பெருங்கோப்பெண்டு

கணவனுக்காக தன்னுயிர் தந்த சங்க கால தமிழச்சிகள்

கணவனுக்காக தன்னுயிர் தந்த சங்க கால தமிழச்சிகள்

பிள்ளை உறங்காவில்லிதாசரும், அவர் மனைவி பொன்னாச்சியும் மதத்தில் புரட்சி செய்த மகான் இராமானுஜரின் தலையாய சீடர்கள். இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். உடலும் அன்பு, உள்ளமும் அன்பு மயமாய் வாழ்ந்தவர்கள். பிள்ளை உறங்காவில்லி தாசர் ஒரு நாள் இறந்து போகிறார்.

பொன்னாச்சி

மகான் இராமானுஜரின் கட்டளைப்படி உறங்காவில்லி தாசரின் உடலைப் பூப்பல்லக்கில் கொண்டு போகிறார்கள். அதை வைத்தகண் வாங்காமலும், கண்ணீர் சிந்தாமலும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் கணவனை இழந்த பொன்னாச்சி.

பார்வையில் இருந்து பல்லக்கு மறைகிறது. ‘மாரிமாக்கடல்’ எனத் தொடங்கும் பெரிய திருமொழிப் பாசுரம் அவள் நினைவுக்கு வருகிறது.

“ஊரும் துஞ்சிற்று: உலகமும் துயின்றது;

ஒளியவன் விசும்பு இயங்கும் 

தேரும் போயிற்று; திசைகளும் மறைந்தன;

செய்வதொன்று அறியேனே”

என்று புலம்பிக் கொண்டே பல்லக்கு மறைந்த திசை நோக்கித் தொழுது தரையில் மூர்ச்சித்து விழுந்தாள். அப்போதே உயிரும் நீங்கியது.

மனசை முறுக்கிப் பிழிகிறமாதிரி

தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடிச் சென்றுவிட்டாள். மனசை முறுக்கிப் பிழிகிறமாதிரி இருக்கிறது அல்லவா!

ஈருடல் ஓருயிராய் வாழ்ந்ததன் பொருள் இதுவோ! தலைவன்தலைவி (கணவன்-மனைவி) உறவுதான் உலகிலேயே நெருக்கமானது என்பதை இது உணர்த்துகிறதோ!

இப்பெண்ணுக்கும் எனக்கும் (கணவனுக்கும்) உள்ள நட்பு உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது ஆகும் என்பது தமிழறம் (திருக்குறள்) கூறும் கருத்து.

“உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன 

மடந்தையொடு எம்மிடை நட்பு” 

(குறள் 1122)

யானே கள்வன்

சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் நடுநிலை வழுவாமல் ஆட்சி நடத்தியவன் பாண்டியன் நெடுஞ்செழியன். ஆனால் அவன் கோவலன் விவகாரத்தில் நீதிதவறிவிட்டான்.

கற்புக்கனல் கண்ணகியின் வழக்குரை கேட்ட மன்னன்,

“யானோ அரசன் யானே கள்வன்” என்று கூறியபடியே அரியணை யில் இருந்து விழுந்து உயிர்துறந்தான்.

அதனைக் கண்முன் கண்ட பாண்டிமாதேவியும் (கோப்பெருந்தேவி) “தன்னுயிர் கொண்டு அவன் உயிர் தேடுவது போல”த் தன்னுயிர் நீத்தாள்.

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ? 

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? 

யானும் நீயும் எவ்வழி அறிதும்” 

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” 

– குறுந்தொகை.

இதே போல் மற்றொரு நிகழ்வும் சங்க காலத்தில் நடந்துள்ளது.

சங்க காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னர்களில் ஒருவன் பூதப்பாண்டியன். அவன் இறந்துவிடுகிறான். அவனுடைய மனைவி பெருங்கோப்பெண்டு அரசியல் அறிவு நிறைந்தவள். கணவனின் பிரிவு தாங்காமல் தீயில் பாய்ந்து உயிர் துறக்க முடிவு செய்கிறாள். ஆனால் நாட்டு மக்களின் நலம் கருதி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படி சான்றோர்கள் வேண்டினார்கள்.

பெருங்கோப்பெண்டு

துயரத்தில் மூழ்கியிருந்த பெருங்கோப்பெண்டு வெகுண்டாள். தன் கோபத்தை ஓர் உருக்கமான பாடல் மூலம் வெளிப்படுத்தினாள். அதன் பொருள் இதோ :

“நற்குணங்கள் நிறைந்த சான்றோர்களே! ‘உன் தலைவன் இறந்து விட்டான், அவனுடன் நீயும் செல்க என்று கூறாமல், செல்வது தவிர்க என்று சொல்லித் தடுக்கும் பொல்லாத சூழ்ச்சியுடைய சான்றோர்களே!

அணிலின் உடல் மீதுள்ள வரிகளை (கோடுகளை)ப் போன்ற வெள்ளரிக்காயின் விதை போன்ற சோற்றுத்திரள், அத்துடன் வெள்ளை எள்ளுத் துவையல், புளிசோத்துச் சமைக்கப்பட்ட வேளைக்கீரை

ஆகியவற்றை வேகவைத்து உணவாக உண்டு, பாய் இல்லாமல் பருக்கைக் கற்கள் பரப்பிய படுக்கையில் படுத்துக் கிடக்கும் கைம்மை நோன்பால் வருந்துகிற பெண்ணாக விளங்க மாட்டேன்.

தாமரை மலர்கள்

சுடுகாட்டில் கரிய விறகால் அமைக்கப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு வேண்டுமானால் அரியதாக இருக்கலாம். ஆனால் பெரிய தோள்களை உடைய எம் கணவர் இறந்த பிறகு மொட்டின்றி இதழ் மலர்ந்த தாமரை மலர்கள் நிறைந்த குளிர்ந்த பெரிய பொய்கையும், தீயும் எமக்கு ஒரு தன்மையனவே.”

பின்பு அவள் யார் தடுத்தும் கேளாது ஒரு திருக்கோயிலின் முற்றத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை, தண்ணீர் வடியும் கூந்தலுடனும், கண்ணீர் பெருகிய கண்களுடனும் வலம் வந்தாள், சுடர்விட்டு எரிந்த தீயுள் பாய்ந்து மாண்டாள். .

இந்தக் காட்சியை நேரில் கண்ட மதுரைப் பேராலவாயார் என்ற சங்கச் சான்றோரும் ஒரு பாடல் மூலம் தெரிவித்துள்ளார். அரசமாதேவி பெருங்கோப்பெண்டு பாடிய பல் சான்றீரே!

பல்சான்றீரே!” என்ற பாடலும், மதுரைப் பேராலவாயார் பாடிய பாடலும் புறநானூற்றில் அடுத்தடுத்து (246, 247) இடம் பெற்றுள்ளன.

“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 

திண்மைஉண் டாகப் பெறின்?”

– குறள் (54)

Leave a Reply

Your email address will not be published.