Karthigai MahaDeepam

கார்த்திகை தீபம் தோற்றம் முதல் பூஜை வரை அபூர்வ தகவல்கள்

கார்த்திகை தீபம் தோற்றம் முதல் பூஜை வரை அபூர்வ தகவல்கள் இந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்ளது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலை – உலகின் நடுநாயகமாக எழுந்தருளிய ஜோதிமலை, மலையே மகேசனாக அருள்பாலிக்கும் அண்ணாமலை. நினைக்க முக்தித் தரும் திருநகரம், அடிக்கொரு லிங்கம் அமைந்த திருவண்ணாமலை ஒரு அருள்நகரம். இங்குள்ள மண்ணும் மகேசனே, மலையும் மகேசனே. இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் வழிபட்ட சுயம்பு வடிவான அண்ணாமலையே, அஷ்ட திக்குகளிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் தென்னகத்து கைலாயம்.

மெய்யுருக, விழியில் நீர்பெருக, உயிர் கசிந்துருக காணும் மெய்நிலையாம், அடி முடி காணாத அருட்பெரும் ஜோதியை தரிசிக்க முற்பிறவி பயன் வேண்டும்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை – அருணாசலம். அருணாசலம் என்றால் அருணம் + அசலம்.  அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. இது நெருப்பு மலை. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறார். இம்மலையின் மிக முக்கிய சிறப்பு இங்கு ஏற்றப்படும் கார்த்திகை தீபத் திருவிழா

கைலாயத்தில் ஈசன் ஏகாந்த தவத்தில் ஆழ்ந்திருந்த போது உமை, ஈசனின் பின்புறமாய் வந்து நின்று விளையாட்டாய் அவர் இரு கண்களைப் பொத்தினாள். அதனால் உலகம் இருண்டது. ஈசனின் வல, இடக் கண்களான சந்திர, சூரியர்கள் களையிழந்தனர். நெற்றிக் கண்ணாகிய அக்னியும் அன்னையின் கைவிரல் பட்டுக் குளிர்ந்து போனது. அதனால் வேள்விகள் தடைப்பட்டன. யாகங்களும், பூஜைகளும் இல்லாமல் போயின. 

உலகத்தில் அருள் ஒழிந்தது. இருள் சூழ்ந்தது. உலகங்கள் இருண்டதால் முனிவர்களும், தேவர்களும் அஞ்சினர். மதி மயங்கினர். கடமைகளை மறந்து முடங்கினர். அதனால் உலகம் தன் நிலையிலிருந்து தவறியது. இதனால் சினம் கொண்டார் ஈசன்.

தேவியின் விளையாட்டு

உமை விளையாட்டாய் இந்தச் செயலைச் செய்திருந்தாலும் அது மிகப் பெரிய தவறு என்பதால், அன்னையைச் சபித்தார். அன்னை அஞ்சி நடுங்கி பிழை பொறுக்குமாறு வேண்ட, “தேவி, நீ விளையாட்டாகச் செய்தாலும் தவறு, தவறுதான். ஆதலால் நீ பூவுலகம் சென்று தவம் மேற்கொள்வாயாக! தக்க காலத்தில் யாம் வந்து உம்மை ஆட்கொள்வோம்” என்று கட்டளையிட்டார்.

அன்னையும் அவ்வாறே ஈசனின் கட்டளைப்படி பூவலகிற்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தாள்.  அவ்வாறு அன்னை தவம் செய்து ஈசனின் அருள் பெற்று, சாப நிவர்த்தியான தலம் தான் அண்ணாமலை.

சாப நிவர்த்தி மட்டுமல்ல; ஈசனின் உடலில் சரி சமமாக இடப்பாகம் பெற்றாள். அன்னை கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற அந்த நன்னாள் தான் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அர்த்த நாரீஸ்வரராக எல்லாம் வல்ல சிவன் தோன்றிய அற்புதத்தலம்.

”எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்தார். அதுவே தீபத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாபலி சக்ரவர்த்தி

மகாபலி சக்ரவர்த்தி மூலம் வேறொரு கதையும் இருக்கின்றது.

ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது.

எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் வேண்டினார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.

தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இறங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது.

இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது.

கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி

மலை நுனியில் காட்டா நிற்போம்

வாய்த்து வந்த சுடர்காணில்

பசிபிணி இல்லாது உலகில் மன்னி வாழ்வார்

பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு

தவிரும் இது பணிந்தோர் கண்டோர்

கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு

முத்திவரம் கொடுப்போம் 

என்கிறது அருணாசல புராணம்

தீப தரிசனம் பாவ விமோசனம்.

புத்திதரும் தீபம் நல்லபுத்திரசம் பத்துமுண்டாம்

சித்திதரும் தீபம் சிவதீபம் – சக்திக்கு

உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்

பயிராகும் கார்த்திகைத் தீபம் – என்கிறது தீப வெண்பா.

‘குன்றத்து உச்சிச் சுடர்’ என்று சீவக சிந்தாமணி இதன் சிறப்பை விரித்துரைக்கிறது. அருணாசலத்தை கார்த்திகை தீபத்தின் போது வலம் வருவது மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லதாகும்.

கிரிவலம்

அருணாசலத்தில் தீபம் ஏற்றும் போது அண்ணா மலையாரையும், உண்ணாமுலை யம்மனையும் தரிசித்து விட்டுச் செய்யப்படும் கிரிவலத்தினால் அதுவரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும். கிரிவலத்தினை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து செய்வது அவன் அதுவரை செய்த அனைத்து பாவங்களையும் நீக்கி அவனை பரிசுத்தனாக்க வல்லது. பதினோரு நாட்கள் தொடர்ந்து செய்யும் கிரிவலம் அவனுடைய வினைகளை நீக்கி, ஸகல ஸம்பத்துக்களையும் கொடுக்கும்

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

பரணி தீபம்

தீபத்திருநாள் அன்று  அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள்.

பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர்.

ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை அண்ணாமலையில் ஏற்றுவதுதான் எத்தனை பாக்கியம்!

நினைத்தாலே மெய் சிலிர்க்க செய்யும் இத்திருப்பணியை, தொன்றுதொட்டு நிறைவேற்றும் பெருமையை பெற்றிருப்போர் பருவத ராஜகுலத்தினர்.

திருவண்ணாமலையில் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்.

திருவண்ணாமலை நகரில் மட்டும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களில், ஐந்து வம்சாவழிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர்.

அண்ணாமலையில் தீபம் ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு கிடைத்த வரம்:

பருவத ராஜகுல வம்சத்தின் வழி வந்த, பருவதராஜனின் அருந்தவப் புதல்வியாக அவதரித்தார் பார்வதி தேவி. பருவத ராஜகுலத்தினர் மீன் பிடி தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் என்றும், செம்பொன்னால் செய்யப்பட்ட படகில் சென்று மீன் பிடித்ததால் செம்படவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

மகா தீபம்

பார்வதி தேவியார் அவதரித்த மரபைச் சேர்ந்தவர்கள்தான், தொன்றுதொட்டு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

முன்னொரு காலத்தில், பிரம்ம ரிஷிகளின் தியானத்தை கலைக்கும் வேலையில் அசுரர்கள் ஈடுபட்டனர். பிரம்ம ரிஷிகள் கோபப்படும்போது, அவர்கள் மீன் உருவாக மாறி, கடலுக்குள் சென்று மறைந்துகொள்வார்கள். அசுரர்களை அழித்து, தம் தவம் சிறக்கச் செய்யுமாறு சிவபெருமானிடம் ரிஷிகள் முறையிட்டனர்.

அடியார்களின் இன்னலை உணர்ந்த சிவபெருமான், பருவதராஜனை அழைத்தார். கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார். அதற்கு உதவியாக ஞான வலையையும், தேவதச்சனான விஸ்வகர்மா உருவாக்கிய செம்பொன் படகையும் அளித்தார். கடலுக்குள் விரைந்து சென்ற பருவதராஜன், மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து கரையில் போட்டார்.

மீனமகரிஷி

அசராத அசகாய சூரர்களான அசுரர்கள், மீண்டும் மீண்டும் கடலுக்குள் துள்ளி குதித்து மறைந்தனர். சோர்வடைந்த பருவதராஜா, மகள் பார்வதியிடம் உதவி கேட்டார். மனம் இறங்கிய பார்வதிதேவி, கடல் நடுவே அகோர உருவில் வாய் திறந்து நின்று மீன்களை எல்லாம் விழுங்கி அழித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அசுரர்களுக்கு விரித்த வலையில், கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீனமகரிஷி சிக்கி கரைக்கு வந்தார்.

தவம் கலைந்த கோபத்தில், “உமது ராஜவம்சம் அழிந்து, மீன் பிடித்துதான் வாழ வேண்டும்,” என்று பருவதராஜாவுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ந்த பருவதராஜா, ஓடோடிச்சென்று சிவனிடம் முறையிட்டார். கருணை கொண்ட சிவன், கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக காட்சித் தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ வம்சத்தினர்தான் நிறைவேற்ற வேண்டும்.

ஜோதியை தரிசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா எனும் முழக்கத்தின் புண்ணியமெல்லாம் பருவதகுலத்திற்கே சென்று சேரும் என வரம் அருளினார். அதன்படியே, காலம் காலமாக பருவத ராஜகுலத்தினர் திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றும் பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

48 நாட்கள் விரதம்

தீபம் ஏற்றுவதற்காக தேர்வு செய்யப்படும் 5 பேர், ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருக்கிறார்கள். தீபம் ஏற்றும் நாட்டார்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்படும். பின்னர், அண்ணாமலையார் சந்நதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து,  மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு மண் சட்டியில் வைத்து சிவாச்சாரியார்கள் வழங்குவார்கள்.

மேளதாளம் முழங்க மலைமீது வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மண்சட்டியில் ஏந்திச்செல்லும் தீபச்சுடரை, அணையாமல் 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டுசெல்வார்கள். மலை மீது வைக்கப்பட்டுள்ள மகா தீப கொப்பரையில் நெய்யும், திரியும் இட்டு அதன் மீது, கற்பூர கட்டிகளை குவிப்பார்கள்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் மாலை 5.58 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சிதருவார். அப்போது, கோயில் கொடிமரம் எதிரே பரதவர்  மரபைச் சேர்ந்தவர்கள் அகண்ட தீபம் ஏற்றுவார்கள். அதைத்தொடர்ந்து, அண்ணாமலை உச்சியில்  மகா தீபத்தை ஏற்றுவார்கள்.

மகா தீபத்தை ஏற்றும் அந்த நொடிப்பொழுது, இறைவனின் திருவடியை பற்றியிருப்பதைப்போல உணர்வு எழும் . அனைவருடைய கண்களிலும் உணர்வுகளிலும் தீபம் மட்டுமே நிறைந்திருக்கும்.

“மகா தீபத்தை ஏற்றும் சுடரை, சிவாச்சாரியார்களிடமிருந்து பெற்றுச்செல்லும் அவர்கள், மலை மீது ஏறுவதற்கு முன்பு பாவ பிராயச்சித்தம் வேண்டுதல் நடத்துவது வழக்கம்.

11 நாட்கள் பிரகாசிக்கும்

திருவண்ணாமலையே இறைவன். எனவே, மலை மீது கால் வைத்து ஏறிச்செல்வது பெரிய பாவம். ஆகவே, மலையடிவாரத்தில் உள்ள குகை நமசிவாயர் கோயில் அருகில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருப்பாதத்தின் முன்பு ‘மூவுலகை காக்கும் ஈசனே, உமது திருப்பணியை நிறைவேற்றவே மலை மீது பயணிக்கிறோம். எங்களை மலை மீது அனுமதியும்’ என்று உளமாற பிரார்த்தித்துக்கொண்ட பிறகே அவர்களின்  பயணம் தொடர்கின்றது.

தீபம் ஏற்றும் போது, சிவபுராணம் பாடப்படுகின்றதுசிவனுக்கு உகந்ததான சங்கொலி முழங்கப்படும். மகா தீபம் மலை மீது தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும். ஒவ்வொரு நாளும், அண்ணாமலையார் கோயிலில் இருந்து தீபம் ஏற்றுவதற்கான கற்பூரம் மற்றும் திரியை  அவர்கள் பெற்றுச் செல்வது வழக்கம்.

பருவத ராஜகுல மரபினர் மாமலை மீது மகா தீபம் ஏற்றும்போது, அவர்கள் சங்கொலி முழங்க அண்ணாமலையாரை போற்றுவார்கள்.

கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஜோதியாய்

மலைமீது நிற்கும் அண்ணாமலை போற்றி..!

உண்ணாமுலை அம்பிகைக்கு இடபாகம் அளித்து

அர்த்தநாரீஸ்வரராய் நிற்கும் அண்ணாமலை போற்றி..!

“சீல முனிவோர்கள் செறியு மலை..

சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..

ஞான நெறி காட்டு மலை..

ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..

அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை..

அன்பருக்குமெய்ஞானச் சோதி விளக்கு மலை

ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை

அண்ணாமலை”-

கிருத்திகை நட்சத்திரத்திற்கு அதிஷ்டான தேவதை அக்னி. எனவே கிருத்திகை நட்சத்திரத்துடன் கூடிய கார்த்திகைப் பெளர்ணமி தினத்தில் பகவானுக்கு தீபம் ஏற்றுவது நல்லது.

தீபங்கள் பதினாறு

1. துபம், 2. தீபம், 3. அலங்கார தீபம், 4. நாக தீபம், 5. விருஷப தீபம், 6. புருஷாமிருக தீபம், 7. சூல தீபம், 8. கமடதி (ஆமை) தீபம், 9. கஜ (யானை) தீபம், 10. வியாக்ர (புலி) தீபம், 11. சிம்ஹ தீபம், 12. துவஜ (கொடி) தீபம், 13. மயூர (மயில்) தீபம், 14. பூரண கும்ப (ஐந்து) தட்டு தீபம், (15) நட்சத்திர தீபம், 16. மேரு தீபம்.

தீபம் ஏற்றும் முறைகள் பத்து 1. தரையில் வரிசையாக ஏற்றுதல், 2. தரைமீது கோலம் போட்டு வட்டமாக தீபம் ஏற்றுதல் 3. சித்ர தீபம், 4. மாலா தீபம், 5. அடுக்கு தீபம், 6. ஆகாச தீபம், 7. ஜல தீபம் (நீரில் மிதக்கவிடுவது) 8. நெளகாதீபம் (படகு போன்று கட்டி பெரிய தீபமாக ஏற்றி நீரில் மிதக்க விடுவது) 9. கோபுர தீபம் (கோயில் கோபுரங்களின் மீது தீபம் ஏற்றுதல்) 10. ஸர்வ தீபம் (இல்லத்தில் முழுவதும் தீபம் ஏற்றுதல்)

விளக்கேற்றுவதன் பலன்கள் :-

நெய்தீபம் – ஞானம் ஏற்படும்.

நல்லெண்ணெய் தீபம் – எம பயம் அணுகாது.

இலுப்பை எண்ணெய் தீபம் – ஆரோக்கியம்

விளக்கெண்ணெய் தீபம் – சகல செல்வமும் கிடைக்கும்

ஒரு முக தீபம் – மத்திம பலன் தரும்

இரண்டு முக தீபம் – குடும்பம் ஒற்றுமை தரும்

மூன்று முக தீபம் – புத்திர சுகம் தரும்

நான்கு முக தீபம் – பசு, பூமி, சுகம் தரும்

ஐந்து முக தீபம் – செல்வம் பெருகும்.

கிழக்கு நோக்கி தீபமேற்ற – துன்பங்கள் நீங்கி பீடை விலகும்

மேற்கு நோக்கி தீபமேற்ற – கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.

தெற்கு நோக்கி தீபமேற்ற – எம பயம் போக்கும்

வடக்கு நோக்கி தீபமேற்ற – திருமணத்தடை, சுபகாரியத்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

ஒளியில் தேஜஸ் ஆக இருக்கிறேன் என கண்ணபிரான் கீதையில் அருளி உள்ளார். ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் திருக்கோவில் கருவறையில் எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கில் சேர்க்கப்படும் நெய்யானது அவ்வுயிரை காப்பாற்றும் சக்தி வாய்ந்ததாகும்.

