Kopperuncholan

இந்த நட்புக்கு ஈடுயிணை உலகில் எதுவும் இல்லை

சங்கத் தமிழ் வளர்ந்த பாண்டிய நாட்டில் ‘பிசிர்’ என்ற ஊரில், ‘ஆந்தையார்’ என்னும் அருந்தமிழ்ப் புலவர் வாழ்ந்தார். உண்மை ஞானமும் உயரிய ஒழுக்கமும் உடைய இவர், ஊரோடு இவர் பெயரையும் சேர்த்துப் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார்.

இவர் வாழ்ந்த காலத்தில் சோழ வளநாட்டில் ‘அறந்துஞ்சும் உறந்தை’ என ஆன்றோரால் சிறப்பிக்கப் பெற்ற உறையூரைத் தலைநகராகக் கொண்டு கோப்பெருஞ்சோழன் செங்கோல் செலுத்தி வந்தான். அரசனாயினும் சிறந்த ஞானியாக, செந்தமிழ்க் கவிஞனாக, புலவர்களோடு பழகுவதிலும் அவர்தம் பாடல்களைக் கேட்பதிலும் பெருவிருப்புடையவனாக விளங்கினான் கோப்பெருஞ்சோழன்.

இவனைப் பிசிராந்தையார் நேரில் கண்டதில்லை. ஆனால் அவனுடைய அரும்பெருங்குணங்களை எல்லாம் தமது ஊரில் இருந்தபடியே அறிந்து அவன்பால் பிரியா நட்புக் கொண்டார். சோழ மன்னனும் புலவரின் உள்ளத்தைப் பற்றிக் கேள்வி வாயிலாக, செவிவழியாக உணர்ந்து மனத்தோடு தொடர்பு உடையவனாக இருந்தான்.

இந்நிலையில் அரசுரிமை காரணமாகப் கோப்பெருஞ்சோழனுக்கு எதிராக அவன் புதல்வர் இருவரும் செயல்பட்டனர். இதைத் தொடர்ந்து மன்னனுக்கும் இரத்த உறவுகளாகிய புதல்வர்களுக்கும் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை. ‘புல்லாற்றூர் எயிற்றியனார்’ என்ற புலவரின் அறிவுரையை அறவுரையைக் கேட்ட அரசன் துறவு பூண்டு, உறையூரில் அரங்கம் என்ற இடத்தில் ஓர் ஆற்றங்கரையில் மரநிழலில் உண்ணாநோன்பு இருந்த “மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாராத” வீடு பேற்றைப் பெற முடிவு செய்தான். அதற்காக வடக்கிருந்தான். (உண்ணாமல், உரையாடாமல் வடக்கு நோக்கி அமர்ந்து நோன்பு இருத்தல் வடக்கிருத்தல் ஆகும்.)

பிசிராந்தையார்

அரசனைப் பிரிய முடியாத சான்றோர்களும், புலவர்களும் அவனைச் சுற்றி அமர்ந்தார்கள். அப்போது அரசன், அவர்களை நோக்கி “என் ஆரூயிர் நண்பர் பிசிராந்தையாரும் இங்கே வருவார். அவருக்கு இடம் ஒதுக்குங்கள்” என்று சொல்லி அவருடைய வருகையை எதிர்நோக்கி இருந்தான்.

அதற்கு ஆன்றோர்கள், “அரசே! அவர் உன்னை ஒரு பொழுது கூட நேரில் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை, பழகியதும் இல்லை. பல காலம் பழகி நட்புக் கொண்டவர்கள் கூட இப்படி வருவது அரிய செயலாகும்” என்றார்கள்.

அதைக் கேட்ட மன்னன், “பெரியீர்! சிறிதும் நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம். பிசிராந்தையார் இனிய குணக்குன்று; புகழை அழிக்கும் பொய்க்குப் பகை; மெய்க்கு அணி; புகழின் வாழ்வு; உறுதியான மிக உயரிய உயிர் நட்புக்கு இலக்கு; தமது பெயரைப் பிறருக்குச் சொல்லும் பொழுது ‘என்னுடைய பெயர் கோப்பெருஞ்சோழன்’ என்று பேதையாகிய என் பெயரையே தம்முடைய பெயராகச் சொல்லும் பேதமற்ற அன்புரிமை உடையவர், என்பால் செல்வம் உள்ள காலத்து அவர் வராமல் இருந்தாலும், நான் துன்புறுங்காலத்து வராமல் இருக்கமாட்டார். இஃது உண்மை நட்பாளரின் இயற்கையன்றோ? அவர் பலகாத தூரமுள்ள பாண்டிய நாட்டில் பிசிர் என்னும் ஊரில் வசிப்பவராயினும் இங்கே வருவது உறுதி. அவருக்கும் என்னோடு வடக்கிருக்க இடம் ஒதுக்கி வையுங்கள்” என்று பெருமிதத்துடன் கூறினான்.

கோப்பெருஞ்சோழன்

இதற்கிடையில் பிசிராந்தையார், தம் உயிர் நண்பன் கோப்பெருஞ்சோழனுக்கு நேர்ந்தவற்றையும் அவன் துறவு பூண்டு வடக்கிருப்பதையும் உள்ளத்து உணர்வால் அறிந்தார். உடனே புறப்பட்டு உறையூர் சென்றார். அரசன் எதிர்பார்த்தபடி, குறித்த நேரத்தில் அவனெதிரே வந்து நின்றார். பிசிராந்தையாரைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அவர்களுள் கோப்பெருஞ்சோழனின் இன்னொரு இனிய நண்பரும் புலவருமான ‘பொத்தியார்’ “இது நினைத்தால் வியக்கும் தன்மை உடையது. இந்த மன்னன் அரசச் செல்வத்தை எல்லாம் துறந்து இந்நிலைக்கு வரத் துணிந்ததும், வேற்று நாட்டைச் சேர்ந்த இந்தச் சான்றோர் நட்பையே சிறந்த பற்றுக் கோடாகக் கொண்டு, இப்படிப்பட்ட துன்பக் காலத்தில் இந்த இடத்திற்கு வந்தது, இவ்வாறு இப்புலவர் வருவார் என்று துணிந்து சொல்லிய வேந்தனின் ஒப்பற்ற ஆன்மிக-சூக்கும உணர்வும், இவன் சொல்லிய சொல் பழுதுபடாமல் வந்தவரது ஒத்த உணர்ச்சியின் திறமும் வியக்கும்தோறும் வியப்பு வரமின்றி ஓடுகிறது.

ஆதலால் தனது நாட்டில் வாழும் இந்தச் சான்றோர்களது உள்ளத்தை அன்றி, அயல்நாட்டில் வாழும் இந்தச் சான்றோரது உள்ளத்தையும் தனக்கு உரித்தாகப் பெற்ற இப்பெரு வேந்தனை இழந்து இந்நாடு இனி துன்பத்தை அடையுமோ தெரியாது. இதுதான் இரங்கத்தக்கது” என்று ஓர் அற்புதப்பாட்டு மூலம் வெளிப்படுத்தினார்.

பிசிராந்தையாரைக் கண்ட சோழன், “சான்ற குணத்தீர்! நும்மைச் சந்ததமும் நினைத்திருப்பேன். உமது நட்பிற் சிறந்த பெட்புறும் பொருள் வேறு யாதுளது?” என்று மகிழ்ந்தான். பிசிராந்தையாரும் பல தம் உள்ளத்தில் குடிகொண்டிருந்த அரசனது திருவுருவத்தைக் கண்ணாரக் கண்டும் போற்றுவதற்குரிய அவனது ஞானத்தை அறிந்தும், அன்பான சொற்களைக் கேட்டும், வாடிய மேனியை ஆரத்தழுவியும், அவனது நற்குணங்களை ஓயாது வாயால் புகழ்ந்தும் ஐம்புலன்களின் இன்பத்தை ஒருசேரப் பெற்றார்.

நட்புக்கு மரியாதை

பின்னர் ஆருயிர் நண்பன் கோப்பெருஞ்சோழன் மேற்கொண்ட வடக்கிருத்தலை தாமும் மேற்கொள்ளத் தருப்பைப் புல்லை தரையில் பரப்பி அதில் அமர்ந்தார். வடதிசை முகமாக இருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டார். ஐம்பொறிகளை அடக்கி அரசன் ஆருயிரைத் துறக்கும்போது பிசிராந்தையாரும் உயிர் துறந்தார். இங்கு மரணம் மண்டியிட்டு அவர்களை வணங்கியது. நட்புக்கு மரியாதை இருக்கும்வரை கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் வாழ்வார்கள்.

இவ்வாறு இருவரும் தம்நிலை துறந்து ‘வானுக்கு அப்புறத்து உலகம்’ சென்ற அற்புதத்தைக் கண்ட கண்ணகனார் என்ற புலவர், “பொன்னும் பவளமும் முத்துமணியும் ஒன்றுக்கொன்று சேய்மைத்தாய் வெவ்வேறு இடத்து உண்டானாலும் நல்ல அணிகலன்களைச் செய்யும் காலத்தில் கோவையை ஓரிடத்தில் தோன்றியது போல, ஓரிடத்து அணிகலனாய் ஆவது போல, எத்துணைத் தூரம்பட்ட இடத்தில் இருப்பினும் ஒன்று சேர வேண்டிய நேரத்தில் தவறாது சான்றோர் சான்றோரையே சார்வார்” என்ற பொருள்பட அமைந்த பாடலைப் பாடி நெகிழ்ந்தார்.

புலவர் பிசிராந்தையாரும், மன்னன் கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர்நீத்த இடத்தில் பண்டைக்கால வழக்கப்படி அவர்களின் பெருமையையும், பெயரையும் கல்லில் பொறித்து நட்டார்கள்.

அரசன் உயிர் துறக்கும்போது பொத்தியார் என்ற புலவரும் உயிர்விடத் துணிந்தார். உடனே மன்னன் தடுத்து, “உமக்கு இன்னும் மகப்பேறு இல்லை. மகப்பேறு இல்லாத மாந்தர்கள் வானவர் தம் உலகு புகப்பெறார். ஆகையால் மகன் பிறந்த பிறகு வந்து அரசனது நடுகல் இடம் கொடுக்க, வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு.

“புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்” – குறள் (785)

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் பிறந்த இவர். அங்குள்ள காந்திநிகேதன் ஆசிரமத்தில் கல்வி பயின்றவர். காந்திய நெறியில் ஈடுபாடு கொண்டவர். தினத்தந்தி நாளிதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இலக்கிய எழுத்திலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்ட இவர் எழுதிய ‘நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்’ என்ற கவிதை தொகுப்பு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாராட்டுப் பெற்றது. தொடர்ந்து பல இலக்கிய ஆக்கங்களை எழுதிவருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது