ஷில்லாங் நகருக்கு அருகில் இருக்கும் யானை அருவியை பார்த்து முடித்ததும் மீண்டும் எங்கள் பயணம் ஷில்லாங் நகரை நோக்கி இருந்தது. கொஞ்ச நேரம் அடங்கியிருந்த மழை மீண்டும் தூறல் போடத்தொடங்கியது.
நாங்கள் எல்லோரும் வேனுக்குள் இருந்ததால் மழையை ரசித்துக் கொண்டே பயணித்தோம்.
கத்தோலிக்க கதீட்ரல் தேவாலயம்
எங்கள் வேன் ஷில்லாங்கின் மிகப் பெரிய பாரம்பரிய தேவாலயமான ‘கத்தோலிக்க கதீட்ரல் தேவாலயம்’ முன் நின்றது.
1980-ல் நூற்றாண்டு விழா கொண்டாடிய இந்த தேவாலயத்தில் 30,000 மக்கள் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்ய முடியும்.

இந்த தேவாலயத்தில் 14 சிலுவைகள் உள்ளன. இங்கிருக்கும் 3 லட்சம் கத்தோலிக்கர்களுக்கு தலைமை வழிப்பாட்டுத்தலமாக இந்த தேவாலயம் விளங்குகிறது.
இதன் பிரமாண்டம் நம்மை பிரமிக்க செய்கிறது. ஷில்லாங் சுற்றுலாப் பட்டியலில் இதற்கு தனியிடம் உண்டு.
வாட்ஸ் ஏரி
அடுத்து நாங்கள் சென்றது நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் ‘வாட்ஸ் ஏரி’க்கு. இந்த நகரில் தலைமை ஆணையராக இருந்த வில்லியம் வாட்ஸ் என்பவரின் நினைவாக இந்த ஏரி உருவாக்கப்பட்டது.
இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளுக்கு நல்ல இளைபாறுதல் தரும் இடம். ஏரியைச் சுற்றி அசத்தும் பூங்காக்களும், சின்னச் சின்ன உணவகங்களும், ஓர் அருங்காட்சியகமும் இருக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் மேகாலய மக்களின் வாழ்க்கை முறையும், மலைகளில் கிடைக்கும் அரிதான தாவரங்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
ஏரியில் இளைப்பாறிவிட்டு மேலும் சில இடங்களை பார்க்கலாம் என்றிருந்தோம் அதற்குள் மழையும் இருளும் எங்கள் அனைவரையும் அறைகளை நோக்கி விரட்டியடித்தன.
மாலை 4.30 மணிக்கே இங்கு இரவு தொடங்கிவிடுகிறது.
இரவு உணவு
இரவு என்றதுமே இரவு உணவு நினைவுக்கு வருகிறது. அதை நினைத்தால் வாழ்க்கையே வெறுத்து விடும். அத்தனை மோசமான சாப்பாடு. நான்கு நாட்களாகவே நல்ல சாப்பாட்டிற்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.
அன்றும் போலீஸ் பஜாரில் இருக்கும் ஒரு ஓட்டலில் நுழைந்தோம். தோசை ஆர்டர் கொடுத்து அமர்ந்திருந்தோம். வாயில் ஒரு துளிக்கூட வைக்கமுடியாத அளவுக்கு புளிப்பு.
தோசை மட்டுமல்ல, இட்லி, சட்னி, சாம்பார் எல்லாமே மூளையில் ‘சுர்’ரென்று ஏறும் புளிப்பு. உணவை பேருக்கு சாப்பிட்டு பசியோடு படுக்கைக்குப் போனோம்.
மீண்டும் ‘மெட்ராஸ் கஃபே’
மறுநாள் காலை, நாங்கள் மீண்டும் ‘மெட்ராஸ் கஃபே’ ஹோட்டலுக்குச் சென்றோம். அங்கு இட்லி, தோசை, சட்னி, சாம்பார் எதுவும் புளிக்கவில்லை. சுவையாக இருந்தது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு உயர்தரமான சைவ ஹோட்டலில் என்ன ருசியிருக்குமோ அந்த ருசி அப்படியே அங்கிருந்தது. இந்த அற்புதமான ஹோட்டலை அறிமுகப்படுத்திய விஜயனுக்கு நன்றி சொன்னோம்.
‘போனஸ்’ ராஜரத்தினம்
அந்த ஹோட்டலில் இருந்த ஒரு மனிதர் எங்களை இன்முகத்தோடு வரவேற்றார். உற்சாகமாக பரிமாறினார். சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தார்.
அந்த மனிதர் எங்களை மிகவும் கவர்ந்து விட்டார். கண்டிப்பாக இவரைப் பற்றி அவரது எஜமானரிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, ‘ஹோட்டல் முதலாளியை பார்க்கணும்’ என்றபோது, ‘பாத்துகிட்டேதான் இருக்கீங்க.. சொல்லுங்க..!’ என்றார் அவர்.
ஆச்சரியப்பட்டுப் போனோம். அவர்தான் அந்த ஹோட்டலின் முதலாளி.
அதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லாமல் ஒரு வேலையாள் போல் சுழன்று கொண்டிருந்தார்.
அவர் பெயர் ராஜரத்தினம். ‘போனஸ்’ என்றால் இங்கு அனைவருக்கும் தெரியும்.
புளிப்பு
திருச்சிக்காரரான இவர் மத்திய பாதுகாப்பு படை வேலையில் சேர்ந்து, அதன்பின் இங்கு சொந்தமாக இரண்டு ஹோட்டல்கள் ஆரம்பித்து இன்று ஷில்லாங்கில் மிக முக்கிய புள்ளியாக மாறியிருக்கிறார்.
தான் ‘ஹோட்டல் ஆரம்பிப்பதற்கு காரணமே இந்த புளிப்புதான்’ என்கிறார்.
‘இந்த ஊரில் ஹோட்டல் வைத்திருக்கும் வட இந்தியர்கள் அனைவரும் தென்னிந்தியர்கள் மிகவும் புளிப்பாக சாப்பிடுபவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் அவர்களின் உணவுகளில் வாயில் வைக்க முடியாத அளவிற்கு புளிப்பு இருக்கும். அவர்களுக்கு நாங்கள் எவ்வளவு சுவையாக சாப்பிடுபவர்கள் என்று காண்பிப்பதற்காகவே இந்த ஹோட்டலைத் தொடங்கினேன்.’ என்றார்.

‘தி குஷின்’
தற்போது தென்னிந்திய உணவுக்காக மெட்ராஸ் கஃபேயும், பன்னாட்டு உணவுக்காக ‘தி குஷின்’ என்ற நவீன ஹோட்டலையும் நடத்தி வருகிறார். இவர் மூலம் மேகாலய சபாநாயகரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.
வாழ்வில் மறக்க முடியாத நபர் போனஸ் ராஜரத்தினம். எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். ஷில்லாங்கில் இருக்கும் வரை எங்களுக்கு சுவையான உணவு கொடுத்தவர் இவர்தான்.
சிரபூஞ்சியை நோக்கி
காலை உணவு முடிந்ததும் எங்கள் பயணம் உலகில் அதிக மழைப் பொழியும் இடமான சிரபூஞ்சியை நோக்கி இருந்தது.
இரண்டு வாகனங்களில் எங்களின் பயணம் தொடங்கியது. ஷில்லாங்கில் இருந்து சிரபூஞ்சி செல்லும் சாலை மலைப் பாதையாக இருந்தாலும். சமதளத்தில் பயணிப்பது போலவே இருந்தது.
வளைந்து நெளிந்து சாலை சென்றாலும், அதில் மேடு பள்ளம், கொண்டைஊசி வளைவுகள் என்று எதுவும் இல்லாமல் போடப்பட்டிருக்கிறது.
சாலையின் இரண்டு பக்கமும் நம்மை கடந்து செல்லும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் பேரழகை நம் கண்களுக்கு விட்டுச் செல்கின்றன. இந்த அழகிய காட்சிகளை எல்லாம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டுமே கண்டு ரசிக்க முடியும்.
மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இங்கு மழை மிக அதிகம் இருப்பதால் எப்போதும் இருண்டே காணப்படும். இயற்கையை ரசிக்க விடாமல் மேகமும் திரை போட்டுவிடும். அதனால் அந்த மாதங்களில் இங்கு வருவதை தவிர்ப்பது நல்லது.
-இன்னும் பயணிப்போம்…

ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.