சிரபுஞ்சி செல்லும் சாலையின் இரண்டு பக்கமும் நம்மை கடந்து செல்லும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் பேரழகை நம் கண்களுக்கு விட்டுச் செல்கின்றன. இந்த அழகிய காட்சிகளை எல்லாம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டுமே கண்டு ரசிக்க முடியும்.
மார்ச் முதல ஆகஸ்ட் மாதம் வரை இங்கு மழை மிக அதிகம் இருப்பதால் எப்போதும் இருண்டே காணப்படும். இயற்கையை ரசிக்க விடாமல் மேகமும் திரை போட்டுவிடும். அதனால் அந்த மாதங்களில் இங்கு வருவதை தவிர்ப்பது நல்லது, என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
இனி இந்த அத்தியாயத்தில் உலகில் அதிகம் மழைப்பொழியும் இடங்களில் ஒன்றான சிரபூஞ்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
பயணத்தின் தொடக்கத்தில் லேசாக இருந்த குளிர் போகப் போகக் கூடிக்கொண்டே போனது. கிட்டத்தட்ட 57 கி.மீ. பயணத்தில் தொடக்கத்தில் தெரிந்த சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேகத்துக்குள் தன்னை ஒளித்துக் கொண்டு கண்ணீர்விட தொடங்கினான்.
அது மழைத்துளியாக சிதறிக்கொண்டிருந்தது. பின் மேகம் ஊர்வலமாக போகிறது. அதன்பின் மீண்டும் தூறல் என்று மனதுக்கு ரம்மியமான சூழலை இயற்கை மாறி மாறி உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.
டெயிந்த்லென் அருவி
சிரபுஞ்சிக்கு 5 கி.மீ. முன்பே வருகிறது ‘டெயிந்த்லென் அருவி’. இதுவொரு பிரமாண்ட அருவி. மழைக்காலங்களில் ஆர்பரித்து ஓடும் நீர் நமக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக அருவிகளை நாம் கீழிருந்துதான் பார்க்கிறோம். ஆனால், இந்த அருவியை நாம் மேலிருந்து தான் பார்க்கமுடியும். அருவி நம் பாதத்தில் இருந்து படுபாதாளத்திற்கு பாய்கிறது.
‘த்ளேன்’ என்பது ஒரு பாம்பின் பெயர். அந்தப் பெயரில் ஒரு ராட்சத பாம்பு இங்கிருக்கும் குகை ஒன்றில் வசித்து வந்ததாம். அதன் அட்டூழியம் பொறுக்காமல் மலைஜாதி மக்கள் அதனைக்கொன்று அதன் மாமிசத்தை விருந்தாக உண்டார்களாம்.
அந்த பாம்பின் பெயரையே இந்த அருவிக்கு வைத்திருக்கிறார்கள். மீளா பிரமிப்பில் ஆழ்த்தும் இந்த அருவி சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும் விருந்து.
மவுஸ்மாய் அருவி
சிரபுஞ்சியின் கண்கவர் இடம் என்றால் அது ‘மவுஸ்மாய் அருவி’தான். இதன் அருகில் மவுஸ்மாய் கிராமம் இருப்பதால் இப்படியொரு பெயர்.
கிட்டத்தட்ட 315 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சிகள் இந்தியாவின் நான்காவது உயரமான அருவி என்ற பெயர் பெறுகிறது. ஏழு அருவிகளாய் பிரிந்து விழுவதால் இதற்கு ‘செவன் சிஸ்டர்ஸ் ஃபால்ஸ்’ என்ற பெயரும் உண்டு.
இந்த அருவிகளை சூரிய ஒளியில் பார்க்கும்போது ஒருவிதமான அழகும், மேகம் தவழ்ந்து அருவிகளை உரசும்போது ஒருவித அழகும் தெரியும். மேலிருந்து கீழே விழும் இந்த அருவியின் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ஆரஞ்சுகளின் பூமி
சிரபுஞ்சி என்றால் ‘ஆரஞ்சுகளின் பூமி’ என்று அர்த்தம். உலகில் மிக அதிக மழைப்பொழிவை கொண்ட இடமாக இருந்தாலும், இங்கு தரிசு நிலங்களே அதிகம். அதனால் இங்கு ஆரஞ்சுகளின் விளைச்சல் இல்லை.
