Vattakottai Fort

கன்னியாகுமரி வட்டக்கோட்டை பற்றி யாரும் அறியாத வரலாறு

நாஞ்சில் நாடு நிலவளம், நீர் வளம், பொருள் வளம் மிக்கது. அதன் செல்வச் செழிப்பு மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களையும், நாயக்கர், மகமதியர் படைகளையும் கவர்ந்திருந்தது என வரலாறு கூறுகின்றது. 

நாஞ்சில் நாடு மூவேந்தர் ஆட்சியில் மாறி மாறி இருந்தது என்பதை இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், கோயில் அமைப்புகள், ஊர்ப்பெயர்கள் இவற்றை வைத்து நாம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு நாஞ்சில் நாடு பல மன்னர்களின் வீரவிளையாட்டு நடந்த போர்க்களமாகத் திகழ்ந்தது. 

பகைவர் படைகளுக்கெல்லாம் பாசறையாக அமைந்தது நாஞ்சில் நாடு. அதனால் இங்கு பல கோட்டை கொத்தளங்கள் எழுந்தன. அவற்றுள் சில கோட்டைகள் அழிக்கப்பட்டன. சில கோட்டைகள் இன்றும் சிறப்புடன் திகழ்கின்றன என்கின்றது. 

கோட்டாறு

நாஞ்சில் நாட்டின் தலைநகராகத் திகழ்ந்த கோட்டாறு ஒரு காலத்தில் கோட்டை மதில் சூழ அமைந்திருந்தது என்பதை “குருமா நெடுமதிற் கோட்டாற்றரண் கொண்ட தென்னன் கன்னிப்பெருமான்” என கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே தோன்றிய பாண்டிக்கோவை தெரிவிக்கின்றது.  

கடுக்கரை முதல் கன்னியாகுமரி வரை ஒரு காலத்தில் சிறப்புற்று விளங்கிய கோட்டையின் தடயங்களை பல இடங்களில் இன்றும் காணலாம். 

இக்கோட்டை இயற்கையரணான கடுக்கரை மலையிலிருந்து தொடங்கி அம்மலைத் தொடரை அடுத்தும், அகன்றும் அதன் மீது ஏறியும் செவரக்கோட்டை, காற்றாடி மலை, நெடுமலைக்குன்று இவற்றைத்தொட்டு, ஆரல்வாய்மொழி வழியாக வளைந்து வளைந்து தென் குமரிக் கடலிலே வந்து முடிகின்றது. இக்கோட்டையின் பல பகுதிகளும் அழிந்த நிலையிலே இன்றும் காட்சி தருகின்றன. 

கோட்டைக் கரை

ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள கோட்டைக் கரையில் பெரிய கோட்டையும், வெடிமருந்து செய்யும் ஒரு கூடமும் இருந்தன என்பதற்குப் தடயங்கள் நமக்குக் கிடைக்கின் றன. 

இங்கு கி. பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பாண்டிய மன்னன் மாறன் சடையனின் படை வீரன் இரணகீர்த்திக்காக எழுப்பப்பட்ட ஒரு நடுகல் கிடைத்தது. 

வட்டெழுத்துடன் கூடிய இந்நடுகல் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களால் கண்டெடுக்கப்பட்டு கேரள அரசாங்கத்தினரால் திருவனந்தபுரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வட்டக் கோட்டை

குமரி மாவட்டத்தில் பல கோட்டைகளை நாம் இன்றும் காணலாம். நகரைச் சுற்றி அமைந்துள்ளது பத்மநாபபுரம் கோட்டை. மலையைச் சுற்றி அமைந்துள்ளது உதயகிரிக் கோட்டை. மலையின் மேலே காணப்படுவது மருந்துக் கோட்டை. கடலை அடுத்துக் காணப்படுவது வட்டக் கோட்டை.

வட்டக் கோட்டை கடுக்கரை கன்னியாகுமரி கோட்டையின் ஒரு தொடர்ச்சியாகும். இது முக்கடலும் கூடி முழங்கும் குமரித் துறையிலே அமைந்துள்ளது.

3.5 ஏக்கர் பரப்புடைய இக்கோட்டையின் மதில் 29 அடி உயரம் கொண்டது. உள்ளே காணப்படும் கொத்தளத்தின் உயரம் 3 அடி முதல் 6 அடி வரை உள்ளது. 

கோட்டையின் ஒரு பக்கம் கடலும், மறுபக்கங்களில் அகழியும் உள்ளன. இக்கோட்டையைத் தொடர்ந்து ஒரு கருவேலங்காடு அரணாக உள்ளது. அரணாக நிற்கும் காட்டை ‘காவற்காடு’ என்றும் ‘கடிமிளை’ என்றும் கூறுவர். 

