உலகின் மிக நீண்டகாலப் பேரரசான பாண்டிய வம்சம் தமிழகத்தை 1925 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. அதேபோல் உலகின் மூன்றாவது மிக நீண்டகாலப் பேரரரசான சோழப் பேரரசு 1580 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கின்றன. அதற்கடுத்த நான்காவது மிக நீண்டகாலப் பேரரசான சேர பேரரசு 1532 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இத்தனை பெருமைகள் இருந்தாலும் இவர்களது அரண்மனைகள் எதுவும் இப்போது இல்லை. ஒரேயொரு அரண்மனை மட்டும் இவர்களது பெருமையை பறைசாற்றி நிற்கிறது.
அது எந்த அரண்மனை?
பத்மநாபபுரம் ஒரு காலத்தில் சேரர் வழி வந்த வேணாட்டு மன்னர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. இந்நகர் கி. பி. 1744-ஆம் ஆண்டுவரை கல்குளம் என்ற பெயரைப் பெற்றிருந்தது என அங்குக் கிடைத்த கல்வெட்டுக்களிலிருந்து நாம் அறியலாம்.
வேணாட்டு மன்னர் மார்த்தாண்டவர்மா தமது தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றி தாம் பிடித்தடக்கிய நாடுகளை அனந்தைத் திருமால் ஸ்ரீ பத்மநாப சுவாமிக்குக் காணிக்கை யாக்கி ஸ்ரீ பத்மநாப தாசர் என்ற பட்டத்தையும் பெற்றார் . இந்நிகழ்ச்சிகளின் நினைவாக கல்குளம் பத்மநாபபுரம் என்ற பெயரைப் பெற்றது.
பத்மனாபபுரம் கோட்டை
இப்பழமையான நகர் இரண்டரை மைல் சுற்றளவுள்ள கற்கோட்டையால் சூழப்பட்டுள்ளது. இக்கோட்டையின் குறைந்த உயரம் 15 அடி. கூடுதல் உயரம் 24 அடி. நான்கு திசைகளிலும் நான்கு பெரிய வாயில்களும், சில சிறிய அவசர வாயில்களும் இக்கோட்டையிலே உள்ளன.
இப்பழம்பெரும் கோட்டை வேணாட்டு மன்னர்களின் போர் பாதுகாப்பு அரணுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
பத்மனாபபுரம் கோட்டையைச் சுற்றி வேறு சில கோட்டைகளும் உள்ளன. இந்நகரின் ஒரு பக்கம் மலை உச்சியில் காணப்படும் கோட்டை மருந்துக் கோட்டை எனவும், மறுபக்கம் காணப்படும் கோட்டை சவக்கோட்டை எனவும் அழைக்கப்படுகின்றன.
மருந்துக் கோட்டையில் போர்க் கருவிகளும், அவற்றிற்கு வெடி மருந்துகளும் தயாரிக்கப்பட்டன. சவக்கோட்டையை வேணாட்டு மன்னர்களும் அவர்களது குடும்பத்தாரும் இடுகாடாகப் பயன்படுத்தினர்.
பத்மனாபபுரம் கோட்டையை அடுத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க உதயகிரிக் கோட்டை மலையைச் சுற்றி கட்டப்பட்டுள்ள உதயகிரிக் கோட்டையின் வரலாற்றை நோக்கும்போது கி. பி. பத்தாம் நூற்றாண்டில் கல்குளம் இக்கோட்டையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது.
மன்னர் மார்த்தாண்டவர்
சோழப் பேரரசான இராஜராஜனால் அழிக்கப்பட்ட இப்பழமையான உதயகிரிக் கோட்டை கி. பி. 1601-ல் இரண்டாகப் பிரித்துக் காட்டப்பட்டது. பின்னர் 1730-ஆம் ஆண்டு வேணாட்டு மன்னர் மார்த்தாண்டவர்மனால் இரண்டு கோட்டைகளும் சீரமைக்கப்பட்டன.
பத்மனாபபுரம் கோட்டையின் உள்ளே பழமையான கோயில்களும், வேணாட்டு மன்னர்கள் வாழ்ந்த அரண்மனையும் வரலாற்றுச் சின்னங்களாக நமக்குக் காட்சி தருகின்றன.
கோட்டையின் தென் கிழக்கே ஐந்தடுக்கு கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி தரும் நீலகண்டசுவாமி கோயில் திராவிடக் கட்டடக் கலையின் சின்னமாகத் திகழ்கிறது. கல்வெட்டு வைத்து நோக்கும்போது இக்கோயில் பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே தோன்றியிருக்க வேண்டும் எனக்கொள்ளலாம்.
கொல்லம் ஆண்டு 412-ல் அதாவது கி. பி. 1237-ஆம் ஆண்டு தோன்றிய வெட்டெழுத்தால் ஆன கல்வெட்டு ஒன்று இக்கோவிலில் கிடைத்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன்
இந்தக் கோவிலில் காணப்படும் தேவியின் திருவுருவச் சிலை மதுரை மீனாட்சியம்மனின் சாயலில் இருப்பதை நாம் காணலாம். இந்த திருவுருவச்சிலை மதுரை திருமலை மன்னரால் பிரதிஷடை செய்யப்பட்டது என்று கருத இடமிருக்கிறது.
கொல்லம் ஆண்டு 810-ல் அதாவது 1635-ஆம் ஆண்டு திருமலைநாயக்கர் இப்பகுதிக்கு படையெடுத்து வந்ததையும், அதைக் காரணமாகக் கொண்டு இங்குள்ள மக்கள் வரி கொடுக்க மறுத்ததையும் அழகியபாண்டியபுரம் முதலியார் வீட்டு ஓலைச்சுவடிகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
திருமலைநாயக்கர் ஆட்சி வெறிகொண்டு இப்பகுதியைத் தாக்கினாலும், இங்கு சமயத்தையும், கோவில்களையும் போற்றி வளர்க்க அவர் தவறவில்லை.
நாயக்க மன்னர் தமது குலதெய்வமான மதுரை மீனாட்சியம்மனை நினைவிற் கொண்டு கல்குளம் மகாதேவர் ஆலயத்தில் தேவியின் திருவுருவச்சிலை ஒன்றை பிரதிஷடை செய்தார்.
தேவியின் வருகைக்குப் பிறகே கல்குளம் மகாதேவர் நீலகண்ட சுவாமி என்ற பெயரைப் பெற்றிருக்கவேண்டும்.
தேவியின் திருவுருவச்சிலையைக் கண்டு பரவசமடைந்த மார்த்தாண்டவர்மா மன்னர் தேவிக்கு ஆனந்தவல்லி எனப் பெயர் சூட்டினார் என்று கூறுவர்.
தேவி சன்னதியின் முன்னால் போர்க் காலத்திலே இரண்டு மன்னர்களின் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று இக்கோயிலில் தேவியின் திருவுருவச்சிலையை எழுப்பிய மதுரை திருமலை மன்னர்.
மற்றொன்று தேவிக்கு ஆனந்தவல்லி எனப் பெயர் சூட்டிய வேணாட்டு மன்னர் மார்த்தாண்டவர்மா.
கேரளக் கட்டடக்கலை
பத்மநாபபுரம் கோட்டையின் வடமேற்கு மூலையில் ஸ்ரீராமபிரான் கோயில் கொண்டுள்ளார். இக்கோயில் கேரளக் கட்டடக்கலை அமைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
இங்கு ராமாயணக் கதை முழுவதும் 45 மரப் பலகைகளில் நாடக ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மரவேலைப்பாட்டில் இந்திய நாட்டின் சிறந்த கலைச் செல்வங்களில் ஒன்றாக இதைக் கருதலாம்.
இந்த இரண்டு பெரிய ஆலயங்களைத் தவிர வேறு இரண்டு அரிய ஆலயங்களும் இக்கோட்டையில் உள்ளன. ஒன்று சரஸ்வதிகோயில், மற்றொன்று ஸ்ரீசக்கரத்தை கருவறையில் கொண்ட ஆலம்பாறை பகவதிகோயில்.
