Kadhal Sugamanathu

காதல் ஏன் சுகமானதாக இருக்கிறது? அறிவியல் தரும் விளக்கம்

‘சொல்லத்தான் நினைக்கிறன்… சொல்லாமல் தவிக்கிறேன்… காதல் சுகமானது…’

மனதை சுண்டியிழுக்கும் இந்தப் பாடல் காதலர்களுக்கு ஒரு தேசிய கீதம் போல இதயத்தில் ஒட்டிக்கொள்ளும் சுகம். அதற்கு காரணம் இந்தப் பாடலில் வரும் ‘காதல் சுகமானது’ என்ற வரிகள்தான். 

திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்க்கும்போதும் சரி, காதல் கதைகளைப் படிக்கும் போதும் சரி இனம் புரியா ஒரு பரவசம் வந்து மனதை ஆட்கொள்கிறது. அது ஒரு அற்புதமான உணர்வு. 

சிலர் அதை காமம் என்று சொல்கிறார்கள். அது காமம் என்று சொல்லப்பட்டாலும் அது முழுமையான காமம் அல்ல. அதேபோல், சிலர் அதை நேசம் என்கிறார்கள். அது நேசம் என்று சொல்லப்பட்டாலும் அது முழுமையான நேசமும் அல்ல. அது இரண்டும் கலந்த அற்புதம். 

நாகரிக மனிதர்கள் 

காதல் கடவுளைப் போல, பிரபஞ்ச ரகசியத்தைப் போல யாராலும் இதுதான் என்று முழுமையாக வரையறுத்து சொல்ல முடியாத ஒன்று. மனிதன் காட்டுவாசியாக இருந்து நாகரிக மனிதனாக மாறுவதற்கு காதல் மிக முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.  

கவிஞர்கள் காதலை மாய்ந்த்து மாய்ந்து எழுதுகிறார்கள். இப்படி யார் யாரோ என்னென்ன விளக்கங்கள் தந்தாலும் கூட, காதல் ஏன் இத்தனை ரம்மியமாக இருக்கிறது?

காதல் வந்தால் உலகம் சட்டென்று மாறிவிடுகிறது. சொர்கலோகமாக தெரிகிறது. எல்லோரும் நல்லவர்களாக மனதுக்குள் தோன்றுகிறார்கள். மனம் உற்சாகமடைகிறது. மனம் முழுக்க நேசம் நிறைந்து கொள்கிறது. 

இந்தப் பதிவை காணொளியாகவும் காணலாம்

அறிவியல் விடை

காதல் ஒருவனை சாதிக்க வைக்கிறது. யாரும் போகமுடியாத உயரத்திற்கு போக வைக்கிறது. அதே காதல் மதுவுக்கு அடிமையாகி பரதேசிபோல் சாகடிக்கவும் செய்கிறது. 

காதல் ஏன் இப்படி இரண்டு விதங்களில் மனிதனை பாதிக்கிறது? இதற்கு அறிவியல் தொடர்ந்து விடைகளை தேடி வருகிறது. அந்தத் தேடுதலுக்கு இப்போது சில விடைகள் கிடைத்திருக்கின்றன. 

காதல் ஏன் இத்தனை சுகமானது? என்ற கேள்விக்கு அறிவியல் விடை கொடுத்திருக்கிறது. 

இந்த ஆராய்ச்சியை சீனா நடத்தியுள்ளது. 

சீன விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கு 102 பேரை எடுத்துக்கொண்டார்கள். இவர்கள் எல்லாம் ஒரே வயது கொண்டவர்கள். ஒரே மாதிரியான சமூக அமைப்பில் இருந்து வந்தவர்கள். 

இவர்களில் 34 பேர் கொண்ட குழுக்களாக மூன்று குழுக்களை உருவாக்குகினார்கள். ஒரு குழுவில் இருப்பவர்கள் காதலித்துக் கொண்டிருப்பவர்கள். மற்றொரு குழுவில் இருப்பவர்கள் காதலில் தோல்வி கண்டவர்கள். 

இந்த இரண்டு குழுக்களைத் தவிர மூன்றாவதாக ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவில் இருப்பவர்கள் எவரும் இதுவரை காதலிக்காதவர்கள். அதாவது காதலில் ஈடுபடாதவர்கள். 

இவர்களை பரிசோதனை செய்ததில் இதுவரை காதல் குறித்து உலகம் அறிந்திடாத பல அறிவியல் உண்மைகள் வெளிவந்தன. 

அறிவியல் ஆய்வு 

அதன்படி காதலித்துக் கொண்டிருப்பவர்களின் மூளையின் செயல்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. மூளைப் பகுதிகளான ‘டார்சல் ஆன்டீரியர் சிங்குலேட் கார்டெக்ஸ்’, இன்சுலா, காடேட், அமிக்டாலா, நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸ், டெம்போ ரொபாரிட்டல் சந்திப்பு,  போஸ்டேரியர் சிங்குலேட் கார்டெஸ், மீடியல் ப்ரீஃப்ரன்டல் கோர்டெக்ஸ், இன்ஃபீரியர் பாரிட்டல் லோபுல், ப்ரிக்யூனியஸ் போன்றவை அதிகமான செயற்பாடுகள் கொண்டிருந்தன. 

இந்த மூளைப் பகுதிகளின் முக்கியமான செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

டார்சல் ஆன்டீரியர் சிங்குலேட் கார்டெக்ஸ்‘ என்ற மூளைப் பகுதி அறிவாற்றல் மற்றும் மோட்டார் கட்டுப்பாட்டைக் கொண்டது. 

இன்சுலா‘ என்ற மூளைப் பகுதி; சுவை, உள்ளுறுப்பு உணர்வு மற்றும் தன்னியக்கக் கட்டுப்பாடு போன்ற அடிப்படை உயிர்வாழும் தேவைகள் தொடர்பான மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

உணர்ச்சி நினைவுகள்

காடேட்‘ என்ற பகுதி, இது நியூக்ளியஸ் இயக்கத்தின் செயல்பாட்டைத் திட்டமிடுவதில் மட்டுமல்லாமல், கற்றல், நினைவகம், வெகுமதி, ஊக்கம், உணர்ச்சி மற்றும் காதல் தொடர்பு ஆகிய செயல்பாடுகளைக் கொண்டது.

அமிக்டாலா‘ என்பது மூளையின் அடிப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பாதாம் வடிவ செல்களின் தொகுப்பாகும். ஒவ்வொருவருக்கும் இரண்டு செல் குழுக்கள் உள்ளன, மூளையின் ஒவ்வொரு அரைக்கோளத்திலும் ஒன்று உள்ளது. இது உணர்ச்சிகளை வரையறுக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இவை உணர்ச்சி நினைவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸ்‘ மையமானது வெகுமதி, வலுவூட்டல் மற்றும் மெதுவான அலை தூக்கத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான மோட்டார் செயல்பாட்டின் அறிவாற்றல் செயலாக்கத்தில் ஈடுபாடு கொண்டது.

டெம்போ ரொபாரிட்டல் சந்திப்பு‘ என்பது மூளையின் மற்றொரு பகுதி ஆகும். இது காட்சி, செவிப்புலன் மற்றும் சோமாடோசென்சரி அமைப்புகளில் இருந்து தகவல்களை ஒருங்கிணைத்துப் பெறுகிறது.

போஸ்டேரியர் சிங்குலேட் கார்டெஸ்‘ என்ற பகுதி இயல்புநிலை பயன்முறை நெட்வொர்க்கில் மைய முனையாக உள்ளது. கவனத்துடன் வேலை செய்யும் நினைவகம் அல்லது தியானம் போன்ற பணிகளின் போது விரைவாக செயலிழக்கச் செய்கிறது.

நினைவகம் மீட்பு 

மீடியல் ப்ரீஃப்ரன்டல் கோர்டெக்ஸ்‘ என்ற இந்தப் பகுதி முடிவெடுப்பதில் மத்தியஸ்தம் செய்கிறது. நீண்ட கால நினைவகத்தை மீட்டெடுப்பதில் வினாடிகள் முதல் நாட்கள் வரையிலான நேர அளவீடுகளில் ஒருங்கிணைக்கிறது.இன்ஃபீரியர் பாரிட்டல் லோபுல் என்ற மூளைப் பகுதி, முகத்தின் தூண்டுதல்களில் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதிலும், உணர்ச்சித் தகவல்களின் விளக்கத்திலும் கணித செயல்பாடுகள் மற்றும் உடல் உருவம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.


ப்ரிக்யூனியஸ்‘ என்பது பல்வேறு சிக்கலான செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு மூளைப் பகுதி ஆகும். இதில் நினைவாற்றல் மற்றும் நினைவகம், சுற்றுச்சூழலைப் பற்றிய கருத்து தொடர்பான தகவல் ஒருங்கிணைப்பு, ஐ க்யூ வினைத்திறன், மனப்பாட உத்திகள் ஆகியவை அடங்கும்.


மூளையின் இத்தனை செயல்பாடுகளும் காதலிப்பதால் அதிகரித்திருக்கிறது. அதேவேளையில் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கும், காதல் வயப்படாதவர்களுக்கும் மூளையின் இந்த செயல்பாடுகள் எல்லாம் காதலிப்பவர்களை காட்டிலும் மிகக் குறைவாகவே இருந்துள்ளன. 


மூளையின் இந்த பகுதிகளின் செயல்பாட்டை தூண்டிவிடும் சக்தி ஆக்சிடோசின் மற்றும் செரோட்டின் போன்ற மூளை கெமிக்கல்களுக்கு உண்டு. இது சுரக்கும்போது மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. 


அதன் மூலம் மூளை இன்பத்தை உணர்கிறது. மூளை இன்பத்தை உணர்வதால் உலகம் சொர்கலோகமாக தெரிகிறது. ரசனை மேலோங்குகிறது. அன்பு பெருகுகிறது. இவையெல்லாம் காதலால் நடக்கிறது. 


சவாலான விஷயம் 


சரி, இந்தக் காதல் வந்தவுடன் எப்படி இந்த கெமிக்கல்கள் ஸ்விட்ச் போட்டதுபோல் சுரக்கின்றன? என்பது இன்னமும் அறிவியலுக்கு சவாலான விஷயமாகவே இருக்கிறது. 


அதேபோல் மூளையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பதையும் சொல்ல முடியவில்லை. மூளையில் சுரக்கும் இந்த கெமிக்கல்களை பரிசோதித்து ஒருவர் உண்மையாகவே காதலிக்கிறாரா?இல்லையா? என்று சொல்லிவிட முடியுமா என்றால், அறிவியல் அதற்கு இன்னமும் இல்லை என்ற பதிலைத்தான் கொடுக்கிறது. 
ஆனால், காதல் என்பது ஓர் ஈர்ப்பு, ஒரு மாயை, அது ஒன்றும் உண்மையில்லை என்று சொல்பவர்களுக்கு அறிவியல் அற்புதமான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. வரும் காலங்களில் இன்னும் கூடுதல் விளக்கங்களை கொடுக்கும் என்று நம்புவோமாக..!

Leave a Reply

Your email address will not be published.