Kannadasan

தமக்குத் தாமே ‘இரங்கற்பா’ப் பாடிய கவியரசர் கண்ணதாசன்

தமக்குத் தாமே ‘இரங்கற்பா’ப் பாடிய கவியரசர்

கண்ணதாசன் 1927-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி காரைக்குடிக்கு அருகிலுள்ள சிறுகூடல்பட்டி என்ற ஊரில் பிறந்தார். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் என்று கவிதையில் கோலோச்சியவர்.

தாம் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தமக்கு இரங்கற்பாப் பாடியவர் கவியரசர் கண்ணதாசன்.

இரங்கற்பா

“போற்றிய என் தலைவனிடம் போகின்றேன்’

என்றவன்வாய் புகன்ற தில்லை;

சாற்றியதன் தமிழிடமும் ‘சாகின்றேன்’ 

என்றவன் வாய் சாற்றவில்லை; 

கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் 

படுத்தவனைக் குவித்துப் போட்டு 

ஏற்றியசெந்தீயேநீ எரிவதிலும்

அவன்பாட்டை எழுந்து பாடு’ 

என்பதுதான் கண்ணதாசன் ‘தனக்குத் தானே பாடிய இரங்கற்பா’. 

இதுமட்டுமா, கண்ணதாசன் உயிரோடு இருக்கும்போதே தாம். இறந்துவிட்டதாக வதந்தியைப் பரப்பியவர். 

தம்முடைய இறப்புச் செய்தியைக் கேட்டு யார், யார் வந்தார்கள், யார், யார் இருந்தார்கள், யார், யார் போனார்கள், அவர்களின் உள்ளத்து உணர்வுகள் எப்படி இருந்தன; தம்மைப்பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்? என்பதை எல்லாம் பார்த்தும் கேட்டும் அறிந்தவர்.

அரசவைக் கவிஞர்

எம். ஜி. இராமச்சந்திரன் முதல்-அமைச்சரானதும் கவியரசர் கண்ணதாசனை வரவழைத்து, “தங்களைத் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்துள்ளேன்” என்றார். புவியரசரின் விருப்பத்தைக் கவியரசரும் ஏற்றுக்கொண்டார்.

“அரசவைக் கவிஞர்” பட்டமளிக்கும் விழா நடந்தது. அப்போது பேசிய அரசவைக் கவிஞர் கண்ணதாசன், “நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்தச் சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் (இறப்புக்குப் பின் நன்றி சொல்ல முடியாதே என்றார்.

“எம்.ஜி.ஆருக்கு முன் கூட்டியே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கண்ணதாசன் கூறிய வார்த்தை பெரியழ்வாரை நினைவுபடுத்தியது.

“எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு 

ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் 

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் 

அரங்கத் தரவணைப் பள்ளியானே!’ 

என்று பாடுவார் பெரியாழ்வார். அதேபோல் கண்ணதாசனும் முன்கூட்டியே நன்றி தெரிவித்தார்.

உடல் நலக் குறைவால் அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்காய்ச் சென்றிருந்த கவியரசர் கண்ணதாசன் அங்கேயே தம் மூச்சை நிறுத்திக் கொண்டார். 

வெறும் உடல்தான் சென்னை திரும்பியது. இறுதி ஊர்வலமும் நடந்தது. 

கண்ணதாசன்
கண்ணதாசன்

நான் நிரந்தரமானவன்

முன்னதாய்க் கண்ணதாசன் உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டது. முதல் அமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் யாரும் எதிர் பாராத வகையில் அந்த வாகனத்தின் மீது ஏறினார். 

கண்ணதாசன் உடலை உயர்த்தி தலையை நிமிர்த்தி கண்ணீரும் கம்பலையுமாய்க் கூடியிருந்த மக்கள் அனைவரும் கள்ளமில்லா முகத்தை நன்கு பார்க்கும்படி காட்டினார். 

பின்பு ஊர்வலம் நடந்தது. கவியரசர் கண்ணதாசன் ஆசைப்பட்டது போலவே அவருடைய உடல் அரசு முழுமரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”

-கண்ணதாசன் 

அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை எம்.ஜி.ஆர் நியமித்தார். 

கண்ணதாசன் அரசியல் கட்சிகளில் கொள்கை மாறி, மாறிப் பயணம் செய்தார். அண்ணாவையும் அவர் மனைவி ராணி அம்மையாரையும் தரக்குறைவாக காங்கிரஸ் மேடையில் பேசியமைக்காகக் கோபமுற்ற காமராஜர் அதே மேடையிலேயே கண்ணதாசனை மன்னிப்புக் கேட்கவும் வைத்தார்.

வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது, மனத்துக்குத் தோன்றியதையெல்லாம் எழுதுவது போன்ற பழக்கங்கள் அவரது நன்மதிப்பைக் குறைக்கவும் செய்தன. 

கட்சிமாறும் போதெல்லாம் யாரையெல்லாம் புகழ்ந்துதள்ளினாரோ அவர்களையெல்லாம் தரக்குறைவாகப் பழிதூற்றவும் செய்தார். இருப்பினும் அரசியல் தலைவர்கள் அவரைப் புறந்தள்ளாமல் அவருக்குப் பதவி, சிலை, மண்டபம், பிறந்தநாள் அரசு விழா எனப் போற்றி மதிப்பளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *