வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்த அற்புதமான பயண அனுபவத்தை உங்களுடன் தொடராக பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இது ஐந்தாவது அத்தியாயம்.
‘குடை எடுக்காமல் வெளியே போகாதே!’ என்ற எழுதப்படாத விதி ஷில்லாங்கில் இருக்கிறது. இது தெரியாமல் சாப்பாடு முடிந்தவுடன் குடையில்லாமல் காரில் ஏறிவிட்டோம்.
ஒரு 100 அடி கூட கார் நகர்ந்திருக்காது, லேசாக தூறலாக ஆரம்பித்த மழை, அடித்துக் கொண்டு கொட்டத் தொடங்கியது. இதனால் நகரத்துக்குள் பார்க்க வேண்டிய பல இடங்களை விட்டு விட்டு தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு போகத் தொடங்கினோம்.

முதல் கோல்ஃப் மைதானம்
மழைப் பொழிந்து கொண்டிருக்கும்போதே ஷில்லாங் கோல்ஃப் மைதானத்தில் வாகனம் நின்றது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கோல்ஃப் மைதானம் இதுதான்.
கொல்கத்தாவை தலைநகராக கொண்டு இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளையர்களுக்கு ஷில்லாங் தான் அருகில் இருந்த ஒரே குளுமை பிரதேசம்.
அதனால் தங்களின் நிர்வாக தலைநகராக ஷில்லாங்கை வைத்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் உருவாக்கியதுதான் இந்த பசுமையான கோல்ஃப் மைதானம்.
இங்கிருக்கும் ஒவ்வொரு இடமும் உலகின் மற்றொரு இடத்தோடு ஒத்துப் போவதுதான் ஆச்சரியம்! இந்த கோல்ஃப் மைதானமும் அமெரிக்காவில் இருக்கும் ‘க்ளென் ஈகிள் கோல்ஃப்’ மைதானம் போல அழகாக இருப்பதாக வெளிநாட்டினர் சொல்கிறார்கள்.
இந்த அழகு மைதானத்தை உருவாக்குவதற்குள் வெள்ளையர்களுக்கு போதும் போதுமென்றாகி விட்டதாம். அடர்ந்து நின்றிருந்த பைன் மரங்களையும் ‘ரோடோடென்ரான்’ என்ற கொத்து கொத்தாக மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு வகை புதர்ச் செடிகளையும் அகற்ற மிகவும் போராடியிருக்கிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு உருவாக்கிய மைதானம்தான் இன்று அழகின் இருப்பிடமாக இருக்கிறது.
‘ஷில்லாங் பீக்’
அதற்கடுத்து நாங்கள் போன இடம் மேகாலயாவின் உயரமான இடமான ‘ஷில்லாங் பீக்’. 1965 மீட்டர் உயரம் கொண்ட இந்தப் பகுதி இந்திய விமானப் படையின் ரேடார் நிலையமாக இருக்கிறது. இது பாதுகாக்கப்பட்ட பகுதி. கேமராவை கையில் எடுத்தாலே பாதுகாவலர்கள் ஓடி வந்து விடுகிறார்கள். போட்டோ எடுக்க தடையுள்ள இடம் இது.
அதைக் கடந்து போனால் உச்சிக்கு வந்து விடுகிறோம். அங்கு ஒரு காட்சி கோபுரம் இருக்கிறது. அதில் நின்று பார்த்தால் தொலைவில் தெரியும் ஷில்லாங் நகரை முழுமையாக பார்க்க முடிகிறது. அதுவொரு நிறைவான அனுபவம்.
இங்கிருக்கும் கடைகளில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பறவையின் சிலையை விற்கிறார்கள். இதை வாங்கி வீட்டில் வைத்தால் மழை பெய்யும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.
ஓயாமல் மழைப் பொழியும் இந்த இடத்தில் கூட இன்னும் மழை வேண்டி ஒரு சிலை வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த உயரமான முகடில் இருந்து பார்க்கும்போது பசுமை பள்ளத்தாக்கு போல சுற்றிலும் மலைகள் சூழ்ந்து காணப்படுகிறது. அதற்கு நடுவே ஷில்லாங் நகரம் கான்கிரீட் காடாக தெரிகிறது.