ஆண்டு தோறும் இங்குள்ள சரஸ்வதியின் திருவுருவச்சிலையை கேரள நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு எடுத்துச்சென்று நவராத்திரி விழா கொண்டாடுகின்றனர். ஈனன் என்ற வீரனுக்கு எழுப்பப்பட்டுள்ள ஒரு நடு கல்லை ஊரின் உள்ளே நாம் இன்றும் காணலாம்.
இக்கோட்டையின் உள்ளும், புறமுமாக பன்னிரெண்டு சிவாலயங்கள் உள்ளன. சிவராத்திரியன்று இந்த சிவாலயங்களை நோக்கி இப்பகுதியிலுள்ள பக்தர்கள் கையில் விசிறியுடன் சிவப்பு உடையணிந்து ‘கோவிந்தா, கோபாலா” உச்சரித்துக்கொண்டே ஓடுவது காண வேண்டிய காட்சியாகும்.
அரியும், சிவனும் ஒருவரே என்ற அரிய கருத்தை இந்த சிவாலய ஓட்டம் நமக்குத் தெள்ளத் தெளிய உணர்த்துகின்றது.
ஒரே அரண்மனை
சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட நாடு தமிழ்நாடு. அவர்களது கலைத்திறனை நிலைநாட்டி நிற்கும் கோயில்கள் தமிழகத்திலே ஏராளம். ஆனால் அவர்கள் வாழ்ந்த அரண்மனை ஒன்றைக்கூட தமிழகத்தின் பிறபகுதிகளில் நாம் காணமுடியாது.
சேரர் வழி வந்த வேணாட்டு மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை ஒன்று பத்மனாபபுரம் கோட்டையின் உள்ளே இன்றும் கம்பீரமாகக் காட்சி தருவது குமரி மாவட்டத்திற்கே ஒரு சிறப்பாகும்.
வேணாட்டு மன்னர்கள் பலர் இந்த அரண்மனையில் தங்கியதால் இங்குள்ள கட்டடங்கள் பல காலங்களில், பல அமைப்புக்களில் கட்டப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
மந்திரசாலை என்றழைக்கப்படும் மாடியில் வேணாட்டு மன்னர்கள் தங்கள் அமைச்சர்களையும், மக்கள் மன்ற அங்கத்தினர்களையும் கூட்டி நாட்டு மக்களின் நலனுக்காகத் திட்டம் தீட்டியதாகத் தெரியவருகிறது. கலைச் சிறப்புகள் கொண்ட இந்த அறையின் தளம் பளிங்குக் கண்ணாடி போன்று காட்சி தருகின்றது.
தர்மராஜ்யம்
மந்திரசாலையை அடுத்து இரண்டாயிரம் மக்கள் இருந்து உண்ணும் அளவுள்ள ஊட்டுப்புரை உள்ளது. அக்காலத்திலே ஆண்ட வேணாட்டு மன்னர்கள் தினமும் 2,000 பேர்களுக்கு இலவசமாக உணவளித்து வந்தனர் எனத் தெரியவருகிறது.
அதனால் வேணாடு தர்மராஜ்யம் என்றழைக்கப்பட்டது. வேணாட்டு மன்னர்கள் தர்ம ராஜாக்கள் என்ற பெயரைப் பெற்றனர்.
இந்த அரண்மனையில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது. போர்க் காலங்களில் அரசரும், அவரது குடும்பத்தினரும் இதன் வழியாக இங்கிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள சாரோட்டு அரண்மனைக்குத் தப்பிச் செல்வர் என்று கூறப்படுகிறது.
அரண்மனையின் அடுத்தப் பகுதி ஆயுதச்சாலை. அங்கு வேணாட்டில் பயன்படுத்திய பழமையான பல ஆயுதங்களையும் 1741-ஆம் ஆண்டு குளச்சல் துறைமுகத்திலே டச்சுப் படை வீரர்களை வென்று பெற்ற மேனாட்டு ஆயுதங்களையும் நாம் காணலாம்.
வேணாட்டு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் மிகவும் கடுமையாக இருந்தன.
