் வைத்திருக்கும் ‘லாந்தர்’ வெளிச்சத்தைத் தூரத்திலிருக்கும் திருடன் மேல் அடிக்க செய்து அவனைக் கண்டு பிடிக்கிறது போல் இவர்கள் எதிரிகளையும் கண்டுபிடித்து விடலாமாம்.

இந்த அதிசய விளக்குக்கு எண்ணெய்யும் கிடையாது, திரியும் கிடையாது. வெகு ஆச்சரியமாக இருந்தது. தூரதிருஷ்டிக் கண்ணாடிக் குழாய் வழியாக பார்த்தேன். துறைமுகத்தினுள் நிற்கும் கப்பலில் எனக்கு சுமார் இரண்டு மைல்களுக்கப்பால் இருக்கும் சென்னை கோட்டையில் உள்ள கோபுர கடியாரத்தில் காட்டப்படும் மணி கை நீளத்துக்கு அப்பால் தெரிகிறது போல் வெகு சுத்தமாக தெரிந்தது.

இந்தக் கப்பலில் தண்ணீர்க் கஷ்டம் இல்லை; ஆனால் நாலு பக்கமும் சமுத்திரம் தானே, ஜலம் நிரம்பத்தானென்று இல்லை. குடிக்கிறதுக்கு உப்புத் தண்ணீர் உபயோகமாகுமா? அதற்காக இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், உப்பு ஜலத்தை நீராவியாகக் காய்ச்சி அந்த நீராவியைக் குளிரச் செய்து தண்ணீராக்கி அதைக் குடிக்கிறார்கள். உடம்புக்கு வெகு நல்லது தான்; ஆனால் மண் சம்பந்தமில்லாததினால் ருசி இருக்காது.

வெகு அசுத்தம்

கப்பலில் ஆஸ்பத்திரி இருக்கிறது; டாக்டர் இருக்கிறார். சமையல் இடமெல்லாம் எனக்கு வெகு அசுத்தம் போல் தோன்றிற்று. மாமிசங்கள்தான் முழுமையும்; அப்படியே நெய்யில் பொறித்து விடுகிறார்கள். பார்க்கவே வெகு குரூரமாக இருந்தது. மற்றப்படி அவர்கள் உட்காரும் இடங்கள், படுக்கும் இடங்கள் வெகு சுத்தமாக இருந்தன. அங்கே கப்பல் தலைவன் இருக்கும் அறைதான் வெகு அபூர்வமாக இருந்தது. மேஜைகள், நாற்காலிகள், சோபாக்கள், விளக்குகள் வெகு நேர்த்தியாக இருந்தன.

அங்கே படிக்க அநேக புத்தகங்களும், சமாசாரப் பத்திரிக்கைகளும் இருந்தன. கப்பலுக்குள் காற்று வர வேண்டியதற்காக வெளியிலிருந்து குழாய்கள் பெரிய திறந்த வாய்களுடன் காத்து பக்கமாய்த் திருப்பி வைக்கப்பட்டிருந்தன. உள்ளே எந்திரங்கள் எல்லாம் வெகு சுத்தமாக வைக்கப்பட்டிருக்கின்றன. எங்களுக்கு இவைகளெல்லாம் காட்டினவர் வெகு நல்லவர் போல காணப்பட்டார்.

இவைகள் எல்லாம் பார்க்க சுமார் ஒரு மணி நேரம் செலவு செய்தோம். அக்கப்பலை விட்டு வர இஷ்டம் இல்லாமலே திரும்பி வந்தோம். திரும்பி வரும்போது வழியில் ஒரு வியாபாரக் கப்பல் பார்த்தோம். இதில் சாமான்களையும், ஜனங்களையும் பணத்துக்கு ஏற்றிக் கொண்டு போவார்களாம். இந்தக் கப்பல் முன் பார்த்த சண்டைக் கப்பலைப் போல் அவ்வளவு சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இல்லை. இதில் ஆடு, கோழி, வாத்து இவைகள் வளர்த்து வருகிறார்கள்.

இப்படிக்கு
புகைக் கப்பல் பார்த்த ஒருவள்

எழுதியவர் : ஒரு வாசகி
பத்திரிக்கை : விவேக சிந்தாமணி
ஆண்டு : 1893 ஆகஸ்ட் மாதம்

4 Replies to “போர்க் கப்பலை பார்த்து வியந்த அந்த காலத்துப் பெண்ணின் அனுபவம்”

 1. நன்றி, சிறப்பு.
  எழுதியவர் ‘ஒரு வாசகி’ என்று விவேக சிந்தாமணி பத்திரிக்கை குறிப்பிடுகிறது. !!!!
  வெளியானது 1893 ஆகஸ்ட் மாதம்; அது சரி 127 ஆண்டுகளுக்கு ஒரு பெண் எழுதிய கட்டுரை பத்திரிக்கையில் வெளியானதே பெரிய செய்தி, இதில் அவரது பெயர் எல்லாம் பதிவாகும் சூழ்நிலை அக்காலத்தில் இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கவியலாது தான்.

 2. மிக அருமையான முயற்சி! சுவையான கட்டுரை! மின்விளக்கைப் பற்றியே இவ்வளவு அதிசயத்துடன் ஒருவர் எழுதியிருக்கிறார் என்றால் எவ்வளவு அரிய கட்டுரை இது! இதைத் தேடியெடுத்து எங்களுக்குப் படைத்தமைக்கு நன்றி நண்பரே!

  அட, நானென்ன சொல்வது! தமிழின் கடலோடி எழுத்தாளர் நரசய்யாவே தேடி வந்து இந்த இணையக் கட்டுரையைப் பாராட்டியிருக்கிறார் என்றால் வேறென்ன வேண்டும்!

 3. அருமையான கட்டுரை. படிப்பதற்கு உகந்தது. அக்காலத்து நடவடிக்கைகளையும் அறிய உதவுகிறது. வரலாற்று ஆசிரியர் என்ற முறையில் என்னைக் கவர்ந்தது.
  நரசய்யா

Leave a Reply

Your email address will not be published.