வட்டக் கோட்டை மதிலையும், கடுக்கரை கன்னியாகுமரி கோட்டையின் மதிலையும் இந்த கருவேலங்காடு இணைக்கின்றது.

பாண்டிய மன்னர்கள்

வட்டக் கோட்டை பற்றிய குறிப்புகள் பண்டைய இலக்கியங்களிலோ, கல்வெட்டுக்களிலோ காணக்கிடைக்கவில்லை. ஆனால் இக்கோட்டையின் அமைப்பு, அங்குக் காணப்படும் மண்டபங்கள், கோட்டையைச் சுற்றியுள்ள இடங்களின் வரலாறு இவற்றை வைத்து நோக்கும்போது இக்கோட்டை ஒரு காலத்தில் முத்துக்கொழிக்கும் துறைமுகப்பட்டினமான குமரித்துறையின் காவல் தளமாக இருந்தது.

வர்த்தக வளத்தினைப் பாதுகாக்க பாண்டிய மன்னர்கள் இக்கோட்டையை எழுப்பினர் என்றும் கருத இடமிருக்கிறது. பாண்டியர்களின் சின்னம் மீன். கோட்டையின் உள்ளே காணப்படும் மண்டபங்களில் மீன் சின்னங்களை நாம் இன்றும் காணலாம்.

தென் குமரியுடன் பாண்டியன் கொண்ட தொடர்பு குறித்து இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் சான்று கூறு பாண்டியனை “குமரிச் சேர்ப்பன்’ என சூடாமணி நிகண்டு கூறுகின்றது. 

தென் எல்லை காக்கும் குமரியன்னை பாண்டிய மன்னர்களது குலதெய்வம் என்பதை “தென்னவர் தம் குலதெய்வம் தென் குமரி” என குமரியம்மன் கோயிலில் கிடைத்த கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

முத்துக்கொழிக்கும் நாடு

தமிழகம் முத்துக்கொழிக்கும் நாடு என்று எகிப்தியர்களும், கிரேக்கர்களும், ரோமர்களும் அறிந்திருந்தனர். பாண்டிய நாட்டுக் கடலில் நினைப்பிற்கு எட்டாத நெடுங் காலமாக நல்முத்து விளைந்ததால் அக்கரை முத்துக்கரை எனவும், முத்துப்படுகை எனவும் வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் குமரி முனையிலிருந்து இராமேசுவரம் வரை கிட்டத்தட்ட 100 கல் தொலைவிற்கு முத்துக்கள் விளைந்தன என்றும், இங்கேதான் முத்துக்குளிப்பு நடைபெற்றது என்றும் வரலாறு கூறுகின்றது.

“இலங்கையிலிருந்து மேற்கே 60 கல் தொலைவில் தமிழகம் உள்ளது. இது செல்வச் செழிப்பும், பண்பாடும் மிக்க நாடு. இதனைப் பல மன்னர்கள் ஆண்டு வருகிறார்கள். இவர்களில் தலைசிறந்தவன் செந்தூர்ப் பாண்டியன் என்பவன். 

இவனது நாட்டிலே தான் தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள வளைகுடாவில் முத்துக் குளிக்கும் துறையிருந்தது. அங்கு தண்ணீர் 12 அல்லது 15 அடி ஆழத்திற்கு மேல் இருக்காது. வணிகர் பலர் கூடி கப்பல்களையும், படகுகளையும் வாடகைக்கு அமர்த்திக் கொள்வர். 

இந்த கப்பல்களில் முத்துக்குளிப்பதில் கைதேர்ந்த வல்லுனர்களை அழைத்துச்சென்று முத்துக்கள் எடுப்பர்’ என்று தமிழகத்திற்கு கி. பி. 1292-ஆம் ஆண்டு வருகைதந்த மார்க்கோபோலோ எழுதியுள்ளார்.

கல்வெட்டு

பன்னிரண்டு, பதிமூன்று நூற்றாண்டுகளில் வட்டக் கோட்டையும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் பாண்டியர்கள் ஆட்சியில் இருந்தது என்பதற்கு இலக்கிய கல்வெட்டு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

 கி. பி. 1132 முதல் 1169 வரை ஆண்ட பாண்டியன் மாறவர்மன் ஸ்ரீ வல்லபன் காலத்துக் கல்வெட்டு ஒன்று சுசீந்திரத்தை சுந்தரபாண்டிய சதுர்வேதிமங்கலம் என அழைக்கின்றது. 