திருடினால் கைகளை வெட்டிவிடுவர். பிற பெண்களைக் கெடுத்தால் அவர்களது கண்களைப் பிடுங்கி எறிந்துவிடுவார்கள்.
உப்பரிகை மாளிகை
நாட்டின் துரோகிகளை ஒரு இரும்புக் கவசத்தினுள் வைத்து உயரமான ஒரு மரத்திலே தலைகீழாக கட்டித் தொங்கவிடுவார்கள். உயிரற்ற உடல் என்று அவர்களை காக்கையும் கழுகும் கொத்தித் துன்புறுத்த, அதனால் சித்திரவதை செய்யப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழப்பர். இத்தண்டனை மிகவும் கொடுமையானது.
இதற்குப் பயன்படுத்திய ஒரு இரும்புக் கவசத்தை ஆயுத சாலையில் நாம் இன்றும் காணலாம். இவ்வாறு தண்டனைகள் மிகவும் கடுமையாக இருந்ததால் நாட்டிலே கொலை, களவு, கற்பழித்தல் போன்ற குற்றங்கள் அறவே ஒழிந்தன. நாடு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது.
இந்த அரண்மனையிலே மிகவும் கவர்ச்சியான பகுதி அதன் நடுவண் அமைந்துள்ள உப்பரிகை மாளிகைதான் . இதன் கீழ்ப்பகுதியில் அறுபத்திநான்கு மூலிகை மரங்களால் செய்யப்பட்ட ஒரு கட்டிலும், அடுத்த மாடியில் அரசர் விரத நாட்களில் தூங்கும் கட்டிலும் உள்ளன.
மூன்றாவது மாடிதான் அரசரின் பூஜை அறை. இங்குள்ள சுவர் முழுவதும் ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சுவரோவியங்கள் பச்சிலைகளால் வரையப்பட்டவை. பதினெட்டாம் நூற்றாண்டிலே தோன்றிய இந்த ஓவியங்கள் வேணாட்டின் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
அடுத்து அமைந்துள்ளது சித்திராலயம். வரலாற்றுச் சிறப்புமிக்க பல ஓவியங்களை இங்கே நாம் காணலாம்.
வேணாட்டு மன்னர்கள்
அவற்றுள் மார்த்தாண்டவர்மா மன்னரிடம் டச்சு படைத் தலைவன் டிலனாய் சரண் அடைவதும், புத்தன் அணையை அம்மன்னர் தமது மேற்பார்வையில் கட்டுவதும் மறக்க முடியாதவை.
சித்திராலயத்தை அடுத்துத் தெருபக்கம் நோக்கி ஓர் அழகிய மேடை உள்ளது. மக்கள் குறை கேட்க இங்கு வேணாட்டு மன்னர்கள் தினமும் வந்து நிற்பார்கள் என்று கூறப்படுகிறது.
அரண்மனையின் கடைசிப் பகுதி கலைமகளின் திருவுருவைக் கொண்டுள்ள நவராத்திரி மண்டபம். இங்கு காணப்படும் தூண்களும், தூண்களில் செதுக்கப்பட்டுள்ள தீபலக்ஷ்மிகளும் கலைச் சிறப்பு மிக்கவை.
இவ்வாறு பத்மநாபபுரம் கோட்டையும், அதன் உள்ளே அமைந்துள்ள கோயில்களும் அரண்மனையும் பழைய வேணாட்டுக்கு நம்மை அழைத்துச் சென்று அன்றைய சமுதாய நிலை, அரசியல் வரலாறு, சமயச் சிறப்பு, கலைத்திறன் இவற்றை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். குமரி மாவட்டத்தின் வரலாறு, பண்பாடு, கலைச்சிறப்பு இவற்றை வெளி உலகுக்கு எடுத்துக்கூறும் பணியினை கடந்த 60 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளார். குமரி மாவட்டத்தின் வரலாற்றிலிருந்து அரிய பல செய்திகளை இலக்கிய மற்றும் கல்வெட்டு ஆதாரங்களோடு வெளியே கொண்டு வந்த பெருமை இவரைச்சாரும். இவர் எழுதிய நூல்கள் பல.