நார்த் ஈஸ்ட் என்று அழைக்கப்படும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நான் மேற்கொண்ட பயணத்தின் அற்புதமான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது பயணத்தின் மூன்றாவது அத்தியாயம்.
நதிகளின் பிரமாண்டத்தை பார்க்க வேண்டும் என்றால் நாம் வடஇந்தியாவில் பயணித்தே ஆக வேண்டும். ஒவ்வொரு நதியும் கிமீ கணக்கில் அகலமாக இருக்கின்றன. நதிகளில் நீர் நிரம்பி ஓடுகிறது. கோதாவரி, கங்கை போன்ற நதிகளின் பிரமாண்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

சில்கா ஏரி
எங்கள் ரயில் பயணத்தில் ஒரு சுற்றுலாத் தலமும் கூடவே பயணித்தது. அதன் பெயர் சில்கா ஏரி. கடல் போல் பரந்து விரிந்து கிடக்கும் அந்த ஏரியின் அழகு மாலை நேரத்தில் நீலவண்ணத்தில் இன்னமும் அழகாக தெரிந்தது.
ஆயிரத்து நூறு சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த ஏரி, 132 கிராமங்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மீனவர்கள் இந்த ஏரியில் மீன் பிடித்து பிழைப்பு நடத்துகிறார்கள். 160 வகையான பறவையினங்கள் இங்கு வாழ்கின்றன.
குளிர் காலங்களில் மங்கோலியா, ரஷ்யா, காஷ்மீர் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் இடம் பெயர்ந்து இந்த ஏரிக்கு வருகின்றன. இங்கு வரும் ப்ளமிங்கோ பறவைகளைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் கூடுகிறார்கள்.
நீர் சாகஸ விளையாட்டுக்கும் இந்த ஏரி புகழ் பெற்றது. இதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். பயணத்தில் இப்படி ஜன்னலோரத்தில் இருந்து இயற்கையை ரசித்துக் கொண்டே பயணிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
‘நியூ ஜல்பைகுரி’
இரவு 8 மணிக்கு ‘நியூ ஜல்பைகுரி’ என்ற ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. இங்கிருந்து 7 கிமீ தொலைவில் நான் தொடக்கத்தில் கூறியிருந்த சிலிகுரி என்ற இடம் இருக்கிறது. இதுதான் வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயில்.
கிட்டத்தட்ட 24 கிமீ அகலம் கொண்ட இந்த குறுகிய நிலவெளிதான் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவோடு இணைக்கின்றன. வட மேற்கில் நேபாளமும் வடக்கில் பூட்டனும், தென் கிழக்கில் பங்களாதேஷமும் எல்லைகளாக உள்ளன.
மக்களின் வாழ்க்கைத்தரம் இங்கு மிகவும் மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் பழங்குடி மக்கள் தாங்கள் பெற்ற பெண் குழந்தைகள் வயதுக்கு வந்ததும் வெறும் 500 ரூபாய்க்கு விற்று விடுவார்களாம்.
அந்தளவிற்கு வறுமை இங்கு வாட்டியெடுப்பதாக விஜயன் சொன்னபோது அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளவே முடியவில்லை.
அந்த அதிர்ச்சியோடு தூங்கப்போனேன். ரயில் பயணத்தில் மூன்றாவது இரவு இது. இங்கு வெகு சீக்கிரமே இருட்டி விடுகிறது. சீக்கிரமே விடிந்தும் விடுகிறது. காலையில் கண் விழிக்கும் போது அஸாம் மாநிலத்தின் காமாக்யா ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்தது.
கௌஹாத்தி
இன்னும் ஏழு கிமீ தொலைவில் நாங்கள் இறங்க வேண்டிய கௌஹாத்தி ரயில் நிலையம் இருக்கிறது. எங்களின் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானோம்.
கௌஹாத்தி ரயில் நிலையத்தில் நாங்கள் பயணித்து வந்த திப்ரூகர் எக்ஸ்பிரஸ் நின்றது. நாங்கள் இறங்க வேண்டிய இடம் அதுதான். சரியாக வரவேண்டிய நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் வந்து சேர்ந்திருந்தது.
55 மணி நேர பயணத்தில் ஒரு மணி நேர தாமதமெல்லாம் பெரிய விஷயமில்லை. வட கிழக்குப் பிராந்தியத்தில் முதன் முதலாக வலது காலைப் பதித்து இறங்கினோம்.
சிறியதும் இல்லாமல், பெரியதும் இல்லாமல் நடுத்தரமாக இருந்தது கௌஹாத்தி ரயில் நிலையம்.
இந்தியாவின் பிஸியான ரயில் நிலையங்களில் ஒன்று என்பதற்கான எந்தவொரு அடையாளமும் கண்ணில் படவில்லை. வெகு சாதாரணமான ஒரு ரயில் நிலையமாகவே அது இருந்தது.
ஷில்லாங் நோக்கி
லக்கேஜை தூக்கிக் கொண்டு சுற்றிப் போவது சிரமம் என்று எங்களை குறுக்கு வழியில் அழைத்துப்போனார் விஜயன். ரயில்வே டிராக்குகளை கடந்து போனதால் ரயில் நிலையத்தை முழுமையாக பார்க்கும் வாய்ப்பும் இல்லாமல் போனது.
டிராக்குகளைக் கடந்துப் போனதும் அங்கு எங்களுக்காக இரண்டு டாடா சுமோக்கள் காத்திருந்தன. முடிந்தவரை எங்களை அதற்குள் திணித்துக் கொண்டோம். நிறைமாத கர்ப்பிணிப் போல் திணறிக்கொண்டு வாகனங்கள் புறப்பட்டன.
இப்போது எங்கள் பயணம் கௌஹாத்தியிலிருந்து ஷில்லாங்கை நோக்கி இருந்தது. 105 கிமீ தூரத்தை நான்கு மணி நேரத்துக்கு மேலாக கடந்தோம்.
55 மணி நேர ரயில் பயணம் தராத சிரமத்தை இந்த நான்கு மணி நேர சாலைப் பயணம் தந்தது. அதற்கு காரணம் காருக்குள் நிலவிய இட நெருக்கடிதான்..!

