திருநங்கைகள்

திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? ஏன் இப்படி?

திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா?

திருநங்கைகள் என்ற பெயர் சமூகத்தில் சிக்கலுக்குரியதாகவே மதிப்பீடு செய்யப்படுகின்றது. 2004 இல் தமிழக அரசுதான் திருநங்கை என்ற பெயரை வழிமொழிந்தது. இருந்தாலும், இவர்களை சக மனிதர்களாகப் பார்க்கும் பார்வை நம்மிடத்தில் கொஞ்சம்கூட இல்லை.

மனித உயிர் அணுக்களில் குரோமோசோம்கள் செய்த சதியால் இவர்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. ஆண் வடிவில், பெண் உணர்வைப்பெற்றது திருநங்கைகள் செய்த பாவமா? அல்லது சாபமா? என்பது புரியாத புதிர்தான்.

மோகினி அவதாரம்

கண்ண பரமாத்மா மோகினி அவதாரம் எடுத்ததும், சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக இருப்பதும், அர்ச்சுனன் மகாபாரதத்தில் பிருகன்னளை என்ற பெண் பாத்திரம் ஏற்றதும், அரவான் கதாபாத்திரம் புராணங்களில் உருவாக்கப்பட்டதும், திருநங்கைகளை உயர்த்துவதற்காகத்தான்.

ஆனால் சமூகம் இவர்களை வெறுத்து ஒதுக்குவது மிகக் கொடுமையானது. ஒருவன் விடலைப் பருவத்தில் பெண் தன்மை பெற்று வளர்வதை அவனுடைய பெற்றோர்கள்தான் முதலில் உணர ஆரம்பிக்கிறார்கள். 

பெண் குழந்தையைப்போல் பேசக்கூடாது, அவர்களோடு சேரக்கூடாது என்றெல்லாம் கண்டிக்கிறார்கள்.

பெண்மை உணர்வு

மெல்ல மெல்ல தங்கள் உணர்வில் ஏற்படும் மாற்றங்களை உணர ஆரம்பிக்கும் ஆண்குழந்தைகள், பெண்கள் செய்யும் வேலைகளைச் செய்வது, பெண்கள் அணியும் உடைகளில் கவனம் செலுத்துவது, அவர்கள் அணிந்து உடைந்துபோன வளையல்களை சேகரித்துவைப்பது என்று மாறத்துவங்கியதும் வீட்டைவிட்டு துரத்தப்படுகிறார்கள். 

இவர்களின் அவலங்கள் இங்கேதான் ஆரம்பமாகின்றன. வீட்டைவிட்டு வெளியே வந்ததும் இவர்கள் தவறான பாதைக்கு வழிகாட்டப்படுகின்றனர்.

மற்ற அரவாணிகளால் பிச்சை எடுக்க வைக்கப்படுவார்கள். அல்லது பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதற்கு இடைத்தரகர்களும் உண்டு. இத்தொழிலுக்கேற்ப இவர்கள் தங்கள் நடை, உடை பாவனைகளை மாற்றிக்கொள்கிறார்கள். சிலர் மும்பை போன்ற பெருநகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றனர். 

மும்பையில் அரவாணிகள் கடைகளுக்குச் சென்று பிச்சை எடுத்தால் வியாபாரம் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ஆயுளும் குறைகிறது

அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் உடல் ரீதியாகவும் பெண்களைப்போல் மாறிவிடுகிறார்கள். இப்படி செய்வது உயிருக்கே ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு ஆயுளும் குறைகிறது. 

நீண்டதூரம் நடக்க முடியாது. பேருந்திலோ, புகைவண்டியிலோ நீண்டதூரம் பயணம் செய்ய முடியாது. ஏனெனில் சிறுநீரை இவர்களால் அடக்கிவைக்க முடியாது. இதெல்லாம் தெரிந்தும் அரவாணிகள் அறுவை சிகிச்சை செய்துகொள்வது கொடுமையானது. 

அறுவை சிகிச்சை செய்த நாற்பது நாட்களுக்கு இவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பதும் நினைத்துப் பார்க்க முடியாத நரக வேதனை. (பழங்காலத்தில் பனங்கருக்குகளை வைத்து இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்கிறார்கள்)

திருநங்கைகள்
திருநங்கைகள்
குழந்தையா? குட்டியா?

சமுதாயத்தில் அரவாணிகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் ஏராளம். இவர்களுக்கு யாரும் வீடு வாடகைக்கு கொடுப்பதில்லை. கொடுத்தாலும் யாரும் வீட்டிற்கு வரக்கூடாது. குறிப்பாக ஆண்கள் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்படும். 

மேலும் உங்களுக்கென்ன குழந்தையா, குட்டியா என்று சத்தம்போட்டு வீட்டு முதலாளிகள் வாடகையை அதிகமாக வசூலிக்கிறார்கள்.

வீட்டைவிட்டு வெளியேவந்த பிறகு இவர்களை சாகும்வரைகூட இவர்களின் உற்றார் உறவினர்கள் வந்து பார்ப்பதில்லை. இவர்களாக போய்ப் பார்க்கவும் சொந்தபந்தங்கள் அனுமதிப்பதில்லை.

அரவாணிகளிடம் பணம் காசு இருந்தால், அதற்காக சொந்த பந்தங்கள் யாருக்கும் தெரியாமல் வந்துபோவது மட்டுமே நடக்கிறது.

குழந்தை பிறக்காது

திருநங்கைகளைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களும் உண்டு. தங்கள் உணர்வுகளுக்கு வடிகாலாக இவர்களை பயன்படுத்துவதும், இவர்களிடம் உள்ள பணத்திற்காக இவர்களை ஏமாற்றுபர்களும் உண்டு. 

ஆனால் கடைசியில் உன்னைக் கல்யாணம் செய்துகொண்டால் குழந்தை பிறக்காது, எனக்கு சமுதாயத்தில் மதிப்பிருக்காது என்ற காரணங்களைச் சொல்லி கைவிட்டுச் செல்பவர்களும்  இருக்கிறார்கள்.

இதில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட திருநங்கைகள் அதிகம்பேர் உள்ளனர். இங்கே சொன்ன பிரச்சினைகளெல்லாம் வெளிப்படையாகத் தெரிந்தவை. வெளியே தெரியாமல் வீட்டிற்குள்ளேயே மறைந்து வாழும் அரவாணிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் பயங்கரமானவைதான்.

இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முயற்சி செய்யும்போது வெளியே சொல்லாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

திருநங்கைகள் கூறிய செய்திகளில் முக்கியமானது, அரவாணிகளிடமிருந்து அரவாணிகளுக்கு விடுதலை வேண்டும் என்பதுதான். 

இவர்களுக்குள் இருக்கும் இயல்பான பொறாமை, கடைகளில், ரயில்களில் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் பங்குகொள்வது, தவறான உடலுறவின் காரணமாக எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது தாய் விழுதுகள் என்ற அமைப்பு. 

மேலும் தமிழக அரசின் அரவாணிகள் நல வாரியம் மூலம் எயிட்ஸ் தடுப்பிற்கான சிகிச்சை முறைகள், தமிழக எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின்மூலம் பெறப்படும் ஆணுறைகள் போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தி இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்கள்.

இவர்களிடம் கேட்டபோது, விழுப்புரம் கூவாகத்தில் நடைபெறும் அரவாணிகள் விழாபற்றிக் நாங்கள் கூடிக்கலைந்து செல்கிற விழாவாகவும், மறைந்து வாழும் அரவாணிகள் கலந்துகொள்கிற விழாவாகவும் இவ்விழா பயன்படுகிறது என்றனர்.

அரசிடம் உதவி

உங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு என்னமாதிரியான முயற்சிகளை எடுத்து வருகிறீர்கள் என்று கேட்டபோது, விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற பாரம்பரியமான தொழில்களில் ஈடுபட நாங்கள் அரசிடம் உதவி பெற முயற்சி செய்கிறோம்.

மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அரவாணிகள் பேஷன் ஷோ, மாடலிங் துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தமிழகத்திலும் இதைப்போன்ற நிகழ்வுகளில் திருநங்கைகளை ஈடுபடுத்தி பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டுவர முயற்சிப்பதாக நம்பிக்கையோடு தெரிவித்தனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் சேல்ஸ் பிரமோஷன் துறையில் எங்களை ஈடுபடுத்தினால் சிறப்பாக எங்களால் அப்பணிகளை செய்ய முடியும். எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.

பாரம்பரியமான கலாச்சார விழிப்புணர்வு நிகழ்வுகளில் திருநங்கையரை ஈடுபடுத்த திட்டங்கள் வைத்திருப்பதாகவும், வீடுகளில் எட்டு வயது முதல் பத்து வயதுக்குள் பெண் தன்மை உடைய ஒரு ஆண்மகனை கண்டறியும் பெற்றோர் அவனுக்கு தகுந்த கலந்தாய்வு (கவுன்சிலிங்)கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

திருநங்கையர் பிரச்சினைகள் மட்டுமின்றி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளுக்காகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்காகவும் எங்கள் அமைப்பு போராடி வருகிறதென்றும் நம்பிக்கை துளிர்க்க அவர்கள் தெரிவித்தனர். 

தாய் விழுதுகள் அமைப்பில் அமைப்பில் இருந்த திருநங்கையரின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்த நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.