ஆனாலும் இங்கிருக்கும் பழங்குடி இனமக்கள் வேறு இடங்களில் விளைந்த ஆரஞ்சை இங்கு விற்பனை செய்கிறார்கள்.
இந்த இடத்தை உள்ளூர் மக்கள் ‘ஸோரா’ என்று அழைக்கிறார்கள். அதையே இப்போது அரசும் அறிவித்துவிட்டது. அதனால், சிரபூஞ்சி என்ற பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.
நோகலிக்காய்
இங்கிருக்கும் மற்றொரு அருவி ‘நோகலிக்காய்’. இதற்கும் ஒரு புராணக்கதை உண்டு. ‘லிக்காய்’ என்ற பெண் தனது கணவனுடன் இங்கு வசித்து வந்தாள்.
இங்குள்ள வழக்கப்படி பெண்கள் வேலைக்கு செல்லும் முறையில் அவளும் வேலைக்கு சென்று வந்தாள். ஒருநாள் வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது கூடையில் குழந்தையின் ஒரு விரல் மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவள், கணவனிடம் அதைப் பற்றிக் கேட்டாள்.
அப்போது இன்னொரு மனைவி குழந்தையைக் கொன்று சமைத்து சாப்பிட்டு விட்டதாக கணவன் சொல்கிறான். இதைக் கேட்ட மாத்திரத்தில் அதிர்ச்சியடைந்த லிக்காய் நேராக ஓடிச் சென்று இந்த அருவியில் விழுந்தாள். அன்றிலிருந்து இந்த அருவிக்கு ‘நோகலிக்காய்’ என்று பெயர் வந்தது.
‘முங்கு’ நீர்வீழ்ச்சி
‘நோ’ என்றால் ‘குதி’ என்று அர்த்தம். ‘கா’ என்பது காஸி மொழியில் பெண்ணை மரியாதையாக அழைக்கும், பெயருக்கு முன்னே வரும் சொல். தமிழில் வரும் திருமதி போன்ற சொல்.
‘நோ-கா-லிக்காய்’ என்ற தனித்தனி சொற்கள் இணைந்து நோகலிக்காய் என்றானது. இதற்கு அர்த்தம் ‘குதி லிக்காய்’ என்பதுதான்.
இந்த அருவி உயரமான இடத்தில் இருந்து, கீழேயிருக்கும் நீலமும் பச்சையும் கலந்த வண்ணத்தில் ஜொலிக்கும் குளத்தில் விழுகிறது. இப்படி விழும் அருவிகளை ‘முங்கு’ நீர்வீழ்ச்சி என்கிறார்கள்.
அதாவது அருவி குளத்துக்குள் சென்று முங்கிவிடுவதாக இதன் பொருள். அந்த வகையில் பார்க்கும்போது இந்தியாவின் உயரமான முங்கு அருவி இதுதான். மழைக்காலங்களில் பெரும் வெள்ளமும் மற்ற காலங்களில் இதமான நீரும் விழும் அருவி இது.
பிரமாண்ட கோணம்
சிரபுஞ்சி அருவிகள் எல்லாமே நாம் மேலிருந்து கீழே விழும் நீரை பார்ப்பது போல்தான் அமைந்திருக்கிறது. அதாவது நாம் அருவிக்கு மேல் இருப்போம். இயற்கை அப்படித்தான் அமைத்திருக்கிறது.
இந்த நோகலிகைக்கு மட்டும் கீழே இறங்கி அருவியை ரசிக்கும் வண்ணம் அருகே படிகட்டுகள் கொண்ட பாதையை அமைத்திருக்கிறார்கள். இதில் இறங்கி அருவியின் முழு அழகையும் பார்க்கலாம்.
இதயநோய், கழுத்து வலி, ஆஸ்துமா போன்ற வியாதிகள் இருப்பவர்கள் கீழே இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். இது அந்தளவிற்கு ஆபத்தான படிக்கட்டுகள்.
ஆனால், இறங்கிப் பார்ப்பவர்களுக்கு இயற்கையின் மற்றொரு பிரமாண்ட கோணம் புலப்படும். அது உங்களை இன்னொரு உலகத்திற்கு கூட்டிச்செல்லும்.
-இன்னும் பயணிப்போம்…
ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.