Thiruvithankodu Church

தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் கிறிஸ்துவ தேவாலயம்

தமிழகத்தின் முதல் கிறிஸ்துவ தேவாலயம் குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோட்டில் உள்ளது என்பது பலருக்கு வியப்பளிக்கலாம். அதன் வரலாற்றுத் தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

“பிதா, என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்ற ஏசு பிரானின் கட்டளைக்கேற்ப அவரது 12 சீடர்களில் ஒருவரான புனிதர் தோமையார் பாரத நாட்டின் தென் மேற்குக் கடற்கரையில் உள்ள கொடுங்கல்லூரில் கி.பி. 52 ஆம் ஆண்டு வந்து இறங்கினார் என்றும், மலையாள நாட்டில் சில காலம் தங்கி, மேற்குக் கடற்கரையோரமாக மாதா கோயிலின் முகப்பு கன்னியாகுமரி வந்து கிழக்குக் கடற்கரை வழியாக அவர் மயிலாப்பூர் சென்றார் என்றும் காலம் காலமாகக் கூறி வரும் தகவல். 

அந்நேரத்தில் திருவிதாங்கோடு, சின்ன முட்டம் ஆகிய இடங்களில் தோமையார் தங்கினார் என்ற உண்மையை திருவிதாங்கோடு மாதாகோயிலும், சின்ன முட்டம் தோமையார் குருசடியும், தோமையார் பள்ளியும், தோமையார் கிணறும் உறுதிப்படுத்துகின் றன. அந்த அடிப்படையில் திருவிதாங்கோடு மாதா கோயில்தான் தமிழகத்தின் முதல் கிறித்தவ ஆலயம் என்ற பெருமையைப் பெறுகின்றது.

புனிதர் தோமையார்

மலையாள நாட்டில் பாலையூரில் ஒரு கிறித்தவக் குடும்பத்தாரால் பாதுகாக்கப்பட்ட மிகப் பழமையான ஓலைச் சுவடியிலிருந்து புனிதர் தோமையார் கொடுங்கல்லூரில் வந்து இறங்கிய ஆறு மாதங்களில் அப்பகுதியைச் சார்ந்த அரச குமாரனையும், ஏற்கெனவே அப்பகுதியில் வாழ்ந்த 40 யூதர்களையும், 400 இந்துக்களையும் கிறித்தவ சமயத்திற்கு மாற்றினார் என்று அறிய முடிகிறது. 

‘தோமபர்வம்’ என்ற மலையாள நூலிலும், ரென் பன்பாட்டு , போர்த்துக்கீசியர் வழங்கிய மரப்பெட்டி மார்க்கம் கவிப்பாட்டு, கல்யாணப்பாட்டு போன்ற மலையாள நாட்டுப்புறப் பாடல்களிலும் தோமையார் வருகை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன என்பதை கி.பி.15-ஆம் நூற்றாண்டில் மேற்குக் கடற்கரை வந்த போர்த்துக்கீசியர்கள் கண்டறிந்தனர்.

மலையாளக் கடற்கரையில் தோமையார் 7 1/2 பள்ளிகள் காட்டினார் என்பது கர்ண பரம்பரைச் செய்தி. அவை இன்றைய கேரளத்திலுள்ள கொடுங்கல்லூர், கொல்லம், சாயல், நிரணம், கொக்கமங்கலம், பறவூர், பாலையூர் ஆகிய ஏழு தலங்களாகும். திருவிதாங்கோட்டிலுள்ள சிறிய பள்ளியை அரைப்பள்ளியாகக் கருதுவர். 

அரைப்பள்ளி

திருவிதாங்கோடு கோயில் கட்டிடத்தின் நீளம் 45 அடி. அகலம் 16 அடி. சுவரின் உயரம் 12 அடி. இந்த ஆலயம் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் இதை அரைப்பள்ளியாகக் கருதியிருக்கவேண்டும்.

திருவிதாங்கோடு தேவாலயம் உட்புறம்
திருவிதாங்கோடு தேவாலயம் உட்புறம்

இந்த கோயிலின் வேறொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், புனிதர் தோமையார் காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோயில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரால் கேரள மண்ணில் எழுப்பப்பட்ட 7 கோயில்களும் புதுப்பிக்கப்பட்டு இன்று புதுப் பொலிவுடன் விளங்குகிறது.

திருவிதாங்கோடு பள்ளியின் குருவான மறைதிரு. உம்மன் அவர்கள் தோமையார் கன்னி மரியாளின் நாமத்தினால் இப்பள்ளியை அமைத்தார் என்றும், இப்பள்ளிக்கென்று 20 சென்டு நிலம் திருவிதாங்கோடு மன்னரால் வழங்கப்பட்டது என்றும், 63 சிரியன் கிறித்தவ குடும்பங்கள் இங்கே வாழ்ந்து வந்தன என்றும், இப்போது ஒரு குறிப்பிட்ட குடும்பமே இங்கே உள்ளது என்றும், சில பிரச்சனைகளால் இவர்கள் நாடுவிட்டுச் சென்றனர் என்றும் கூறுகிறார்.

சிரியன் கிறிஸ்தவர்கள்

இன்றும் கேரள மாநிலத்தில் குண்டறையில் வாழும் சில கிறித்தவ குடும்பங்கள் திருவிதாங்கோட்டினர் என்று அழைக்கப்படுகின்றனர் என்று அவர் மேலும் கூறினார். இஸ்லாமியர்களின் ஆதிக்கத்தால் சிரியன் கிறிஸ்தவர்கள் திருவிதாங்கோட்டிலிருந்து வடதிருவிதாங்கூருக்கு சென்றிருக்கலாம் என்று கூறுவாரும் உண்டு.

இக்கோயில் பீடத்தின் முன்னால் உள்ள மரப்பெட்டியின் ஒரு கதவில் சாவியை கையிலேந்தியபடி புனிதர் பீட்டரின் உருவமும், மறு கதவில் வாளையேந்தியபடி புனிதர் பாலின் உருவமும் காட்சிதருகின்றன. இந்தப் பெட்டி போர்த்துகீசியரால் வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

புனிதர் தோமையார் பயன்படுத்திய கல்லினால் உருவாக்கப்பட்ட ஞானஸ்நான தொட்டியை இந்த ஆலயத்திலே நாம் இன்றும் காணலாம். 

திருவிதாங்கோட்டிலுள்ள மாதா கோயிலின் அமைப்பும், உட்கோயிலின் முகப்பு வாயிலில் செதுக்கப்பட்டுள்ள கமலபந்தஸ்தம்பமும் மகர தோரணங்களும், கோயிலின் உள்ளே காணப்படும் விளக்கோடு கூடிய கல்தூண்களும், குத்துவிளக்குகளும் இந்துக் கோயிலை நமக்கு நினைவூட்டுகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *