குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு

குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு

குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு. தற்கொலை படை தாக்குதல் என்பது கடந்த 30 ஆண்டுகளில்தான் அதிகம் கேள்விப் படுகிறோம். அதேபோல் மனித வெடிகுண்டு என்பதும் சமீபத்திய தகவல்களாகத்தான் கேள்விப் படுகிறோம்.

ஆனால், இப்படியொரு வரலாறு 300 ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழக வரலாற்றில் நடந்துள்ளது. அத்தனையும் ஒரு பெண் செய்து முடித்திருப்பது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது. அதனைப் பற்றிய விரிவான தகவல் இங்கே..

வரலாறு நெடுகிலும் மறைக்கப்படும் செய்திகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்படி மறைக்கப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் குயிலி என்ற பெண் போராளியின் பெயரும் வரலாறும். 

யார் இந்த குயிலி?

1780களில் வேலுநாச்சியார் பெண்கள் படையில் இருந்த பெண் போராளி. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 17 வயது பெண். நாட்டுக்காக தன்னையே தீயிட்டுக்கொண்ட தியாகதீபம்.

கி.பி. 1768இல் சிவகங்கை மன்னர், முத்துவடுகநாதர் வெள்ளை அரசாங்கத்தால் சுட்டுக்கொல்லப்படுகிறார். வேலுநாச்சியார் எட்டாண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கையில் இருக்க வேண்டிய சூழல். அவருடன் இருந்த பலபேரில் குயிலியும் ஒரு வீராங்கனை. இவர்களுடன் சிலம்பவாத்தியார் வெற்றிவேலும் இருந்தார்.

குயிலி தன் சொந்த ஊருக்குச் சென்றபோது, வெற்றிவேல் ஒரு கடிதத்தை கொடுத்து அனுப்பினார். கடிதத்தில் வேலுநாச்சியார் பற்றிய தகவல்களை எழுதியிருந்தார். சிவகங்கை அரண்மனை அருகே இருந்த மல்லேரியான் என்பவரிடம் கடிதம் போய்ச் சேரவேண்டும்.

வெற்றிவேலும் மல்லேரியானும் வெள்ளையர்களின் உளவாளிகள் என்பதை அந்த கடிதம் மூலம் அறிந்துகொண்ட குயிலி வெற்றிவேலைக் குத்திக் கொலை செய்கிறார். கொலைச்சத்தம் கேட்டு ஓடிவந்த வேலுநாச்சியாரிடம் குயிலி உண்மையைத் தெரிவிக்கவே குயிலியை மெய்க்காப்பாளியாகவே வேலுநாச்சியார் சேர்த்துக் கொண்டார்.

வேலுநாச்சியார்

வேலுநாச்சியார் தன் மகள் வெள்ளச்சியுடன் படுத்துறங்கிய ஓர் இரவு வேளையில் அவர்களை கொல்ல வந்த ஒரு கொடியவனை விரட்டியனுப்பினாள் குயிலி. இவையெல்லாம் ஒரு ராணியின் பாதுகாவலர் செய்யவேண்டிய கடமைகள்தான். இதையும் தாண்டி குயிலி செய்த செயல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் யாரும் செய்யாத செயல்.

1780ஆம் ஆண்டு வேலுநாச்சியார் வீறுகொண்டெழுந்து வெள்ளையரை எதிர்த்து கடுமையாகப் போரிட்டு இழந்த பகுதிகளை மீட்டெடுத்த சமயம். மானாமதுரை, திருப்பத்தூர், திருப்புவனம், காளையார்கோவில் என்று அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய காலம். 

சிவகங்கை மட்டுமே மீதி, ஹைதர் அலியின் பக்கபலத்துடனும், மருதுபாண்டியர்களின் உறுதுணையுடனும் எப்படியும் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை.

ஆனால் சிவகங்கையை நெருங்கவிடாமல் வெள்ளையர்களின் படை இரண்டிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. வெள்ளையர்களின் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக்கிடங்கு சிவகங்கையில் இருந்தது. சிவகங்கை அரண்மனைக்குள் யாரும் செல்ல அனுமதியில்லை.

விஜயதசமி

எப்படியும் விஜயதசமி நாளில் அரண்மனை வளாகத்தில் இருக்கும் இராஜராஜேஸ்வரி ஆலயம் செல்ல பெண்கள் அனுமதிக்கப் படுவார்களல்லவா? அன்றைய தினத்தில் வேலுநாச்சியாரும், பெண்கள் படையும் மாறுவேடத்தில் அரண்மனைக்குள் செல்ல முடிவெடுக்கப்பட்டது.

கோவிலுக்கு கொண்டுசெல்லும் பூஜைப் பொருட்களில் வாள் போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று வெள்ளையருடன் போரிடுவது என்றும், இந்தக் குழப்பத்தில் மாறுவேடத்தில் இருளில் மருதுபாண்டியர் படை உள்ளே நு ழ ந் து அரண்மனையைக் கைப்பற்றுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு
குயிலி

விஜயதசமியும் வந்தது. திட்டமிட்டபடி வேலுநாச்சியாரின் பெண்கள் படை மாறுவேடத்தில் அரண்மனைக்குள் சென்றது. திடீரென்று ஆயுதக்கிடங்கில் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து ஆயுதக்கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின. 