இனிமையாக்கிய இயற்கை
அந்த சிரமத்தை எல்லாம் மறந்து பயணத்தை இனிமையாக்கியது இயற்கைதான்..! வடகிழக்கு மாநிலங்களுக்கு இயற்கை வளத்தையும், அழகையும் அள்ளிக் கொடுத்திருக்கிறது. அந்த அழகை ரசித்தபடி மலைப்பாதையில் பயணிப்பது ஆனந்த அனுபவம்.
மலைப்பாதை வளைந்து நெளிந்து சென்றது. கிட்டத்தட்ட நான்கு வழிச்சாலை போல் இருந்தது. அதில் ஒரு பாதியில் மழை தன்னோடு அடித்துச் சென்ற சாலையை சரி செய்யும் பணி நடந்துக் கொண்டிருந்தது.
இயற்கையின் சாம்ராஜ்யம் இங்கிருந்தே தொடங்கி விட்டது. ஒரு பக்கம் மேகத்தை தொட்டு நிற்கும் உயர்ந்த மலைகளும், மறுபக்கம் அதல பாதாளத்தில் புல்வெளிகளும், இவற்றின் மேல் உலா வரும் மேகங்களும் நம்மை மற்றொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
ஸ்காட்லாந்த் ஆஃப் ஈஸ்ட்
கௌஹாத்தியிலிருந்து ஷில்லாங் போகும் சாலையில் பாதி தூரத்தைக் கடந்ததும், நம்மோடு ஒரு சிறிய நதி கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் சலசலப்பு ஆங்காங்கே இனிமையாக கேட்கும்.
அந்த நதியின் பெயர் உமியம். அது சென்று சேரும் இடம் உமியம் ஏரி.
இதை ஏரி என்று சொல்வதைவிட அணைக்கட்டு என்று சொல்லலாம். இந்தப் பகுதிக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக இந்த அணைக்கட்டை கட்டினார்கள். 1965-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
220 சதுர கிமீ நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்ட இந்த நீர்த்தேக்கம் ‘உமியம் லேக்’ என்ற பெயர் பெற்றது. ஷில்லாங்கிற்கு ‘ஸ்காட்லாந்த் ஆஃப் ஈஸ்ட்’ என்ற பெருமையை பெற்றுத் தந்ததில் இந்த ஏரிக்கு மிகப் பெரிய பங்குண்டு.
ஸ்காட்லாந்த் நாட்டில் இருக்கும் ‘லோக்ஸ்’ ஏரியைப் போலவே இதுவும் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது. இதுபோக இந்த ஏரிக்கு ‘பராபாணி’ என்ற உள்ளூர் பெயரும் இருக்கிறது.
அதற்கு ஏராளமான நீர் என்று அர்த்தம். இந்த ஏரியைப் பார்க்கும் போது அது எவ்வளவு உண்மை என்பது தெரியும். அந்தளவுக்கு எங்கும் நீர்..! நீர்..!! நீர்தான்..!!!
-இன்னும் பயணிப்போம்…

ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.