தூவானம் விட்டிருந்த வேளை என்பதால் குளுமையும் இனிமையும் ஒரு சேரக் காட்சி தந்தது தூரத்தில் தெரிந்த ஷில்லாங் நகரம்!
‘எலிஃபெண்ட் ஃபால்ஸ்’
ஷில்லாங்கின் ‘பீக் வியூ பாய்ண்டு’க்கு சென்று மனம் குளிர இயற்கையையும், ஷில்லாங் நகரின் முழுத்தோற்றத்தையும் பார்த்து ரசித்த எங்களின் பயணம், அடுத்ததாக நகர்ந்த இடம் யானை அருவி. அதாவது ‘எலிஃபெண்ட் ஃபால்ஸ்’.
இயற்கையையும் பசுமையையும் தனது பிறப்புரிமை என்பதுபோல் எங்கு பார்த்தாலும் அழகோடு காட்சித் தருகிறாள் மேகாலயத் தாய். இங்கிருக்கும் நல்ல சாலை வசதி பயணத்தை மேலும் சுலபமாக்குகிறது.
ஷில்லாங் நகரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு வந்ததே தெரியவில்லை. அத்தனை வசீகரமான இயற்கை நம்மை தாலாட்டிக்கொண்டே வருகிறது.
அருவியை நெருங்கியதும் நீர் விழும் ஓசை கேட்கிறது. வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சின்னச் சின்னக் கடைகள் இருகின்றன. அதில் காட்டில் விளையும் பலவகையான விளைப்பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.
அங்கிருந்து அருவிக்கு கீழே இறங்கி செல்லும் விதமாக ஒரு நடை பாதை அமைத்திருக்கிறார்கள். ஷில்லாங் வரும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் இடங்களில் இந்த அருவிக்கு மிக முக்கிய பங்கிருக்கிறது.
பிஷப் நீர்வீழ்ச்சி
இங்கிருக்கும் மக்கள் இதை ‘கா கஷித் லாய் பதெங் கோஷிவ்’ என்று அழைக்கிறார்கள். இதற்கு மூன்றடுக்கு அருவி என்று அர்த்தமாம். உண்மையில் மூன்றடுக்காகத்தான் அருவி விழுகிறது.
ஆரம்ப காலத்தில் இந்த அருவி விழும் பாறை யானை உருவத்தில் இருந்ததாம். அதனால்தான் இதற்கு ஆங்கிலேயர்கள் எலிஃபெண்ட் ஃபால்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
1897-ல் ஏற்பட்ட பெரிய பூகம்பத்தால் அந்தப் பாறை உடைந்து விழுந்து நொறுங்கியுள்ளது. அதனால் அருவியில் இப்போது யானையில்லை. ஆனாலும், பெயரில் இருக்கிறது.
இவை போக இதன் அருகில் இருக்கும் 135 மீட்டர் உயரம் கொண்ட பிஷப் நீர்வீழ்ச்சியும், 120 மீட்டர் உயரம் கொண்ட பீடன் நீர்வீழ்ச்சியும் இங்கு மிகவும் பிரபலம்.
அருவியை பார்த்துவிட்டு திரும்புவர்களுக்கு காசி இன மக்களின் பாரம்பரிய பழங்குடி உடையை வாடகைக்கு தருகிறார்கள். அதற்கு ரூ.50 கட்டணம் பெற்று கொள்கிறார்கள்.
அவர்களே நமக்கு அலங்காரமாக உடை உடுத்தி, கையில் வாள், கேடயம் எல்லாம் கொடுத்து கொஞ்ச நேரத்துக்கு ஆதிவாசியாகவே மாற்றிவிடுகிறார்கள். படம் வேண்டுமென்றாலும் உடனே எடுத்து ‘பிரிண்ட்’ போட்டும் கொடுத்து விடுகிறார்கள்.
-இன்னும் பயணிப்போம்…

ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.