கி. பி. 1209 ஆம் ஆண்டு தோன்றிய வேறொரு கல்வெட்டு நாஞ்சில் நாட்டுச் சுசீந்திரமான சுந்தரபாண்டிய சதுர் வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகிறது. கி. பி. 1201 ஆம் ஆண்டு தோன்றிய ஒரு கல்வெட்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் கிடைத்துள்ளது. 

“பாண்டிய நாட்டுப் புறத்தாய நாடான தென் வாரணவாசி நன்னாட் குமரி பகவதியார் கோயில்” என அக்கல்வெட்டு கூறுகின்றது. பதினேழாம் நூற்றாண்டிலே இப்பகுதியில் தோன்றிய செண்பகராமன் பள்ளு என்ற நூல் குமரித் துறையை பாண்டிய நாடு என்று தான் குறிப்பிடுகின்றது. 

பதினெட்டாம் நூற்றாண்டிலே தான் கன்னியாகுமரி திருவிதாங்கூர் மாநிலத்திலே சேர்க்கப்பட்டது என்று வரலாற்றிலிருந்து நாம் அறியலாம். .

கடல் வாணிபத்திற்கு ஏற்ற இடம் துறை எனப்பட்டது. இக்காலத்தில் அதனைத் துறைமுகம் என்பர். பாண்டிய நாட்டில் கொற்கை, உவரி, குமரி இத்துறைகள் கடல் வாணிபத்திற்கு சிறந்து விளங்கின ஆதாரங்கள் காணப்படுகின்றன. 

இவற்றுள் கொற்கையும், குமரியும் முத்துக்கொழிக்கும் துறைமுகப்பட்டினங்களாகத் திகழ்ந்தன . பதினேழாம் நூற்றாண்டிலே தோன்றிய குமரகுருபரர்.

“கோடும் குவடும் பொருதரங்கக் 

குமரித் துறையில் படுமுத்தும் 

கொற்கைத் துறையில் துறைவாணர் 

குளிக்கும் சலாபக் குவான் முத்தும்” 

எனப் புகழ்ந்து வியந்து பாடுகின்றார். கொற்கைத் துறை முத்துக்கு ஒத்தது குமரித்துறை முத்து என்பதை அவர் கூற்றிலிருந்து நாம் அறியலாம்.

புனிதர் தோமையார்

தென் குமரியில் ஒரு பெரிய துறைமுகம் இருந்தது என்று கி.பி. 85-ல் தோன்றிய பெரிப்பிளஸ் என்ற நூல் குறிப்பிடுகின்றது. இதைக் “குமரியம் பெருந்துறை” என பண்டைய தமிழ் இலக்கியங்களான புறநானூறும், சிலப்பதிகாரமும் உறுதிப்படுத்துகின்றன. 

வட்டக் கோட்டையை அடுத்து கடற்கரையோரத்திலே ஒரு கலங்கரை விளக்கத்தின் தடயத்தை நாம் இன்றும் காணலாம். இன்று இக்கடற்கரை லீபுரம் என அழைக்கப்படுகிறது.

லீபுரத்தை அடுத்துள்ளது குமரி முட்டம். இங்கு இயேசுபிரானின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனிதர் தோமையார் வருகை தந்தார் என்றும், இங்குள்ள தொம்மையார் ஆலயத்தின் முன்னால் காணப்படும் குருசடி அவரால் எழுப்பப்பட்டுள்ளது என்றும் கூறுவர். 

இங்கு கிடைத்த ஒரு கல்வெட்டு கி. பி. 1494-ஆம் ஆண்டு தோன்றியதாகும். ”குமரி முட்டத்தில் பள்ளிக்கு விளக்கு வைக்கும்படி வெளிச்செண்ணெய்க்கு கோவை குளத்தில் துறையில் ஏற்று இறக்கு உரு ஒன்றுக்கு பணம் ஒன்றாகவும், விலை விற்ற சாம்பானுக்கு பணம் ஒன்றாகவும் எடுத்துக்கொள்ளும்படி” என்று இக்கல்வெட்டில் காணப்படுவதால் குமரித்துறை எப்போதும் கப்பல் ஏற்றுமதி, இறக்குமதி நடந்து கொண்டிருந்த ஒரு துறைமுகப்பட்டினமாக இருந்திருக்கவேண்டும் எனத் தெரியவருகிறது.

இக்கருத்துக்களை வைத்து நோக்கும்போது, முத்துக் கொழிக்கும் குமரித் துறைக்குக் காவலாகவும், கடல் வாணிபத்திற்கு உறுதுணையாகவும் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது தான் இவ்வட்டக் கோட்டை என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

பாண்டியர் ஆட்சிக்குப் பின்னால் கி. பி. 1635-ஆம் ஆண்டு திருமலை நாயக்கர்படையும், கி.பி. 1725-ஆம் ஆண்டு அழகப்ப முதலியார் படையும் நாஞ்சில் நாட்டுக்கு வந்து கோட்டை கொத்தளங்களை அழித்து, நாட்டையும் கொள்ளையடித்தனர். 

கி. பி. 1740-ஆம் ஆண்டு முகிலன் படை நாஞ்சில் நாட்டிலே புகுந்து வட்டக் கோட்டையிலே தாவளமிட்டு கொள்ளையடித்தது. அதனால் நாட்டுமக்கள் வரிகொடுக்க முடியாமல் திண்டாடினர். அப்போது வேணாட்டை ஆண்டுவந்த மன்னர் வரிச்சலுகை தந்து ஒரு நீட்டோலை அனுப்பினார்.

கொட்டாரம்

அந்த நீட்டோலையில் ‘கிழக்கு நின்றும் முகிலன் படை வந்து நாஞ்சில் நாட்டு கொட்டாரத்தில் பாளையஞ் செய்திருக்கையில் நாஞ்சில் நாட்டில் படைச்சேதம் வருககொண்டு நாட்டார் கூடி…’ என்று எழுதப்பட்டுள்ளது. இங்கு கொட்டாரம் என்பதை அதனை அடுத்துள்ள வட்டக் கோட்டை என்று  கொள்ளலாம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் இரண்டாவது பிரகாரத்தில் ஒரு சிறு கோயில் உள்ளது. இங்குக் காணப்படும் தேவியின் பெயர் கோட்டையம்மன். 

முகிலன் இங்கு படையெடுத்துவந்த காலத்தில் கோயிலுக்குள் வந்து தேவியின் திருவுருவச்சிலையை எடுத்து வட்டக் கோட்டையினுள்ளே வைத்திருந்தான் என்றும், அதனால் அவனுக்கு இடையூறுகள் நேர்ந்தன என்றும், நண்பர் சிலரது ஆலோசனையின் பேரில் திருவுருவச்சிலை திரும்பவும் கோயிலுக்கு அனுப்பப் பட்டது என்றும் கர்ணபரம்பரைக்கதை ஒன்று கூறுவர். 

தேவியின் திருவுருவச்சிலை கோட்டையின் உள்ளே சிறிது காலம் இருந்ததால் அது கோட்டையம்மன் என்ற பெயரைப் பெற்றது என்பர். வட்டக் கோட்டையில் பாண்டிய மன்னர்கள் வணங்கிய திருவுருவச்சிலை தான் கோட்டையம்மன் என்று கூறுவாருமுளர்.

வட்டக் கோட்டை
வட்டக் கோட்டை

வேணாட்டு மன்னர்கள்

கொல்லம் ஆண்டு 949 ஐப்பசி மாதம் 6-ம் நாள் வேணாட்டு மன்னர் மார்த்தாண்டவர்மா அவனது தளபதி டிலனாயின் ஆலோசனையின்படி வட்டக் கோட்டையை புதுப்பித்து ஒரு பேரரணாக அமைத்தார். கடல் வழியாக வரும் பகைவர்களைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் கோட்டை கொத்தளங்கள் சீரமைக்கப்பட்டன. 

பீரங்கியை மேலே கொண்டுபோய் கடலை நோக்கிச் சுடுவதற்கு கல்லிலே சாரம் கட்டியுள்ளனர். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை நாட்டிலிருந்து விரட்டியடிக்கப் போராடிய புரட்சி வீரர் தளவாய் வேலுத்தம்பியை அடக்கி ஒடுக்குவதற்கு கி. பி. 1806 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் நாள் ஆரல்வாய்மொழி வழியாக வந்த கர்னல் லீகர் கடுக்கரை-கன்னியாகுமரிக் கோட்டையின் பெரும்பகுதியைத் தகர்த்துவிட்டான். 

கடலோரத்திலே அமைந்துள்ள வட்டக் கோட்டை எப்படியோ மிஞ்சியது. அந்த கர்னல் லீகரின் பெயரால் வட்டக் கோட்டையின் அடுத்த பகுதி லீபுரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வட்டக் கோட்டையில் நெடுநாளாக திருவிதாங்கூர் படையின் ஒரு பகுதி தாவளமிட்டிருந்தது.

இவ்வாறு வட்டக் கோட்டை பாண்டியர்கள் வரலாற்றிலும், சேரர் வழிவந்த வேணாட்டு மன்னர்கள் வரலாற்றிலும் சிறந்ததொரு இடத்தைப் பெற்று வரலாறு கண்ட கோட்டையாக குமரி மாவட்டத்திலே இன்றும் காட்சி தருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *