மூன்று தூண்கள் கீழிருந்து மேல்நோக்கி சென்று மேலே இணைகிறது. அதற்கும் மேல் மணிப்பூர் நகரின் சின்னமான மூன்று ட்ராகன்களை அமைத்திருக்கிறார்கள்.
யுவராஜ் பீர் திகேந்திரஜீத் சிங் பெயரில் இந்த இடத்தில் அழகான பூங்கா அமைத்து பராமரித்து வருகிறார்கள்.
இதற்கடுத்து நாங்கள் சென்ற இடம் ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோயில். இம்பால் சுற்றுலா தலங்களில் இந்தக் கோயிலுக்கு தனியிடம் உண்டு. மணிப்பூர் மன்னர் குடும்பம் வழிபட்ட கோயில் இது.
தங்க கோபுரங்கள்
போரில் பர்மிய மன்னர்களால் கங்க்லா கோட்டை அளிக்கப்படும் போதெல்லாம் இந்த கோயிலும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் மறு நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது. மிகப் பழமையான இந்தக் கோயிலில் இரண்டு கோபுரங்கள் உள்ளன.
இவைகள் பார்ப்பதற்கு இஸ்லாமியர்களின் கட்டடக்கலையின் முக்கிய பங்கு வகிக்கும் டோம்கள் போல் உள்ளன. இந்த இரண்டு கோபுரங்களும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டிருக்கிறது.
போர் நடைபெறும் காலங்களில் கோயிலை சிதைக்கும் எதிரிகள் இந்த தங்க தகடுகளை எடுத்துக் கொண்டு போய்விடுவார்களாம். அப்படி பலமுறை சூறையாடப்பட்டும் மறுபடியும் தங்கத்தகடால் மேவியிருக்கிறார்கள்.
வைஷ்ணவத்தலம்
இதுவொரு வைஷ்ணவத்தலம். கோவிந்தாஜி தான் முக்கிய தெய்வம். கிருஷ்ணர், பலராமர், ஜகந்நாத் ஆகியோருக்கும் சிலைகள் உண்டு. இங்கிருக்கும் கோயில் மணி பிரமாண்டமாக இருக்கிறது. அதை தரையில் வைத்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது.
கோயிலின் வெளியே இருக்கும் தாழ்வாரம் வரைதான் பக்தர்கள் செல்ல முடியும். பூஜை செய்பவர்கள் பக்தர்களின் காணிக்கைகளைப் பெற்று இறைவனிடம் சமர்பிக்கிறார்கள்.
நமது கோயில்களில் உள்ளது போலவே இங்கேயும் கொடிமரம் உள்ளது. அது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. வழிப்பாட்டுத்தலம் என்பதற்கான அடையாளம் இந்த கொடி மரம்.
நமது கோயில்களின் வடிவம் போல் இங்குள்ள கோயில்கள் இல்லாததால் இத்தகைய கொடிமரங்கள்தான் அது கோயில் என்பதை நமக்கு தெரிவிக்கிறது.
கோயிலைப் பார்த்து முடித்ததும் ஹோட்டல் அறைக்கு திரும்பினோம். மாலை 4.30 மணிக்கே இருட்டத் தொடங்கிவிட்டது. இரவில் வழக்கம்போல் தமிழக உணவு எங்காவது கிடைக்குமா என்று எங்கள் குழுவின் ஒரு பகுதி இம்பால் நகரை அலச தொடங்கிவிட்டது.
ஒரு வழியாக வட இந்திய சைவ உணவகம் ஒன்று கண்ணில் பட்டது. எல்லோரும் உள்ளே புகுந்து கொண்டோம். திருப்தியான உணவு.
பாஸ்போர்ட், விசா இல்லாமல்
மறுநாள் அதிகாலையில் தயாராக வேண்டும். பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாமல் மியான்மர் என்ற பர்மாவுக்குள் நுழையப்போகிறோம். அங்கு போகும் சந்தோஷத்தில் உறங்கப்போனோம்.
அதிகாலையில் எழுந்து வேகவேகமாக கிளம்பினோம். குளிர் அதிகம் இருந்தது. பனிமூட்டமும் நிறைந்திருந்தது. காலை 5 மணிக்கே இம்பால் நகரின் காய்கறி சந்தை கலைக்கட்டியிருந்தது. வியாபாரம் படு மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.
நம்மூரில் காலை 7 மணி எப்படியிருக்குமோ அப்படியொரு வெளிச்சம் 5 மணிக்கே இருந்தது. சீக்கிரமாக விடிந்து, சீக்கிரமே இருளத் தொடங்குவதுதான் வடகிழக்கு மாநிலங்களின் வழக்கம்.
காலையிலேயே மழைத் தூறல் தொடங்கிவிட்டது. அந்த மழையோடு எங்கள் பயணம் தொடர்ந்தது. வாகனம் வேகமெடுக்க எடுக்க குளிர் காற்றின் தாக்கமும் அதிகமாகிக்கொண்டே போனது.
சுற்றிலும் பசுமை, மேகங்கள் மூடிய மலை முகடுகள் என்று இயற்கை அன்னையின் ராஜாங்கம் விரிந்திருக்கும் பரப்பு அது.
இயற்கையை ரசிக்காமல்
பயணத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா ஏற்றதல்ல. ஏனென்றால் இயற்கை அழகுதான் இங்கு சுற்றுலாவே. அதைவிட்டு வேறுஎங்கும் பெரிதாக எதையும் காண முடியாது. அந்த இயற்கையை ரசிக்காமல் தூங்கிவிடுபவர்களுக்கு, பெரும் இழப்பே!
எங்களையும் அந்த இயற்கைதான் தாலாட்டியது. வழிநெடுக திகட்டாத அழகுப் பொக்கிஷம்தான். கூடவே மழையும் மேகமூட்டமும் சேர்ந்துகொள்ள இன்னொரு உலகம் திறந்து கொண்டது.
இம்பாலில் இருந்து பர்மா எல்லை 110 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்தப்பயணம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீடிக்கிறது. இதற்கு காரணம் வழிநெடுக இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை, மணிப்பூர் காவல்துறை என்று 7 இடங்களில் மாற்றி மாற்றி சோதனை நடத்துகிறார்கள்.
தவிர்க்க முடியாத சோதனைகள்
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான சோதனை. பல இடங்களில் நாம் வாகனத்தை விட்டு இறங்கி, சோதனைச் சாவடியை காலாற நடந்து, கடந்து நிற்க வேண்டும். நமது உடல், வாகனம், நாம் கொண்டு வந்த பொருட்கள் என எல்லாம் சோதனை செய்யப்பட்டு வந்தப்பின் ஏறிக்கொள்ளலாம்.
வயதானவர்கள் ஒவ்வொருமுறையும் இப்படி ஏறி இறங்குவதுதான் பார்க்க பரிதாபமாக இருக்கும். போராளிகளும் தீவிரவாதிகளும் செழித்தோங்கும் ஓரிடத்தில் இப்படிப்பட்ட சோதனைகள் தவிர்க்க முடியாததுதான்.
நாங்கள் மியான்மர் எல்லையை நெருங்க நெருங்க மழையின் வேகம் கூடிக்கொண்டே போனது. கடைசியாக மணிப்பூர் மாநிலத்தின் கிழக்கு எல்லை நகரமான மோரேவில் வந்து நின்றோம். மழை விடாமல் கொட்டிக்கொண்டே இருந்தது.
மங்கோலியத் தமிழ்
யாரும் வாகனத்தில் இருந்து இறங்கவில்லை. எல்லோரையும் நான்கு மணி நேர தொடர் பயணத்தின் களைப்பும், கடுமையான வயிற்றுப் பசியும் வாட்டியெடுத்துக் கொண்டிருந்தது.
என்னதான் பசித்தாலும் தமிழக உணவான இட்லி, தோசைதான் வேண்டும் என்று எல்லோரும் பிடிவாதமாக சொல்ல, நானும் நாகராஜனும் வாகனத்தில் இருந்து இறங்கி மழையில் நனைந்து கொண்டே உணவகத்தை தேடினோம்.
மழையின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. நாங்கள் இருவரும் தொப்பலாக நனைந்து விட்டோம். எதிரே வந்த ஒரு மங்கோலிய முகம் கொண்ட ஒருவரை தடுத்து நிறுத்தி, எங்களுக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியில் தென்னிந்திய உணவகம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டோம்.
“ஓ..! இட்லி சாப்பாடு வேணுமா உங்களுக்கு..! அதோ அங்கேயிருக்கிற சாந்தி கடையிலே இட்லி தோசையெல்லாம் கிடைக்கும்..!” என்று சொல்லிவிட்டு எங்கள் பதிலுக்குக் கூட காத்திராமல் சென்றார்.
தமிழ்..! ஒரு மங்கோலிய மனிதரிடம் அருமையான தமிழ்..! வியந்துபோய் நின்றோம்..!
-இன்னும் பயணிப்போம்…
ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.