மருதுபாண்டியர் படை

வேலுநாச்சியாருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. யோசிக்கக்கூட நேரமில்லாத இடைவெளியில் வேலுநாச்சியாரின் பெண்கள் படை வெள்ளையர்களைத் திடீரென தாக்கியது. வெளியே இருந்த மருதுபாண்டியர் படையும் அரண்மனைக்குள் சென்று வெள்ளையர்களைப் பந்தாடினர்.

வெள்ளையர்கள் வைத்திருந்த ஆயுதக்கிடக்கு எரிந்துபோனதால் வெள்ளையர்கள் மேற்கொண்டு போரிட முடியாமல் தோற்று ஓடினர். வேலுநாச்சியார் சிவகங்கை அரண்மனையை மருதிருவர் உதவியுடன் கைப்பற்றினார். 

அரண்மனையை கைப்பற்றிய கையோடு ஆயுதக்கிடங்கு சென்று பார்த்தார், அங்கே முழுக்க எரிந்த நிலையில், கருகி அழிந்த கரிக்கட்டையாய் குயிலி பிணமாகக் கிடந்ததைக் கண்டு வேலுநாச்சியாரும், மருதுபாண்டியரும் அதிர்ந்து போயினர்.

பிறகுதான் தெரிந்தது. தன் உடலில் எரி நெய்யை ஊற்றி தீயிட்டுக்கொண்டு, ஆயுதக்கிடங்கில் குதித்து, தானும் அழிந்து ஆயுதக் கிடங்கையும் அழித்தது குயிலிதான் என்பது.

பெண் போராளிகள்

இச்செய்தியை குயிலி பற்றி எழுதும் அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். 

ஆனால் குயிலியின் சொந்த ஊர் என்ன? தாய், தந்தையரின் பெயர் என்ன? கருகிப்போன குயிலியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் எது? குயிலியுடன் இருந்த பெண் போராளிகள் யார் யார்? என்ற எந்த விவரங்களும் சரியாக கிடைக்கவில்லை. 

சரியாகக் கிடைக்கவில்லையா? தாழ்த்தப்பட்ட பெண் போராளி என்பதால் தடயங்கள் அழிக்கப்பட்டனவா? என்பதும் புரியவில்லை!

ஆனாலும் குயிலியின் ஊர் பாசங்கரை என்று சில ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பாசாங்கரை

பாசாங்கரை என்பது சிவகங்கை மேலூர் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ள ஊர். அங்கே நாம் சென்று பார்த்தபோது எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு அருந்ததிக் குடும்பம் மட்டும் உள்ளது. அவர்களுக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

குயிலியின் புகைப்படம் இருப்பதாகச் சொன்னவர்களிடமும் சரியான கிடைக்கவில்லை. 1927 ல் ஜனசக்தி நாளிதழில் குயிலியின் படம் வெளிவந்ததாக கூறுகிறார்கள்.

எப்படியோ சில ஆய்வாளர்கள் முயன்று குயிலியின் தந்தை பெயர் ஆயமுத்து என்று கண்டுபிடித்துள்ளனர். அது நம்பும்படியாகவும் உள்ளது. ஏனெனில் முத்து என்று முடியும் ஆண்பாற்பெயரையும், ‘இ’ விகுதியில் முடியும் பெண்பாற் பெயர்களையும் பெரும்பாலும் அருந்ததியர் சமூகத்தினரே அந்நாளில் அதிகம் வைத்திருந்தனர்.

தமது தோழி குயிலி

சிவகங்கை அரண்மனையில் முன் வைக்கப்பட்டிருக்கும் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையின் கீழ் குயிலி பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. இன்றைக்கும் அந்தக் குறிப்பைக் காணலாம். அந்தக் குறிப்பில்,

‘சிவகங்கைப் படைக்கு ராணியாரே தலைமை ஏற்றும், தமது தோழி குயிலியின் துணைகொண்டு கம்பெனிப் படையின் வெடிமருந்துக் கிடங்கை அழித்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வேடு குயிலி பற்றி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கவியோகி சுத்தானந்தபாரதியார், குயிலியை சிறு தெய்வ வழிபாட்டில் வணங்கியதாக எழுதியுள்ளார்.

ஆக, குயிலி என்னும் அருந்ததியர் சமூக முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையின் தியாக வரலாறு முழுமையாக கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. 

ஆய்வுகளின் அடிப்படையில் முழுமையான தகவல்கள் கிடைக்குமேயானால் வேலுநாச்சியாருக்கு வீரனும் செறிந்த பெண்படைகளைப் பற்றிய வரலாறும், குயிலியைப் பற்றிய சமூக வரலாறும் வெளிப்படையாக தெரிய வரும். 

Leave a Reply

Your email address will not be published.