உலகில் வேறெங்கும் காணமுடியாத வேர் பாலம் இங்குதான் பார்க்க முடியும். இதுவொரு பிரமாண்டம்.
மாவுலின்னாங் கிராமத்தை ‘கடவுளின் சொந்த தோட்டம்’ என்கிறார்கள். உண்மையில் அப்படிதான் உள்ளது. எங்கு பார்த்தாலும் விதவிதமான தாவரங்கள் மனதை சொக்க வைக்கின்றன.
பூச்சிகளை உணவாக உண்ணும் தாவரங்களும் இங்கிருக்கின்றன. சுத்தமான அழகான மனதுக்கு ரம்மியமான ஒரு பூந்தோட்டத்திற்குள் நுழைந்து வந்த திருப்தி தோன்றுகிறது. இங்கு சுத்தம் என்பது மக்களால் மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு நாளின் மாலையிலும் பொதுமக்களே கிராமத்தை சுத்தப்படுத்துகிறார்கள். குழந்தைகளுக்கும் இது கற்றுத்தரப்படுகிறது. அவர்களும் பொறுப்புணர்ந்து செயல்படுவதால் கிராமம் தூய்மையின் இருப்பிடமாக திகழ்கிறது.
இந்தக் கிராமம் சுத்தத்திற்காக மட்டும் சுற்றுலா பயணிகளை இழுக்கவில்லை. இங்கிருக்கும் வேர் பாலங்களும் ஒரு காரணம்.
நமது ஊர்களில் பாலங்கள் இரும்பினாலும் சிமிண்ட் காங்கிரிட்டாலும் அமைக்கப்படுகிறது. இங்குள்ள மக்களோ மரத்தின் வேர்களையும் விழுதுகளையும் இணைத்து பாலங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
வேர் பாலம்
இந்தக் கிராமத்துக்கு அருகில் இருக்கும் வேர் பாலம் 300 வருடங்கள் பழமையானது. இதில் இரண்டடுக்கு வேர் பாலம் மிகவும் பிரசித்திப் பெற்றது.
இத்தகைய வேர் பாலங்களை மனித கைகளைக் கொண்டே உருவாக்குகிறார்கள். ஆற்றின் இரண்டு கரைகளில் இருக்கும் ‘பைக்கஸ் எலாஸ்டிக’ என்ற மரங்களின் வேர் மற்றும் அதன் விழுதுகளைக் கொண்டு இரண்டு மரங்களையும் இணைக்கிறார்கள்.
விழுதுகளும் வேர்களும் வளர வளர அவற்றை ஒன்றுடன் ஒன்றாக பிணைத்து பாலத்தை மேலும் வலிமையாக்குகிறார்கள். இந்த பிணைக்கும் வேலைக்கு எந்தவித கருவியையும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. வெறும் கைகளைக் கொண்டே இந்த பிரமாண்ட வேர் பாலங்களை உருவாக்கி விடுகிறார்கள்.
செயற்கையான பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் இயற்கையான அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பழங்குடி மக்கள் நதிகளைக் கடக்க இப்படியோர் அற்புதத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஸ்கை வீயூ
ஒரு வேர் பாலத்தை உருவாக்க குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தேவைப்படும். ஒரே நேரத்தில் 30 மனிதர்கள் இந்தப் பலத்தின் மீது நிற்கலாம். அதிகபட்சமாக 50 பேரை தாங்கும் திறன் கொண்டது. இயற்கையும் செயற்கையும் இணைந்த இந்த அற்புதம் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமிப்பான ஒன்று.
இந்தக் கிராமத்தில் தங்குவதற்கு வசதிகள் உள்ளன. சில வீடுகளை தங்கும் வசதி நிறைந்ததாக மாற்றியிருக்கிறார்கள். இருவர் ஒரு நாளைக்கு தங்குவதற்கு ரூ.1,500-ம், நான்கு பேர் ஒரு நாளைக்கு தங்க ரூ.3,000-மும் கட்டணமாக பெறுகிறார்கள்.
இந்தக் கிராமத்தில் சிறிய டீக்கடைகளும் மூன்று உணவகங்களும் இருக்கின்றன. மதிய உணவை இங்கு முடித்துக் கொள்ளலாம். உணவின் சுவை குறைவு. விலை மிக அதிகம்.
இங்கு ‘ஸ்கை வீயூ’ என்று ஒரு இடம் இருக்கிறது. மரத்தின் மீது 80 அடி உயரத்தில் மூங்கிலால் ஆன சிறிய காட்சிக் கோபுரம். இங்கிருந்து பங்களாதேஷை பார்க்கலாம்.
இந்தியாவைவிட பங்களாதேஷ்தான் இந்தக் கிராமத்து மக்களுக்கு வசதியாக இருக்கிறது. அரிசி, கோதுமை, முட்டை, காய்கறி என்று எல்லாமே பங்களாதேஷில் இருந்துதான் இங்கு வருகிறது. இந்தியாவைவிட அங்கு பொருட்கள் மலிவு என்கிறார்கள் இவர்கள்.
மாவுலின்னாங் கிராமம்
மாவுலின்னாங் கிராமம் சில சந்தேகங்களையும் நமக்குள் ஏற்படுத்துகிறது. கிராமம் என்றாலே அங்கு விவசாயமும் கால்நடைகளும் தான் பிரதானமாக இருக்கும்.
ஆனால், இங்கு ஆடு, மாடு, பன்றி, நாய் என்று ஒரு விலங்கைக் கூட பார்க்க முடியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள் எதுவும் தென்படவில்லை. இவைகள் எதுவும் இல்லாமல் ஒரு இடம் அசுத்தம் ஆக வாய்ப்பில்லை.
ஒரு பூங்காவை சுத்தமாக பராமரிப்பதுபோல் இந்த கிராமத்து மக்கள் இந்தக் கிராமத்தை சுத்தமாக பராமரிப்பதுபோல் தான் தெரிகிறது. அதை வைத்து சுற்றுலாத் தலமாக மாற்றியதுபோல்தான் இருக்கிறது.
சுற்றுலாவை நம்பித்தான் இந்த மக்கள் வாழ்கிறார்கள் என்பதை இங்கு விற்கும் பொருட்களின் அதிகமான விலையை வைத்தே சொல்லிவிடலாம். இந்த அழகான தூய்மையான கிராமம் முன்மாதிரியாக திகழ்ந்தாலும், மனதில் இப்படி ஒரு எண்ணம் ஏற்படுவதையும் தவிர்க்கமுடியவில்லை.
இங்கு இருக்கும் மற்றோர் அதிசயம். மிகப் பெரிய பாறை ஒன்று ஒரு சிறிய கல்லின் மீது நூற்றுக்கணக்கான வருடங்களாக நிற்பதுதான். இது இயற்கையின் மற்றோர் அற்புதம். இதை பார்ப்பதற்கும் இங்கு சுற்றுலாவாசிகள் வருகிறார்கள்.
-இன்னும் பயணிப்போம்..

ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.