வள்ளலார் அருளை வாரி வழங்கி மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர்
சிதம்பரத்தை அடுத்த மருதூரில் ஆயிரத்து எண்ணூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு, அக்டோபர் ஐந்தாம் நாள் உலகத்துச் சான்றோர்களில் ஒருவராய் வள்ளலார் என்று வாய்மணக்க அழைக்கப்பெறும் இராமலிங்க அடிகளார் அவதரித்தார்.
குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தார். இதனால் குடும்பம் பொன்னேரிக்குக் குடி பெயர்ந்தது. அதன்பிறகு ‘தருமமிகு’ சென்னையில் ‘ஏழு கிணறுப் பகுதியில் வசித்தனர். அண்ணனிடமும் ஆசிரியர்களிடமும் இராமலிங்கம் கல்வி கற்றார்.
வள்ளலார் கன்னி பேச்சு
இவருடைய அண்ணன் பக்திச் சொற்பொழிவாளர். ஒரு நாள் அவருக்கு உடல்நலம் இல்லை. அதனால் அவர் வழக்கமாகச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டிய இடத்துக்குப் போக முடியவில்லை. தம்பியை அழைத்து முருகப்பெருமானின் பாடல்களைப் பாடிவிட்டு வரும்படி அனுப்பினார்.
அப்போது இராமலிங்கத்துக்கு ஒன்பது வயது. பக்தர்களிடையே மடைதிறந்த வெள்ளம்போல் சொற்பொழிவாற்றினார். சிறுவனின் கன்னிப் பேச்சைக் கேட்டும், நாநயத்தைக் கண்டும் கூடியிருந்தவர்கள் வியந்தனர். விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது.
ஒருநாள், வெளியே சென்றிருந்த இராமலிங்கம் நள்ளிரவில் வீடு திரும்பினார். வீட்டுத் திண்ணையிலேயே பசியோடு படுத்துவிட்டார். அப்போது அம்பிகையே நேரில்வந்து அறுசுவை உணவு படைத்ததாய்க் கூறப்படுகிறது.
அருட்பெருஞ்சோதி
சிறுவயதிலேயே கவிதை பாடும் ஆற்றல் பெற்றார். ஐந்தாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் (5818) பாடல்கள் அடங்கிய ‘திருவருட்பா இவர் பாடிய அற்புத நூலாகும். ‘சொற்சுவை, பொருட்சுவை முதிர்ந்த பாடல்கள் அடங்கிய இது ஆறு திருமுறைகளாய்ப் போற்றப்படுகிறது.
ஆயிரத்து ஐந்நூற்று தொண்ணூற்று ஆறு (1596) வரிகள் கொண்ட அருட்பெருஞ்சோதி அகவலை ஒரே இரவில் பாடிய அருட்கவிஞர் அவர்.
பல்வேறு அற்புதங்கள் புரிந்த ‘சிதம்பரம் இராமலிங்கம்’ (இப்படித் தான் எப்போதும் கையொப்பமிடுவார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வடலூரார், புத்தம் புதிய சமுதாய அமைப்பை உருவாக்க விரும்பி வடலூரில் விவசாயிகள் தந்த எண்பது ஏக்கர் நிலத்தில் சமரச சுத்த சன்மார்க்க, சத்திய தர்மசாலையை அமைத்து அதன்மூலம் மக்களின் பசிப்பிணியை நீக்க வழிவகுத்தார்.
பசித்தோர்க்கு ஆயிரத்து எண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் அங்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் இராமலிங்க அடிகளார், வள்ளலார் ஆனார். அன்பை அருளை வாரி, வாரி வழங்கினார். அதனாலும் வள்ளலார் ஆனார்.
மரணமிலாப் பெருவாழ்வு
நிலையான ஆன்மிக மணம் கமழும் அமுதமனம் படைத்த அருள் ஞானியான இவர் ஐம்பத்தொன்றாவது வயதில், ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து நான்காம் ஆண்டு சனவரி மாதம் முப்பதாம் நாள் மேட்டுக்குப்பம், சித்திவளாக மாளிகையில் தாம் சித்தியடையப் போவதாகச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார். அங்கு வள்ளலார் உடலோடு ஒளிவடிவில் இறைவனுடன் இரண்டறக்கலந்து மரணமிலாப் பெருவாழ்வு எய்தினார்.
இதையறியாத ஆங்கிலேய அரசு வள்ளலார் சித்தியடைந்தது உண்மையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டது. மாவட்ட ஆட்சியர் ஜே.எச்.கார்ஸ்டியன் சென்று அறையின் கதவைத் திறந்து பார்த்தார். அதன்பிறகு வள்ளலார் சித்தியடைந்ததை உலகுக்குத் தெரிவித்தார்.
இன்று வள்ளலார் குன்றின்மேல் விளக்காக நிற்கிறார். அவரைத் தொழுவோம்; மனிதநேயத்தையும், ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் வளர்ப்போம்.
“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்”
-குறள் (362)

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் பிறந்த இவர். அங்குள்ள காந்திநிகேதன் ஆசிரமத்தில் கல்வி பயின்றவர். காந்திய நெறியில் ஈடுபாடு கொண்டவர். தினத்தந்தி நாளிதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இலக்கிய எழுத்திலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்ட இவர் எழுதிய ‘நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்’ என்ற கவிதை தொகுப்பு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாராட்டுப் பெற்றது. தொடர்ந்து பல இலக்கிய ஆக்கங்களை எழுதிவருகிறார்.