எளி அனல் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும் என திருமூலர் திருமந்திரத்தில் தீபம் ஏற்றுவதனை அருளியுள்ளார்.

திருக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது சூரியனின் மூலம் இறைவனை அடைந்து உடனுக்குடன் அதற்கான நற்பலன்களை நமக்கு அளிக்கின்றன.

தீப தானம்

இறைவனின் ஆலயத்தில் விளக்கு ஏற்றியவன், தான் விரும்பும் அனைத்து சுகங்ளையும் பெருவான். இவ்வாறு நான்கு மாதங்கள் தொடர்ந்து கைங்கர்யம் செய்பவனும், கார்த்திகை மாதம் முழுதும் கைங்கர்யம் செய்தவனும் வைகுந்தம் செல்வான்.

தீப தானமே சிறந்த விரதமாகச் சொல்லப் பட்டிருக்கின்றது. தீப தானம் செய்பவன் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவான். அவன் தேக ஆரோக்கியம் எப்போதும் நல்ல நிலைமையில் இருக்கும். அவன் கண்கள் குரிய பார்வை பெற்று விளங்கும். விண்னுலகில் அனைவரும் அவன் புகழ் பாடுவர், கார்த்திகை மாதத்தில் தீப தானம் செய்வது எல்லாவித வளங்களையும் நலன்களையும் கொடுக்கும் என்று அக்கினி புராணம் சொல்கின்றது.

கார்த்திகைத் திருநாளன்று காலையில் குளித்த பிறகு சிவனைத் துதிக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து வில்வ இலையால் அர்ச்சிக்க வேண்டும். பருப்பு வடை, பருப்பு வெல்லப் பாயசம், சாம்பார், அன்னம் முதலியவற்றைச் சமைத்துச் சிவன் பார்வதிக்கு படையலிட வேண்டும். இந்த நிவேதனங்கள் காளிக்கும் உகந்தவை என்பதால் அத்தெய்வத்தையும் திருப்தி அடையச் செய்யும் என்பது ஐதீகம்.

அவல் பொரி, நெல்பொரி ஆகியவற்றில் பாகு சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும். உருண்டையாகப் பிடிக்க வராவிட்டாலும் பரவாயில்லை. வெல்ல அப்பம், வேர்க்கடலை உருண்டை ஆகியவற்றைச் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அரோகரா

அகல் விளக்குகளைக் காலையில் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும். பின்னர் அவற்றை எடுத்துச் சுத்தமாகத் துடைத்து, ஆறவிட வேண்டும். சந்தனம், குங்குமம் இட வேண்டும். பஞ்சு அல்லது நூல் திரி போட்டு, நல்லெண்ணெய்விட்டு விளக்குகளைப் பூஜை அறை அல்லது பூஜை அலமாரிக்கு அடியில், கோலமிட்ட மனைபலகையில் அழகாக அடுக்க வேண்டும். திரியின் நுனியில் கற்பூரத்துகள்கள் போட்டு வைத்தால், தீபத்தை எளிதில் ஏற்றிவிடலாம்.

மலையில் அண்ணாமலை தீபம் ஏற்றிய பின் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் போட வேண்டும். பொரி உருண்டை, அப்பம், வேர்க்கடலை உருண்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

வெற்றிலை பாக்கு, பழம், பூவுடன் புதிய விளக்குகளைத் தவறாமல் ஏற்ற வேண்டும். ஏற்றிய விளக்குகளை வாசலில் அணிவகுத்தாற் போல் வரிசையாக வைக்க வேண்டும். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் குளியல் அறை உட்பட அனைத்து இடத்திலும் ஒரு விளக்காவது வைக்க வேண்டும். தீபாவளிக்கு வாங்கிய மீதமுள்ள பட்டாசுகளை வெடித்துத் தீர்த்துவிடலாம். அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று சிவ தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை.

தீபம் ஏற்றுவோம் இருள் நீங்கி ஒளி பெற்று நல்வாழ்வு வாழ்வோம்..!

Leave a Reply

Your email address will not be published.