Shillong Watch Tower

நார்த் ஈஸ்ட்-4: காய்கறி, ஆடு, கோழி எல்லாம் ஒரே பஸ்ஸில்..!

நார்த் ஈஸ்ட் பகுதியில் சுற்றுலா சென்ற இனிய அனுபவத்தை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். அந்தவகையில் இது நான்காவது அத்தியாயம்.

உமியம் ஏரி மேகாலயாவின் சிறந்த சுற்றுலாத்தலம். இங்கு நீர் விளையாட்டுக்கென்று தனியிடம் உண்டு. சாகஸப் பிரியர்களுக்கு இதுவொரு அற்புதம் நிறைந்த இடம்.

இந்த அற்புதத்தை ரசிக்காமல் போக மனமில்லை. அதனால், நாங்களும் வண்டியை ஓரங்கட்டி கீழே இறங்கி ரசித்தோம்.

இந்த அழகிற்கு எங்களின் கண்பட்டு விடக்கூடாது என்று வானம் நினைத்தது போல, மேகம் மெல்ல கீழிறங்கி முழு ஏரியையும் போர்வைப்போல் மூடிக் கொண்டது.

சாமி தரிசனம் போல் ஏரி அழகை சில நொடிகள் மட்டுமே தரிசித்தோம். இந்த ஏரியிலும் ‘லும்நேரு பார்க்’ என்று ஒரு பூங்கா இருக்கிறது. குழந்தை குட்டிகளோடு குடும்பமாக போய்வர ஏற்ற இடம் இது.

மீண்டும் எங்கள் பயணம் தொடங்கியது. இங்கிருந்து இன்னும் 15 கி.மீ. தொலைவில் ஷில்லாங் வந்துவிடும்.

மேகாலயா

ஷில்லாங் பிரிக்கப்படாத அஸாம் மாநிலத்தின் தலைநகராக 1972 வரை இருந்தது. அதன்பின் மேகாலயா என்ற புதிய நார்த் ஈஸ்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது மேகாலயாவிற்கு ஷில்லாங்கும், அஸாமுக்கு திஸ்பூரும் தலைநகரங்களாக நிர்ணயம் செய்யப்பட்டன.

ஷில்லாங் நகரம் பறவை பார்வையில்
ஷில்லாங் நகரம் பறவை பார்வையில்

ஷில்லாங் பார்ப்பதற்கு சீனாவிலுள்ள ஷங்க்ரிலா போன்றே உள்ளதாக கூறுகிறார்கள். ஷில்லாங் என்ற பெயர் ‘யூ ஷிலாங்’ என்ற பெயரில் இருந்து வந்தது.

இதுவொரு உள்ளூர் தெய்வத்தின் பெயர். ஷில்லாங்கிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிகரத்தில் அந்த தெய்வம் வசிப்பதாக பழங்குடி மக்கள் நம்புகிறார்கள்.

இயேசுநாதர் போல் ஒரு கன்னித் தாய்க்கு மகனாய் பிறந்தவர்தான் ‘யூ-ஷிலாங்’. காட்டையும் காத்து தங்களையும் காக்கும் அந்த தெய்வத்தின் பெயரைத்தான் இந்த இடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

‘மேகங்களின் உறைவிடம்’

மேகாலயா மாநிலத்தின் தலைநகராக ஷில்லாங் இருக்கிறது. இந்தியாவின் சின்ன மாநிலங்களின் வரிசையில் இதுவும் ஒன்று. மொத்தமே இரண்டரை லட்சம் பேர்தான் மாநிலம் முழுவதும் வாழ்கிறார்கள்.

மேகாலயா என்பதற்கு ‘மேகங்களின் உறைவிடம்’ என்று அர்த்தம். அது உண்மைதான் என்பதை அடிக்கடி மேகங்கள் நம்மை சூழ்ந்து கொண்டு நிரூபிக்கின்றன. எப்படியோ ஒருவழியாக கௌஹாத்தியிலிருந்து ஷில்லாங் வந்து சேர்ந்தோம்.

கடல் மட்டத்திலிருந்து 1,496 மீட்டர் உயரத்தில் நாங்கள் இருந்தோம்.


நம்மூர் வெயிலுக்குப் பயந்து குளிரைத் தேடி ஓடி வந்த வெள்ளையர்கள் கட்டிவைத்த காலனி பாணிக் கட்டடங்கள் பழமையை பறைசாற்றியப்படி நின்று கொண்டிருக்கின்றன.

ஷில்லாங் ஒரு நடுத்தரமான நகரம். நகரின் மையப்பகுதியாக பெரிய ரவுண்டானா ஒன்று இருக்கிறது.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் எட்டு சாலைகள் இந்த ரவுண்டானாவில் தான் ஒன்றிணைகின்றன. ‘ஹார்ட் ஆஃப் த சிட்டி’ என்று இந்த இடத்தைத்தான் அந்த மக்கள் சொல்கிறார்கள்.

மெட்ராஸ் கஃபே

ஹோட்டல்கள் எல்லாம் இதைச் சுற்றித்தான் அமைந்திருக்கின்றன. எங்களுக்கும் அங்குதான் ஒரு ஹோட்டல் ஒதுக்கப்பட்டிருந்தது. சுமாரான அறைதான். கட்டிலுக்கு மட்டும்தான் அறையில் இடம் இருந்தது. ஒரு அறைக்கு இருவர் என்ற கணக்கில் தங்கினோம்.

மூன்று நாள் பயணக் களைப்பு நீங்க வெந்நீரில் குளியல் போட்டோம். குளித்து முடித்ததும் அகோரப்பசி எடுத்தது.

ஒரு தரமான ஹோட்டலுக்கு எங்களை விஜயன் அழைத்துச் சென்றார். ‘மெட்ராஸ் கஃபே’ என்ற அந்த ஹோட்டலை திருச்சியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் நடத்தி வருகிறார்.

இட்லி, தோசை, சாம்பார், சட்னி, காபி என உணவில் தமிழ் மணம் கமகமவென கமழ்ந்தது. மூன்று நாட்கள் கழித்து, சுவை மறந்திருந்த நாக்கிற்கு மிகத் திருப்தியான சுவை மிகுந்த உணவு.

மெய்மறந்த நாங்கள் உணவு உண்டு முடிந்ததும் ஊரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

ஷில்லாங்கை ஒரு தனித்துவமான நகரம் என்றுதான் சொல்ல வேண்டும். நாமெல்லாம் 10 வருடங்களுக்கு முன்பே ஓரங்கட்டிவிட்ட மாருதி 800 கார்கள்தான். இங்கு நகர் முழுவதும் டாக்ஸிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

நம்மூரில் ஷேர் ஆட்டோ என்றால், இங்கு ஷேர் டாக்ஸி..! 10 ரூபாய் கொடுத்து எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம்.

School Children in Northeast
பாட்டியுடன் பள்ளிக் குழந்தைகள்

பஜார் பஸ்


பஸ்ஸும் அப்படித்தான். ஷில்லாங்கின் தலைநகர் முழுவதும் இரண்டு விதமான பஸ்கள் ஓடுகின்றன.

ஒன்று சிட்டி பஸ். மற்றொன்று பஜார் பஸ்.


சிட்டி பஸ் சுற்றுலா பயணிகளுக்கானது. எங்கு வேண்டுமானாலும் ஏறிக் கொண்டு, நினைத்த இடத்தில் இறங்கிக் கொள்ளலாம். டிக்கெட் விலை வெறும் 5 ரூபாய்தான்.

ஆனாலும், இந்த பஸ்ஸில் பயணிக்க நீங்கள் மிகப்பெரிய பொறுமைசாலியாக இருக்க வேண்டும். இந்தப் பஸ்ஸின் வேகமும் நீங்கள் நடக்கும் வேகமும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும்.

ஒரு ஸ்டாப்பில் பஸ் நின்றால் கூட்டம் நிறையும் வரை அங்கேயே நிற்கும், அல்லது அடுத்த பஸ் வரும் வரை நிற்கும். கால அட்டவனையெல்லாம் இவர்களுக்கு கிடையவே கிடையாது.

இந்த பஸ்ஸில் செலவதைவிட நாம் காலாற நடந்தால் கூட பஸ்ஸுக்கு முன்னால் சென்று சேர்ந்து விடலாம். பஸ்ஸின் வடிவம் கூட வெள்ளையர் ஆட்சியை நினைவுப்படுத்துவது போல் அவ்வளவு பழசு.

பஜார் பஸ், இப்படியொன்றை வேறு எங்கும் கேள்வி பட்டதில்லை. பக்கத்து கிராமங்களில் இருந்து காய்கறி, பழங்கள், கோழி போன்றவற்றை விற்பனை செய்ய வரும் கிராமத்து மக்களை ஏற்றி வரும் பஸ்.

இந்த பஸ்ஸில் ஏற நமக்கு அனுமதியில்லை. இதில் பாதி இடத்திற்கு மேல் காய்கறிகள்தான் அடைத்துக் கொண்டு இருக்கும்.
இங்கு வாழும் மக்கள் மிகவும் நூதனமான கலாசாரம் கொண்ட நார்த் ஈஸ்ட் மலைவாழ் மக்கள்.

பழங்குடிகள்

காஷிஸ், ஜெயின்டியாஸ், காரோஸ் என்ற மூன்று வகையான பழங்குடிகள் இங்கு வாழ்கிறார்கள். இவர்களில் பழமையான கலாசாரம் கொண்ட மக்களும் இருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய மேற்கத்திய நவீன கலாசாரம் கொண்ட மக்களும் இருக்கிறார்கள். இருவகையான மக்களும் இணைந்த நகரம் இது.

‘குடை எடுக்காமல் வெளியே போகாதே!’ என்ற எழுதப்படாத விதி ஷில்லாங்கில் இருக்கிறது. இது தெரியாமல் சாப்பாடு முடிந்தவுடன் குடையில்லாமல் காரில் ஏறிவிட்டோம்.

அது எத்தனை அபத்தமான காரியம் என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்தது.

-இன்னும் பயணிப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *